விவாதங்கள் நடுவே-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

2020 ஆண்டு உங்களுக்கு பலவகையான சின்னச்சின்ன தொந்தரவுகளால் ஆனதாக இருந்தது என்பதை காண்கிறேன். எல்லா முனைகளிலிருந்தும் தாக்கினார்கள். இந்துத்துவர் தாக்குதலும் ஏளனமும் இந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. அதோடு அவர்கள் எதையும் காத்திரமாக விமர்சிக்கவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பெல்லாம் அவர்களுக்கு இல்லை. சொல்லும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஏதாவது நையாண்டி செய்வது மட்டுமே அவர்களால் செய்யமுடிந்தது. அதிலும் தமிழகத்தில் இவர்களுக்கு சோ- எஸ்.வி.சேகர் பாணி எரிச்சலூட்டும் ஒரு நையாண்டி உண்டு. தாங்கள் ஏதோ அறிவின் உச்சியிலிருப்பதுபோல பாவனைசெய்துகொண்டு ஏகத்தாளமாக எழுதுவது. அல்லது சின்னச்சின்னதாக ஏதாவது தப்பு கண்டுபிடித்து அதைப்பற்றி பெரிய பெர்பெக்‌ஷனிஸ்டுகள் போல எழுதுவது. பீத்துணிபோன்ற உரைநடையில் எழுதும் இவர்களெல்லாம் பிழைகண்டுபிடிப்பதெல்லாம் ஒரு வேடிக்கைதான். இத்தகைய எரிச்சலூட்டும் சூழலிலும் நீங்கள் பொருட்படுத்தாமல் உங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டிருந்தீர்கள்.

இடதுசாரி விமர்சனம் வழக்கம்போல வசைதான். அவர்கள் மார்க்சியத்தை கரைத்துக்குடித்து களத்தில் நின்று துப்பாக்கிக்குண்டுகளை நெஞ்சில் ஏற்றிக்கொள்பவர்கள் என்று ஒருபாவனை. ஆனால் எல்லாரும் அசட்டு முகநூல் வீரர்கள். இந்த ஆண்டில் இந்த கும்பலை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் நீங்கள் எழுதவேண்டும் என விரும்புகிறேன்

ஆர்.சிவக்குமார்

 

