ஆன்மிகமும் சுதந்திரமும்

வணக்கம்

கொரோனா விடுமுறையில் கல்லூரி இரண்டாம் ஆண்டுக்கான ஆன்லைன் பரீட்சைகளை இந்த வாரம்தான்  முடித்தேன்.  பகலில் கல்லூரி மற்றும் இஸ்கான் வகுப்புக்களும் மாலையில் நானும் தம்பியும் 12 வரை படித்த சின்மயா குழும நல்லுரைகளும், இடையில் வெண்முரசு மற்றும் தொடர் சிறுகதைகள் கேட்பதும் வாசிப்பதும், வீட்டுவேலைகளில் உதவி செய்வதுமாக பொழுது நிறைவாக போகின்றது.

7 ஆம் வகுப்பிலிருந்து வெண்முரசை அம்மா சொல்ல சொல்லத்தான் கேட்டேன்.  கல்லூரி முதல் ஆண்டில்தான் நானே செந்நாவேங்கையை வாசித்தேன். இப்போது வெண்முரசு முழுமையடையும் நேரத்தில் முதற்கனலில் இருந்து நானே மீண்டும் தொடர்ந்து வாசித்து இப்போது அம்மாவுக்கு சொல்லுகிறேன்.  எனக்கு  HBO சேனலைப்போல வெண்முரசின் suitably modified version தான் சொல்லப்பட்டிருக்கிறது, வெறும் எஸ்ஸென்ஸ் மட்டுமே இதுவரை கேட்டிருக்கிறேன் என்று வாசித்த பின்னரே தெரிகின்றது. அப்போதைக்கு அதுவும், இப்போது என் வயசுக்கு இப்படி விரிவாக நானே வாசிப்பதும் சரியாகவே இருக்கிறது. உங்கள் மீதான பிரமிப்பு இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகிவிட்டது

கல்லூரி சேர்ந்த புதிதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இஸ்கான் அமைப்பின் பிரதிநிகள் வந்து ஒரு கூட்டம் நடத்தி சில வினாக்கள் இருக்கும் ஒரு தாளையும் கொடுத்தார்கள், எல்லாருமாக நிரப்பினோம். அதில் நிறைய தத்துவம் குறித்த கேள்விகளே இருந்தன.  என் எண்ணங்களை தெரிவித்திருந்தேன்

விடைத்தாள்களை பார்த்தபின்பு நான் உள்ளிட்ட சில மாணவர்களின் spiritual quotient மிக அதிகமாக இருக்கிறதென்றும் நாங்கள் விரும்பினால் சிறப்பு  வகுப்புக்களில் கலந்துகொள்ளலாமென்றும் சொன்னதும் சம்மதித்து வாரா வாரம் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். அவர்கள் ஆற்றும் உரைகளை இந்த இரண்டு வருடங்களுமே தொடர்ந்து கேட்டேன் .ஆனல் எனக்கு அந்த வகுப்புக்களில் சில அசெளகரியங்கள், சங்கடங்கள் இருந்தன. கிருஷ்ணரைத்தவிர வேறு கதிமோட்சமே உலகிற்கு இல்லை என்பதுபோன்ற உரைகளே எப்போதும் இருந்தது.

எனக்கு கிருஷ்ணரை பிடிக்கும். பகவத்கீதை வகுப்புக்களின் தேர்வில் அந்த பல்கலைக்கழகம் துவங்கியதிலிருந்து முதன் முறையாக 100 சவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். மகாபாரதம் என்னை எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கின்றது. வெண்முரசின் கூடவே மகாபாரதத்தின் ஒருசில பிற வடிவங்களையும் வாசித்திருக்கிறேன். பள்ளியின் பாலவிகாருக்கான ஆசிரியை காயத்ரி தீதி குழந்தைகளுக்கு  “குந்தி பாவம், எனக்கு குழந்தையே இல்லையே பகவானே ஒரு குழந்தையை கொடுன்னு கையை நீட்டி அழுதா, அப்போ சூரிய பகவான் தொப்புன்னு அவ கையில் ஒரு குழந்தையை போட்டார், அதான் கர்ணன்’’ போன்ற மிக எளிய வடிவில் கூட.

