தமிழ் சினிமா ரசனை

அன்பிற்கினிய ஜெ.,

நான் உங்கள் தளத்தை ஓரிரு வருடங்களாக வாசித்து வருகிறேன். சமீபத்திய உங்கள் சிறுகதைத் திருவிழா என்னை கனவு உலகத்திற்கு உந்தி தள்ளியது. இரண்டு மாதங்களும் புனைவின் அபாரமான எல்லையில் நிறுத்தியமைக்கு நன்றி. உங்கள் தளத்தில் நான் வியப்பது, தங்கள் வாசகர்களின் கடிதங்கள். தற்போது வெளியான 69 சிறுகதைகளுக்கும் பல்வேறு வாசிப்பு கோணங்களை அவை அளித்தன. நீங்கள் ஓடிய மாரத்தான் ஓட்டத்திற்கு இணையாக உடன் வரும் வாசகர்கள்.

திபெத்திய பௌதத்தை மையமாக கொண்டு எழுதிய கூடு குறுநாவல் வெளியான அடுத்த தினமே இரு கடிதங்கள் வெளியாகியது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் வாசகர்களுக்கு தெரியாத களமே இல்லை போலும் என்று சிந்திக்க வைத்தது. இயக்குநர்களான வசந்தபாலன், மணிரத்னம் அவர்களின் கடிதமும் ,உங்கள் சிறுகதையை தொடர்ந்து வாசிக்கிறார்கள் என காட்டியது. தேவி சிறுகதைக்கு , எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய உணர்வுப் பூர்வமான கடிதமும் நெகிழ வைத்தது.

கேள்வி இதோ. எழுத்தாளனான உங்கள் படைப்புக்கு வரும் ஆழமான விமர்சனங்கள், வாசிப்பு அனுபவங்கள் உங்கள் கதைகளை முழுநிறைவு செய்கின்றன. கலைஞனான தங்களுக்கு இது பெரும் நிறைவையும் ஊக்கத்தையும் தரும் என்று நம்புகிறேன். தமிழ் அறிவுச்சூழலில் மற்ற கலைகளுக்கு இது போன்ற கலைஞன் – விமர்சகன்/இரசிகன் உறவு உள்ளதா ? சினிமா என்னும் இராட்சத ஊடகத்திற்கு இதுபோன்று ஏதும் இருப்பதாக தெரியவில்லையே.

எவ்வளவு சிறப்பான படமாக இருந்தாலும் ” ஆக்டிங் சூப்பர் மச்சி”, “கருத்து நச்சுனு இருக்கு”, “ம்யூசிக் பின்னிட்டான்” ,”பாக்ஸ் ஆபிஸ் ஹிட்” போன்ற ஒற்றை வரி கருத்துக்களைத்தான் விமர்சனமாக முன்வைக்கிறார்கள். பல்லாயிர தமிழ் எழுத்தாளர்கள் புழங்கும் முகப்புத்தகத்தில் கூட      ” இந்த குறியீட்டை கவனித்தீர்களா தோழர்” வகை விமர்சனங்கள் தான்.

தமிழில் ஏன் கலைப்படங்கள் வருவதில்லை என்ற தங்கள் விரிவான கட்டுரையை வாசித்திருக்கிறேன். அரிதாக வரும் ஒன்றிரண்டு படங்களுக்குக் கூட விரிவான விமர்சனம் வருவதில்லை. இச்சூழலில் , எது அத்தகைய நல்ல கலைஞர்களை நிறைவு கொள்ள செய்கிறது. இலக்கியம் வாசிக்கும் இளைஞர்கள் கூட சினிமாவின் பால் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே !

சினிமா வழங்கும் பலலட்சம் ஜனநாயக பார்வையாளர்கள் தான் இவர்களை வாழ்நாள் முழுவதும் இயக்குகிறதா ? நூறு வருட பாரம்பரியம் கொண்ட கலைத்துறை விமர்சனமே இல்லாமல் இயங்குவது ஆரோக்கியமானதா? ஒரு இயக்குனர் அடுத்த படத்தை விமர்சிப்பதே இல்லையே .

