ஆங்கு

1985 ல் சுப்ரபாரதி மணியன் ஹைதராபாதில் இருந்துகொண்டு கனவு இதழை நடத்திக்கொண்டிருந்தார். திருப்பூரில் அது அச்சானது. அந்நண்பர்களுடன் இணைந்து ஆல்ஃபா என்னும் சிறு பிரசுரநிறுவனத்தை தொடங்கினார். அதில் ‘பதிமூன்று நெடுங்கவிதைகள்’ என்னும் தொகுப்பு வெளியிடப்பட்டது.க.நா சுப்பிரமணியம்,பிரமிள், பிரம்மராஜன், பழமலை, நகுலன், காசியபன், அழகியசிங்கர்,க்ருஷாங்கினி ,தேவதேவன்,ரா.சீனிவாசன், நீல.பத்மநாபன்,சுப்ரபாரதிமணியன் ஆகியோரின் கவிதைகள் அதில் இருந்தன.

அன்று 23 வயதான இளைஞன் நான். என்னுடைய  ‘ஆங்கு’ என்ற கவிதையும் அதில் இருந்தது. மேலும் ஓராண்டுக்கு முன் எழுதியது. முதல்முறையாக ஹம்பி சென்றுவந்தபின் உருவான அனுபவம். அன்றைய கொதிப்பு நேரடியாக அதில் உள்ளது. அன்று இந்தியாவெங்கும் அலைந்துகொண்டிருந்தேன். இந்தியா என்ற மாபெரும் அமைப்பின் வறுமை, கைவிடப்பட்ட தொன்மை, அக்கறையற்ற நிகழ்காலம், செயலிழந்துபோன தொல்படிமங்கள் என நான் கண்ட பிரம்மாண்டம் என்னை அழுத்தியது. இது அதன் வெளிப்பாடு.

இன்று வாசிக்கையில் இந்தக் கவிதை அப்படியே விஷ்ணுபுரமாக மாறியிருப்பதை திகைப்புடன் பார்க்கமுடிகிறது. ‘ஸ்தம்பித்த சிலைகள் தோறும் உச்சரிப்பில் உறைந்த வார்த்தைகள்’ என்ற வரியில் விஷ்ணுபுரம் நாவலை ஆக்கிய கனவு என்ன என்று தெரிகிறது. எழப்போகும் நிலையில் காலாகாலமாக அமர்ந்திருக்கும் நந்தியில் விஷ்ணுவின் சிலையும் தெரிகிறது

ஆங்கு

ஜெயமோகன்

ஹோஸ்பெட் அருகே ஒரு சிற்றூர்

சிதிலமான தெருவொன்றில் நின்றிருந்தேன்

உலகத்துத் தெருக்களிலே

அநேகமாய் அதுதான் பழையது

ஒரு முனையில் குளம்

கண் தோண்டப்பட்ட குழி போல

மறுமுனையில் கோபுரம்

தொழுநோயில்  கருகிய உடல் போல.

சரிந்த புராதான மண்டபங்களை திருத்தி

மனிதர்கள் கூடியிருந்தனர்.

நம்பமாட்டீர்கள் அவர்கள் கைகள்

கேள்விக்குறிகள் போல வளைந்து இருந்தன.

ஏதோ புராதான நோய் போலும்.

உறவுக்குள் மணம் புரிந்த வினை என்பான் நண்பன்.

ஒரே அழுகல் புழுக்கள் பின் எப்படி புணரும்?

அவர்கள் மொழி புரியவில்லை.

அவர்களின் கண்களில் மிருக வழிகளின் சூனியம்.

கோயிலருகே சைகயால்  சர்ப்பத் விற்பவன் முன்

சில வெள்ளையர் தென்பட்டனர்.

ஏதோ கலைப்பொருட்களைப் பரிசீலித்தனர்.

இங்கு திடுக்கிடவைப்பவை கலைப்பொருட்கள்.

உதாரணமாய் இதோ இந்தக் குடிசையில்

சாக்கடை யாளியின் வாய் வழியாய் வருகிறது.

வாசற்படியாக நடனப் பெண்கள் சிலைகள்.

குழந்தைகள்  ஆனந்தமாகவும் அம்மணமாகவும்

புழுதியில் திளைத்தன.

முந்தானை பற்றி அதீத பிரக்ஞை  கொண்ட பெண்கள்

குறுகுறுவென்று பார்த்தனர்.

