பாரத் என்னும் பெயர்

வணக்கம் ஜெ

இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்றோ ‘ஹிந்துஸ்தான்’ என்றோ மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. எனது நீண்டநாள் விருப்பம் இந்த தேசத்தின் பெயரை  சட்டப்பூர்வமாகவும் ‘பாரதம்’ என்றே மாற்றவேண்டும் என்பது. ‘ஹிந்துஸ்தான்’ என்பதிலுள்ள ‘stan’ எனும் பின்னொட்டு (suffix) பாரசீக வழக்கு. ‘இந்தியா’ என்பதிலுள்ள ‘ia’ எனும் பின்னொட்டு ஐரோப்பிய வழக்கு. இவ்விரு பெயர்களும் பிறர் நமக்கு சூட்டியவை. இவையிரண்டையும் விட பாரதமே பொருத்தமானதும், நமக்கு நாம் சூட்டிக்கொண்ட பெயராகவும் இருக்கும்.

சில இந்துத்துவ அரசியல்வாதிகள் ஹிந்துஸ்தான் எனும் பெயர் சூட்டுவதனால் ‘இந்துக்களின் தனி தேசம்’ என்கிற அடையாளம் பெறுவதாகக் கருதி, இப்பெயரை ஆதரிக்கிறார்கள். இது தவறானது என்றே கருதுகிறேன். ‘ஹிந்துஸ்தான்’ என பெயர் சூட்டும் பட்சத்தில் நிச்சயம் எதிர்ப்புகள் எழும். அரசியல் அல்லது மத ரீதியிலான எதிர்ப்புகளைத் தாண்டி ‘பாரதம்’ என்ற பெயரே சரியானதாக இருக்கும்.

பிறர் நம்மக்களித்த அடையாளங்களை (பெயர், கதையாடல் உட்பட) தவிர்ப்பது அல்லது நிராகரிப்பது ஒருவகையில் நம்முடைய சுய அடையாளங்களை, கதையாடல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், அடிமை மனநிலையிலிருந்து மேலே செல்வதற்கும் வழிவகுக்கும் என்றே கருதுகிறேன். இந்தப் பெயர்மாற்றம் குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவல்.

நன்றி

விவேக்

வல்லபர்

அன்புள்ள விவேக்,

எனக்கு இந்தப் பெயர்மாற்றம் போன்றவற்றில் பெரிய ஈடுபாடு இல்லை. எல்லா பெயர்களுமே இடுகுறித்தன்மை கொண்டவைதான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக போடப்பட்டவை. பெயர்களுக்கு நாம் ஏற்றும்பொருள்தான் அவற்றுக்கு நிலைக்கும், மற்றபடி அடிக்கடி பெயர்களை மாற்றிக்கொள்வதெல்லாம் ஒருவகை தாழ்வுணர்ச்சி.

அத்துடன் பெயர்களின் அரசியலென்பது முடிவே அற்றது. எந்தப்பெயரும் எல்லாருக்கும் உவப்பானதாக இருக்காது. ஒருசிலர் அதை எதிர்க்கலாம். அதையொட்டி சச்சரவுகளே உருவாகும். ஒரு பெயர் நீண்டகாலமாக இருந்துவந்தால், வரலாறு சார்ந்து அதற்கு ஓர் ஏற்பு இயல்பாகவே உருவாகிறது. அதை கலைத்து மீண்டும் ஏன் சிக்கலை உருவாக்கவேண்டும்

மேலும் அரசியல் சிக்கல்கள் எளிதில் முடிந்துவிடும். கலாச்சாரச் சிக்கல்கள் மேலும் மேலும் புதுவடிவுகொண்டு வளரும். இந்தியாவை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்ததுதான் இன்றுவரை இங்கே பிரிவினைக்குரலும் கசப்புகளும் ஓங்கியிருப்பதற்கான மையக்காரணம். அத்தகைய ஒன்று பெயர்களின் அரசியல்.