சினிமாப் பற்றி நீங்கள் பெரும்பாலும் வாய்திறக்க மாட்டீர்கள் என்று தெரியும். ஒரு கலைஞனின் மனம் இயங்கு தளத்தை புரிந்துகொள்ளவே இக்கேள்வி. தங்கள் தளத்தை பல புதிய உதவி இயக்குநர்கள் வாசிக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு தான்.

பேரன்புடன்.,
சுந்தர வடிவேல்.

சத்யஜித் ரே
சிதானந்ததாஸ் குப்தா

அன்புள்ள சுந்தரவடிவேல்

சிலநாட்களுக்கு முன் ஒரு சினிமாவிவாதம். நான் ஒரு கருத்தைச் சொன்னேன். இயக்குநர் சொன்னார். “சார் உங்க தளத்தில் நீங்க மனு பற்றி ஒரு கட்டுரை எழுதினீங்க. அதை உங்கபேர்ல வர்ர ஃபேஸ்புக்லே அப்லோட் பண்ணினாங்க. 160 எதிர்வினைகள் இருக்கு. அதிலே மூணே மூணு எதிர்வினை மட்டும்தான் கட்டுரையைக் கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டு எழுதினது. மிச்ச எதிர்வினைகளிலே எதிலேயுமே கட்டுரையை புரிஞ்சுகிட்டு எழுதினதுக்கான எந்த தடையமும் கிடையாது”

அது உண்மை. என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. இயக்குநர் சொன்னார். “அந்த ரேஷியோவைப் பாருங்க. கிட்டத்தட்ட ஒண்ணரை சதவீதம்பேர். அவங்களுக்குத்தான் மிகமிக அடிப்படையான விஷயங்களையே புரிஞ்சுக்கிடுற சக்தி இருக்கு. அதாவது படிச்சவங்க நடுவிலே, இணையம் வரை வர்ரவவங்க நடுவிலே அவ்ளவுபேர்தான். மொத்தமா பாத்தா அது ஆயிரத்திலே ஒண்ணாக்கூட இருக்க வாய்ப்பில்லை. நீங்க கட்டுரைகளை அந்த ஆயிரத்திலே ஒருத்தருக்காக எழுதலாம். சினிமாவை அவங்களுக்காக எடுக்கமுடியாது”

மிகத்தெளிவான பார்வை. நீங்கள் முகநூலில் நிகழும் விவாதங்களைப் பாருங்கள். எவருக்காவது ஏதாவது புரிகிறதா? 99 சதவீதம் பேரும் ஒற்றைவரிகளையே புரிந்துகொள்கிறார்கள். மொத்தக் கட்டுரையிலேயே அவர்களுக்கு ஓரிரு வரிகள்தான் கிடைக்கும். ஒரு தரப்பை, ஒரு வாதத்தை முழுமையாக புரிந்துகொள்பவர்கள் எத்தனைபேர்? ஆகவேதான் தாங்களும் ஒற்றைவரிகளில் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறர்கள். இதுதான் நம் பொதுச்சூழல். இந்தப் பொதுச்சூழலுக்குள் ‘தேற்றி’ எடுக்கப்பட்ட ஒரு மிகச்சிறு சூழல்தான் இலக்கியவாசகர்கள் என்னும் வட்டம்

தமிழில் எப்போதுமே இந்த இரண்டு உலகங்கள் உள்ளன. இலக்கியவாசகர்களின் இந்த சிறிய வட்டத்திற்குள் இன்று மிகையாக்கி மிகையாக்கி கணக்கிட்டால்கூட ஐம்பதாயிரம் பேர்தான் இருக்கலாம். வெளியே எட்டுகோடிப்பேர் இருக்கிறார்கள். சினிமா அந்த எட்டுகோடிப்பேருக்காக எடுக்கப்படுகிறது, இந்த ஐம்பதாயிரம் பேருக்காக எடுத்தால் பத்துலட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் படம் எடுக்கவேண்டும். அது இயல்வது அல்ல. மலையாளத்தில் சினிமாவின் அழகியல் அறிந்த பார்வையாளர்கள் ஐம்பதுலட்சம்பேர் இருப்பார்கள். ஆகவே  இரண்டுகோடி ரூபாயில் ஒரு கலைப்படத்தை எடுக்கமுடியும். தமிழில் அதற்கான தளமே இல்லை.

