மகாபாரதம், வெண்முரசு, யுவால்

வணக்கம் ஜெ

தங்களுக்கு இது என் முதல் கடிதம், அறிமுகததிற்கு என் பெயர் ஸ்ரீநிவாசன். சொந்த ஊர் புதுவை, எனது அப்பா ஆனந்தன், தாய் மாமா அரிகிருஷ்ணன் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். புதுவை வெண்முரசு கூடுகை நடக்கும் மாமா வீட்டில் என் இளமைக்காலம் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் மேற்ப்படிப்புக்கு சிங்கப்பூர் வந்தேன், ‘IT’ துறையில் வேலை. திருமணமாகி ஒரு இரண்டு வயது மகன் உள்ளான், பெயர் வாசுதேவ கிருஷ்ணன். உங்கள் குறுநாவல்களில் தொடங்கி, பிறகு அறம், தற்போது வெண்முரசு வாசித்து கொண்டிருக்கிறேன். உங்கள் வலைதளம் மற்றும் பேச்சுகள் நிறைய படித்ததும் கேட்டதும் உண்டு. இன்று உங்கள் ‘சிங்கப்பூர் நாவல்பட்டறை’ நடக்கிறது, அதில் பங்கு பெறுகிறேன். உங்களிடம் சில கேள்விகள்..

1. சமீபத்தில் ‘Sapiens’ என்ற புத்தகம் படித்தேன். ஒரு சரித்திர ஆய்வாளரலால் எழுதப்பட்டது, சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகவும் பிரபலமானது. 70,000 ஆண்டுகால மனித வராலாற்றை தொகுத்து கொடுக்கும் முயற்சி. ‘Yuval Noah Harari’ என்பவரால் எழுதப்பட்டது. அதில் கூறப்பட்ட சில விஷயங்கள் என்னை சீண்டின. பணம், மதம், இராஜ்ஜியங்கள், தொழில் நிறுவனங்கள் இவை அனைத்துமே ஒரு ‘Myth’ என்கிறார். பொதுவான சில மக்களின் நம்பிக்கை சார்ந்தது. காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது. ஆனால் இந்த பொது நம்பிக்கைகள் மனிதர்கள் இனைய வழி வகுத்தது. வெறும் ‘hunter gatherers’ ஆக இருந்து நாம் இன்று அடைந்திருக்கும் அனைத்து முன்னேற்றமும் அதன் மூலம் வந்தது. விவசாய சமூகமாக ஒரே இடத்தில் மனிதர்கள் வாழ ஒரு ‘Tribal’ கூட்டத்தை இணைக்க ஒரு கடவுளும், வழிபாட்டு முறைகளும் உதவின. அந்த கூட்டத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பின் அரசுகளும் அதற்கான கொடிகளும் எல்லைகளும் உருவாகின. பல நூறு, பல்லாயிரம் மக்களை இணைக்கும் சக்தி கதைகளுக்கு இருந்தன. மதங்களும், இராஜ்ஜியங்களும் தங்களுக்கு ஏற்றவாறு கதைகளை உருவாக்கின, பரப்பின.

இதை மகாபாரத்தோடு இணைத்து பார்க்கிறேன். வெண்முரசில் சூதர்கள் செய்திகளையும் கதைகளையும் பரப்புகிறாரர்கள். அநேகமாக அவர்கள் வாழ்வாதாரம் இராஜ்யத்தையும், மதத்தயுமே சார்ந்திருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் மகாபாரதம் சற்றே மாறுபட்டிருப்பதை ஒரு முறை நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். இதில் உண்மை எது, கற்பனை எது, திரித்து கூறப்படுவது எது, மிகைப்படுத்தி சொன்னது எது என்று அறிய முடியவில்லை. இராஜ்ஜியம் ஆண்டவர்களுக்கு உதவிய கதைகள் இன்று அதன் காலம் கடந்து நம் சிந்தனையில், நம் அடையாளமாக மாறி விட்டிருக்கிறதோ என நினைக்க வைக்கிறது. ஆனால் ஒரு மூன்று வயது பிள்ளையாக நான் தூர்தர்ஷனில் முதலில் அறிந்த மகாபாரதமும், ஒரு வைணவ மரபுசார் குடும்பத்தில் வளரும் போது உருவான தோற்றமும் இன்று வெகுவாக மாறி இருக்கிறது. தற்போது வெண்முரசை உள்வாங்கும் போது இதில் கடவுள் நம்பிக்கையை தனியாக பிரித்து அந்த நிகழ்வுகளை மட்டும் பார்க்க வைக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு என்னிடம் வந்து சேர்ந்த மகாபாரதம், இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்து வெண்முரசு கொண்டு பொய் சேர்க்கும். அதை படிப்பவனுக்கும் இதே  கேள்வி எழலாம். ‘Harari’யின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், அதை ஒப்புக்கொள்வீர்களா?

