கோபல்லபுரத்து மக்கள் – வாசிப்பனுபவம்

கரிசல் மண்ணின் நாயகன்  கி ராஜநாராயணன்  அவர்கள் , ‘இந்த இவள்’ என்ற நாவலை தனது 96-வது வயதில் எழுதியுள்ளார். வயசாயிருச்சு,  நம்மளால இனிமேல்  என்ன செய்யமுடியும் என்று தொய்வடையும் சமயம்  இதை ஒரு ஊக்கமாக எடுத்துக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டு, இந்த மாதம் அய்யா கி.ரா அவர்கள் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலை அடுத்து அடுத்து இருமுறை வாசித்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த நாவல்  , சுதந்திர போராட்ட காலத்தை ஓர் ஆவணம் செய்ததுபோல் இருக்கும் என்று என் அடிமனது ஞாபகத்தில் இருந்தது. அதற்குள் ஒரு அழகான காதல் கதையும் புதைந்திருந்தது என்பதை மறந்திருந்தேன்.  நண்பர் ஒருவரிடம் இதை வாசித்தேன் என்று சொன்னதும், அச்சிந்த்தலுவும் கிட்டப்பனும் வருவார்களே, அந்த நாவலா என்றார்.

நாவலில் இரண்டு பாகங்கள். மாடுகள் மேய்ந்துவிட்டு சென்றுவிட மாலை நேரத்தில் வரும் புல் வாசனையும், அலைந்து திரியும்  காரியும், பிணைக்கு வந்த மாடு தின்ற கதிரும், நடு ஜாமத்தில் எழுந்து கூளம்  போட வந்தவனைக் கண்டு  விடிந்தது என்று கத்தும் ஆட்காட்டி குருவியும் என கரிசல் மண்ணின் மணமுடன் நாட்டார்  மக்களின் வாழ்க்கை பின்னணியில்  ஒரு அழகான காதல் கதையைச் சொல்லும்  முதல் பாகம். காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்போது, பகத்சிங்கை விடுதலை செய்ய காந்தி பேசியிருக்கலாம், காந்தியை பின்பற்றி கள்ளுக்கடைகளை தவிர்ப்போம், எல்லோரையும் கோவிலுக்குள் அனுமதிப்போம் என்று சுதந்திர போராட்ட கால இளைஞர்களின் பேச்சை, நடவடிக்கைகளை ஆவணப்படுத்தும் பாகம் இரண்டாம் பாகம்.

கோபல்ல கிராமத்து மக்கள் அச்சிந்த்தலுவை சிறை என்று சொன்னார்கள்.  சிறை என்றால் சிறை எடுத்துச் செல்லுமளவு அழகுடையவள் என்று பொருளாம்.  நல்ல உடம்புன்னா , எப்பொழுது பசிக்கிறது, எப்பொழுது விழிப்பு வருகிறது என்பதை வைத்து நேரத்தை சொல்லிவிடலாமாம். அப்படிப்பட்ட நல்ல உடம்பை கொண்ட கிட்டப்பன்தான் காதலன். கிட்டப்பனை கட்டழகன் என்றார்கள். அவளுக்கு இவன், இவனுக்கு அவள்தான்  என்று அச்சிந்த்தலுவின்  அம்மா வெண்ணை ஊட்டி இருவரையும் ஒன்றாகவே வளர்க்கிறாள். குழந்தைகளாக இருவரும் கால்மேல் கால் போட்டு ஒன்றாகவே உறங்குகிறார்கள். அச்சிந்த்திலுவின் அம்மா கிண்டல் செய்தால், மக்கு கிட்டப்பனுக்கு அது புரிவதில்லை.