அடூர்
குளத்தூர் பாஸ்கரன் நாயர்
கே.பி.குமாரன்

தமிழ் சிற்றிதழ்ச்சூழலில் தரமான வாசகர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் நல்ல சினிமாரசிகர்கள். தமிழில் உள்ள அந்த சிறு இலக்கிய வாசகர் வட்டம் கிட்டத்தட்ட நூறு ஆண்டு தொன்மை கொண்டது. புதுமைப்பித்தன் காலகட்டத்தில், அவர்களைப் போன்ற இலக்கியவாதிகளால், ரா.ஸ்ரீ.தேசிகன் போன்ற இலக்கிய விமர்சகர்களால் உருவாக்கப்பட்டது. பின்னர் அடுத்த தலைமுறையில் லா.ச.ரா போன்ற படைப்பாளிகளால் க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்ற விமர்சகர்களால் வளர்க்கப்பட்டது. சுந்தரராமசாமி போன்ற படைப்பாளிகளால் வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்களால் நிலைநிறுத்தப்பட்டது. மெல்லமெல்ல உருவாக்கப்பட்ட சிறுவட்டம் அது.

அப்படியொன்று தமிழ்ச்சூழலில் சினிமா என்னும் கலைக்கு இல்லை. இங்கே உள்ளது சினிமாவை ஒரு கேளிக்கைக்கொண்டாட்டமாக மட்டும் பார்க்கும் வட்டம். ஒரு சினிமா வந்ததுமே அதை வெவ்வேறு கோணங்களில் அரட்டைப்பொருளாக ஆக்குகிறார்க்ள். பேசித்தள்ளுகிறார்கள் , அப்படியே கடந்துசெல்கிறார்கள்.

இடைநிலை இதழ்கள் வெளிவரத் தொடங்கியபோது அந்த அரட்டையில் கலந்துகொண்டால் கொஞ்ச வாசகர்களை ஈர்க்கமுடியும் என்ற நம்பிக்கையால் வணிகசினிமாவின்மேல் இலக்கியவாதிகளைக்கொண்டு சில எதிர்வினைகள் ஆற்றவைக்கப்பட்டன. ஆனால் அவையும் அரட்டையாகவே நிகழ்ந்தன. சமூக ஊடகம் வந்தபிறகு, உடனடி வாசகர்கள் தேவையாக ஆனமையால், சிற்றிதழாளர்களும் அந்த அரட்டைக்குள் சென்று தாங்களும் அரட்டை அடிக்கிறார்கள்.

சினிமாவை ’சீரியசாக’ பேசும் வட்டத்தில் கூட சினிமாவின் அழகியலைப்பற்றி இங்கே மிக மிக அரிதாகவே பேசப்படுகிறது. சீரியஸ் சினிமா எனப் பேசும் வட்டத்திலும் இங்கே பெரும்பாலும்  சினிமாவின் உள்ளடக்கம் பற்றிமட்டுமே விவாதிக்கப்படுகிறது. அந்த பேச்சு சினிமா பற்றியது அல்ல, சினிமாவின் பேசுபொருளாக அமையும் விஷயங்கள் பற்றியதே.

உதாரணமாக ‘சீரியஸ் சினிமா’ பற்றி பேசும் அமைப்பு ஒன்று இங்கே தீவிரமாகச் செயல்படுகிறது. [தமிழ் ஸ்டுடியோ] ஆனால் அவர்களுக்கு நல்ல சினிமா என்றால் அவர்களுக்கு உகந்த அரசியலைப் பேசும் சினிமாதான். அவர்களின் அரசியல் மிகச்சாதாரண அன்றாடக் கட்சி அரசியல். சாதிக்காழ்ப்பை அடிப்படையாகக் கொண்ட  முச்சந்தி அரசியல் அது. சினிமா அதற்கு ஆள்சேர்க்கும் ஒரு பிரச்சாரக்கருவி, அவ்வளவுதான். அந்த அரசியல்தரப்பை ஓங்கிக் கூப்பாடு போடுவதுதான் நல்ல சினிமா என நினைக்கிறார்கள்.

