பாலையின் பொருளில்லா வெண்மையில்
மணல் அலைகளின் வெறுமையின்மேல்
காற்றின் பசியோலத்தின் கீழ்
தன் நடையோசை ஒன்றே துணையென
செல்பவனின் கால்கள் எப்படியிருக்கும்?
இழைக்கப்படாத மரம்போல் செதில்படிந்து
வெடித்து
காய்த்து.
எனில்
வருபவனின் கால்களும் அவ்வண்ணமே இருக்கும்.
கால்களாலன்றி அவன் சென்ற தொலைவை
எவ்வண்ணம் அறிய முடியும்?
கால்களாலன்றி அவன் வந்த கருணையை
எவற்றால் உணர முடியும்?
ஓநாயின் கால்கள்போல் ஓசையற்றவை
புலியின் கால்கள் போல் பிறழாதவை
முள்மரத்தின் அடியென
மண்ணில் வேரூன்றியவை.
இங்கே
வழிதவறி அலைகையில்
காண்கிறேன் அவற்றின் சுவடுகளை
அவை எனக்கு முன்னால் வழிகாட்டிச் சென்றிருக்கின்றன
அல்லது எனக்கு முன்னால் எவரையோ
தேடிச்சென்றிருக்கின்றன
அங்கே முன்னால் செல்பவனும் நானேதான்
களைத்து விழுவதற்கு முன்
இங்கு நின்று என்னில் இருந்து
நான் தொலைவுக்கு வீசியெறிந்த
நான்
இறுதிச்சொல்லையும் வரளச்செய்கிறது இக்கோடை
இறுதி மூச்சையும் ஊதியெடுத்துவிடுகிறது
இந்த பாலையின் வெறும் வானம்
இங்கே நிழல்தர மறுத்து
சிற்றிலைகளுடன் நின்றிருக்கின்றன மரங்கள்
நீரை உள்ளிழுத்துக்கொண்டு
சேற்றுக்குழியென்றாகிவிட்டிருக்கின்றன ஊற்றுகள்
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று
எனக்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன்
வழிதவறுபவர்களின் அகத்தில் கலையும்
ஆயிரம் வழிகளில் ஒன்று
அவனை நோக்கி கனிவுடன் பதைபதைக்கிறது
கைநீட்டி அழைக்கிறது
வழிதவறுபவனின் கால்களில்
வடுக்கள் மேலும் ஆழ்கின்றன
வெடிப்புகள் விரிகின்றன
புழுதி செறிகிறது
இக்கால்களுக்காகவேனும்
இக்கால்களின் புழுதிக்காகவேனும்
இவை அறிந்த இந்நிலத்தின் வெம்மைக்காகவேனும்
வருக
இந்த தனிமையில் களைத்துவிழுந்து
எஞ்சுவதொன்றில்லை என
கண்மூடி அமர்ந்து
ஒரு தளிர்க்கால்களை எண்ணிக்கொள்கிறேன்
மண்படாத மலர்ப்பாதங்கள்
நெடுந்தூரம் நெடுங்காலம்
நடப்பதற்கிருப்பவை
வழிதவறியோர் அனைவரையும்
தேடிச்செல்வதற்கிருப்பவை
வடுக்களை
வெடிப்புகளை
புழுதியை
காத்திருப்பவை
மிக இனிய
மிக அழகிய
மென்மலர்ப்பாதங்கள்
*
இரு தனிமைகள்
சொல்
இவ்விரவில் மௌனமாக உருகு
கடவுளின் மைந்தன்
தொலைவு