அன்புள்ள ஜெ
கொந்தளிப்பான ஓர் ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டின் நினைவுகள் என்னென்ன என்று பார்த்தால் முதலில் வெண்முரசின் முடிவு. அடுத்தபடியாக நூறு சிறுகதைகள். கொரோனா எல்லாம் இதற்கு பின்புலம்தான். காலம்போகப்போக கொரோனா மறந்து நினைவில் சுருங்கிவிடும். இவைதான் வரலாறாக நிலைகொள்ளும்
கே.ஆர்.ராஜ்மோகன்
அன்புள்ள ஜெ,
இந்த lockdown இல் உங்கள் சிறுகதைகளே நாட்களை எதிர்நோக்க செய்தன. ஒவ்வொரு கதையையும் படித்த உடன் உங்களுக்கு மின்னஞ்சல் எழுத வேண்டும் என்று எண்ணுவேன், அனால் அலைபேசியில் type செய்ய சோம்பேறித்தனம். 70 நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் என் வீட்டிற்கு திரும்பினேன். இரண்டு விஷயங்கள்..
வீட்டில்balcony எல்லாம் இலை, சருகுகள்நிரம்பி, மழைநீர் drain ஆகாமல், வீடு முழுவதும் நீர். மொட்டை மாடியிலும் நீர் தேங்கி நின்றது. நான் சென்று drainage ஐ அடைத்து இருந்த சருகுகளை நீக்கும்பொது இரண்டு அண்டங்காக்கைகள் என்னை பார்த்த வண்ணம் இருந்தன. நான் ஏணியில் இறங்கும் பொது மாரி மாரி பறந்து வந்து என்னை தாக்க ஆரம்பித்தன. அங்கு எங்கோ அவைகள் கூடு கட்டியிருக்க வேண்டும் என்றும், நானறிந்த அளவில் கூடு போன்ற எதையும் நான் கலைக்கவில்லை என்றும், என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களாக, நான் வெளியில் சென்றால் அந்த காகங்கள் கரைகின்றன. நிழல்காகம் கதையில் வருவது போல் இனி நடக்குமா என்று பயப்படுகிறேன் !!
70 நாட்கள்திருச்சியில் மலைக்கோட்டைஅருகே இருந்தேன். அங்கே யானை கோட்டம் மிகச்சிறியதானது. இன்னும் சிறிதாக இருந்தால் யானை கதையில் வருவதுபோல் அது அங்கே சிக்கிக்கொண்டு விடும். யானை அதிலே 24/7 நிறுத்தப்பட்டிருந்தது. தினமும் அதன் நிலை எண்ணி மனம் வருந்துவேன். ராஜன் கதை படித்த அன்று, இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு tweet செய்தேன். அவ்வளவே என் activism. கேரளத்தில் மலப்புறத்தில் யானை கொல்லப்பட்ட செய்தி மனம் சோர்வடைய செய்கிறது. நான் இயல்பாகவே மனிதனின் குரூரம் எல்லையற்றது என்று நினைப்பவன். இதுவரை எதுவும் என் மனதை பாதித்தது இல்லை. அனால் இது ஏதோ செய்கிறது. என்னவென்று தெரியவில்லை.
அன்புடன்,
ஸ்ரீராம்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். தாங்களும் தங்கள் குடும்பமும் நலமுடன் என்றும் இருக்க எனது அன்பும், ஆசையும். ஒரு குழந்தையிடத்தில், உனக்கு எந்த பொம்மை பிடிக்கும் என்றால், ஒரு நாள் கரடி பொம்மை பிடிக்கும் என்று சொல்லும், இன்னொரு நாள் குரங்கு பொம்மை, மற்றொரு நாள் இரண்டும் பிடிக்கும் என்று சொல்லும்.
இந்த நான்கு நாட்களாக, ‘நிழல்காகம்’ என் உள்ளம் முழுதும் நிறைந்து இருக்கிறது. காகங்கள் அண்டாமல் இருப்பதற்காக, அவற்றின் இனத்தில் சிலவற்றைப் பிடித்து குடலை வெட்டி நீக்கி புடம் செய்து தொங்கவைத்தவரை துரத்தி துரத்தி கொத்திய காகங்கள், பனிப்பொழிவில் சேமித்த வைத்த கோதுமையைக் கொடுத்து பசியாற்றிய அவரது பேரனை துரத்தி துரத்தி முத்தமிடுகின்றன. அசிதரையும், அவருடன் விளையாடும் காகங்களையும் நினைத்திருப்பதே ஒரு தியானத்தில் இருப்பதைப் போல உணர்கிறேன்.
