எழுதுவதை பயில்தல்-கடிதம்

இனிய ஜெ,

பாருக்கே தெரியும் நான் பயந்தவனென்பது. ஊரார் ஓர்ந்து அறிவிக்கும் முன்னரே என் ஊர்தலைக் குறைத்துக்கொண்டு வீடடங்கிக் கிடந்தேன். ஆரம்ப கட்ட உற்சாகத்தில் ஓரிரு நூல்களை எழுதி கிண்டிலில் வெளியிட்டேன். சில கட்டுரைகள் எழுதினேன். படங்கள் பார்த்து, புத்தகங்கள் படித்து, கவிதைகள் மேய்ந்து, வெப்பினார்களில் உரையாற்றி  ‘ஆத்தா நான் ரைட்டராயிட்டேன்…’

துவக்கத்தில் வேகமெடுத்தவன் எளிதில் களைப்படைவான் என டூன்ஸ் மணற்குன்று ஓட்டப்பந்தயத்தில் கவிழ்ந்தடித்து விழுந்த செந்தில் கவுண்டர் சம்பவத்தின் மறைஞானமாக உணர்ந்திருந்தாலும், அதை மறந்து தினமும் இரண்டு மணி நேரம் ஷட்டில் வேறு விளையாண்டு உடல் இளைத்தேன் என்றால் உங்களைப் போன்ற விஷநாயர்கள் அதை நம்பத் தலைப்பட மாட்டீர்கள். தெரியும். போட்டு. இப்போ மூட்டு வலி. இதமாக இருக்கிறதென்று நவரத்ன தைலத்தை தேய்த்துக்கொண்டிருக்கிறேன்.

இளவெயினி பிறப்பதற்கு முன்பு அறிவித்த நாவலை மீண்டும் ஆரம்பித்து 200 பக்கங்களை நெருங்கும்போது தோன்றியது. வாசிக்க படுசுவாரஸ்யமாக இருக்கிறது. கதையோட்டம் பாய்கிறது. கதைப் பின்னல் இல்லை. அகச்சித்தரிப்பிற்கு மொழி போதவில்லை. அத்தியாயங்களில் யாருடைய கண்ணோட்டத்தில் கதை சொல்லப்பட வேண்டுமென்பதில் குழப்பங்கள். தரிசனமெல்லாம் லெளகீகத்தின் எல்லைக்குள்ளே. வியாபாரிக்குப் பல பாதைகள் தெரியும். அந்தப் பாதைகள் எதுவும் அவனை எங்கும் கொண்டு சேர்க்காது எனபது புரிந்தது.

இலக்கியத்தின் அடிப்படைகளை, வகைமைகளை, கதைத் தொழில்நுட்பத்தை மீண்டும் ஐயம் திரிபற ஒரு மாணவனைப் போல தலைகீழாக நின்று பாடம் பயிலாமல் மேற்கொண்டு எழுதலாகாது என முடிவெடுத்தேன். இலக்கியம் அடிப்படையில் ஓர் அபாயகரமானப் பணி என்கிறார் பொலான்யோ. எழுதுகிறவன் என்னவெல்லாம் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது. மேதைகளின் ஆக்கங்கள், தத்துவப் பரிச்சயம், மானுடவியல், பண்பாட்டு அசைவுகள், பிறதுறை அறிவு, ஞானமரபு, மரபிலக்கியங்கள், கருத்தியல்கள், கோட்பாடுகள், இயற்கை அறிதல், தொன்மங்களில் ஈடுபாடு, இலக்கணம், பிற கலைவடிவங்களில் ரசனை, முரணியக்கக் கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருத்தல், கவிதை, தியானம், நவீன வரலாற்றுவாதம், உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் பட்டியலிட பட்டியலிட பெருகும் பட்டியல்.

மொன்னைத்தனங்கள், தற்காலிகப் புகழ், கட்டற்ற தகவல்தொடர்புகள், அமைப்புச் செயல்பாடுகள், லெளகீக நப்பாசைகள் ஆகியவற்றிலிருந்து முற்றாக விலகி எனக்கு ‘அறிதல்’ போதும். வேறு மயிரெழவுகள் வேண்டாமெனும் துணிவு இருந்தால்தான் நான்காவது பாராவில் இருப்பவை சாத்தியம் எனத் தோன்றுகிறது. அமர்ந்தாலே கதை பெருகும் உங்கள் விரல்களுக்குப் பின்னால் இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக முண்டியடித்துக்கொண்டு நிற்பதால் புனைவுக்களியாட்டு 60 கதைகளைத் தாண்டியும் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது. இந்தக் கதைகள், வெண்முரசு அத்யாயங்கள் தாண்டி நிச்சயம் கடிதங்களுக்குப் பதில்கள், சினிமா வேலைகள், மதிப்புரைகள் என நீங்கள் மேலும் எழுதிக்கொண்டிருப்பீர்கள். வெண்முரசு பற்றி யாராவது வியந்தால் நீங்கள் பல்ஸாக்யாவின் – பால்சாக்கை ஃப்ரெஞ்சில் அப்படித்தான் சொல்லவேண்டுமாம் – தி ஹ்யூமன் காமெடியை சொவதைக் கண்டிருக்கிறேன். அவர் பகலில் 1 மணிக்குத் துவங்கி மறுநாள் காலை 5 மணி வரை எழுதுபவர். கட்டங்காபியை அண்டா அண்டாவாக குடிப்பவர். இரு மிருகங்கள் மூர்க்கமாய் மோதிக்கொண்ட நிலம் போல இருக்குமாம் அவரது சாப்பாட்டு மேஜை. ஏழாள் உணவைத் தின்றுவிட்டு பத்தாள் வேலையைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார். உலகெங்கிலும் அசலான எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதித்தள்ளியிருக்கிறார்கள். மாங்காய்ப் பால் உண்டு மலைமேல் ஏறுவது சரிப்படாதென நினைப்பவர்கள் தேங்காய்ப் பால் உண்டு தெருவழியே நிற்கும் இடம் ஃபேஸ்புக். ரப்பர் மட்டுமே வெளிவந்திருந்த சூழலில் நீங்கள் கொடுத்திருந்த பேட்டியை – ஏற்கனவே பலமுறை வாசித்திருந்தாலும் – நேற்றிரவும் வாசித்திருந்தேன். ஃபீட்பேக் என்பது எழுத்தாளனை அவனறியாமல் மாற்றிவிடக் கூடியது என்று அன்றே சொல்லியிருக்கிறீர்கள். எத்தனை நிஜம். நான் மிஷ்கினைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். மூவாயிரம் பேர் வாசித்திருக்கிறார்கள். நான்காயிரம் கருத்துக்கள் வந்துள்ளன. மறுநாளே ஹூலியஸ் கொர்த்தஸாரின் ஒரு சிறுகதை பற்றி எழுதினேன். பதினாறு லைக்குகள். அதில் ஆறு ஃபேக் ஐடிக்கள் என்னுடையவை. ‘நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்க முறையிடலாம்…’

