இலக்கியத்தில் சண்டைகள்

எஸ்.வையாபுரிப்பிள்ளை

இராமலிங்க வள்ளலார்

அன்புள்ள ஜெ

வணக்கம்

நான் ஒரு இளம்வாசகன்

நேற்று உங்களுடைய அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பெருவலி என்ற கதையை படித்தேன், இன்று உடையார் என்ற நாவலின் நான்காம் பாகத்தின் முதல் அத்தியாத்தினைப் படித்தேன். இரண்டிலும் கைலாசமலை பற்றிய குறிப்பு இருந்தது, அதன் பிரமிப்பை நீங்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரிதான் பதிவு செய்துள்ளீர்கள்..

கேள்வி. நீங்கள் ஏன் யோகிராம் சுரத்குமாரிடம் பாலகுமாரன் குப்பை என்று கூறினீர்? பாலகுமாரன் தன் பெருமையை பவா செல்லதுரையிடம் ஏன் சொல்ல வேண்டும் பிறகு உங்களை ஏன் கெட்டவார்தையால்  திட்ட வேண்டும்?

யோகிராம் சுரத்குமார் பற்றி பவா பேசிய காணொளி பார்ததில் இருந்து மனம் நெருடலாக இருந்தது அதன் காரணமாக இந்த மின்னஞ்சல்.

உங்கள் பதில் வேண்டி காத்திருக்கும் நான்.

விஷ்ணுபிரபு

***

அன்புள்ள விஷ்ணு

நீங்கள் இளம்வாசகர் என்பதனால் இதைச் சொல்கிறேன். இதை முன்னரும் பலமுறை எழுதியிருக்கிறேன்

இலக்கியத்தில் ஓர் ஆணவ அம்சம் எப்போதும் உண்டு. நாம் எழுதுவதைப்பற்றிய நம்பிக்கை நமக்கு இல்லையேல் எழுதமுடியாது. அதை கொஞ்சம் அழுத்தி ஆணவமாக ஆக்கிக்கொள்ளாவிட்டல் அவ்வப்போது உருவாகும் சூழல் பற்றிய நம்பிக்கையிழப்பை, நம்மைப்பற்றிய நமது ஐயங்களை நம்மால் கடக்கவும் இயலாது. ஆகவே எழுத்தாளர்கள் எல்லாருமே கொஞ்சம் ஆணவம் கொண்டவர்களே. அந்த ஆணவம் கம்பன் காளிதாசன் முதல் இன்றுவரை நீடிக்கும் ஓர் அடிப்படை உணர்வு

அதோடு இலக்கியம் என்பது ஒரு சூழலில் உள்ள கருத்தியல்கள் தங்கள் கூர்முனைகளால் சந்தித்துக்கொள்ளும் ஒரு வெளி. எல்லா அரசியல், சமூகவியல், அழகியல் கருத்துநிலைகளும் இலக்கியத்தில் உண்டு. அவையெல்லாமே மிகத்தீவிரமான உணர்வுநிலைகளுடன் இலக்கியத்தில் செயல்படுகின்றன. ஏனென்றால் உணர்வுகள் இல்லையேல் இலக்கியம் இல்லை.

அந்த மோதல் இலக்கியத்தின் எல்லா தளங்களிலும் எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. அந்த மோதல் வழியாகவே இலக்கியம் முன்னகர்கிறது. இலக்கியத்தின் தளத்தில் அது நிகழும்போது பலசமயம் எல்லைகள் மீறப்படுகின்றன. ஏனென்றால் இலக்கியவாதிகள் உணர்ச்சிகரமானவர்கள், தங்கள் தரப்பை ஆழ்ந்து நம்புபவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையையே ஒரு நம்பிக்கையின்பொருட்டு அர்ப்பணிக்கிறார்கள். ஆகவே அதன்பொருட்டு ஆழ்ந்த வேகத்துடன் நிலைகொள்வார்கள். அவர்களின் ஏற்பும் மறுப்பும் ஆவேசமானதாகவே இருக்கும்.