மற்றபடி சினிமா என்ற கலைவடிவம் பற்றிய எளிமையான அடிப்படைகள்கூட அவர்களுக்கு தெரியாது. அவர்கள் கலை பற்றி என்ன சொன்னாலும் தவறாமல் அது உச்சகட்ட அபத்தமாகவே இருக்கிறது. இவர்கள் நடத்தும் சினிமா இதழ்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன். நக்கீரன் தரத்திலான அரசியலிதழ்கள் அவை, சினிமாவைப் பேசுவதுபோல அந்த அரசியலைப் பேசுபவை. இவர்களால் சினிமா என்னும் கலையை எவ்வகையிலும் அறிமுகம்செய்துவிட முடியாது. இவர்களுடன் ஒப்பிட வணிகசினிமா ஆட்கள் இன்னும்கொஞ்சம் சினிமா தெரிந்தவர்கள்.

இதுதான் இங்குள்ள சூழல். இங்கே சினிமாரசனையை வளர்த்தெடுக்கவேண்டும் என்றால் அதற்கு ஏற்கனவே கேரளம் போன்ற ஊர்களில் என்ன நடந்ததோ அது நடக்கவேண்டும். சினிமாவை ஓர் அழகியல்வடிவமாக கருதும், அதன் அழகியலை மையமாக விவாதிக்கும் குழுக்கள் உருவாகவேண்டும். அவை அமைப்பாக திரளவேண்டும். மெல்லமெல்ல சமூகத்தில் அவை வேரூன்றி வளரவேண்டும். சினிமாவின் அழகியல் சிலபத்தாண்டுகள் பேசப்படவேண்டும். சினிமாவுக்கான சினிமா இயக்கம் அது. அரசியலுக்கு சினிமாவை கல்சுமக்கவைக்கும் இயக்கமாக அது இருக்கலாகாது.

அரசியலை மையமாகக் கொண்ட குழுக்கள் அரசியலை மட்டுமே விவாதிக்கமுடியும்.சமகால அரசியலைப்பற்றியே அவை வாயலம்பிக் கொண்டிருக்கும். அவை மிக எளிதாக கசப்புகளை உருவாக்கும். கலை என்பது அரசியலை உள்ளடக்கியதே, ஆனால் கலை என்பது அரசியல் மட்டுமல்ல, அது அரசியலின் கைத்தடியும் அல்ல என்று அந்தக்கும்பலுக்குச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது

இந்தியாவில் கலைப்பட இயக்கம் உருவானதற்குப் பின்னணியாக இருப்பது ஃபிலிம் சொசைட்டி இயக்கம். வி.கெ.செறியான் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய The Rise and Decline of the Film Society Movement of India என்ற நூல் அவ்வியக்கம் பற்றிய விரிவான அறிமுகத்தை அளிப்பது.இந்தியாவில் 1937ல் மும்பையில் முதல் ஃபிலிம் சொசைட்டி ரசனைகொண்டவர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால்  1947 அக்டோபர் 5 ஆம் தேதி கல்கத்தாவில் சத்யஜித் ரே, சிதானந்த தாஸ் குப்தா தலைமையில் தொடங்கப்பட்டதே கலைப்பிரக்ஞை கொண்ட முதல் திரைப்பட இயக்கம். அதுவே இந்தியாவில் கலைப்பட இயக்கத்தை தொடங்கிவைத்தது.

1965 ஜூலை 21 அன்று திருவனந்தபுரத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், குளத்தூர் பாஸ்கரன் நாயர், ஸ்ரீவராகம் பாலகிருஷ்ணன், கே.பி.குமாரன்  ஆகியோரால் கேரளத்தின் முதல் ஃபிலிம் சொசைட்டியான சித்ரலேகா தொடங்கப்பட்டது.1966ல் எம் கோவிந்தனின் முன்னெடுப்பில் அடூர் கோபாலகிருஷ்ணன் பொறுப்பில் எர்ணாகுளம் ஃபாக்ட் கொச்சி ஆதரவில் முதல் திரைவிழா கொண்டாடப்பட்டது. 1972 ல் கேரளத்தின் முதல் கலைப்படமான சுயம்வரம் அடூர் கோபாலகிருஷ்ணனால் எடுக்கப்பட்டபோது அதை ரசிக்கும் ஒரு வட்டம் உருவாக்கப்பட்டுவிட்டிருந்தது.1974ல் வெளிவந்த கே.பி.குமாரனின் அதிதி என்னும் படம் கலைப்பட வட்டத்திலேயே வணிக வெற்றி அடைந்தது. அவ்வாறுதான் கேரள கலைப்பட இயக்கம் தொடங்கியது