கி.ரா. சொல்கிறார், பால் உணர்வுச் சிந்தனையில் சின்ன வயதில் பெண்ணுக்குரிய சுதாரிப்பும், துருதுருப்பும் ஆண்பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. பெண் வேப்பமரம்; சீக்கிரம் வளர்ந்து விடுகிறாள். ஆண் அரசமரம்; நின்று நிதானித்து  வளர்ந்து நிலைத்து நிற்கிறான். அழகாயிருப்பவர்கள் இருவர் சேருவது கடவுளுக்கே பிடிக்காதாம். இதில் ஊராருக்கு எங்கே பிடிக்கப்போகிறது. கண்ணு மூக்கு வைத்து கதை கட்டுகிறார்கள். இறக்கையெல்லாம் வைத்து பறக்கக்கூட விடுகிறார்கள்.  ஊரார் பேச்சால் குடும்பம் பகை பட்டு இருக்க , இவன் தன்னை தனியே வந்து பார்த்து தன் பிரியத்தைச்  சொல்லமாட்டானா என்று தனது வீட்டு நாய்க்கு கருப்பட்டி துண்டை போட்டு கட்டி வைத்து  அச்சிந்த்தலு காத்திருக்க, அது தெரியாமல், கிட்டப்பன் , தான் அவளைத் தேடிச் சென்றால்,  நாய் காட்டிக்கொடுத்துவிடும் என்று வராமல் இருப்பதும் என காதல் பகிர்ந்துகொள்ளப்படாமலே இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் கல்யாணம் முடிந்துவிடுகிறது.

அச்சிந்த்தலுவின் கணவன், பொலித் தகராறில் நான்காம் நாள் மரணம். கிட்டப்பனுக்கு வாழ்க்கைப்பட்ட ரேணு , தன் பிறந்த வீட்டில் சொல்லிக் கொடுத்ததுபோல புகுந்த வீட்டிலும் அடுப்பில் நெருப்பை எப்பொழுதும் மூட்டி வைத்து , வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் நெருப்பு தானம் செய்கிறாள். நெருப்புக் கேட்டு வந்தவர்கள் கிட்டப்பனின் பழைய காதலைச் சொல்லி நெருப்பை போட்டுவிட்டு செல்கிறார்கள்.

அச்சிந்த்திலுவின் காதலை அவளின் தாபத்தின்மூலம்,  கோபத்தின்முலம், பிரியத்தின் மூலம்,   கி.ரா. வாசகனை உணரச்செய்கிறார். மாநோம்பிற்கு வன்னிமரத்தை பலசாலிகள் பிடுங்கி தனது திறமையை ஊருக்கு காட்டுவது என்று ஒருமுறை. அச்சிந்த்திலு, அடி பாகத்தில் கவட்டை உள்ள வன்னி  மரத்தை நடச்சொல்லி அதைப் பிடுங்க கிட்டப்பன் திணறட்டும் என்று பழி உணர்வு கொள்கிறாள். அதை மிகப் பிரயத்தனப்பட்டு பிடுங்கப்போய் கிட்டப்பன் படுத்த படுக்கையாகிவிட, ‘கிட்டப்பா,  என் பிரியமானவனே’ என்று தனிமையில் கண்ணீர்   வடிக்கிறாள்.

தன் வீட்டு பசுவின் குரலை கேட்டு, எங்கிருந்தோ காரி அதை தேடி வர, அச்சிந்த்துலுவுக்கு கிட்டப்பனின் மேல் தாபம் மேலெழுகிறது.. இரு குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை நின்று போய் , ஒதுங்குவதற்கு கூட செல்லாமல் இருந்த, அவர்கள் புஞ்சையை பிரிக்கும் ஒரு கன்னி வேப்பமரத்தை பார்க்க வேண்டும் என்ற உணர்வு கிட்டப்பனுக்கும், அச்சிந்த்தலுவுக்கும் ஒரே நாளில் வருகிறது.

கி.ரா-வின் எழுத்தின் மகிமையில்,  வாசகனுக்கு கிடைப்பது இரு அழகிய கிளிகள்  அலகை அலகால் கொஞ்சும் அழகு. அவர்களின் காதலோடு காதலாக, கி.ரா. கண்ணுக்கு குளிர்ச்சியான விளக்கெண்ணெய் தீபம் போய் மண்ணெண்ணெய்  ஊற்றிய அரிக்கன் லாம்புகள் கிராமங்களை ஆக்ரமித்ததையும் சொல்கிறார்.புதிதாக ஏதாவது வந்தால், மக்களின் ஏற்றுக்கொள்ளுதல் எப்படி இருக்கும் என்று சொல்லியிருப்பது, இன்றைய மாற்றங்களை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்கும்  பொருந்தும்.