காகத்தை விரட்ட கருப்புத்துணி கட்டி தேங்காய் கொப்புரையைக் காய வைப்பது, விவசாயப் பின்னனி நிறைந்த என் சிறுவயது வாழ்க்கையில் வருடந்தோரும் வந்து செல்லும் நிகழ்வு. கருப்புத்துணிக்கு பதில் , காகத்தை அடித்துத் தொங்க விட என் பாட்டன் ஒரு பொழுதும் நினைத்திருக்க மாட்டார். குலதெய்வ கோவிலில், ஆட்டுக் கிடாய் வெட்டுவதை தடுத்து நிறுத்தியவர் அவர். தலையில் தண்ணீர் தெளித்த பின் ஆடு தனது தலையை சிலிர்த்து துள்ளியதும், சாங்கியம் முடிந்தது என்று சொல்லி , அதை ஏலத்திற்கு விற்று, வந்த வருமானத்தை கோவில் நிதியாக மாற்றுவது என அவரும், அவர் பங்காளிகளும் முடிவு எடுத்தார்கள் என்று என் தந்தை பெருமையாக சொல்வார்.
பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது, தொடர்ந்து இரு வாரங்களாக, ஊரை ஒட்டியிருந்த என் தாய்மாமன் தோட்டத்து கடவுப்படலைத் திறந்து காலடி வைத்ததும், காகம் ஒன்று கீழிறங்கி வந்து தோளுக்கு மேலே பறந்து தலையை உரசியதுபோல் செல்லும். ‘நிழல்காகம்’ கதை , அன்றைய சிலிர்ப்பை மீட்டெடுத்தது எனினும், என் பாட்டனும், முப்பாட்டனும் உயிர்களின் மேல் வைத்த அன்பினால், அந்தக் காகம் என்னுடன் விளையாட வந்திருக்கும் என்று இன்று எடுத்துக்கொள்கிறேன்.
உங்களின் கதைகள் சொல்வது பொதுபுத்திக்கு அமானுஷ்யம் போல் தோன்றுவது, அறிவியல்படியும் சரி என்று திரும்ப திரும்ப நிறூபனம் ஆகிவிடுகின்றன. நான், ராதா, ஜெய் மூவருமே இந்தக்கதை பற்றி பேசும்பொழுது BBC செய்திப்பத்திரிகையில் வாசித்த ஒரு செய்தியை நினைவு கூர்ந்தோம். சிறுமி ஒருவள், அவள், நான்கு வயதாக இருக்கும்பொழுது , அவள் சிந்தும் உணவை காகங்கள் எடுப்பதையும், அதற்காக அவைகள் காத்திருப்பதையும் கவனித்தவள், கொஞ்சம் பெரியவளானதும், தனது மதிய உணவை பங்கிட்டுக்கொள்ளும் கருணை உள்ளம் உடையவள் ஆகிறாள். வீட்டுத் தோட்டத்தில், கிண்ணங்களில் கடலைப் பருப்பு, தண்ணீர் என்று காகங்களுக்கு வைப்பதை அவளும், அவள் சகோதரனும் வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். உணவைத் தேடிவந்து உண்ணும் காகங்கள், அவளுக்கு மினுமினுக்கும் பரிசுப் பொருள்களை வீட்டுத் தோட்டத்தில் விட்டுச்செல்ல ஆரம்பிக்கின்றன. ஊதா நிற லெகோ பீஸ், மஞ்சள் நிற பாசி, பேப்பர் கிளிப் என்று அதன் வாயில் என்னவெல்லாம் கவ்வ முடியுமோ அவைகளை கொண்டு வந்து பரிசாக இட்டுச் செல்கின்றன.
இதை நேர்முகம் கண்ட பத்திரிகையாளர், காகங்களைப் பற்றி அதிகம் தெரிந்த University of Washington, விரிவுரையாளரிடம், இதுவெல்லாம் சாத்தியமா என்று கேட்கிறார். அவர், “பல நாட்கள் பழக்கத்தில் காகங்கள், தனக்கு உணவு கொடுப்பவனை அணுக்கமாக அறிந்து கொள்கிறது. அவைகள் பரிசு கொடுப்பது சாத்தியமே. எனக்குத்தான் அவைகள் கொடுத்ததில்லை” என்கிறார்.
இது போன்ற கட்டுரைகளை எப்பொழுதுமே சேமித்துவைத்திருக்கும் ஜெய், இந்தக் கடிதத்துடன் இணைப்பதற்காக, கேட்டதும், இரண்டரை வினாடியில் அந்த நிரலை எனக்கு அனுப்பி வைத்தான்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்