இந்த அமைப்புகளும், இதன் அமைப்பாளர்களும் முதன்மையாக சினிமா என்னும் கலைவடிவின்மேல் பற்றும் அதில் பயிற்சியும் கொண்டவர்கள்.  எளிய அரசியல் நோக்கங்களும் அதன் சில்லறைப்பூசல்களும் அவர்களுக்கு இருக்கவில்லை. சினிமாவின் அழகியலை கற்பிப்பதும் பரப்புவதும் மட்டுமே இதன் நோக்கமாக இருந்தது. பத்தாண்டுகளில் கேரளம் முழுக்க நூற்றுக்குமேல் கிளைகளுடன் ஒரு சமூக இயக்கமாக ஆக அதனால் முடிந்தது. அவ்வியக்கம் இன்றுவரை நீடிக்கிறது

எம்.பி.ஸ்ரீனிவாசன்

தமிழில் அத்தகைய ஓர் கலை இயக்கம் உருவாகவே இல்லை. இங்கே அதற்கான சில முயற்சிகளை எடுத்தவர்கள் இடதுசாரிகள். ஜெயகாந்தன், கே.விஜயன், கே.சி.எஸ்.அருணாச்சலம், எம்.பி.ஸ்ரீனிவாசன், ஜித்தன் பானர்ஜி போன்றவர்கள். ஆனால் அவர்களில் எவருக்கும் சினிமாவின் அழகியலில் ஈடுபாடும் பயிற்சியும் இல்லை. ஜெயகாந்தனுக்கு இலக்கியமே முதன்மை. மற்றவர்கள் வெறும் அரசியல்நோக்கம்  மட்டுமே கொண்டவர்கள். அந்த இயக்கத்தை கம்யூனிஸ்டுக் கட்சி கட்டுப்படுத்தியது, பின்னர் நெரித்து அழித்தது. ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள் நூலில் அனைத்தையும் காணலாம்.

அத்தகைய ஓர் இயக்கம் இன்றுகூட உருவாகலாம். ஆனால் அதற்கு மிகப்பெரிய தடை இங்குள்ள அரசியல். எந்த மேடையிலும் அன்றன்று பேசப்படும் அரசியலை அன்றி வேறெதையும் பேசவிடாத பெருங்கும்பல். இன்று ஒரு சினிமா உரையாடல் அரங்கு கூட்டப்படுமென்றால் அங்கே விவசாயிகள் போராட்டத்தின் அரசியல் மட்டுமே பேசப்படும்.அடுத்த மாதமென்றால் அன்றிருக்கும் ஓர் அரசியல் பிரச்சினை. சினிமா பற்றி பேசவே முடியாது.எங்கும் ஒலிக்கும் சல்லிக்குரல்களையே கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

ஒரு முறை சென்னையில் தியோடர் பாஸ்கரனை தெருவில் சந்தித்தேன். ஒரு சினிமா விவாத அரங்குக்கு அவரை அழைத்திருந்தனர். முதல் ஐந்து நிமிடங்களுக்குப்பின் முழுக்கமுழுக்க அன்றாட அரசியல் சழக்கு ஆரம்பமாகிவிட்டது. அவர் நைசாக வெளியேறிவிட்டார் என்று சிரித்தபடியே சொன்னார்.எல்லா சினிமா விவாதங்களும் இங்கே அன்றாட அரசியலை மட்டுமே பேசுபவையாக உள்ளன. அதுதான் முகநூலில் ஓயாமல் அலையடிக்கிறதே. அதில் கற்றுக்கொள்ள எதுவுமே இல்லை.