கோபுரத்தில் எக்கச்சக்கமாய் புணர்ச்சி  நிலைகள்.

(சுளுக்கிக் கொள்ளாதா  என்ன ? )

கோபுர இடுக்குகளிலிருந்து

செத்த புறாக்களின் இறகுகள் உதிர்ந்தன.

காக்கைகளும் குழந்தைகளும் பிச்சை கேட்டன.

சர்வதேச பாஷையின் ரகளை.

தூரத்துப் பொட்டலிலிருந்து  வந்தக் காற்று

செம்மேகம் போல் அலைந்தது.

எண்ணைப் பிசுக்கேறிய  கல் மண்டபத்தில்

மொழ மொழவென்ற கரிய நந்தி

எழப் போகும் நிலையில் காலகாலமாய்.

ம்ம்ம்மென்று விரிந்த பிரகாரத்தில்

ஸ்தம்பித்த சிலைகள் தோறும்

உச்சரிப்பில் உறைந்த வார்த்தைகள்.

கூறப்படாத சொற்களின்

குளிரில் கனத்த காற்று

அலைஅலையாய் படிந்த தூசி மீது

என்ன மந்திரம் எழுதியிருக்கிறது அந்த பூச்சி?

பின்புற அறையில் ஒரு விசேஷம்

சிறிய துளை வழியாக மொத்த உலகம்

எதிர் சுவரில் தலைகீழ் பிம்பமாய் விழுகிறது.

பாவப்பட்ட தீர்த்தாடகக் கும்பல் அங்கு.

பைனாகுலர் தொங்கப் போட்ட துரைசாணியும் தென்பட்டாள்.

கல்லின் ஓலம் போல்

கிரீச்ச்ட்டுக்  கொண்டிருக்கிறது ஏதோ ஜீவன்.

வழிதவறிய அந்தப் பறவை ஒன்று

மோதித் தவிக்கிறது சிலை சிலையாய்.

பறைவிம்மல் போல் அதன் சிறகோசை.

சுவர் வீரபத்திரனின் வெறி கோலத்தில் கீழே

நிச்சிந்தையான பண்டாரம் தூங்குகிறது.

வழிகாட்டி சொன்னான்,

புதையுண்ட இன்னொரு கோயில்

மீது கட்டப்பட்டது இந்தக் கோயில்.

இதுவும் புதையுறும்.

புதிய கோவில்கள் புதிய பயங்கள்.

லிங்கம் நிரந்தரம்.

பின்புறம் ஆறு

கண்ணீர் உலர்ந்த கோடு போல.

நாறும் தேக்க நீரில் சிதறும் மாலை ஒளி.

குடுமிதாரி சந்தியாவந்தனம் ஆரம்பித்தார்.

கம்பத்தின் மீது தெரு விளக்கு போல

கோபுர உச்சியில் சூரியன்.

எங்கும் நிழல்கள் நீண்டன.

தூசு தங்க நிறத்தில் இருந்தது.

குழந்தைகள் செப்பு பிரதிமைகள் ஆயின.

துரைகள் புகைப்படம் எடுத்தனர்.

கோயிலுக்குள் பறவையின் தவிப்பு ஏறியது.

மணி ஒலிக்க குடுமிதாரி  கோயிலைத் திறந்தார்.

கூறு சங்கு தோல் முரசு கோட்டோசையுடன்

சோறும்  காணாத சுகவனேஸ்வரர்

மொட்டு போல் விளக்கொளியில்

வெற்றுநிழல் விரிய .

பிரகாரம் இருண்டிருக்கிறது .

இருளில் பரந்து படபடக்கிறது அந்தப் பறவை.

கடைசி பஸ் ஆரன் முழங்கியது .

பயணிகள் பரபரத்தனர்.

புறப்படுங்கள் புறப்படுங்கள் என்றார் நடத்துனர்.

இந்த ஊர்வாசிகள் எங்கும் போவதில்லை.

வந்தவர்கள்தான் திரும்ப வேண்டும்.

இருண்டத் தெருக்கள் பின்னகர்ந்தன.

கம்பளி மூடிய கிழவர்கள் போல

மண்டபங்கள் மறைந்தன.

வெகுநேரம் தெரிந்து கொண்டிருந்தது

வானிருளில் யோனி தேடும் கோபுரம்.

எங்கும் இருள்.

சுற்றுப் பயணிகளுக்குத் தான் வெளிச்சமே

*

A baby hand holding his father's finger

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்