கல்பொருசிறுநுரை

அன்புடன் ஆசிரியருக்கு

சில வாரங்களுக்கு முன் காரந்தின் அழிந்த பிறகு வாசித்தேன். வடிவரீதியாக அதுவொரு நவீனத்துவ நாவல். அவருடைய மண்ணும் மனிதரும் நாவலுக்கு ஏறக்குறைய ஒரு எதிர்பிரதி என்று கூடச் சொல்லிவிடலாம்.  ஆனால் தமிழின் நவீனத்துவ ஆக்கங்கள் அடையாத ஒன்று அழிந்த பிறகு நாவலில் இருப்பதாகப்பட்டது. யசவந்தரின் இறப்பும் இறப்புக்கு முந்தைய அவரது கொஞ்சநாள் வாழ்வும் இறப்புக்கு பிறகு அவரது உறவுகளை கதைசொல்லி சந்திப்பதும்தான் நாவல்.

காரந்த் வாழ்ந்து நிறைந்து விலகிய பிறகு எழுதிய படைப்பு. அந்த விலகலின் விவேகத்தை நாவல் முழுவதுமே காண முடிகிறது. உறவுகளின் அன்றாடத் தன்மையில் சலிப்புற்று அவற்றை ஏற்றுக்கொண்ட ஒருவரின் வாழ்வை அந்த நாவலில் காண முடிகிறது. இளமையின் கொந்தளிப்புகளை சற்று அனுபவம் அடைந்தவர்கள் ஒரு புன்னகையால் கடந்துவிட முடியும். ஆனால் யசவந்தர் போன்ற ஒருவரிடம் வாழ்வனுபவத்தினால் தோன்றும் விலகல் அச்சுறுத்தக்கூடியது. தந்தையாக கணவனாக சமுதாயத்தில் மதிப்புமிக்க மனிதராக வாழ்ந்து ஒருவர் கொஞ்சம் பணத்துடன் அனைத்தையும் விட்டுக் கிளம்புவதிலும் கூட ஒரு முழுமை இருப்பதாகவேபடுகிறது.

கல்பொறு சிறுநுரை விலகிச்செல்லுதலின் இந்த விவேகம் பிரம்மாண்டாக வெளிப்படுகிறது. கிருஷ்ணன் ஒவ்வொருவரின் கொந்தளிப்புகளையும் கேட்டு அந்த உணர்வுகளில் பங்கெடுக்காது அவர்களை ஆற்றுப்படுத்தாது விலகி அமர்ந்திருப்பதும் ஒரு கடுமையான அச்சத்தையே தோற்றுவிக்கிறது. பிரதிபானு, சோமகன், ஸ்ரீகரர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைச் சித்திரத்தை கிருஷ்ணனின் முன் வைக்கின்றனர். அனைத்தையும் கேட்டுவிட்டு வெறுமனே கிருஷ்ணன் அமர்ந்திருப்பதிலும் ஒரு மறுக்க இயலாத நீதி உள்ளதாகவே தோன்றச் செய்வதே இந்த நாவலின் வெற்றி என நினைக்கிறேன்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள ஜெ

கல்பொரு சிறுநுரை நாவல் வரை வந்துவிட்டேன். மூன்று மாதங்களில் வெண்முரசில் விட்ட இடத்தில் இருந்து [பிரயாகை] தொடர்ந்து வந்து இங்கே முடித்திருக்கிறேன். இதற்குமேல் ஒரே மூச்சில் தொடர மனமில்லை. கண்ணனின் மறைவை கடந்து நான் இன்னும் செல்லவில்லை. அறிந்த கதைதான். அப்படித்தான் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் கடந்துபோக முடியவில்லை. மனம் சோர்ந்துபோய்விட்டது. ஆனால் அந்தச் சோர்வில் ஒரு நிறைவும் இருக்கிறது. சித்திரைத்திருவிழா முடிந்த மறுநாள் போல இருக்கிறது என் மனம்.

ஒவ்வொன்னும் இப்படித்தான் முடியும் என்பதில் ஒரு கணக்கு உள்ளது. அந்தக்கணக்கு அவனே சொன்னது. அந்தக்கணக்கை அவன் எப்படி மீறமுடியும்? அவன் அந்த நகரை கட்டியது அகங்காரத்தால்தான். பாரடா யாதவனாலும் முடியும் என்று காட்டுவதற்காகத்தான். ஆணவத்தால் கட்டிய எல்லாமே அப்படித்தான் அழியும் என்றுதான் மகபாரதமே சொல்கிறது. இந்தப்பக்கம் இந்திரப்பிரஸ்தம் அப்படித்தான் அழிந்தது. அந்தப்பக்கம் துவராகையும் அப்படித்தான் அழிந்தது

கேட்டகதைகளிலிருந்து இந்நாவலில் உருவாக்கப்பட்டிருந்த வேறுபாடுகள் நியாயமானவையாக இருந்தன. மகாபாரதக் கதைகளில் துவாரகையின் அழிவின்போது கண்ணன் உடனிருக்கிறான். கண்ணன் சொல்லுவதை மகன்கள் கேட்பதில்லை. கண்ணன் மகன்களை கொல்லப்போகிறான். மகன்களுடன் போரிடுகிறான். ஆனால் வெண்முரசில் அவன் யோகியாக எங்கோ போய் அமர்ந்திருக்கிறான். இங்கே எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. நீர்க்குமிழி போல துவாரகை அழிகிறது. அவனுக்கு ஒன்றும் இல்லை அதனால். இதுதான் சரி என்று தோன்றுகிறது.வேறுமாதிரி யோசிக்கக்கூடவில்லை.

ஹரீஷ்குமார்

முந்தைய கட்டுரைகி.ரா.சந்திப்பு இன்று
அடுத்த கட்டுரைநமது முற்றத்து விண்மீன்கள்