சினிமாவின் அழகியலில் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர்கள் சிலர் இங்கிருக்கிறார்கள். கோகுல் பிரசாத், கோ.கமலக்கண்ணன் போன்றவர்கள். அவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கி குறைந்தது பத்தாண்டுகள் சினிமாவின் அழகியலை கற்பிக்கலாம். போதிய நிதியுதவியுடன் அந்த இயக்கத்தை தமிழகமெங்கும் பரப்பலாம். [அங்கே இந்த தமிழ் ஸ்டுடியோ ஆட்கள் உள்ளே வர அனுமதிக்கக்கூடாது. யமுனா ராஜேந்திரன், ராஜன் குறை வகையறாக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலே தோப்புக்கரணம் போடவைக்கலாம்]

ஆனால் அதெல்லாம் என் பணிகள் அல்ல. அதற்கு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஆர்வமும், உளம்தளரா ஊக்கமும் தேவை. எனக்கு சினிமாவில் என்றுமே பெரிய ஈடுபாடு வந்ததில்லை. காசர்கோட்டில் இருக்கையில் கேரள கலைப்பட இயக்கத்தில் ஐந்தாண்டுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் அது என் இலக்கியப் பயிற்சியின் ஒரு பகுதிதான்.

இங்கே இலக்கியத்தில் செய்யப்படவேண்டிய பணிகளே மிகுதி. இத்தனை தீவிர இலக்கியம் எழுதப்படும் மொழியில் வாசகர்கள் மிகக்குறைவு. அவர்களை உருவாக்கி நிலைநிறுத்திச் செல்லவேண்டிய பெரும்பணியே உள்ளது. அதை என்னால் இயன்றவரை முழுமூச்சுடன் செய்துகொண்டிருக்கிறேன். முப்பதாண்டுகளாக ஒவ்வொரு நாளும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். இலக்கியத்தை அறிமுகம் செய்கிறேன், இலக்கிய அடிப்படைகளை விவாதிக்கிறேன், அதற்கான இதழ்களையும் வலைத்தளங்களையும் நடத்துகிறேன், அதன்பொருட்டு அரங்குகளை கூட்டுகிறேன். அமைப்பை ஒருங்கிணைக்கிறேன். இதுதான் என் கடமை என உணர்கிறேன். இந்த பணித்திட்டத்தில் சினிமா இல்லை.

புதுமைப்பித்தன், ரா.ஸ்ரீ.தேசிகன், சி.சு.செல்லப்பா, க.நா.சு முதல் இன்றுவரையிலான இலக்கிய மரபில் என் அளவுக்கு இலக்கியத்தைப்பற்றி எழுதியவர்களும் இல்லை, என்னளவுக்கு வெற்றியை ஈட்டியவர்களும் இல்லை. அதற்கான ஊடகவாய்ப்பு எனக்கே அமைந்தது. அப்பெருமிதம் ஒருபக்கம் எனக்கு உண்டு. மறுபக்கம் தமிழ்ச்சூழலுடன் ஒப்பிட்டால் இப்பணியின் அளவு எத்தனை சிறியது என்னும் சலிப்பும் உண்டு. அடுத்தகட்டம் உருவாகி நிலைகொள்ளும் என்னும் நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறேன். ஓர் அறுபடாத தொடர்ச்சியை பேணிக் கையளிக்க முயல்கிறேன். இதுவே என் உளநிலை.

நான் ஈடுபடும் வணிக சினிமா என் தொழில். எனக்கு இலக்கியப்பணிகளுக்கு பொருளியலடிப்படை அமைத்துத் தரும் களம். அங்கே நான் இலக்கியவாதி அல்ல, கதைத்தொழில்நுட்பத்தை அவர்களுக்கு அளிப்பவன் மட்டுமே. அதை சினிமாவாக ஆக்குபவர்கள் அவர்கள், அதில் நான் தலையிடுவதே இல்லை. இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். அந்த எல்லையை நான் கடப்பதே இல்லை

ஜெ

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1
கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2
கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3
கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…4
முந்தைய கட்டுரைஆகுதி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு மூத்த வாசகியின் கடிதம்