இளம் வயதிலிருந்தே மேலும் பல நூல்களையும் வாசிக்கும் பழக்கமும் இருப்பதால் புராண இதிகாசங்களெல்லாம் சொல்லும் பொது விஷயங்கள் காஞ்சனம் காமினி கீர்த்தி இந்த மூன்றில் விழிப்புடன் இருக்கவேண்டுமென்பதையே என்னும் அளவில் புரிந்துகொண்டிருக்கிறென். நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதும் தெரியும். ஆனால் இஸ்கான் ஆசிரியரகள் கிருஷ்ணர் வழிபாட்டை மிகவும் literal ஆக materialistic ஆக  எடுத்துக்கொண்டு இளம் மாணவர்களின் சுதந்திரத்தில் அதிகம் தலையிடுவதுபோலவும், எங்களை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையில் இழுத்துக்கொண்டு போவதாகவும் உணர்ந்தேன்.

ஏறக்குறைய மதமாற்றப்பிரச்சாரத்தைபோல இருக்கும் இவ்வுரைகளும், கருத்துக்களும் எனக்கு ஒவ்வாமையளித்தன. மேலும் பெண்களுக்கு இந்த வகுப்புக்கு அனுமதி மறுத்கப்பட்டிருப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.  பெண்கள் குடும்பம் குழந்தைகள் போன்ற ஆசாபாசங்களில் சிக்குண்டவரக்ள் ,அவர்களால் ஆன்மீகப்பாதைக்கு வரவே முடியாது என்பது போன்ற பாலின சமத்துவமற்ற விஷயங்களை ஆணித்தரமாக முன்வைக்கிறார்கள். இப்படிப் பலவிஷயங்களில் கருத்து வேறூபாடு இருந்தாலும்  வகுப்புக்களுக்கு தொடந்து போய்க்கொண்டிருந்தேன்

இப்போது இவ்விடுமுறையில்  மாலையில் நான் படித்த சின்மயா நிறுவனத்தின் தலைவர் சுவாமி தேஜோமயானந்தாஜியின் கடோபநிஷத் உரைகளை தொடர்ந்து 41 நாட்கள் கேட்டேன். விவாதங்களிலும் கலந்துகொண்டேன். அதிலெனக்கு எந்த அழுத்தமும், அசெளகரியமும் இல்லை. என்னுடன் படித்த பல மாணவிகளும், நேரமிருக்கையில் அம்மாவும் கூட நேரலையில் கலந்துகொண்டார்கள். உரையின் இறுதியில் பஜன்களும் ஆரத்தியுமாக கொண்டாட்டமாக இருந்தது

பகல் நேரங்களில் இஸ்கானின் ஆன்லைன் வகுப்புக்களும் இருந்தன, ஆர்வமில்லை என்றாலும் அதையும் தொடர்ந்தேன் .ஆனால் இப்போது தினம் 4 மணிநேரம் வகுப்புக்கு வரசொல்லி அழுத்தம் கொடுத்தபோது நான் நிறைய யோசித்தேன்.

எனக்கான பாதையை நான் தேர்வு செய்யும் சுதந்திரம் வேண்டுமென்றும், நல்லதோ கெட்டதோ அதை நான்  செல்லும் பாதையில் சந்திக்கலாமென்றும் தோன்றுகிறது.  ஒரு மணிநேரம் வகுப்புக்கள் கலந்துகொள்ளுவதை விட தினம் 4 மணி நேரம் கலந்துகொள்கையில்  வீட்டுவேலைகளில் உதவ முடியாமலும் ஆகின்றது. எப்படியும் இது என்னை  சில வகையில் தொந்தரவுக்குள்ளாக்கும். பெண்களுக்கு இது சரிவராது என்று நம்பும் ஒரு அமைப்பில் எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இல்லை

எனவே வகுப்புக்களில் கலந்துகொள்ள முடியவில்லை என்று ஆசிரியருக்கு செய்தி அனுப்பினேன். அவர் என்னை போனில் அழைத்து பலவிதமாக வற்புறுத்தினார் என்றாலும் நான் வேறு காரணங்களை சொல்லி மறுத்தேன்.