இன்று முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் இருப்பதனால் இந்தப் பூசல்கள் அப்படியே அங்கே வெளிப்படுகின்றன. முன்பு சிற்றிதழ்களுக்குள் வெளியாகிக்கொண்டிருந்த பூசல்கள் இணையம் வழியாக எல்லார் பார்வைக்கும் வருகின்றன. மேலும் இன்று அச்சிதழ்களில் ஒருசாரார் இலக்கியவாதிகளின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் அவர்களின் பூசல்களை மட்டுமே பொதுவெளியில் வைக்கிறார்கள்.

இலக்கியச்சூழலுக்கு அறிமுகமாகும் புதியவர்களுக்கு எப்போதும் இது ஒரு திகைப்பை அளிக்கிறது. என்ன இது என்று அவர்கள் குழம்புகிறார்கள். இலக்கியம் நற்பண்புகளை வளர்க்கும், இலக்கியவாதிகள் பண்பானவர்களாக இருப்பார்கள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தது அடிபடுகிறது. அது அவர்களை இலக்கியம் மீதே அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது

இலக்கிய அறிமுகம் போதிய அளவுக்கு இல்லாதவர்கள், முகநூல் வழியாக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும்போது முதலில் இந்தப்பூசல்களைத்தான் காணநேர்கிறது. அவர்கள் இலக்கியவாதிகளை வசைபாடவோ குறைகூறவோ ஆலோசனை சொல்லவோ ஆரம்பிக்கிறார்கள்

ஆரம்பகட்ட வாசகர்கள் இலக்கியவாதிகளிடம் அவர்கள் எப்படி ‘பண்பட்ட மனிதர்களாக’ இருக்கவேண்டும் என்று சொல்வதைக் காணலாம். ‘எழுதுறதெல்லாம் அப்றம், முதல்ல நல்ல மனுஷனா இருங்க’ என்று எழுத்தாளர்களிடம் பாமரர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப்பற்றி நான் ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன்

இலக்கியச் சூழலிலேயே இலக்கியத்தின் வேகத்தையும் அதன் அடிப்படையான விசைகளையும் தெரிந்துகொள்ளாத மொண்ணைகள் உண்டு. அவர்கள் எல்லா பூசல்களையும் ஒன்றென்றே கருதுவார்கள். பூசல்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொள்வார்கள், ஆனால் பூசல்களை மட்டுமே கவனிப்பார்கள். எல்லா கருத்துப்பூசல்களையும் வெறும் ’சண்டைகளாக’ சித்தரிப்பார்கள். அவர்களுக்கு அவ்வளவுதான் பிடிகிடைக்கும். அதை வாசிக்கும் இளம்வாசகனும் அவ்வண்ணமே எண்ணத்தலைப்படுவான்.

இன்னொருபக்கம் எழுத்தாளர்கள் மேல் அரசியல்நிலைபாடு கொண்டவர்கள் சீற்றமும் கசப்பும் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் எந்த நல்ல எழுத்தாளனும் ஏதேனும் ஓர் அரசியல்தரப்பின் குரலாக ஒலிக்க மாட்டான். ஆகவே இலக்கியவாதிகளை அரசியல்வாதிகள் பழிக்கிறார்கள். ஒன்று, அவர்களை தங்கள் எதிர்த்தரப்புடன் சேர்த்து வசைபாடுவார்கள். அல்லது, ஒட்டுமொத்தமாக இலக்கியவாதிகளே அயோக்கியர்கள், பண்படாதவர்கள் என்பார்கள்

புதிய இலக்கியவாசகர்கள் இலக்கியப்பூசல்களைக் கண்டு அடையும் பதற்றத்தை இந்த நாலாந்தர அரசியல்வாதிகள் ஊதி வளர்த்து இலக்கியத்தின்மேலேயே கசப்பாக மாற்றிவிடுகிறார்கள். இது முகநூல்சூழலில் அதிகமாக உள்ளது.  ‘அப்படி இலக்கியவாதிகளை தவிர்த்துவிட்டு நீங்கள் ஏற்றுக்கொள்வது யாரை? அல்லும்பகலும் எதிரிகளை உருவகித்து கசப்பையும் காழ்ப்பையும் கக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையா? தங்கள் தரப்பின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தும் அந்தக் கயவர்களையா ?’ என்று நான் ஒருமுறை ஒருவரிடம் கேட்டேன்

