கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்

கேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது

pichaikaaran

அன்புள்ள பிச்சைக்காரன்

நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.

சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.

சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.

தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.

வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்

வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.

இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.

சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.

அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.

தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.

கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைபுதுமைப்பித்தன் இன்று…
அடுத்த கட்டுரைபாலகுமாரனும் வணிக இலக்கியமும்