“எந்த புதுசு வந்தாலும், முதலில் அதை சந்தேகிக்கிறதும், அதையே குறை பேசிப் பரப்புகிறதும், பிறகு தயக்கத்தோடு ஏற்றுக்கொள்கிறதும், ஏற்றுக்கொண்ட பிறகு புதிய வியாதிகள் அதனால்தான் பரவுவுதாகச் சொல்லுவதும் வழக்கம்”.

ஜல்லிக்கட்டு பார்க்காதவர்கள், சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை வாசிக்கவேண்டும். இல்லை அதற்கு ஒரு ஜல்லிக்கட்டின் ட்ரைலர் போல , கிட்டப்பன் காரியை அடக்கி மூக்கணாங் கயிறு குத்தும் நிகழ்வை கி.ரா-வின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ வாசிப்பில் காண வேண்டும். நாவலிலிருந்து சில வரிகள்.

“தரையிலிருந்து ஒரே தவ்வலில்  காரியின் மேல் விழுந்த கிட்டப்பனின், வலதுகை இடுக்குக்குள் காரியின் உயரமான திமிலும், இடதுகையின் பிடிக்கினுள் அதன் இடது அடிக்கொம்பும் பிடிபட்டது. உடனே காரி எகிறி குதித்து கிட்டப்பனை உதறித்தள்ள முயன்றது. அட்டைபோல ஒட்டிக்கொண்டு அவன் காரியின் முன்னந்தங்காலோடு தனது வலதுகாலைப் பின்னிக் கொண்டான்”

“காடுகள்ளே எதேச்சையாத் திரிஞ்சத நாம கொண்டுவந்து இப்படி ராப்பகலா அடிச்சி அதுகளை வேலை வாங்குரோம் ” என்று கி.ரா. பிணையலுக்கு பிடித்து வரும் மாடுகளை பற்றிக் குறிப்பிடுகிறார். இதையே விரிவாக்கிய கதையாக , கந்தர்வனின் கொம்பன் கதையை நான் பார்க்கிறேன்.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் மக்களை மாற்றும்  மாற்றங்கள்  வந்தடைகிறது. நாகரீகம் வளர்கிறது. கல்வியின் அவசியம் மக்களுக்கு பிடிபடுகிறது. மூட பழக்கங்கள் கேள்விக்கு உள்ளாகின்றன. மனிதனை மனிதன் இனம் பிரிக்காமல் அனைவரும்  சமனுடன் நடத்தப்பட வேண்டும் என்ற மனமாற்றம் நிகழ்கிறது.  வெள்ளைக்காரனை வெளியேறு என்றும் சொல்கிறார்கள், அவனால் நல்லதும் வந்தது என்று பேசிக்கொள்கிறார்கள். வெளியூருக்கு படிக்கச் சென்ற நரசிம்மனும், கஸ்தூரியும் குடுமியை இழந்து, ‘சேக்கு’வெட்டிக்கொண்டு வருகிறார்கள். கள்ளுக்கடை வேண்டாம், அதை ஒழிப்போம் என்று கூடி பேசி ஆலோசிக்கிறார்கள். குடிப்பவனின் வீட்டுக்குச் சென்று , அவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்கிறார்கள். குடித்து அலுச்சாட்டியம் செய்யும் பாலனை தட்டி கேட்க, அதற்கு ஜாதி முலாம் பூசப்படுகிறது.

தாசில்தார் எங்கு வேலை பார்க்கிறாரோ அங்குதான் தாலுகா தலைநகரம் இருக்க வேண்டும் என்பதற்காக , ஓட்டப்பிடாரத்திலிருந்து கோவில்பட்டிக்கு ஒரே நாளில் மாறுகிறது. தாழ்ந்தவர் என்பதால் , தாசில்தார் நகரில் வசிக்க மறுக்கிறது உயர்வர்க்கம். வெள்ளைக்கார கலெக்டர் உத்தரவில் தாசில்தார் எங்கு இருக்கிறாரோ அதுவே தலைநகரம் என மாற்றப்படுகிறது.

