உறுப்புமாற்றம் பற்றி…

அன்பின் ஜெ..

வாசகர் விவேக் ராஜ் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.எழுத்தாளனின் பார்வை- கடிதம்

1996 ஆம் ஆண்டு எனக்கு சென்னையில் குடல்வால் அறுவை சிகிச்சை நடந்தது.  சிகிச்சை முடிந்து, அறையில்,இன்னொரு நோயாளியுடன் இருந்தேன். அவர், சிறுநீரக தானம் செய்தவர் – பணத்துக்காக என்பதையும், அவர் ஏழை என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. அவரை மருத்துவமனையின் செவிலியர் அருவெறுப்புடன் கையாண்டதை மனவருத்தத்துடன் கண்டேன்.

2004 ஆம் ஆண்டு, சுனாமிக்குப் பின்னர், சில மீனவ குப்பங்களில், குடும்பங்கள் சிதைந்து போக, ஏழ்மையின் பிடியில், உடல் உறுப்பு வணிகம் கொடிகட்டிப் பறந்தது.. மணலிக்கு அருகில் உள்ள ஒரு குப்பம் கிட்னிவாக்கம் என்றே அழைக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு வாக்கில், இந்த ஊழல் பெரிதாக வெடித்தது. அரசு இதில் தலையிட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான்,  பணத்துக்காக மனிதர்கள் உறுப்புகளை விற்பது தடை செய்யப்பட்டது. தமிழக அரசு Cadaver Transplant Act என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தது. நோயாளிக்கு, அவரின் ரத்த உறவினர்கள் அல்லது கணவன்/ மனைவி தவிர, வேறு யாரும் உறுப்புகளைத் தானம் செய்ய முடியாது என்னும் நிலை ஏற்பட்டது. இன்று சென்னைக் குப்பங்களில், 40 வயதுக்குக் குறைவானவர்களுக்கு உடல் உறுப்புகள் பத்திரமாக இருப்பதற்குக் காரணம் இந்தக் கடுமையான சட்டம்.

2008 ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானத்தில், ஒரு முக்கியமான நிகழ்வு. சென்னைக்கு அருகே வசித்து வந்த ஒரு மருத்துவத் தம்பதியினரின் மகன் ஹிதேந்திரன், பைக் விபத்தில் மரணமடைந்தார். அவரின் பெற்றோர், மகனின் உடல் உறுப்புகளைத் தானமாகத் தர முன் வந்தனர். இது அன்று பெரும் நேர்மறை நிகழ்வாகப் பார்க்கப் பட்டது. அதன் பின்னர், தமிழகமெங்கும், விபத்தால் மரணிப்பவர்களின் பெற்றோர் அல்லது குடும்பத்தினர் பலர் மூளைச்சாவு அடைந்த தங்கள் உறவினர்களின் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். இது மருத்துவ வட்டாரங்களில், ஹிதேந்திரன் விளைவு என்று அழைக்கப்படுகிறது..

இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல, 2014 ஆம் ஆண்டு, தமிழக உறுப்பு மாற்றுச் சிகிச்சை நிறுவனம் (Tamilnadu Transplantation Organisation – Transtan TRANSTAN | Transplant Authority Government Of Tamil Nadu , Government of Tamil Nadu | About Us (tn.gov.in) )  உருவாக்கப்பட்டது.

அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் தான் நான் மேற்கோள் காட்டியிருந்த மருத்துவர் அமலோற்பவநாதன்.  அதன் துவக்க காலச் செயலரும் கூட.

நண்பர் விவேக், நான் எழுதிய கடிதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனக் கருதுகிறேன். இதன் முக்கியப் புள்ளிகளை நானறிந்த வகையில் சொல்ல முயல்கிறேன்.