மீண்டும் ’’நீ சரியான முடிவுதான் எடுத்திருக்கிறயா’?’ என்று கேட்டு செய்தி அனுப்பினார்.ஆம் என்று பதில் அனுப்பியிருக்கிறேன். ஆமென்றேதான் நினைக்கிறேன்

எனக்கு தமிழுடன் இன்னும் பலவற்றை கற்றுக்கொடுத்த நீங்களே என் முதல் ஆசிரியர் எனவே உங்களுக்கு இதை தெரிவிக்க வேண்டுமெனெ தோன்றியது

அன்புடன்

சரண்

***

அன்புள்ள சரண்

நீங்கள் எடுத்த முடிவு தெளிவானது. அதற்கு வெண்முரசும் ஒரு காரணம் என்பது நிறைவளிக்கிறது.

பொதுவாக ஒரு நவீன மனிதனுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு இன்று வந்து சேர்ந்துள்ளது. தெரிவுசெய்யும் பொறுப்பு. அத்தனை எளிதாக அதை செய்ய முடிவதில்லை. அதிலுள்ள குழப்பங்கள் பலருக்கு நாற்பதை ஒட்டிய வயதுகளில்தான் வந்து முகத்திலறைகின்றன.

ஆன்மிகம், மதம், மத அரசியல் மூன்றையும் தெளிவாக எல்லைபிரித்து வரையறைசெய்துகொள்ளவில்லை என்றால் அக இருளுக்குச் சென்று சேர்ந்துவிடநேரும். அதுதான் இன்றைய சூழல்

வழக்கமாக எடுக்கப்படும் நிலைபாடு என்பது ஒட்டுமொத்தமாக இவை மூன்றுமே தேவையில்லை என்று கொள்வது. தன்னை இவற்றுக்கு அப்பாற்பட்டவனாக கற்பனைசெய்துகொள்வது. பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இன்று இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் இது ஒருவகை நடிப்புதான். அறியாமையிலிருந்து எழும் நடிப்பு.

இங்கே இவ்வாழ்க்கைச்சூழலில் இந்த மொழியில் இந்த  குறியீடுகளின் நடுவே பிறந்து வளர்ந்த எவரும் இவற்றை முழுமையாக நிராகரிக்கமுடியாது. இவற்றுக்கு ‘எதிர்நிலை’தான் எடுக்கலாம். ஆனால் அது ஆன்மீகம் அற்ற, மதம் அற்ற நிலை அல்ல. ஆன்மீக மறுப்பு, மதமறுப்பு நிலைபாடுதான்.

அந்த மறுப்பு நிலைபாடே ஒரு மதம்போலத்தான். ஒரு கொள்கை, ஓர் அமைப்பு சார்ந்தே அந்நிலைபாட்டை எடுக்கமுடியும். அந்நிலைபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கவேண்டும். அந்நம்பிக்கையை முயன்று பேணிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கான எல்லா சொற்களையும் கேட்டுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கவேண்டும்.

ஒருவர் அந்த கொள்கையை, அமைப்பை நேர்நிலையான நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ஆன்மிகம், மதம் ஆகியவற்றுக்கு எதிராக அதைச்சென்று ஏற்றுக்கொண்டார் என்றால் அவர் தன்னை எதிர்மறையானவராக மாற்றிக்கொள்கிறார். வாழ்க்கை முழுக்க அவருக்கு நேர்நிலைத்தேடல் என்பதே இருக்காது. அவர் எதிர்ப்பிலேயே சிந்தனையைச் செலவிட்டுவிடுவார்.

எதிர்நிலைச்சிந்தனை படைப்பூக்கம் அற்றது. புதியவற்றை கண்டடையச்செய்யும் ஆற்றல் அற்றது. எதை எதிர்க்கிறார்களோ அதையே எண்ணிக்கொண்டிருக்கச் செய்வது. இளமையில் ஓர் எதிர்நிலைச் சிந்தனைப்போக்கு வருவது இயல்பானது. ஆனால் அதிலிருந்து வெளிவந்தபின்னரே சிந்தனை தொடங்குகிறது.