2. சிறு வயதில் மகாபாரதம் என்றால் எனக்கு பாண்டவர்களும், கண்ணணும், பீமனின் கதையும், அனுமன் கொடியிட்ட தேரும், அர்ஜுனனின் வில்லும், சகுனியும், துரியனும் முதலில் கண் முன் வருவார்கள். இப்போது மகாபாரதத்தை படிக்கையில் அதில் உள்ள பெண்களும் அவர்கள் ஆற்றும் செயல்களே கதையை கொண்டு செல்வது போல் உணர்கிறேன். சத்யவதி பீஷ்மரை நாடாள முடியாமல் செய்தது, காசியிலிருந்து இளவரசிகளை கவர்ந்து வர சொன்னது, தன் மற்றொரு மகன் வியாசரின் மூலமாக அம்பிகை மற்றும் அம்பாலிகை குழைந்தைகள் பெற வைத்தது , காந்தாரி மற்றும் குந்தி பெரும் முதல் பிள்ளை அரியணை ஏறும் சூழல், கௌரவர்கள் நூறு பேர் உருவாகுவது, பாண்டவர்கள் பிறக்கும் விதம்,  அவர்கள் ஐவரும் ஒரே பெண்ணை மணப்பது, பாஞ்சாலிக்கு நடந்த அநீதி, அதில் தூண்டப்பட்டு அவளும் பாண்டவர்களும் நிகழ்த்தும் போர். இப்படி அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கு பின்னும் பெண்கள் எவ்வளவு அழுத்தமான காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். சிறு பிள்ளையின் புரிதலில் இருந்த மகாபாரதம், இப்போது பெரியவன் ஆனதும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது. தாங்கள் மகாபாரததில் உள்ள பெண்களே கதையின் மய்ய புள்ளிகளாக இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டா?

ஸ்ரீநிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,
யுவான் நோவா ஹராரியின் பார்வையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் பற்றிச் சொன்னால் அவர் கூறுவதெல்லாம் குறுக்கல்வாதம் [Reductionism]. கடந்தகால உலகவரலாறு போன்ற தொகுத்துவிட முடியாத பிரம்மாண்டம் கொண்டவற்றை இப்படி ஏதேனும் ஒருசில பார்வைகளின் அடிப்படையில் சுருக்கித் தொகுத்துக்கொள்வது. உலகசிந்தனைகளில் பெரும்பாலானவை இத்தகைய சுருக்கங்களே. வரலாற்றை இப்படி தொகுத்துக்கொள்வதை வரலாற்றுவாதம் [Historicism] என்கிறோம்.

