அன்புள்ள ஜெ
நூறுகதைகளின் நினைவுகளுடன் ஒர் ஆண்டு நிறைவடையச் செய்கிறது. சமீபத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழில் எழுதப்பட்ட நல்லகதைகளில் பெரும்பாலானவற்றை இந்த நூறுக்குள்தான் தேடவேண்டும் என்று சொன்னேன். அவர் அதிர்ச்சியாகிவிட்டார். வாசிக்கக்கூடியவர் அல்ல. அவருக்கு இந்தக்கதைகள் இன்று வாய்மொழிக் கதையாகவே பரவி பல்லாயிரம்பேரைச் சென்றடைந்திருப்பதைப்பற்றிச் சொன்னேன். எதிர்காலத்திலும் இக்கதைகளைப்பற்றித்தான் பேச்சு இருக்கும். சூழலில் ஒரு மௌனம் இருந்தாலும் அத்தனை பேருக்கும் தெரிந்தது, இக்கதைகள் தமிழிலக்கியத்திலேயே மிகப்பெரிய ஒரு நிகழ்வு. 2020 இக்கதைகள் எழுதப்பட்ட வருடம் என்றே அறியப்படும்
என்.மாதவன்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களின் கதைகளில் வரும் யானை படிமம் எப்போதும் உவப்பானது. அது ஆழ்மன படிமமாக இருள் கொள்ளும், ஒளியாக வரும் (உச்சவழு), கட்டுண்டு தத்தளிக்கும் (உண்ணிலச்சுமி- வாரிகுழி, கீரகாதன்-காடு). மதுரம் கதையில் கரிய எருமை ஆழ்மன படிமமாக இருமையின் தோற்றமாக அழகாக வெளிபட்டுள்ளது. அழகிய கருமை இருமையாக தோற்றம் கொள்கிறது. விழியறியாமூர்க்கத்தையே சாந்தபடுத்தவேண்டியுள்ளது மதுரமாக.
ஆனையில்லா கதையில் வீட்டில் புகுந்து சிக்கிகொள்ளும் யானையும், உங்களின் கைபட்ட ஆனைபடிமமே. எப்போதும் உக்கிரமமாக வரும் படிமம், நகைசுவையாக இருக்கிறது. உலகியலில் மாட்டிகொண்ட ஆழ்மனம். வெளியேற பெரிய முயற்ச்சி தேவையில்லை. குழந்தைதமான எளிய வழியை கண்டுகொள்தல்தான்.
எளிய அங்கத கதைகள் போல தோற்றம் கொண்ட, படிமத்தால் ஆழம் கொள்ளும் கதைகள்.
நன்றி
அன்புடன்
ஆனந்தன், பூனா
***
அன்புள்ள ஆசான்
‘ஆகாயம்’ கதை மிகப்பெரிய மனஎழுச்சியை தந்தது. உங்கள் எல்லாக்கதைக்கும் அது பொருந்தும். இது இன்னும் ஸ்பெஷல்.
ஐன்ஸ்டீன் கூற்று – ” Physical concepts are free creations of the human mind, and are not, however they may seem, uniquely determined by the external world. ”
(இயற்பியல் கருதுகோள்கள் மற்றும் ‘ஐடியாஸ்’- மனித மனத்தின் விரிந்த சுதந்திரமாக படைப்புகள். அவை இந்த வெளியுலகத்தில் பார்ப்பவை கேட்பவை உணர்பவைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை )
இதை நினைத்து கொண்டேன். இது ஒரு சர்வசாதாரண கூற்றாகவும் ஐன்ஸ்ட்டின் சொன்னதனால் அதற்கு ஒரு மேற்கோள் (quote) அந்தஸ்து கிடைத்து விட்டதாக பலர் சொல்வதுண்டு. ஆனால் இது ஆராய்ச்சி செய்யும் பலர் மறக்கும் விஷயம். நடைமுறை வாழ்வில் நிச்சயம் பின்தொடராத விஷயம்.
குமாரன் எதைக்கொண்டு எப்படி படைக்கிறான் ‘என்ன படைக்கிறான்’ என்பது என்றாவது புரியலாம் அல்லது புரியாமல் போகலாம். அவனுக்கே தெரியலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம்.
படைப்பாற்றல் என்பது எப்படி நிகழ்கிறது எந்த தளத்தில் நிகழ்கிறது என்பது மாயம் தான்.
குமாரனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று மனம் படபடத்தாலும் அதே வேகத்தில் கதையின் கடைசி வரை அந்த சிலை யாருக்காவது புரிந்துவிடப்போகிறதோ என்றும் நினைத்தேன்.
(உங்கள் கதைகள் தொடங்கும் விதமும் முடியும் விதமும் அபாரம். சாட்டை சொடுக்குவது போல தொடங்கி சட்டென்று நின்று பின் எம்மில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது)
இங்கு குமாரன்கள் பலர் உள்ளனர்.
எல்லோரும் ‘ஆட்டிஸ்டிக் சவண்ட்’ குறித்தும் அறிந்தவர்கள் தான். ஆனால் பெரும்பாலான கதைகளில் அவர்தம் படைப்பு அதன் உலகியல் வெற்றி என்பது கதைகளில் வந்தேதீரவேண்டும். ‘ரெயின்மேன்’ படமோ அல்லது ‘தாரே சமீன் பர்’ ரோ எல்லாவற்றிலும் அவர்களின் சாதனை நிகழ்கிறது.
ஸ்பெஷல் சைல்ட் உண்மையில் ஸ்பெஷலாக ஏதாவது செய்தே ஆகவேண்டிய நிபந்தனை.
ஆகாயம் அப்படியொன்றை நிகழ்த்தாமல் இருந்தது ‘லிபேரேட்டிங்’ ஆக இருந்தது
‘குமாரன்’ போன்றவர்கள் படைப்பது புரியாமல் ‘படைத்துவிட்டுப் போகட்டும்’ என்று அணுகும் நீலன் போன்றவர் இருக்கவேண்டியுள்ளது. அவர்கள் எந்தவிதத்திலும் கீழ்மைப்படுத்தாமலிருக்க நீலன்கள் வந்துகொண்டே இருக்கட்டும்.
இதொன்றும் புதிய fad அல்ல என்று நீங்கள் கதையிலேயே சுட்டிக்காட்டிய ‘ சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன்’ தொன்மம் நமக்குரைக்கின்றது.
ரிக்வேத நாஸதிய சூக்தம் நினைவுக்கு வந்தது
எங்ஙனம் உருவானது படைப்பு (சிருஷ்டி)
யாரால் தான் சொல்லமுடியும் ?
கடவுள்களும் அவர்தம் உருவங்களும் கூட
படைப்பின் பின் வந்தவர்(து) தானே
சிருஷ்டியின் மூலமுண்டு எனில் எவனவன்?
ஆகாயமாக கண்காணிக்கும்
பிரம்மமான அவனேயறிவான்
அல்லது அவனுமறியான்.
நன்றி ஆசான்
அன்புடன்
ஸ்ரீதர்