இலக்கியவாதியின் தீவிரமான பற்று, தீவிரமான உணர்ச்சிநிலைகள் அவனை ஒரு ‘சமநிலையுள்ள’ மனிதனாக , ‘ஜெண்டில்மேனாக’ இல்லாமலாக்குகின்றன. ஆனால் சமநிலையும் பண்பும் உடைய ஜெண்டில்மேன்கள் சொல்லமுடியாதவற்றை அவனே சொல்கிறான். அவனே அவர்கள் காணமுடியாதவற்றைக் காண்கிறான். அவனுடைய இடம் அதுவே. அவனை நாம் கவனிப்பது அந்த தனிப்பார்வைக்காகவே. அவன் ஜெண்டில்மேனாக இருப்பதனால் அல்ல, அவன் எழுத்தாளனாக கலைஞனாக இருப்பதனால்தான் அவனை நாம் வாசிக்கிறோம்.

உலகமெங்கும் இந்த கருத்துப்பூசல் இலக்கியவாதிகள் நடுவே என்றும் இருந்ததுண்டு. நாம் அறிந்த புகழ்பெற்ற எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும் பூசல் சார்ந்த எழுத்துக்கள் உண்டு. பதிவாகாமல் போன பூசல்கள் பலமடங்கு.

இதேயளவுக்குக் கருத்துப்பூசல் தத்துவவாதிகள் நடுவிலும் உண்டு. ஹெகல், ஹோப்பனோவர், மார்க்ஸ், நீட்சே போன்ற அத்தனை தத்துவஞானிகளின் எழுத்திலும் கணிசமான பகுதி இத்தகைய கருத்துப்பூசல்களே. பலசமயம் அவை பொதுநாகரீக எல்லையை கடக்கின்றன, தனிப்பட்ட தாக்குதல்களாகவும் ஆகின்றன.

நம் மரபிலும் கவிஞர்கள் நடுவே நிகழ்ந்த பூசல்களை கதைகளாக அறிகிறோம். சங்ககாலத்தில் இன்னொரு மோசமான கவிஞனுக்கு தந்த அதே கொடையை தனக்கும் தந்தமைக்காக சினம் கொண்டு கவிஞர்கள் அரசனின் கொடையை மறுத்திருக்கிறார்கள். அதை  ‘பரிசில்மறுத்தல்’ என்று ஒரு தனித்துறையாகவே பாடிவைத்திருக்கிறார்கள். கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் நடுவே நிகழ்ந்தபூசல் கம்பனின் சாவுவரை சென்றது என்கின்றன கதைகள். எல்லாரும் கவிஞரே, எல்லாம் எழுத்தே என்ற நிலை தமிழ் வரலாற்றில் எப்போதுமே இருந்ததில்லை.

தத்துவவரலாற்றிலும் இதே வகையான பூசல்கள் உண்டு, இன்னமும் கூர்மையாக. சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் நாம் மதத்தரப்புகள் நடுவே மிகக்கடுமையான மோதல்கள் நிகழ்ந்ததை காண்கிறோம். சைவ வைணவ தத்துவங்கள் நடுவே பூசல்கள் நிகழ்ந்துள்ளன. ராமானுஜர் போன்ற தத்துவஞானிகளுக்கு எதிராக கருத்துப்பூசல்கள் நிகழ்ந்துள்ளன. வள்ளலார் வரை அது தொடர்கிறது

ஆகவே, மிக எளிமையாக இலக்கியமும் தத்துவமும் ‘பொதுப்பண்பாட்டுடன்’ நிகழலாமே, பண்பாடுதான் முக்கியம் போன்ற கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவேண்டாம். கருத்துச்செயல்பாட்டில் கருத்தே முக்கியம். பண்பாடு தேவைதான், ஆனால் எப்போதும் அது அறுதியான ஆணையாக இருக்குமென சொல்லமுடியாது.