வணக்கம் ஜெ

நீங்கள் பலநேரங்களில் இந்த அசடர்களைப் பற்றி குறிப்பிட்டதுதான். இருந்தும் உங்களுக்கு வரும் எதிர்மறையான மின்னஞ்சல் குவியல்களால் எவ்விதத்திலும் மனச்சோர்வு அடையாமல் எப்போதும் படைப்பின் தீவிரத்திலேயே உளநிலையை வைத்திருப்பது மாஸ்டர்களுக்கே உரிய அசாத்திய தன்மைதான். இல்லையெனில் ஒரு சிறிய எதிர்மறை விமர்சனமோ, இகழ்ச்சியோ சோர்வைக்கொடுத்துவிடும். உண்மையில் நம் நடுத்தரவர்க்க மனிதர்களிடம் இருக்கும் போலித்தனம்போல உலகில் வேறு எங்கும் இருக்காது போல. இவர்களின் அறிவுரைகூட பரவாயில்லை; ஆனால் ‘ஒப்பிடுதல்’ மிகவும் அபத்தமானது. உண்மையில் இவர்கள் தன்னை மிஞ்சிய எதையும்/எவரையும் ஏற்க மறுக்கிறார்கள். அதற்கு முதன்மைக் காரணம் அவர்கள் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியே; ஆனால் அதை வெளியே தெரியவிடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இன்னொன்று, இவர்கள் கல்வி உட்பட எதையுமே அமைப்பு சார்ந்த, அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஒன்றையே ஏற்பார்கள், அங்கீகரிப்பார்கள், கொண்டாடுவார்கள். அசாத்திய மனிதர்களை இவர்கள் ஏற்பார்கள்; ஆனால் அந்த அசாத்தியத்தன்மை ‘அமைப்பின் கட்டுமானத்துக்குள்’ செயல்படுவதாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவோ, அறுவை சிகிச்சை நிபுணராகவோ அல்லது பாதுகாப்புத் துறை செயலராகவோ இருந்திருந்தால் இவர்கள் உங்களிடம் இப்படியா நடந்துகொள்வார்கள் ? நல்ல பிள்ளையாகப் படித்து, பள்ளியில் நூற்றுக்கு நூறு வாங்கி, பல்கலையில் ஜனாதிபதி கையால் பட்டம் பெற்று, ஒரு துறையில் கோர்ட்-சூட் அணிந்து பேட்டி கொடுக்கும், ‘அமைப்பின் செல்லப்பிள்ளையாக’ வாழ்ந்திருந்தால் உங்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதையே வேறு. மாவுக்கடை வாசலில் போற வர்ற குடிகாரன்கிட்டல்லாம் அடிவாங்கும் நிலை இருந்திருக்காது; அதைக்கண்டு ஒரு காலிக்கூட்டம் கும்மியடிக்கும் நிலையும் இருந்திருக்காது. (அந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும், உணர்வுரீதியான என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை) ஆனால் நீங்கள் அப்படியில்லையே. இங்கு சராசரி, சாமானியம், நார்மல் என்றெல்லாம் சுட்டப்படும் விஷயங்களுக்கு அப்பாற்பட்ட அசாத்தியத்தையல்லவா ஒரு இலக்கியவாதி கொண்டிருக்கிறான். தறிகெட்ட தேடலாலும், கட்டுமீறிய தன்மையாலும், முட்டிமோதி உருவாக்கிக் கொண்ட அசாத்திய போக்கல்லவா அது ? இது எப்படி இந்த அன்றாடவாதிகளுக்கு ஏற்புடையதாகும்? அவர்கள் நாக்கு அதைத் துளைத்துக்கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் கணக்கைப் பற்றிச் சொன்னது சுவாரஸ்யமான விஷயம். கணிதத்திறனும், கற்பனைத்திறனும் பல நேரங்களில் நேரெதிரானவை. கணக்கு நன்றாகக் போடுபவர் பலருக்கு கற்பனைத் திறனோ, ரசனையோ இராது. அதை என் குடும்பத்திலேயே கண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவித வரட்டுத் தன்மையுடையவர்களாகவே இருக்கிறார்கள். அசாத்திய கடவுள் நம்பிக்கை உடையவர்கள்; ஆனால் ஆன்மிகத் தேடல் துளியும் இல்லாதவர்கள். இங்கே கணக்கு என்பது அளவுகோலாகச் செயல்படுகிறது. ஒருவனின் கணக்கு போடும் திறமையை வைத்தே அவன் அறிவாளியா அல்லது முட்டாளா என்பது முடிவுசெய்யப்படுகிறது. சாமானியர்கள் வாழ்வில் அது பெரிய அறிவாகக் கருதப்படுகிறது. ஏன் கணக்குத் திறமை இவ்வளவு பெரிய அங்கீகாரம் பெற்றது ? அதற்கான காரணமாக நான் கருதுவது அதிலுள்ள ஆர்வமூட்டும் தன்மை; இன்னொன்று அதில் தகவல்கள் இல்லை. பிற பாடங்களில் ‘கோட்பாடுகள்’ ஒருபுறம் இருக்க, தகவல்கள் கணிசமாக இருக்கும். கணிதத்தில் அந்த சிக்கல் இல்லை. அதில் தகவல் இல்லை, கோட்பாடு என்று சொல்லப்படுவதும் இல்லை. (நான் இங்கு குறிப்பிடுவது அன்றாட பள்ளிக் கணிதத்தை) அடிப்படையான சில கணித விதிகளை தெரிந்து வைத்துக்கொண்டால் அப்படியே தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கலாம். போரடிக்காத விளையாட்டு அது. இந்த ஆர்வமூட்டும் தன்மையே அதன் மீதான மதிப்பிற்கு காரணம்.

இங்கு நீங்கள் குறிப்பிடும் ‘ஆணவம்’ என்பதைப்பற்றி இகழ்ந்தும், மிரட்டியும் வருபவர்கள் தன்னளவில் ஆணவக்காரர்கள்தான். இங்கே பலரிடம் இருக்கும் ஆணவம் என்பது தங்களிடம் இருக்கும் தாழ்வுணர்ச்சியையும், போதாமையையும் உள்ளளவில் உணர்ந்து, ஆனாலும் அதை ஏற்க முடியாமலும், கடக்கவும் முடியாமலும் திணறி, அதை ஆணவமாக ஆக்கிவைத்திருப்பதுதான். அது சற்றும்  தயக்கமின்றி எல்லாவற்றையும் இகழும். மேலும், ஒளிந்திருந்து தாக்குவதற்கு ஒரு கூட்டம் கிடைத்துவிட்டால் அது இன்னும் வலுவடையும். மற்றொரு ‘ஆணவம்’ நீங்கள் குறிப்பிட்டதுபோல தற்காப்புக்கான கவசம் மட்டுமே. இவர்கள் தன்னளவில் உண்மையிலேயே ஆணவமற்றவர்கள். திறந்த மனதோடு எல்லையற்ற தேடலும், எளிதில் நிறைவடையாத, ஆறுதலடையாத தன்மையுமே அவர்களின் உந்து சக்தி; ஆணவமல்ல. ஆணவம் உந்துசக்தியாக இருக்கவும் முடியாது.
‘அற்பத்தனத்தை ஆணவத்தால் எதிர்கொள்ளல்’ என்ற உங்கள் வரியை நினைவு கூறுகிறேன்.

நன்றி

விவேக்

முந்தைய கட்டுரைகதைகளைப்பற்றி…
அடுத்த கட்டுரைமுகங்கள்