செவ்வாய்க் கிழமைகளில்   ஆண்கள் அனுமதிக்கப்படாமல் , பெண்கள்  கொழுக்கட்டை செய்து பூஜை செய்கிறார்கள். நேசம் கொண்ட நெஞ்சங்களுக்கு இருட்டில் தனிமையில் சந்திக்க செவ்வாய்க்கிழமை நல்லதொரு வாய்ப்பு. அதற்கு வெடி வைக்க வந்தது டார்ச் லைட். முகத்தில் வெளிச்சத்தை பீய்ச்சி யாரென்று பார்க்கிறார்கள்.  ஜடாமுனி எட்டு எடுத்து வைத்தால்,  ஒரு கால் குரங்கடிச்சான் காட்டில் , மறு  கால், ராமனுரணியிலே , இரண்டுக்கும் இடையில் மூன்று மைல் என்று இருட்டை வைத்துச்  சொல்லப்படும்  கட்டுக்கதைகளை   டார்ச் லைட் முடிவுக்கு கொண்டுவருகிறது.

பள்ளிக்குள் அனுமதியில்லாமல் வந்தமர்ந்து ஊர்க் கதை  பேசும் ஊர் பெரிய மனிதர்களை,  வரவேண்டாம் எனச் சொல்லுமளவு வாத்தியார்கள் மனத்தைரியம் பெறுகிறார்கள். சுதந்திர போராட்டம் கோபல்ல கிராமம் எங்கும் பிரதிபலிக்கிறது. சிறுவர்கள், வந்தேமாதரம் என்று வண்டிப் பைதாவில்,  சுவற்றில் எழுதி வைக்கிறார்கள். சட்டப்பூர்வமாக அமைந்த பிரிட்டிஷ் சர்க்காரை என்று பத்திரிகையில் வந்த வாசகத்தை, கோபல்லபுர வாசி திரும்பத் திரும்பச் சொல்லி குரூரமாகச் சிரித்து “யாரு ஏற்படுத்தினாங்க சட்டப்பூர்வமாக இந்த பிரிட்டிஷ் சர்க்காரை?” என்று பரிகசிக்கிறார்.

பச்சைகுத்துபவர் காந்தியின் படத்தையும், ராட்டை சின்னத்தையும் கையில் பச்சை குத்துவதற்கு தயாராகிறார்.  மூவர்ணக்கொடியை மரத்தின் உச்சியில் கட்டுகிறார்கள். அதை வெள்ளை  அதிகாரி பார்த்தால், ஊருக்கு பங்கம் வரும் என்று ஒரு சாரார்  பயப்படுகிறார்கள். திருப்பூர் குமரன், வந்தே மாதரம் என்று சொல்லி பிடித்த கொடியை விடாமல் இருந்ததால், அடித்து கொல்லப்பட்டதை கேட்டு வருத்தப்படுகிறார்கள்.

தேதியும் , நாளும், கிழமையும் அய்யா கி.ரா, தனது நாவலில் எப்படி சரியாக எழுதியுள்ளார் என்று கூகுளையம், விக்கிப்பீடியாவையும் இதே நாள் அன்று என்று சொல்லும் பழைய செய்திகளையும் படித்து சரி பார்த்தேன். “அது 1911 ஆம் ஆண்டு ஜூன் மாசம் 17 ஆம் தேதி சனிக் கிழமை . அன்றைக்கு கொடைக்கானல் போவதற்காக ரயில் ஏறிப் பயணமான நெல்லை ஜில்லாக் கலெக்டர் ஆஷ் துரையை மணியாச்சி ஜாக்சனில் வைத்து , செங்கோட்டை ரகுபதி அய்யரின் மகன் வாஞ்சிநாதன் என்பவன் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டான்”

எனது கூற்றை , நான் இனி இப்படி எழுதவேண்டும். கி.ரா. எழுதியபடி, விக்கிப்பீடியா-வில் சரியாக  இருக்கிறதா என்று.

காந்தியம் சுபாஷ்போஸும், வாழ்ந்த காலத்தில் அன்றைய இளைஞர்களும், மக்களும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை கோபல்லபுரத்து மக்களின் மூலம் , கி. ரா-வின் பதிவுகள், நமக்கு  கற்பிக்கப்பட்ட சரித்திர புத்தகத்தில் இல்லாததை கற்பிக்கின்றன. இருபத்து நான்கு வயது பகத் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்போது , காந்தி இர்வினிடம் பேசி, தண்டனையை ரத்துச் செய்ய சொல்லுவார் என்று நம்புகிறார்கள்.

