யானை டாக்டர்- கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம் ,

இன்று காலை(29 may 2020) எனது கடையின் அருகிலிருந்து ஒருவர் மலையாள மனோரமா வாசித்துகொண்டிருந்தார் .அதில் யானைக்கு ஒருவர் உணவூட்டும் படத்தை  கண்டு அவரிடம் அது குறித்து கேட்டேன். “கோட்டூர் ஆன டாக்டர், ரிட்டேர் ஆகி போகுந்து, ஆனயும், அவரும் தம்பில் நடந்த சம்பாஷன, ஆன டாக்டரோடு போவண்டாம் எந்நு பறஞ்சு” என்றார் .

பின்னர் மாலையில் அந்த நாளிதழைப் வாங்கி நண்பரிடம் சொல்லி படித்து காட்ட சொன்னேன் .

ஈஸ்வரன் எனும் டாக்டர் கோட்டூரில் உள்ள முகாமில் யானைகளை பராமரித்து வந்துள்ளார். நேற்று ஓய்வு  பெறும் நாள். அங்குள்ள பதினைத்து யானைகளில் மூத்த யானையான சோமனுக்கு (எழுபத்தி எட்டு வயது ) வாயில் உணவூட்டியபின், சோமனின் காதில் நான் போய் வருகிறேன் என்றிருக்கிறார். சோமன்  போகாதே என அவரிடம் சொல்லியிருக்கிறது .

அங்குள்ள குழந்தையான ஆறு மாத ஸ்ரீ குட்டியும்  துதிக்கையை உயர்த்தி “ஈஸ்வரன் போவண்டாம்” என்றிருக்கிறது. பின்னர் கனத்த மனதுடன் அடிக்கடி எங்களை வந்து பாருங்கள் என சொல்லி யானைகள், மருத்துவர் ஈஸ்வரனை வழியனுப்பி வைத்துள்ளன.அவரும் அடிக்கடி வருகிறேன் என சொல்லிவிட்டே சென்றிருக்கிறார்.

வெண்முரசில் பீஷ்மர் சிலகாலம் வனம் சென்றுவிட்டு அஸ்தினபுரிக்கு வந்தபின் அங்குள்ள  யானை கொட்டிலுக்கு செல்லும்போது மூத்தவன் உபாலன் தான் முதலில் அவரை அடையாளம் கண்டு  துதிக்கையை உயர்த்தி பிளிறல் ஓசை எழுப்பியபின் தான் பிற யானைகளும் பீஷ்மரை அடையாளம் கண்டு கொண்ட நினைவுகள் என மனதில் தோன்றி மறைந்தது.

டாக்டர் கே தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பிறந்து, வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கப்பல்காரனின் கடையில் ஜெயமோகனின் (மலையாள) ஆன கிடைக்கும் என தகவல் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன் .ஆம் எனது எண்ணை கடையில் நூறு சிம்காசனங்கள் ,ஆன டாக்டர் போன்றவை வைத்துள்ளேன் .

ஷாகுல் ஹமீது ,

நாகர்கோயில்.

அன்புள்ள ஜெ

இன்று மலையாள நாளிதழ் ஒன்றில் யானைடாக்டர் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன். என் அலுவலக நண்பர் என்னிடம் ‘யானை டாக்டர் வாசித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். வாசித்திருக்கிறேன் என்று சொன்னேன். அது தமிழில் வந்தது என்று சொன்னால் அவருக்கு நம்பிக்கை இல்லை. அது ஒரு unique ஆன மொழிநடைகொண்ட மலையாள எழுத்து என்று சொல்லிக்கொண்டிருந்தார். குறிப்பாக அதிலுள்ள soliloquyதான் மலையாளத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்தது என்று சொன்னார் ஆச்சரியமாக இருந்தது. என்னால் மலையாளத்தை சரளமாக வாசிக்க முடியாது, அவர் வாசிக்க கேட்டேன். தமிழில் அது ஓர் உணர்ச்சிமிக்க பேச்சாக இருந்தது. மலையாளத்தில் இன்னும் வேகமாக ஒருவகையான ஷேக்ஸ்பீரியன் தன்மையுடன் இருந்தது

ராஜ் கணேஷ்

முந்தைய கட்டுரைஇருவேறியற்கை
அடுத்த கட்டுரைகே.கே.பிள்ளை- கடிதங்கள்