இந்தவகையான சிந்தனைகள் ‘உண்மைகளை’ உருவாக்குவதில்லை. ‘பயனுறுபார்வைகளை’ உருவாக்குகின்றன. இந்த பார்வைகளால் என்ன பயன் என்பதே இவற்றின் பெறுமதி. வரலாற்றை இந்த காலகட்டத்தில் இப்படி வகுப்பதன் வழியாக என்ன கிடைக்கிறது? ஒன்று, வரலாறு என்பது தெய்வங்களாலோ அல்லது வேறேதாவது மனிதனை விட மேம்பட்ட விசைகளாலோ இயக்கப்படவில்லை என்ற எண்ணம் உருவாகிறது. அதற்கு நேர்மாறாக வரலாறு குறித்து ஹெகல் – மார்க்ஸ் போன்றவர்கள் சொல்லிவந்த முரணியக்கப் பொருள்முதல்வாத அணுகுமுறை மாற்றமில்லா உண்மை அல்ல என்ற புரிதல் உருவாகிறது. இது மூன்றாவதொரு பார்வைக்கு வழியமைக்கிறது. முந்தைய இருபார்வைகளிலும் இருந்த குறைபாடுகளை தீர்த்துக்கொண்ட இன்னொரு கோணத்துக்காக முயல நமக்கு வாய்ப்பமைகிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் யுவால் நோவா ஹராரி வரலாறு என்பது அந்தந்த தருணங்களின் வாய்ப்புகளை ஒட்டி மானுடம் தன்னை உருமாற்றிக்கொண்டே வந்ததன் கதை மட்டுமே என்று சொல்லவருகிறார். அந்தந்த தருணங்களின் பலவாய்ப்புகளில் ஒன்று தேவையெனக் கருதியோ தற்செயலாகவோ கண்டடையப்படுகிறது. வரலாறு அவ்வழியே ஒழுகி வந்துள்ளது.

மகாபாரதம் உட்பட இன்று நமக்கு கிடைக்கும் கதைகள் உருவானதற்கு இப்படி ஒரு விளக்கத்தைச் சொல்லலாம்தான். தொல்குடிகள் தங்களை குடிகளாக தொகுத்துக்கொண்டு தங்களுக்கான அடையாளம், மரபு, நெறிகள் ஆகிய மூன்றையும் உருவாக்கவேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் நம்பிக்கைகளையும் கதைகளையும் உருவாக்கினார்கள். அந்த தொல்குடிகள் இணைந்து அரசுகளாக ஆனபோது தங்களை தொகுக்கவேண்டியிருந்தது. நம்பிக்கைகளைத் தொகுத்து மதங்களை உருவாக்கிக்கொண்டனர். கதைகளைத் தொகுத்துக்கொண்டு காவியங்கள் உருவாயின.

இன்றைய அரசு, நீதிமன்றம், பொதுநிறுவனங்கள், பங்குச்சந்தை போன்றவையும் இவ்வாறு உருவானவை. கூட்டாக நம்பப்படும் ஒரு நெறித்தொகையே அவற்றை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. உதாரணமாக கம்பெனிச்சட்டத்தின் ஷரத்துக்கள் காலாவதியாகும் ஒரு நாட்டில் கம்பெனி என்ற ஒன்று இருக்கமுடியாது. அந்த ஷரத்துக்களை மாறாநெறிகளாக அந்த நாட்டுமக்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவை நிலைகொள்கின்றன. அவை கூட்டான நம்பிக்கையின் அடிப்படையில் உருவான நிறுவனங்கள் மட்டுமே.

ஆனால் இது ஒரு பார்வை. இது சமூகவியல்நோக்கில் பார்க்கிறது. நான் ஆன்மிக – தத்துவநோக்கில் இப்படிப் பார்க்கிறேன். மானுட அகம் இப்பிரபஞ்சத்தின், இயற்கையின் உண்மைகளைத் தேடித்தேடி அலைந்தது. அன்றாடங்களில் ஒருவகை நெறியாகவும், அகவயமான ஒருவகை உணர்வாகவும் அந்த உண்மைகளை கண்டடைந்தது. நீர் பள்ளத்துக்குச் செல்லும் என்பது நெறி, இங்குள்ள எல்லா வெற்றிடங்களும் ஏதோ ஒன்றால் நிரப்பப்படுகின்றன என்பது ஓர் உணர்வுசார் அறிதல் என வைத்துக்கொள்வோம். இவ்விரண்டையும் இணைத்துக்கொள்கையில் நீர் ஒரு படிமம் ஆகிறது. ஒரு தொன்மம் ஆகிறது. ஒரு தெய்வம் ஆகிறது.