‘லேமாண்டே’ என்கிற பிரஞ்சு பத்திரிகையின் நிருபர் சார்லஸ் பேத்ராஸ் என்பவர் காந்திஜியை பேட்டி காண்கிறார். அந்த கூர்க்கா சிப்பாய்களை விடுவிக்கக்க கோரி நீங்கள் ஏன் வைஸ்ராய்  இர்வின் பிரபுவிடம் கேட்கவில்லை என்று ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு காந்திஜி சொன்ன பதிலை,  கோபல்லபுரத்து கம்மாக்கரை மரத்து நிழலில் இளவட்டங்கள் காரசாரமாக விவாதம் செய்கிறார்கள். சுபாஷ்போஸ்  காங்கிரஸ் தலைவராக ஜெயித்துவிட, காந்தி பரிந்துரை செய்த பட்டாபி சீத்தாராமைய்யா தோற்றுவிடுகிறார்.  “பட்டாபி தோல்வி என் தோல்வி” என்று  காந்திஜி சொல்கிறார். கோபல்லபுரத்து இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் “பட்டாபி தோல்வி என் தோல்வி” என்று சொல்லிக்கொண்டார்கள்.

போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தலைவர் சுபாஷ் சந்திர போஸ் பெண்வேடமிட்டு பாதுகாப்பிலிருந்து தப்பிக்கிறார். செய்தி படிக்கும் மக்கள் பரபரப்பான சந்தோசம் அடைகிறார்கள். தப்பிய சுபாஷ் வெவ்வேறு பெயர்களில், ஆப்கனிஸ்தான் வழியாக ஜெர்மன் செல்கிறார். ஜப்பானிய அரசு தங்களிடம்  சுபாஸை அனுப்பிவைக்கச் சொல்ல,  இரண்டு இந்தியர்களின் துணையுடன் சப்மெரினில் ஜப்பான் செல்கிறார். ஒவ்வொரு நிகழ்வுகளையும், சுபாஷ் உபயோகித்த வெவ்வேறு மாற்றுப் பெயர்களையும்,  தேதி விபரங்களையும் குறிப்பிட்டு, விபரங்களின் பிதாமகனாக,  கி.ரா. நம்மை அசத்துகிறார்.

சுதந்திரம் அடையும் தினம் பத்திரிகைகளில் அறிவிக்கப்படுகிறது. “ஈவு இரக்கமில்லாமல், மக்களைத் தேய்த்து நசுக்கியவன் இப்போது ஒரு சலாம் போட்டு , நான் வெளியேறிக்கொள்கிறேன் என்று சொன்னால் எப்படி? அவன் இந்த நாட்டில் நிறுவிய மூலதனத்தையெல்லாம் விட்டு எப்படி போவான்?” என்று சிதம்பரம்பட்டி என்பவர், கோபல்லபுரத்துக்கு தேசாந்திரியாக வந்த மணி என்பவரிடம் கேட்கிறார். அவர் அதற்கு சொல்லும் பதில் ஆறு அத்தியாயங்களில் விரிகிறது. நல்ல பொருள் போட்டு எடுத்தால், அந்த ஆறு  அத்தியாயங்களையும் ‘கேம் ஆப் த்ரோன்’ கொடுத்த விறுவிறுப்பில் எடுக்கலாம்.

புரியாத ஓவியங்களை முற்றங்களில் மாட்டி அழகு பார்க்கிறோம். ஓவியர் ஆதிமூலம் போட்ட கோட்டு ஓவியங்கள் கொண்ட , நாட்டார் வழக்குத் தமிழில்   அழகிய காதல் கதை அடங்கிய சரித்திர உண்மைகள் நிரம்பிய கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்களை வாங்கி  வீட்டின் புத்தக அலமாரியில் அடுக்கி  வைப்போம். கிடைக்கும் நேரத்தில் எடுத்து எடுத்து வாசிப்போம். –

வ. சௌந்தரராஜன்

கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்

முந்தைய கட்டுரைபுவியரசு 90
அடுத்த கட்டுரைஆங்கு