அன்புள்ள ஜெயமோகன் சார்,
இன்று தங்கள் தளத்தில் வெண்முரசு அடுத்த நாவலான “முதலாவிண்” என்னும் நாவலோடு நிறைவு பெறுகிறது என அறிவித்து இருந்தீர்கள். முதலில் அதை படிக்கும்போது ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் வெண்முரசு நிறைவு அடையும் என நான் எண்ணி பார்த்ததே இல்லை. முதலில் ஒரு இடி இறங்கியது போல்,பிறகு ஒரு யாரையோ மயானத்தில் எரிக்க செல்வதுபோலவோ பிறகு மனமார நேசித்த காதலியை பிரிய போகிறோம் என முதலில் மனது அறியும் ஒரு தருணம் போலவோ தான் இருந்தது. ஏன் நீங்கள் வெண்முரசை எழுதி நிறுத்துகிறீர்கள் என எனக்கு இன்னும் புரியவே இல்லை? …எல்லாம் ஒரு நாள் வாழ்வைப்போலவே நிறைவுறும் தானோ ?
ஜெயமோகன் சார், 2013 ம் வருடம் கிறிஸ்துமசுக்கு முந்திய நாள் மிகுந்த மனகசப்பில் தற்கொலை நோக்கில் இருந்தேன். அப்போதுதான் நீங்கள் மகாபாரத்தை ” வெண்முரசு ” என்னும் நாவலாக எழுதப்போவதாக அறிவித்தீர்கள். மனம் அதை வாசித்தபோது பெரும் கிளர்ச்சி அடைந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எனக்கு சிறுவயது முதல் மகாபாரதகதையின் மீது தனி மோகம். முதலில் “மகாபாரதம் ” என்னும் வாரத்தையை கேட்டது எனது ஆஸ்டல் பாதரிடம் இருந்து.ஆஸ்டல் பிரேயர் நேரத்தில் கிறிஸ்துவின் கதைகளோடு சின்ன சின்னதாக மகாபாரத கதைகளையும் கூறுவார். அது அப்படியே வளர்ந்து அவரிடம் முழு மகாபாரத்தையும் கூறும்படி கேட்டேன், அப்போது அவர் கூறியது ” மகாபாரதம் படிக்கிற அளவுக்கு உனக்கு இன்னும் வயசு ஆகலடே “. ஒருவேளை நீங்கள் வெண்முரசு எழுத தொடங்கிய நேரம்தான் வயசுக்கு வந்தேனோ என்னவோ? .ஆறரை வருடங்கள் ஓடிவிட்டது. வெண்முரசின் அனைத்து வரிகளையும் வாசித்து இருக்கிறேன் என்பதே பெரிய சாதனைபோல் தான் இருக்கிறது.
காண்டீபம், மாமலர், சொல்வளர்காடு முதலிய நாவல்களை வாசித்து எல்லாம் இந்த பிறவியின் கொடை என்றே சொல்வேன்.ஒட்டு மொத்த வெண்முரசும் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்று எனக்கு மட்டும்தான் தெரியும். புது பிறவி எடுத்ததுபோலவே உணர்கிறேன்.இளையயாதவன்,பீஷ்மர்,விதுரர்,தர்மர்,அர்ஜுனன்,திருதாஷ்டிரர்,கணிகர்,அம்பா, குந்தி,திரௌபதி காந்தாரி,பானுமதி,தமயந்தி, தேவயானி பாத்திரங்கள் எல்லாம் சாகும் வரை கூடவே வருவார்கள்.
இப்போது எல்லாம் எனக்கு ஒரு கனவு அல்லது ஒரு உருவகம் அல்லது எதுவோ ஓன்று தோன்றுகிறது…. “இப்போது நான் எனது பிறந்த ஊராகிய பாரதவர்ஷத்தின் தென்முக்கில் இருக்கிறேன்,எனது கால்களுக்கு கீழே வேர்கள் நான்கு திசைகளிலும் பரவி பரவி ஒட்டு மொத்த உலகின் கீழேயும் முடிவே இல்லாமல் சென்று கொண்டே இருக்கிறது”… பிறகு ஒரு ஆழமான ஒரு விழிப்பு நிலை.இப்படி ஒரு நிலமையை வெண்முரசுதான் கொடுத்தது. அதாவது வாழ்விற்கான பொருள்.
இந்த மாபெரும் வெண்முரசு என்னும் கொடையை அருள உங்களை தேர்ந்தெடுத்த, உங்களுக்கு மன,உடல் நலத்தை அருளிய பிரமத்துக்கும் அதை எழுதி எங்களுக்கு அளித்த உங்களுக்கும் நன்றி.
