நிறைவின்மையின் ஒளி

Toward the Light- Eva Macie

“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”

தன்மீட்சி- கடிதம்

உத்திஷ்டத ஜாக்ரத!

என் அன்பு ஜெ,

நீங்கள் எனக்கெழுதியதை தியானிக்க வேண்டியிருந்தது. இந்த வரிகளை எனக்காக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொன்றாக, பொறுமையாக. அதனால் தான் பதில் எழுத தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.

நிறைவின்மையை அடைய பிரயத்தணப்பட வேண்டும் என்பது விஷ்ணுபுரத்தை வாசிக்கையிலேயே புரிந்திருந்தேன். ஆனாலும் அது எனக்கான தூதாக இல்லாது அஜிதன் போன்றோர்களுக்காகத்தான் என்றே நினைத்திருந்தேன் ஜெ. ஆனால், “ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக!” என்ற தத்துவத்தை மானுடத்தை நோக்கி நீங்கள் வீசியபோது, அதை எனக்கானதாக மாற்ற முயன்று கொண்டிருந்தேன். அதற்காக நான் என்னுடன் வாதாடிய போது நீங்கள் இதுவரை சொல்லியிருக்கும் தத்துவார்த்த வரிகளை யாவும் துணைக்கு அழைத்துக் கொண்டேன். எனக்காக அதை பொருத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆ! அந்த நிறைவின்மையை நான் அடைய எத்துனை தூரம் பயணிக்க வேண்டும், எவ்வளவு வாசிப்பனுபவம், வாழ்பனுபவம், ஞானம், அறம் தேவைப்படுகிறது! இன்னும் அதற்கு தேவைப்படுபவை என்ன என்பதைத் தெரியவும் கூட நான் பயணிக்க பல தூரம் செல்ல வேண்டியிருக்கிறது ஜெ.

இந்த என் பயணத்தில் உங்கள் எழுத்துகளும், சிந்தனைகளும், பேச்சுகளும் தான் எனக்கான பட்டறை. பைபிள், பகவத் கீதை இவையிரண்டையும் ஒரு புத்தகமாகப் படித்திருக்கிறேன். சலிக்க சலிக்க வாசித்து தருக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறேன். விஷ்ணுபுரத்தை அந்த வரிசையில் மூன்றாவதாக வைக்கிறேன். ஏனோ விஷ்ணுபுரத்தினால் மட்டும் நான் உள்ளிழுக்கப்படுகிறேன். அதில் நான் தருக்கப்படுவதற்கு முன்னறே நீங்கள் அனைத்து தருக்கங்களையும் செய்து பதிலளிக்கிறீர்கள். என் ஆன்மத் தேடலுக்கான நூலது. அதில் நீங்கள் பேசுவது யாவற்றாலும் அமிழ்ந்து அந்த எண்ணங்களாலேயே ஆட்படுகிறேன். கெளஸ்தூபம் அப்படித்தான் செய்தது. இன்னும் “மணிமுடி பாக்கியிருக்கிறது” (மேலும் விரிவாக விஷ்ணுபுரம் பற்றி எழுதுகையில் எழுதுகிறேன் ஜெ.)

நாம் என்ற நம்மை உதறும் தருணம் ஒரு முற்றும் தருணம் என்று சொல்லலாம் என நினைக்கிறேன் ஜெ. அப்படிப்பட்ட தருணத்தை அடையும் வரை நான் பயணிப்பது நிறைவின்மையாக இருக்க வேண்டும். அந்த நிறைவின்மை என்ன என்பதையும் நீங்கள் சொல்வது போல வகுத்துக் கொள்கிறேன். நிறைவின்மையை நோக்கியே பயணத்தைத் தொடர்கிறேன். இந்த விழிப்பு நிலையை நீங்கள் என்னில் விதைத்ததற்காய் நன்றி.

பொத்தாம் பொதுவாக ஒருவன் நிறைவின்மையை அடைக என்று செல்ல ஆரம்பித்தால் நீங்களே சொல்வது போல சலிப்பைத்தான் அடைவான். இயலாமை கொண்டவன் நிறைவினம்மையை அடைந்தேன் என்று சொல்லி நம்மை எரிச்சலடையச் செய்வான். ஆணவம் கொண்டவனோ அடுத்தவர்களை ஏளனம் செய்வான். நீங்கள் சொல்லும் நிறைவின்மையை அடைய எவ்வளவு பிரயத்தணப்பட வேண்டுமென்பதை, இந்த உலகில் மிகத்த் தீவிரமாக வினையாற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் பார்த்தாலே புரிகிறது. எழு எழு என்னும் உந்துதல் கொண்ட தவிப்பு; அந்த நிறைவின்மையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் உங்களை முன்னிருத்தி தான் என் இந்த நிறைவின்மை என்னும் இலக்கை நிர்ணயித்துக் கொள்கிறேன். இந்த மேன்மையான புரிதல் என்னை வழி நடத்துவது திருப்தியளிக்கிறது ஜெ. இத்துனை விளாவரியாக எனக்கு விளக்கியதற்கு நன்றி அன்பு ஜெ.

