கடந்தகால ஏக்கங்களில் மூழ்கவிரும்புபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் அவர்கள் நாடும் பாடல்கள் கொண்ட படங்களின் காட்சியமைப்பு வருந்தத்தக்க தரத்தில் இருக்கும். ஒளிப்பதிவு அதைவிட மோசமாக. நன்றாக இருந்தவைகூட நல்ல பதிவாக கிடைப்பதில்லை.
இந்தி விதிவிலக்கு. அங்கெ பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோ தயாரிப்புகள். அவர்கள் படங்களை நன்றாகவே பேணியிருக்கிறார்கள். ஆகவே யூடியூபிலேயே நல்ல தெளிவான படங்களுடன் பாடல்கள் கிடைக்கின்றன. அத்துடன் ராஜேஷ் கன்னா உட்பட பெரும்பாலான பழைய இந்தி நடிகர்கள் நடித்து தொல்லைச்செய்வதில்லை. இயல்பாக இருக்கிறார்கள். பெரும்பாலான இந்திப்படங்களின் ஒளிப்பதிவும் தரமானது ஆகவே பாட்டை ரசிக்க முடிகிறது
ரவீந்திர ஜெயின் இசையமைத்த இந்தப்படம் 1978ல் வெளிவந்தது. அதாவது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போது திருவனந்தபுரத்தில் வெளியானது. அன்று இந்த ஒளிப்பதிவுத்தரம், இந்த பசுமையான காட்சியமைப்பு ஒரு கனவுபோலிருந்தது
அக்காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் நடுவே மிகமிகப்புகழ்பெற்றிருந்த சிறு நாவல் எரிக் சேகல் எழுதிய லவ் ஸ்டோரி. இந்தப்படம் அதைத் தழுவி எடுக்கப்பட்டது. பின்னர் அதே பாணியில் பல படங்கள் வந்தன. தமிழிலும் நோயுற்றுச் சாகும் இளங்காதலர்களின் படங்கள் வந்துகொண்டே இருந்தன. கமல் -சரினா வஹாப் நடித்த மதனோத்ஸ்வம் ஒரு நல்ல உதாரணம்.
எரிக் சேகலின் நூலை நான் 1978ல் படித்தேன். அப்போது நான் இலட்சியவாதி. ஆகையால் காதல் எல்லாம் அசட்டுத்தனமாக தோன்றியது. தூக்கிவீசிவிட்டேன். ஆனால் இந்தப்பாட்டு அன்றே மிகவும் கவர்ந்தது.
1978 -80களில் இந்த பாடல் கேரளத்தில் ஓர் அலைபோல ஆக்ரமித்திருந்தது. மெல்லிசைநிகழ்ச்சிகளில் இதன் தொடக்க இசை வந்ததுமே ஒருவகையான நெகிழ்வு பரவிச்செல்வதை கண்டிருக்கிறேன். நீண்ட இடைவேளைக்குப்பின் இப்போது கேட்கும்போதும் அந்த கனவு நீடிக்கிறது
அதோடு எண்பதுகளில் நானும் இதேபோல சட்டையின் பட்டன்களை திறந்துவிட்டு அலைந்தேன் என்பதையும் எண்ணும்போது ஒரு புன்னகை வருகிறது.