எப்படி இருக்கிறீர்கள், அருண்மொழி அவர்களும் சைதன்யாவும் நலமா?
நான் இப்போது ஹைதெராபாத் வந்து விட்டேன். ஆம் பணி மாற்றல் தான்.இந்த பக்கம் வந்தால் சொல்லவும். நீங்கள் இப்போதுதான் வந்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடி விட்டது. இந்த வருடம் பூரி ரதயாத்திரையும் கொரோனாவினால் பாதிக்கக்கப்பட்டுள்ளது.
தினமும் உங்கள் தளத்தில் வரும் அனைத்தையும் படிக்கிறேன் வெண்முரசு தவிர. சீக்கிரம் வெண்முரசு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். நீலம் முதலில் படிக்க ஆசை.
பல முறை கடிதம் எழுத வேண்டும் என நினைப்பது உண்டு. ஆனால் எழுதவில்லை. பணி ஒரு காரணம், சோம்பேறித்தனம் ஒரு காரணம். எனக்கு கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு எப்படி செய்வது என்று சரியாக தெரியாதது மற்றொரு காரணம்.
தினமும் வரும் சிறுகதைகள் வேறோர் உலகத்துக்கே கொண்டு செல்கின்றன. இத்தனை கதைகள் ஒரு மனிதனால் தொடர்ந்து எழுத முடியும் என்பதை நம்ப முடியவில்லை. உலக இலக்கிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு தவிர எல்லா கதைகளும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆனையில்லா , வருக்கை , சூழ்திரு , ஓநாயின் மூக்கு, கைமுக்கு, வனவாசம் , மாயப்பொன் , மலை அரசி, கரு, தங்க புத்தகம், சுக்ரர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
முக்கியமாக சொல்ல வந்தது சமீபத்தில் பின் தொடரும் நிழலின் குரல் படித்து முடித்தேன். உடனே கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். நாவல் பற்றி என்ன சொல்ல? படித்து முடித்து நான்கு நாட்கள் சரியாக தூங்க முடியவில்லை. படிக்கும் போது பாதி நேரம் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.
நான் மிகவும் ரசித்தது நாடக பகுதிகள் மற்றும் ராமசாமி ஜோனி விவாதங்கள். கம்யூனிசத்தின் எல்லா பக்கங்களையும் விவாதித்து விட்டீர்கள். தீர்வும் கிட்டத்தட்ட சொல்லப்பட்டு விட்டது. நாவல் வந்து இருபது வருடம் ஆக போகிறது. நாவல்லில் சொல்லப்பட்டதெல்லாம் தெள்ள தெளிவாக வெளியே வந்து விட்டது. நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் யாரிடமும் எந்த மாற்றமும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது.
நமது வலை தளத்தின் புதிய டிசைன் மிகவும் அழகாக உள்ளது. வெரி சிம்பிள் அண்ட் மாடர்ன் லுக்.
சிறுகதை திருவிழா தொடரும் என்று எண்ணுகிறேன்.தினமும் எங்கள் நேரத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு நன்றி.
அன்புடன்
சங்கர் குட்டி
ஹைதெராபாத்
***
அன்புள்ள சங்கர் குட்டி.
பின்தொடரும் நிழலின் குரல் அரசியல்தீர்வை சொல்லவில்லை, மனசாட்சிமுடிவு ஒன்றைச் சொல்கிறது. அத்தகைய கருத்துக்களுக்கு உடனடியாக மாற்றத்தை உருவாக்கும் சக்தி இல்லை. ஏனென்றால் அவை அறைகூவவில்லை, நினைவுபடுத்துகின்றன. அவை சொல்வன ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவைதான். சுயநலத்துக்காக, பல்வேறு நம்பிக்கைகளுக்காக, மனிதர்கள் அதில் சமரசம் செய்துகொள்கிறார்கள். இலக்கியம் அந்த சமரசங்களைச் சுட்டிக்காட்டி நினைவூட்டிக்கொண்டிருக்கிறது
அவை அறைகூவவில்லை என்பதனால் எதையும் மாற்ற முயலவில்லை. ஆனால் வலுவான ஒரு தரப்பாக அக்குரல் இருந்துகொண்டே இருக்கும். சிந்தனையில் தெளிவான செல்வாக்கைச் செலுத்திக்கொண்டும் இருக்கும். அத்தகைய ஒரு தரப்பை, ஆழ்தரப்பை, உருவாக்குவது மட்டுமே இலக்கியத்தால் செய்யக்கூடுவது என நினைக்கிறேன். அந்தவகையில் பின்தொடரும் நிழலின் குரல் மிக வலுவான மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது என்றே தோன்றுகிறது
நூறுகதைகள் எழுதிய காலமும் பின்னால் சென்றுவிட்டது. சமீபத்தில் இரண்டு இதழ்களுக்காக இரண்டு கதைகள் எழுதவேண்டும் என்ற நிலை. பதினைந்துநாட்களகா எண்ணி எண்ணிப்பார்த்தும் எழுத முடியவில்லை. கடைசியில் நேற்றுத்தான் எழுத முடிந்தது. சிலசமயம் எழுதிக்குவிக்கமுடிகிறது. சிலசமயம் எழுத்து வற்றி வெறுமையை காட்டுகிறது
ஆனால் வெறுமை என்பது சோர்வாக இல்லை. ஒருவகை விடுதலையாகவே உள்ளது. அப்போது நிறைய பயணம் செய்ய முடிகிறது
ஜெ