  1. இன்று மனித உறுப்புகளை பணத்துக்காக விற்பது சட்ட விரோதம்.
  1. உறவினர்கள் (கணவர்/மனைவி/பெற்றோர்/குழந்தைகள்) மட்டுமே உறுப்புக்களைத் தானம் செய்ய முடியும். இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் செய்யவே முடியாது. அப்படிச் செய்யும் மருத்துவரின் உரிமம் என்றென்றைக்குமாகப் பறிக்கப்பட்டுவிடும். சிறைத்தண்டனையும் உண்டு.
  1. நாம் இன்று உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை எனப் பேசிக் கொண்டிருப்பது, விபத்து அல்லது வேறு காரணங்களால், மூளைச் சாவு (Brain Dead) அடையும் மனிதர்களின் உறுப்புகளை தேவைப்படும் நோயாளிகளுக்கு மாற்றுவதே.
  2. ஒருவர் மூளைச் சாவு அடைந்தால், அது மூளைச்சாவு என்பதை இரு மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும் – அதில் ஒருவர் மூளை அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டியது சட்டரீதியான தேவை. அப்படிச் சான்றளிக்கப்படாத மனிதரின் உடலில் இருந்து உறுப்புகளை மாற்றுவது சட்டப்படி குற்றம். இதைச் செய்த மருத்துவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். சிறைத்தண்டணையும் உண்டு.
  3. மூளைச் சாவு அடைந்த மனிதரின் வாரிசுகள்/ உறவினர்களிடம், உறுப்பு தானத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லி, இறக்கப்போவபரின் உறுப்புக்களைத் தானம் செய்யக் கோர, பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் பேசுவார்கள். இந்த உறுப்பு தானம் இலவசமாகத் தான் செய்யப்பட வேண்டும் என்பதும் சொல்லப்படும். அது சட்டப்படியான தேவையும் கூட.
  1. அப்படி மூளைச்சாவு அடைந்தவரின் வாரிசுகள், உடல் உறுப்புக்களை இலவசமாகத் தானம் செய்ய ஒப்புக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவுடன், அந்த உடல் உறுப்புக்கள் சமூகத்தின் சொத்தாக மாறுகின்றன. உடல் உறுப்புகளை இன்னாருக்குக் கொடுக்க வேண்டும் என, மூளைச்சாவு அடைந்தவரின் வாரிசுகள் எந்த கண்டிஷன்களும் போட முடியாது.

இலவசமாக உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புக் கொண்ட பின்னரே, அவை சமுகத்தின் சொத்தாக மாறுகின்றன. அவற்றைத் தானம் செய்ய வாரிசுகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில், அவை யாருக்கும் பயன்படாமல் எரிந்தோ / புதைக்கப்பட்டோ வீணாகின்றன. (இதை விவேக் ராஜா புரிந்து கொள்ள வேண்டுகிறேன்)

தமிழகத்தில் சாலை விபத்துகளில் மட்டுமே 8-9 ஆயிரம் பேர் வருடம் மரணிக்கின்றார்கள்.. இவர்களில் சில நூறு பேர்களின் உறுப்புகள் மட்டுமே தானம் செய்யப்படுகின்றன. இலவசமாக. தானம் பெறப்பட்டவரின் உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வாரிசுகளுக்கு உரிமையும், அனுமதியும் இல்லை

இதைத் தாண்டி தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லையா எனில் இல்லை என்று சொல்ல மாட்டேன்..  நடராஜனுக்கும், அருன் ஜெட்லிக்கும், சுஷ்மா ஸ்வ்ராஜுக்கும் எப்படிக் கிட்னிகள் கிடைத்தன என்பதை உண்மையாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.. அவை பற்றியே சந்தேகங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன.

கடிதத்தில் விவேக் ராஜா எழுதியது போல, ஏதோ மண்டபத்தில் ஒரு மருத்துவர் சொன்னதை நான் எழுதிவிடவில்லை.  மருத்துவர் அமலோற்பவநாதன், இந்தியாவின் புகழ்பெற்ற மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின், வாஸ்குலர் சர்ஜரித் துறையின் இயக்குநர் (ஓய்வு). இந்தியாவின் தலைசிறந்த வாஸ்குலர் சர்ஜன்களில் ஒருவர். யாரென்றே தெரியாத எனக்கு, அரை மணிநேரம் ஒதுக்கி, உடல் உறுப்பு தானம் உருவான வரலாற்றையும், முக்கியத்துவத்தையும் சொன்னவர். இன்றைய காந்திகளில், எழுதப்பட்ட அர்விந்த் மற்றும் அபய் பங் பற்றிய கட்டுரைகள், அவரின் பார்வைக்கு அனுப்பப் பட்ட பின்னரே உங்கள் தளத்தில் பிரசுரிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, அவர் ராஜ்ய சபா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை இணைத்திருக்கிறேன்.. அவரைப் பேட்டி காணும் டி.வி.வெங்கடேஷ்வரனும் இந்தியாவின் முக்கிய அறிவியலர்களில் ஒருவர் (Eureka with J Amalorpavanathan – YouTube  )

நன்றி

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

***

முந்தைய கட்டுரைசெல்வேந்திரன் வாசித்தது எப்படி?
அடுத்த கட்டுரைஉடனிருத்தல்