வெண்முரசின் அனைத்து வரிகளையும் இந்த சிறிய வாழ்கையில் கொண்டுவரமுடியுமா என தெரியவில்லை.ஆனால் எனக்கான வியாசனை நான் கண்டுகொண்டேன் என்று என்னால் கூறமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எண்ணிக்கொண்டு எனக்கான கடமையை,தன்னறத்தை செய்வது மட்டும் தான் நான் உங்களுக்கு செய்யும் காணிக்கையாக இருக்கும். அதை செய்ய மனதிடத்தை, மன ஒருமையை,புத்திகூர்மையை, வாய் வாய்வல்லமையை, செயல்திறனை அருள இளையயாதவனை,கிறுஸ்துவை கண்ணில் நீர் கோர்க்கும் இந்த நேரத்தில் வேண்டிகொள்கிறேன்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்! ‘முதலாவிண்’ நூல் தொடக்கம் பற்றிய உங்கள் அறிவிப்பைப் படித்தேன். நீங்கள் இளையராஜா அவர்களிடம் ஆசி வாங்கியதை அறிந்துகொண்டேன்.
தமிழில் பாரதம் எழுதி யாராலும் முழுமை செய்யமுடிந்ததில்லை என்பது எனக்குப் புதுத் தகவல். கொஞ்சம் அச்சத்தையும் தந்தது.
ஆனால் இதற்கு ஒரு தப்பித்தல் வழி இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த குரு ஆசி என்ற வழி நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.
ஒரு கதையாடல் உத்தியையும் பின்பற்றலாம். கடைசிக் கதையில் ஏதோ ஒரு கட்டத்தைக் கொஞ்சம் மூளி செய்துவிடுங்கள். ஒரு விடுபடல், ஒரு குறை….கதையில் விட்டுவைக்கலாம் என்று தோன்றுகிறது. நான் கூறுவதை விளையாட்டாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அன்பு,
பெருந்தேவி
மூத்தவருக்கு
இதை எழுதும் எனக்கு அகவை நாற்பதற்கு மேலென்றாலும் இதற்கு மேலும் என்னால் பகிராமல் இருக்க இயலவில்லை. சொல்லும் இசையும் பகுதி 2 படித்த இன்று துயருற்றிருக்கிறேன். சிறு வயது முதல் என் நாயகன் அர்ஜுனனே. அவன் இழிவுக்குள்ளானது முதன் முதலில் வெண்முரசில்தான். எத்தனையோ முறை மறை பிரதியைத் தேடினாலும் முன் நிற்கும் அவலச் செயலைப் புறந்தள்ளுவது எளிதாயில்லை.மயிலிறகால் கர்ணனை, துரியனை, துச்சாதனனை வருடும் வெண்முரசு பார்த்தனை இழிவுகளுக்குள்ளாக்கி போதவில்லை மேலும் மேலும் என கூட்டிச் செல்கிறது
மகா யுத்தத்திலும் கர்ணனின் கரத்தால் கொல்லப்பட்டு பின் கிருஷ்ணனால் உயிர்ப்பிக்கப்பட்டு, இடையாடை அவிழ்க்கப்பட்டு, ஜயத்ரதனால், அஸ்வத்தமானால், மிகக் கீழிறங்கி சல்லியரால் கூட பந்தாடப் பட்டு அனைவருக்கும் முன் ஒற்றைச் சிறப்பு கூட இல்லாமல் அர்ஜுனன் நிற்கிறான். திசைப் பயணங்கள் செய்து தெய்வங்களை வென்று, முக்கண்ணனின் பாசுபதம் பெற்று, கீதாஉபதேசமும் கேட்டு அவன் அடைந்து அடைந்து பெற்ற அனைத்தையும் இழந்து இழந்து நிகர் செய்கிறான் போலும். அவன் புவியுலக வாழ்வின் இறுதியில். மீண்டும் ஒரு முறை கிடைத்த வாய்ப்பை துளிக்கூட வீணாகாமல் அனைத்து கீழ்மைகளையும் அவன் அனுபவிக்கிறான் நேமிநாதரைப் போல் முடிகளும் கூடப் பிடுங்கப்பட்டுவிட்டன.
இன்னும் என்ன? புத்திர பாசம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதையும் இழந்தால் உதிரலாம். இத்தனை பெரிய வெண்முரசில் என் நாயகன் இவன் என நான் உணர்ந்த தருணம், பீமன் இடும்பன் போரில் இடும்பனை வீழ்த்த சிறு மரக்கிளை ஒன்று போதும் பொறுத்திருக்க வேண்டும் என தர்மனிடம் கூறுமிடம் ஓரிடம்தான். அது போதும் எனக்கு.
அன்பு வணக்கங்களுடன்
இரா. தேவர்பிரான்