அன்புள்ள ஜெயமோகன் சார்,
“கரவு” சிறுகதை சிறுவயதில் கிளர்ச்சியும் பீதியுமாய் பார்க்கும் சுடலைமாட சுவாமி கோயில் கொடையை நினைவு படுத்தியது. சுடலை சாமியாடும் போதும், ரத்த பலி குடிக்கும்போதும், வேட்டைக்கு போகும்போதும் எனக்கு “ஏன் இவ்ளோ வெறியா… இவ்ளோ ஆவேசமா ஏன் சாமி இருக்கணும்?” “ஏன் அதை கும்பிடணும்?” என்று தோணும். ஆனாலும் ரத்தபொட்டு வாங்கும்போது மனதில் ஒரு திமிர் வரும். உங்களின் “மாடன் மோட்சம்” கதை முதல் சுடலை மாடன் பல வடிவங்களில் வந்துகொண்டு இருக்கிறார். ஆசான் அப்புவிடம் அவனது அம்மா பாட்டி எல்லாம் திட்டு வாங்குகிறார்கள்.
முதலில் என் சுடலை மாடனுக்கும் இரவுக்கும் என்ன சம்பந்தம் என ? ஒரு கேள்வி .அதற்கு ……… “ஏன்னா அவனுக கள்ளன் இல்லல்ல?அவனுக பகலிலே சீவிச்சுதவனுக. நாம ராத்திரியிலே சீவிச்சுதோம். ராத்திரியிலேயாக்கும் பாம்பு சீவிச்சுதது. பேயும் பூதமும் சீவிச்சுதது. கெந்தர்வனும் மாடனும் மாயாண்டியும் சீவிச்சுதது… இவனுகள பாரு… அந்தியானா வீட்டுக்குள்ள வெளக்க வச்சிட்டு இருக்குதவனுக. இவனுகளுக்கு ராத்திரியக் கண்டா பயம்” என பதிலாக தங்கன் கூறுகிறான்.
அடுத்தது என் சுடலைமாடனை ஒரு பயத்தோடு ஒரு ஒவ்வாமையோடு கும்பிடுகிறோம் ? …..அதற்கும் தங்கனே ” “பகலு கண்ணு முன்னால தெளிஞ்சு கெடக்கு. ராத்திரின்னா சொப்பனமுல்லா? சொப்பனத்திலே என்ன உண்டுண்ணு எப்பிடித் தெரியும்? சாதாரணக்காரனுக்கு சொப்பனத்தைப்போல பயம் வேற இல்ல. வாற சொப்பனத்திலே முக்காலும் கெட்ட சொப்பனமாக்கும்” “கள்ளன் வாறது அந்த சொப்பனத்திலே. சொப்பனத்திலே அவனுகளுக்க பெண்டாட்டிகளுக்க கொணமும் வேறேயாக்கும்னு அவனுக்கு தெரியும். பகலிலே அவளுகளை அடைச்சு போடலாம். சொப்பனத்துக்கு தாப்பாள் இல்ல பாத்துக்க” பதில் கூறுகிறான். தங்கன் பிடிபட்டபின் பெரியவர் ஒருவர் ” “அவனுகளுக்கு ஆயிரம் மந்திரமும் தந்திரமும் உண்டு.” என்கிறார். ஒரு கிழவர் “மாயம்படிச்ச கள்ளனாக்கும்…” என்கிறார்.
அதுதான் நம்மால் முடியாத மாயமும் தந்திரமும். ஒரு இயலாமை. நம் வீட்டு பெண்களையே தடுக்க முடியாது என்று உள்ளுர வந்து அறையும் இயலாமை.
கடைசியில் வரும் சம்பவம்தான் சிறப்பு. ….”மாயாண்டி சாமி “டேய், எவண்டா என் தோழனை கட்டியது? அறுத்துவிடுடா அவனை!” என்றது “டேய்! இப்பவே அறுத்துவிடுடா.”….தங்கன் சுடலைமாடனின் தோழன்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
***
அன்புள்ள ஜெ..