எங்கே பண்பாடுமீறுதல் எல்லைகடக்கிறது? ஒன்று தனிப்பட்ட தாக்குதல்களாக ஆகிவிடும்போது. நாகரீகச் சொற்களின் எல்லைகள் கடக்கப்பட்டு மொட்டைவசைகளாக ஆகும்போது. அவதூறுகள் சொல்லப்படும்போது. அவற்றை தவிர்க்கலாம்

அத்துடன் இத்தகைய பூசல்கள் நிகழ்வது உண்மையான இலக்கியவாதிகள், தத்துவவாதிகள் நடுவே. அதைக்கண்டு ஊடேபுகுந்து வெற்றுவேட்டுகளும் கூச்சல் போடுவதுண்டு. அவர்களின் கூச்சலில் சிந்தனையின் சாராம்சம் இருக்காது. விலங்கின் ஊளைபோல வெறும் மொட்டையான ஆவேசம் மட்டுமே இருக்கும்.

இலக்கியவாதியின், தத்துவவாதியின் பூசலில் சாராம்சமான கருத்துக்களும், நிலைபாடுகளும் இருக்கும். அந்தப்பூசல் வசையாக ஆனாலும்கூட வாசகன் அதிலிருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கும். இலக்கியப்பூசல்கள், தத்துவப்பூசல்கள் உலகம் முழுக்க ஏன் நூல்களாக தொகுக்கப்படுகின்றன என்றால் அவற்றில்தான் அடிப்படையான கருத்துமோதல்கள் நிகழ்ந்து புதியசிந்தனைகள் உருவாகியிருக்கும் என்பதனால்தான்.

தமிழில் நிகழ்ந்த புகழ்பெற்ற இலக்கியப்பூசல்களை வாசிக்க தொடங்கியபின் தெரிந்துகொள்ளுங்கள். பாரதி இலக்கணத்தை மீறி எழுதுகிறார் என்றபூசல் நிகழ்ந்தது. பாரதிக்கும் அயோத்திதாசருக்கும் தலித் அ்டையாளம் சார்ந்த பூசல் [பெயர் சொல்லியும் சொல்லாமலும்] நிகழ்ந்தது.

கல்கி எழுதுவது தழுவல் என்ற கோணத்தில் புதுமைப்பித்தன் சொன்ன விமர்சனத்தை ஒட்டி பூசல்கள் நிகழ்ந்தன. மு.அருணாச்சலம் அவர்களின் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியவாதிகள் பலர் விடுபட்டிருக்கிறார்கள் என்பதனால் ஒரு பூசல் நிகழ்ந்தது. புதுமைப்பித்தன் ‘மூனா அருணாச்சலமே முச்சந்தி கும்மிருட்டில் பேனாக்குடைபிடித்து பேயாட்டம் போடுகிறாய்’ என்று வசைக்கவிதை எழுதினார்.

ராஜாஜி புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் போன்ற கதைகள் புராணத்தை மாற்றுகின்றன என்று விமர்சித்து அதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று எழுத புதுமைப்பித்தன் ‘நாமக்கல் கவிஞர் நல்லகவி தான் என்று சேமக்கலத் தலையன் சொல்லிவிட்டான். ஆமக்கா அப்பளக்காரி அம்முலுவின் அத்தைமகன் அப்படித்தான் சொன்னான் அன்று’ என்று வசை எழுதினார்.

டி.கெ.சிதம்பரநாத முதலியார் கம்பராமாயணத்தில் மிகைச்செய்யுட்கள் என சிலவற்றை ஒதுக்கிவைத்தார். அதையொட்டி உக்கிரமான விவாதங்கள் நிகழ்ந்தன. எஸ்.வையாபுரிப்பிள்ளை அகராதியில் சம்ஸ்கிருதமூலம் உள்ள சொற்களை சேர்க்கிறார் என்று சொல்லி தேவநேயப்பாவாணர் கடும் பூசலை உருவாக்கினார்.