மீண்டும் விஷயத்துக்கு வருகிறேன். மீண்டும் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், நாவல் கோட்பாடு, எழுதும் கலை, இலக்கிய முன்னோடிகள் போன்ற நூல்களை வாசித்தேன். உரைகள் பொழுதன்னிக்கும் காதில் கருஞ்சரடு மாட்டி கேட்பது. முடிந்த மட்டும் இலக்கியத்திற்குள்ளேயே இருப்பதற்கு யூடியூப் உரைகள் ஒரு வரப்பிரசாதம். ஆன்லைனில் மேலைத்தத்துவம், புனைவிலக்கியம் பயிலும் வகுப்புகளில் சேர்ந்தேன். அதில் ஒன்று மாஸ்டர் க்ளாஸில் பணம் கட்டி பயின்ற டான் ப்ரவுனின் புனைவிலக்கிய வகுப்பு. கதை என்பது செய்யப்படக் கூடியதும், நேர்த்தியாக சொல்லப்பட வேண்டியதும் என்பதில் டான் உறுதியாக இருக்கிறார். கிராஃப்ட் கைகொடுக்காமல் என்ன எழுதியும் பிரயோசனம் இல்லை என்பதை உதாரணங்களுடன் வாதிடுகிறார். புதியவர்களின் ஆக்கங்களில் பெரும்பான்மை நம்மை வதைமுகாமுக்குள் இட்டுச் செல்வதன் காரணங்களுள் ஒன்று தொழில்நுட்பத்தில் பிசிரடிப்பதும். ஒரு பாராவிற்குள்ளே மூன்று பார்வைக் கோணங்களெல்லாம் வைத்து நியூ கைண்ட் ஆஃப் சித்திரவதை செய்கிறார்கள்.

மீண்டும் உங்களது அந்நாளைய பேட்டிக்கு வருகிறேன். நிர்வாகத்தில் FTR என்று சொல்வார்கள் First Time Right. எதையும் முதல் முறை செய்யும்போதே சரியாகச் செய்துவிடுவது. ஒரெயொரு வாசகன் படைப்பின் ஆழத்தை நெருங்கி வராவிட்டால் கூட கவலையற்று இருப்பது, நாவலுக்கு அடிப்படை விஸன் / தரிசனம், எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய ஆன்மீக நாட்டம், ஸ்பிரிச்சுவல் தொடர்புகள், தத்துவப் பரிச்சயம், மன இயக்கத்தை வெளிப்படுத்தும் மொழிபுகள், இலக்கியமென்பதே அறிமுதல் முறை – என நீங்கள் இதுகாறும் சொல்லிவந்தவற்றிற்கான அடிப்படைகளை அன்றே மிகத் தெளிவாக உருவாக்கி இருக்கிறீர்கள். இத்தனைக்கும் தமிழின் முன்னுதாரண முன்னத்தி ஏர்கள் இல்லாத சூழலின் மேல் நின்று.

பல ஆயிரங்கள் கட்டி தத்துவம், வரலாறு, புனைவிலக்கிய வகுப்புகளில் பயிலும்தோறும் நொடிக்கு நொடி எனக்குத் தோன்றுவது ‘இதத்தானய்யா என் வாத்யாரு பத்து பைசா வாங்காம வருஷம் பூரா சொல்லிக்கொடுத்தாரு..’ நமக்கு எந்த பண்டமும் ஐரோப்பா லேபிள் போட்டு வந்தால்தான் திருப்தி. இவ்வளவு முடிஞ்சும் நாவல் நல்லா இல்லைன்னா சோத்துல ரசம்தாண்டி உனக்கு என மிரட்டுகிறாள் திரு. இலக்கியம் தெரிஞ்சவளோடு வாழ்வது சிரமம்.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்

முந்தைய கட்டுரைஇரண்டு காதலியர்
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 11