ஆன்மிகத்தை புறக்கணிப்பவர் தன் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிய தேடலை இழந்துவிடுவார். வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் பார்வையை அடையாமலாகிவிடுவார். ஆன்மிகம் மதமாகவே தொகுக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது. நேற்றைய ஞானிகளின் தொடர்ச்சி, மெய்மையின் பதிவுகள் மதத்திலேயே உள்ளன.ஆகவே ஆன்மிகத்தையும் மதத்தையும் புறக்கணிக்கமுடியாது

ஆன்மிகம் மதம் ஆகியவற்றை முற்றாகப் புறக்கணிப்பவர் கலை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை இழக்கிறார். பின்னர் அவருக்கு எஞ்சுவன ஒன்றுமில்லை. அவர் படைப்பூக்கம் அற்ற வரண்ட உலகியலாளர் மட்டுமே.

ஆனால் மதம் நிறுவனங்களாக இறுகியிருக்கிறது. நிறுவனங்கள் தெளிவான மையப்பார்வையும், அவற்றை வலியுறுத்தும் அன்றாடச்செயல்பாடுகளும் கொண்டவை. மேல்மேல் அதிகார அடுக்கு கொண்டவை. ஆசாரம் இல்லாமல் மதம் இல்லை. மதநிறுவனங்களுக்குள் சிக்கிக்கொண்டவர் ஆசாரங்களுக்குள் சிறைப்படுகிறார்.

ஆசாரங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவன. சிலருக்கு அவை தேவையாக இருக்கலாம். ஆனால் புதியனதேடும் சிந்தனையாளர்களுக்கு, மெய்மையைத் தேடும் உள்ளம்கொண்டவர்களுக்கு ஆசாரங்களைப்போல தடைகளும் வேறில்லை.

மதங்களிலிருந்து மெய்மையை, தத்துவங்களை, அழகியலை மட்டுமே பெற்றுக்கொண்டு நம்மை சுதந்திரமானவர்களாக வைத்துக்கொள்ளவேண்டியது இன்றைய நவீன மனிதனின் பெரும் பொறுப்பு. அவனுக்கு காலம் விடுக்கும் மிகப்பெரிய அறைகூவல். மெய்மையை, தத்துவங்களை, அழகியலை நாடி எந்த மதத்துக்குள் சென்றாலும் ஆசாரத்தை, அமைப்பின் ஆதிக்கத்தையே நம் தலைமேல் சுமத்துகிறார்கள். அதை அடையாளம் கண்டு உடனே மறுத்துவிடுவதே நம் அகச்சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளும் வழி.

மதம்சார்ந்த அமைப்புக்களிலேயேகூட ஒப்புநோக்க வெறும் கருத்தியலால் மட்டுமே கட்டப்பட்ட அமைப்புக்களே உகந்தவை. இறுக்கமான நடைமுறைகளும் ஒற்றைப்படையான பார்வையும் கொண்டவை நம்மை சிறைப்படுத்துபவை.

இதற்கு அடுத்தபடியாக உள்ளது மதஅரசியல். அதற்கு மதத்தின் ஆன்மிகமோ தத்துவமோ அழகியலோ பொருட்டல்ல. மதங்களின் ஆசாரங்கள்கூட பொருட்டல்ல. மதத்தின் அடையாளங்கள் மட்டுமே அதற்குப் போதும். அந்த அடையாளங்களைக்கொண்டு மக்களை பெருந்திரளாக திரட்டி அதிகாரத்தை அடைவதே அவற்றின் நோக்கம். அதன்பொருட்டு அவை மதத்தை காப்பாற்ற வாருங்கள் என அறைகூவல் விடுக்கின்றன. மத அரசியலில் மதமே உண்மையில் கிடையாது. அங்கே சென்றவர்கள் ஆன்மிகத்தை மட்டுமல்ல மதத்தையும் கைவிட்டவர்கள்தான்.

நாம் நம் வாழ்க்கையை புரிந்துகொள்ள, நம்மைப்புரிந்துகொள்ள,முழுமையை அறிந்துகொள்ள ஆன்மிகத்தை நாடுகிறோம்.  சுதந்திரமே ஆன்மிகத்தின் முதல் நிபந்தனை. சுதந்திரமே ஆன்மிகத்தின் முதல் இயல்பான வழி. சுதந்திரத்தை அளிப்பவரே ஆன்மிக வழிகாட்டி, கட்டுப்படுத்துபவர் அதற்கு எதிரானவர்

ஜெ

முந்தைய கட்டுரைகதைகளும் நோய்க்காலமும்
அடுத்த கட்டுரைஇமைக்கணம் ஒரு கேள்வி