ஒரு கூட்டத்தில் ஒரு நடிகர் பேசினார் ” என் வழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யட்டும். கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன் ” சொல்லி விட்டு சிரித்துக் கொள்கிறார். கூட்டம் கைதட்டுகிறது
கடவுள் என்பவர் ஹீலர் , காற்றில் இருந்து தங்கம் வரவைப்பவர் என்ற ஒரு பாமரத்தனமான எண்ணத்தில்தான் பல கடவுள் நம்பிக்கையாளர்களும் மறுப்பாளர்களும் இருக்கின்றனர்..
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
அவன் ஆண் அல்ல பெண் அல்ல காண முடியாதவன்.. இருப்பவன் இல்லை. இல்லாதவனும் இல்லை என இறையை வர்ணிக்க முடியாமல் திணறுவதை படிப்போர்க்கு , இறைவன் என்பது அப்படி ஒரு எளிதான விஷயமாக தோன்றாது
இறை என ஒரு கண நேர தரிசனம் மட்டுமே . அதை விவரிக்க ஆரம்பிக்கும்போதே அந்த அனுபவம் நழுவ ஆரம்பிக்கிறது.
இறைவன் கதை இந்த அபூர்வமான கணத்தை −விவரிக்காமல்− உணர்த்த முயல்கிறதுகனிந்த , கம்பீரமான , துணிச்சலான , இனிய சுபாவம் கொண்ட தேவகிஅன்றாட வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வரும் சேகரன்.இயல்பான குடும்ப தலைவன்கலை சாரந்த நிமிர்வு கொண்ட மாணிக்கம் ஆசாரிஇசக்கியம்மை ,ஆகியோரும் ஆசாரியால் வரையப்படும் பகவதியும் பிரதான பாத்திரங்கள்
என்று நீ . அன்று நான் என்பார்கள்;குழந்தை பிறக்கும்போது ஒரு தாயும் பிறக்கிறாள் என்பதுபோல ஒரு பக்தன் பிறக்கும்போதுதான் இறைவனும் பிறக்கிறான். பக்தன் என ஒருவன் இல்லாவிட்டால் இறைவன் என யாரும் இல்லை. இறைவன் எந்த அளவுக்கு பழமையானவனோ அதே அளவுக்கு பக்தன் பழமையானவன்.
அறிபவன் , அறியப்படுபவன்.. உருவாக்குபவன் , உருவாக்கப்படுவன் என்ற ஆதிகால தொடர்ச்சியை இக்கதையில் காண முடிகிறது.இந்த கதையின் சிறந்த பாத்திரமான தேவகியின் முன் ஆசாரி தன் துடுக்குத்தனங்களை எல்லாம் விட்டுவிட்டு அழகான சிறுவன்போல ஆகி விடுகிறான்
ஆனால் அவளால்கூட அவனது “மூதேவி” தன்மையை அகற்ற முடியவில்லை. அதற்கான முயற்சியை அவள் செய்து பார்த்துவிட்டு எப்படியோ போ என விட்டு விடுகிறாள்
ஆனால் இசக்கியம்மை அவனை கனிய வைத்து விடுகிறாள். அவனிடமிருந்து பிரிக்க முடியாது என அவன் உட்பட அனைவரும் நினைத்த மூதேவி தனத்தை அநாயசமாக துரத்தி விடுகிறாள்
அவனது மிகைப்படுத்தல்களை நம்பும் அப்பாவித்தனம் , அன்புக்கான தேடல் போன்றவைதான் இறையை கனிய வைப்பவை. அழுதால் அவனைப் பெறலாமே என்பது இதுதான்
பகவதியைப் பார்பதற்கு அஞ்சிய அவள் , பகவதியுடன் உரையாடும் அளவுக்கு செல்கிறாள்ஏதோ ஒரு கணத்தில் அந்த கலைஞனுக்கு பகவதி கைவரப்பெறுவது போல அவளுக்கும் அந்த கணம் அமைந்து விட்டது போலும்
பிச்சைக்காரன்