இப்படி அறியப்பட்ட மெய்யறிதல்கள் படிமங்களாக சிதறிப்பரந்திருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றை ஒன்று நிரப்பலாயின. மெய்மைகள் இணைந்து முழுமெய்மையாக மாறின. அறிதல்களின் இடையே நிகழ்ந்த மாபெரும் உரையாடலும் இணைவும்தான் மகாபாரதம் போன்ற பெரும்படைப்புக்களை உருவாக்கியது. அது உண்மைகளை அடுக்கி ஏறி பேருண்மையை தொட்டுவிடுவதற்கான முயற்சி. இதுவும் ஒரு கோணம்தான், இதுவும் சரிதான்.

யுவால் சொல்வதன்படி மகாபாரதம் வருங்காலத்தில் என்னவாக இருக்கும்? ஒவ்வொரு அறிதலும், ஒவ்வொரு கலைப்படைப்பும் எப்படியெல்லாம் தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை பார்க்கிறோம்.திருக்குறள் சமணர்களின் கல்விக்கூடங்களுக்காக எழுதப்பட்ட நெறிநூல். ஆகவே அனைவருக்கும் உரியதாக எழுதப்பட்டது. ஆனால் பத்தொன்பதாம்நூற்றாண்டில் அது மதச்சார்பற்ற அறநூலாக வாசிக்கப்பட்டது. அப்படி ஒரு காலகட்டத்தில் ஒரு தேவைக்காக ஒரு கோணத்தில் வாசிக்கப்பட்ட நூல் இன்னொரு காலகட்டத்தில் வேறுவகை வாசிப்பைப் பெறக்கூடும்.

மகாபாரதமே இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை நெறிநூல்களின் தொகுப்பாகவே வாசிக்கப்பட்டது என ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதன் கதையைவிட அதில் அடங்கியிருக்கும் வெவ்வேறு நீதி – நிர்வாக நூல்களே முக்கியமானவையாக கருதப்பட்டன. ஆனால் இன்று அது ஒரு மகத்தான மானுடநாடகமாக வாசிக்கப்படுகிறது. அதன் நெறிநூல்தொகைகள் பெரும்பாலும் வாசிக்கப்படுவதில்லை. அவை முழுமையாகவே பொருளிழந்துவிட்டன.

அதேபோல நாளை மகாபாரதம் எப்படி வாசிக்கப்படும் என்று சொல்ல முடியாது. இன்று வெண்முரசு அதை மனிதவாழ்க்கையின் சித்திரங்கள், தொல்படிமங்கள் வழியாக மீட்டுரு செய்கிறது. நாளை வேறுவடிவங்கள் வரலாம். ஆனால் எந்த நூலும் முழுமையாக இன்னொன்றாக ஆவதில்லை. அதன் ஒரு புறவடிவம் மாறிக்கொண்டே இருக்க சாராம்சமான ஒன்று தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. அது நிகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகக் கைமாறப்படும் சில தத்துவங்களும் விழுமியங்களும் நினைவுகளும்தான் பண்பாடு எனப்படுகின்றன.

மகாபாரதம் பெண்களின் கதையையும் உள்ளடக்கியதுதான். வெண்முரசிலுள்ள பெண்களின் சித்தரிப்பு பெரும்பாலும் மகாபாரதத்தை ஒட்டியதுதான், அது சற்று விரித்தெடுக்கப்பட்டுள்ளது. சென்ற காலங்க்களில் அது வீரர்களின் கதையாக முனிவர்களின் கதையாக மட்டுமே வாசிக்கப்பட்டது. பின்னர் அறத்தொகையாக மட்டுமே வாசிக்கப்பட்டது. இன்று புதிய வாசிப்பு பெண்களுக்கு, தோற்கடிக்க்கப்பட்டவர்களுக்கு, ஆற்றலற்றவர்களுக்கு இடமளித்து அதை வாசிக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்