உண்மையில் இந்தியாவுக்கு தேவை என்ன? புதிய பெயரா? முதல்தேவை, பொருளியல் வளர்ச்சியும் அதை சீராக அனைவரும் அடைவதற்கான அமைப்பும். அதற்கான முயற்சிகளே இன்றைய தேவை. அதற்கு தடையாக ஆகும் எதுவுமே முதன்மையாக அழிவையே உருவாக்குபவை. இப்போது இத்தகைய தேவையற்ற கலாச்சாரப் பூசல்களை தூண்டிவிடுவது அரசியல் லாபத்தை அளிக்கலாமே ஒழிய நன்மை அளிக்காது.

மரபை ‘அப்படியே’ பேணுவது ,மரபு சார்ந்த பெருமிதங்களைச் செயற்கையாக உருவாக்கிக்கொள்வது, பழமைவழிபாடு ஆகியவற்றை உருவாக்கினால் அது இந்தியாவை மீண்டும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்துகே கொண்டுசெல்லும். எந்தவகையான பிரிவினைச்செயல்பாடும் பொருளியல்வீழ்ச்சிக்கே இட்டுச்செல்லும்.

இந்த பண்பாடு தன்னைப்பற்றிய நம்பிக்கையுடன் தன்னை ஆய்வுநோக்கில் அறியவும், நவீன அறவியலுடன் மரபை இணைத்துக்கொண்டு முன்னெடுக்கவும் உதவும் கல்விச்சூழலை உருவாக்குவது இன்றைய பணி. அவற்றை இன்று எவரும்   செய்வதுபோல எனக்குத்தெரியவில்லை.

மேலும் இந்தியா, பாரத் என்ற இரு பெயர்களுமே புழக்கத்தில் உள்ளன. இதில் இந்தியா என்பதை அழிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்தப்பெயரும் இந்தியவரலாற்றின் வழியாக உருவாகி வந்த ஒன்றுதான். எனக்கு இந்தியப்பெருநிலம் மீது பித்து உண்டு. அந்த பித்துதான் இந்தியா என்ற சொல்லையும் விரும்பவைக்கிறது

சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் என்னை பார்க்கவந்தார். மலையாளி. அவர் ஒரு மாபெரும் மனுவில் கையெழுத்து வாங்கவந்திருந்தார். அதன் நோக்கம் சுத்தாத்வைதம் என்னும் சொல்லை புஷ்டிமார்க்க வைணவர்கள் பயன்படுத்துவதை தடைசெய்வதற்கான கோரிக்கை. வைணவம் அத்வைதம் என்ற சொல்லை பயன்படுத்துவது மோசடி என்றார் அவர். மேலும் அவர்கள் சுத்தாத்வைதம் என தங்களைச் சொல்லிக்கொள்வது வழியாக மெய்யான அத்வைதிகளை இழிவுசெய்கிறார்கள்

“வல்லபர் ஒரு மோசடிக்காரர்” என்று கொதித்தார் நண்பர். நான் சீரியசாக ‘ஆமாம், அத்வைதம் நாயர்களுக்குரிய தனிச்சொத்து. சங்கரமடமெல்லாம் மீமாம்சகர்கள். அவர்கள் அத்வைதிகள் என்றபெயரை பயன்படுத்தக்கூடாது” என்றேன். அவர் “ஆமாம்” என்றார். “சங்கரர் என்றெ சொல்லிக்கொள்ளக்கூடாது. நாராயணகுருவும் அத்வைதி இல்லை. சட்டம்பிசாமி மட்டும்தான் அத்வைதி” அவர் நான் கேலிசெய்வதை புரிந்துகொண்டார்.

எனக்கு பண்பாடு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடுண்டு.மதம் சார்ந்த தத்துவங்களிலும் ஈடுபாடுண்டு. ஆனால் அவையெல்லாமே வாழ்க்கையின், என் இருப்பின் மெய்மையை நோக்கிய என் தேடலின் பகுதியாகவே. எளிய பூசல்களில் ஈடுபாடில்லை

ஜெ

முந்தைய கட்டுரைநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? சஷி தரூர்
அடுத்த கட்டுரைகிருஷ்ணனின் குருவி