கடைசியாக நீங்கள் விவரித்த விவேகானந்தரின் வரிகளை என்னுள் பதித்துக் கொண்டேன்.

அப்படியே இந்த வரிகளையும். ஆனால் சரியாக.

ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக!!!”

இரம்யா

அன்புநிறை ஜெ,

இன்று தங்கள் தளத்தில் ரம்யாவின் கடிதத்தை கண்டேன். ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக எனும் ஒற்றை வரியைக் கொண்டு அந்த விவாதத்தை ஆரம்பித்தது நான்தான். தாங்கள் மிக தெளிவாக தங்கள் பதிலில் அந்த தொடருக்கான பொருளை தெரிவித்துவிட்டீர்கள். நான் உங்களின் பதில் எவ்வாறு இருக்கும் என்று உகித்தேனோ அவ்வாறே அமைந்தது.

அந்த வரிகள் செயலூக்கம் நிரம்பியவருக்கான வரி. எய்துதலில் நிறைவின்மை அடைந்தால்தான் மேலும் மேலும் என எழ முடியும். மிகச்சரியாக தாங்கள் விவரித்து உள்ளீர்கள் என்று ரம்யாவிடம் சொன்னேன். ஆனால் அவரால் அப்பொழுதும் இதை  ஏற்க முடியவில்லை. அவரைப் பொருத்தவரை இதுவரை இருந்த இனிவரப்போகிற ஆன்மீகவாதிகள் ஞானிகள் அனைவரும் நிறைவின்மையுடன்தான் உள்ளார்கள், இருப்பார்கள் அதை யாரும் அடைய முடியாது என்கிறார். அவரிடம் என்னால் மேற்கொண்டு விவாதிக்க இயலவில்லை புரியவைக்கவும் முடியவில்லை. சூனியவாதத்தையும் நிறைவின்மையையும் இனைத்து பேசுகிறார். ஜெ வும் அவ்வாறுதான் சொல்கிறார் என்கிறார். ஆன்மிகத்தில் நிறைவை அடையமுடியாது என்பதில் அவர் ஆனித்தரமாக நம்புகிறார்.

ஆன்மிகத்திலும் செல்க செல்க எனும் ஊந்துதல்தான் நிறைவின்மை. வஜ்ராயன பௌத்தத்தில் முக்திநிலை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் என பிறவி எடுத்து மானுடர்கள் முக்திநிலை அடைய உதவுவார்கள். இவர்கள் போதிசத்வர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் இது நிறைவின்மையில் இருந்து வருவது. இயல்பானவர்கள் நிறைவை அடைநதுவிட்டால் எந்த செயலும் செய்ய முடியாது. ஆன்மீகவாதிகளின் நிறைவு என்பது நான் அதுவாகிறேன் என்பதுதான்.

 

அன்புடன்

ரா.பாலசுந்தர்

 

அன்புள்ள ஜெ

 

’ஒருபோதும் சென்றடையவில்லை என்ற நிறைவை அடைக’ என்ற வரி வாசிக்கும்போது ஏற்படுத்தாத அதிர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. பல எண்ணங்கள். ஏன் அப்படி? சென்றடைந்துவிடமுடியாதா என்ன? சென்றடைந்துவிடமுடியாது என்று தெரிந்தால் ஏன் முயலவேண்டும்? இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன்

ஆனால் பின்னர் ஒரு நாள் ஒரு மின்னல்போலத் தெரிந்தது – சென்றடைந்துவிட்டோம் என்று தெரிந்தால் அதன்பின் இப்பேச்சுக்கே தேவையில்லையே. சென்றடைந்தவர் இதையெல்லாம் ஏன் யோசிக்கப்போகிறார்? சென்றடையவில்லை என்ற நிறைவின்மை ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நாம் அடையும்போது கொள்ளவேண்டியது.அதுதான் மேலும் செல்லவைக்கும். மேலும் நம்மை விசைகொள்ளவைக்கும்

ஒருபோதும் சென்றடையவில்லை என்ற உணர்வை அவ்வாறு எண்ணமுடியும் காலம் வரை அடைக என்றுதான் அந்த வரிக்குப் பொருள். எங்கும் எளிதாக அமைந்துவிடாதே என்றுதான் அந்த வரி சொல்கிறது என்று எண்ணிக்கொண்டேன்

ரவிக்குமார்

முந்தைய கட்டுரைவேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்
அடுத்த கட்டுரைகல்லில் தழல்