தமிழில் புதுக்கவிதை உருவானபோது அதை மரபுக்கவிஞர்கள் எதிர்த்து மிகக்கடுமையாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் நவீனஇலக்கிய எழுத்துக்கு க.நா.சு.போட்ட பட்டியல்களை எதிர்த்து பூசல்கள் பல ஆண்டுகள் நடைபெற்றன. க.நா.சு ஜானகிராமனின் அம்மாவந்தாள் நாவலுக்கு எதிராக கடுமையாக எழுதினார். ஜெயகாந்தனின் படைப்புக்களை நிராகரித்தார்.

அகிலனுக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக்கடுமையாக விமர்சனம் புரிந்து எழுதினார். அகிலனின் எழுத்து ‘ரெக்காட் டான்ஸ்காரி தொடையை காட்டும்போது அதில் சங்கராச்சாரியின் படம் ஒட்டப்பட்டிருப்பதுபோல’ வெறும் கேளிக்கைக்குமேல் சுதந்திரப்போர் மாதிரியான விழுமியங்கள் ஏற்றப்பட்டு எழுதப்பட்டது என்று சொன்னார்.

க.கைலாசபதி  போன்ற மார்க்ஸியவிமர்சகர்களுக்கும் வெங்கட் சாமிநாதன் போன்ற அழகியல்விமர்சகர்களுக்கும் இடையே பெரும் பூசல் பல ஆண்டுகள் நிகழ்ந்தது. வானம்பாடி கவிஞர்கள் என்னும் சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதிய அணியை மற்றவர்கள் அழகியல் நோக்கில் நிராகரித்து எழுதிய பல விவாதங்கள் நடைபெற்றன. மார்க்சியர்களை ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்று வெங்கட் சாமிநாதன் நிராகரித்து எழுதினார்.

வணிக இதழ்களில் எழுதுவதற்கு எதிராக வெங்கட் சாமிநாதன் எழுதியதற்கு அசோகமித்திரன் ‘அழவேண்டாம், வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும்’ என்று பதில் அளிக்க ஒரு பூசல் நடைபெற்றது.

இப்படி ஐம்பது முக்கியமான இலக்கியப்பூசல்களை பட்டியலிடலாம். இவற்றின்வழியாகவே நம் சூழலின் இலக்கியக் கருத்துக்கள் தெளிவடைந்து கூர்கொண்டு வந்திருக்கின்றன

நான் எழுதவந்தபோதே நாவல் வடிவம் குறித்துச் சொன்ன கருத்துக்களால் விவாதம் உருவாகியது. அன்றிலிருந்து வெவ்வேறு விவாதங்கள் என்னைச் சூழ்ந்து நிகழ்கின்றன. நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன், விமர்சிப்பதும் உண்டு

இனி பாலகுமாரன் விஷயம். அதில் நான் பாலகுமாரனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதும் சொல்லவில்லை. அவருடைய ஆளுமை பற்றி ஏதும் சொல்லவில்லை. அவர் எழுதியவற்றைப் பற்றியே பேசுகிறேன். அன்று வணிக எழுத்து – இலக்கியம் என்னும் பிரிவினை மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஏனென்றால் அன்று எழுத்து என மக்கள் அறிந்திருந்ததெல்லாம் வணிக எழுத்துபற்றி மட்டுமே. இலக்கியம் பற்றி எதுவும் எவருக்கும் தெரியாது.

அன்று இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழில் அன்று இலக்கியம் வெளிவந்துகொண்டிருந்தது. கல்லூரிகள், இதழ்கள் எங்கும் இலக்கியம் என்றால் வணிக எழுத்தையே அனைவரும் முன்வைத்தனர். ஞானபீடமே ஒரு வணிக எழுத்துக்குத்தான் அளிக்கப்பட்டது. இலக்கியம் தன் இடத்துக்காக முழுமூச்சாக போராடிக்கொண்டிருந்தது.

