செல்வேந்திரன் வாசித்தது எப்படி?

அன்புள்ள ஜெ.

வணக்கம். வாசிப்பது எப்படி என்ற வழிகாட்டி நூல்  கிண்டிலில் வாசிக்கக் கிடைத்தது. எளிய நூல் ஆனால் வலிமையான வழிகாட்டி என்று சொல்லலாம்.
வாசிப்பதால் என்ன பயன்? பொருளாதார அனுகூலம் என்ன? வாழ்வியல் அனுகூலம் என்ன? என்று பதின்பருவத்தினர் மட்டுமல்லாமல் தீவிர வாசகர்களின் மனதிலும் மேலெழும் கேள்விகளுக்கு விடையாக உள்ளன இக்கட்டுரைகள்.
எந்த நடிகரும் புத்தகம் வாசி என்றோ நாளிதழ் வாசி என்றோ ரசிகர்களுக்கு சொன்னதில்லை. சிறந்த உலக சினிமாக்களை பாருங்கள் என்றோ பரிந்துரை செய்ததில்லை. அவ்வளவு ஏன் தான் படித்த நூல் ஒன்றைப் பற்றி கூட பொது வெளியில் உரையாடியதில்லை. அரசும் கூட அவ்வாறு சொல்வதில்லை. ஏனெனில் வாசகனாகும் ஒருவன் ரசிக மந்தையில் இருந்து விலகிவிடுவான். அவர்களுக்குத் தேவை மந்தை மனம் கொண்டவர்களே.
கொரோனா காலத்தில் இளைஞர்கள் சேர்ந்து ரம்மி, கேரம், கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் மரத்தடியில் அமர்ந்து யாரேனும் வாசிப்பதை காண முடியவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் வாசிப்பு என்பது கடும் உழைப்பைக் கோருவது. மூளையை கழற்றி வைத்துவிட்ட சமூகம் ஆகிவிட்ட பின்னர் வாசிக்கச் சொன்னால் எப்படி?
தினமும் 12 மணி நேர பணிக்கு இடையிலும் ஆண்டுக்கு 25 ஆயிரம் பக்கம் வாசிக்கும் செல்வேந்திரனின் உழைப்பே வாசிப்பின் முக்கியத்துவம் என்ன, அதற்கான அர்ப்பணிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
சமூக ஊடகங்கள், வெட்டி அரட்டைகள் என நேரம் கொல்லிகளையே விரும்பும் சமூகத்தில் வாசிப்பவன் மறை கழன்றவனாகவே பார்க்கப்படுகிறான்.
நூல்கள் வாசிப்பது பொருளாதார அனுகூலம், வாழ்பனுபவம் தரும் என்பதற்கு மேல் ஒருவனை அவையத்து முந்தி இருக்கச் செய்வது என்று உணர்த்தி உள்ளார்.
அன்புடன்
க.ரகுநாதன்

அன்புள்ள ரகு

வாசிப்பது எப்படி என்று மட்டுமல்ல வாசிப்பது எதற்காக என்றும் நூல்கள் எழுத முற்றிலும் தகுதிகொண்ட சில நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களில் ஒருவர் செல்வேந்திரன். எனக்கு என் நண்பர்கள் சிலரைப்பற்றி எண்ணும்போதெல்லாம் பெருமிதம் உருவாகும், அவர்களில் செல்வேந்திரனும் உண்டு

திருநெல்வேலியில் சாத்தான்குளத்தில் மிக எளிய குடும்பத்தில் பல அண்ணன்கள்நடுவே இளைய தம்பியாகப் பிறந்தவர். முறையான படிப்பு இல்லை. படிக்கும் நாட்களில் தீப்பெட்டி வினியோகம் செய்யும் தொழில். நாகர்கோயில் வந்து குமரிமாவட்டம் முழுக்க, ஒருநாளில் ஐம்பதுகிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணம் செய்து வினியோகம் செய்யவேண்டும்

பொதுவாக கடுமையான உடலுழைப்பு படிப்புக்கு எதிரானது. எல்லாவகையான மூளையுழைப்பையும் இல்லாமலாக்கிவிடுவது. ஆனால் வாசிப்பு வெறி செல்வாவை இயக்கியது. கிடைப்பதை எல்லாம் கிடைக்குமிடங்களிலெல்லாம் வாசிக்கவைத்தது. உலகிலேயே அதிக குப்பையை வாசித்தவர் என்று நண்பர்கள் அவரை கிண்டல்செய்வோம். ஏனென்றால் எந்த வழிகாட்டியும் இல்லை. நவீன இலக்கியம், நவீன சிந்தனைகள் எல்லாமே இயல்பாகவே சொந்தப்புத்தியால் அவர் கண்டடைந்தது. நுண்ணுணர்வுள்ளவனுக்கு இலக்கியத்தின் தனித்தன்மை, இலக்கியத்தின் நெறிகள் எவற்றையும் எவரும் அடையாளம் காட்டவேண்டியதில்லை என நான் சொல்வதுண்டு, செல்வா அதற்கான உதாரணம்

நூல்கல்வியிலிருந்து அவர் முறைசார்ந்த கல்விக்குச் சென்றார். தபால்வழியாக முதுகலை வரை பயின்றார். இதழியலில் நுழைந்தார். விற்பனைமேலாளரானார். அனைத்து இடங்களிலும் பிறரைவிட ஒருபடி மேலாக அவரை நிலைநிறுத்துவது அவருடைய வாசிப்பு. அவருடைய துறையின் நிர்வாகநூல்களில் இருந்து சூழலின் நாளிதழ்கள், வாரஇதழ்கள் அனைத்தையும் வாசிப்பவர். உடன் இலக்கியமும். இலக்கியநூல்களை முதலில் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுபவர்களில் ஒருவர்.

இந்த கொரோனா நாட்களில் வேலையிழப்புக்கு ஆளாகி துயருற்றிருந்த நண்பர்களை அவரிடம் அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவருக்கும் அவர் ஏதாவது செய்திருக்கிறார். ஒருவரைக்கூட கைவிடவில்லை. ஒரு தனிமனிதராக இருந்தவர் இன்று ஓர் ஆளுமை, ஒரு நிறுவனம்போல.

வாசிப்பு மனிதனை அவன் அடையச்சாத்தியமான உச்சங்களுக்குக் கொண்டுசெல்லும். வாசிப்பால் உயர்ந்த ஒருவர் வாசிப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார். இது வேதாந்தி எழுதிய தத்துவநூல் அல்ல, இறைவனை உணர்ந்த ஞானி எழுதிய நூல்.

ஜெ

முந்தைய கட்டுரைஊடுபிரதிகள்
அடுத்த கட்டுரைஉறுப்புமாற்றம் பற்றி…