ஆகவே எல்லா இடங்களிலும் வணிக இலக்கியத்த்தை நிராகரித்து இலக்கியத்தின் அழகியலை முன்வைத்தாகவேண்டியிருந்தது. அதை க.நா.சு தொடங்கிவைத்தார். வெங்கட் சாமிநாதனும் சுந்தர ராமசாமியும் முன்னெடுத்தனர். நான் அந்த மரபில் வந்தவன். அன்றுமின்றும் இந்த வேறுபாட்டினை தமிழ்ச்சூழலில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இந்த தளத்திலேயே ஐம்பது அறுபது கட்டுரைகளை அதைச்சார்ந்து எழுதியிருக்கிறேன்.

நீங்கள் இன்று இலக்கியம் என ஒன்றை வாசிக்கிறீர்கள் என்றால், இன்னின்ன எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் என அறிந்திருக்கிறீர்கள் என்றால் அது க.நா.சு தொடங்கி மூன்று தலைமுறைகளாக சலிக்காமல் முழுத்தீவிரத்துடன் செய்யப்பட்ட கருத்துச் செயல்பாட்டால்தான்.

நான் அன்று யோகி ராம்சுரத் குமாரிடம் பேசியது சுந்தர ராமசாமியிடமிருந்து பெற்றுக்கொண்ட குரலை. அன்று, வணிக எழுத்தின்மேல் வெறுப்பு இருந்தது. அதை அழிக்கவேண்டுமென்ற வெறி இருந்தது. ஆகவே யோகியிடம் வணிகநோக்கில் பாலியலை எழுதுபவரை நீங்கள் உங்கள் மாணவர் என்று சொல்லலாமா என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னது இன்னொரு பெருநிலையில் நின்றுகொண்டு ஒரு பதிலை. ’அவர் என் தந்தையின் மைந்தர், என் தந்தை அவருக்கு அருள்வார்’

நான் கேட்டது நான் நின்றிருந்த கருத்தியலில் இருந்து ஒரு விமர்சனக் கருத்தை. யோகி சொன்னது கருத்துநிலைபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரு மெய்யியல் நோக்கில் அடைந்த நிலைபாட்டை. அந்த முரண்பாட்டை புரிந்துகொண்டால் அந்த வினாவும் விடையும் முக்கியமானவை என்று உணர்வீர்கள்.

பாலகுமாரன் அந்தக்கேள்வியை அறிந்ததும் சீற்றம் அடைந்தது இயல்பே. அவருடைய இலக்கியவாழ்க்கையை முழுமையாக நிராகரிப்பது அந்த கேள்வி. ஆனால் அதில் உண்மையும் இருந்தது. தமிழ்ச்சூழலில் ஒருவர் வணிகநட்சத்திரம் ஆகவேண்டுமா இலக்கியம் படைக்கவேண்டுமா என்ற இரு வாய்ப்புகளில் ஒன்றையே தேர்வுசெய்ய முடியும். ஏனென்றால் இங்குள்ள வாசக லட்சங்கள் மிகமிகச் சாதாரணமான ரசனையும் அறிவுத்திறனும் கொண்டவர்கள். பாலகுமாரன் முதல் வழியை தேர்வுசெய்தார். இரண்டாவது அவருக்கு அமையாது. பின்னாளில் அவரே அதை கொஞ்சம் உணரவும் செய்தார்.

ஜெ
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்
எழுத்தாளரின் பிம்பங்கள்
வசைபட வாழ்தல்
மலேசியா- ஓர் இலக்கியப்பூசல்
இலக்கியமதிப்பீடுகளின் எல்லைகள்
சுராவும் சுஜாதாவும்
சிங்கைப்பூசல்கள் -ஒரு விளக்கம்
பெண்ணிய வசை
நகுலனும் சில்லறைப்பூசல்களும்
முந்தைய கட்டுரைவண்ணக் கனவு-கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசிதம்பரம்