மதுரை ஆதீனம்

சென்ற ஜனவரி 24 அன்று கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் சார்பில் நிகழ்ந்த சமய மாநாட்டில் நான் மதுரை ஆதீனம் தலைமையில் பேச நேர்ந்தது. அவரை நான் நேரில் காண்பது இது இரண்டாம் முறை.

இருபத்தைந்து வருடம் முன்பு நாகர்கோயில் நாகராஜா கோயில் திடலில் ஒரு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசினார். நான் மீசை முளைத்த சிறுவனாக கூட்டத்தில் நின்று அவரது பேச்சைக்கேட்டேன். அப்போது அவருக்கு முப்பது வயது இருக்கும். மிக இளம் வயதிலேயே அவர் மரபுப்புகழ்பெற்ற மதுரை  ஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனகர்த்தராக ஆகியிருந்தார்.

அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடுகளை தமிழகமெங்கும் நிகழ்த்திவந்தது. மீனாட்சிபுரம் இஸ்லாமிய மதமாற்றம் இந்துக்களில் உருவாக்கிய அதிர்ச்சியை ஒட்டி அதற்கு பெருவாரியான ஆதரவு இருந்தது. மடாதிபதிகளை எல்லாம் ஒரே குடையின்கீழ் திரட்ட அவர்கள் முயன்றாலும்கூட ஒத்துக்கொண்டவர் மதுரை ஆதீனம் மட்டுமே. ஆகவே அவர் அந்நிகழ்ச்சிகளில் நட்சத்திரமாக முன்னிறுத்தப்பட்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே அந்த உறவு கசந்தது. இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடுகளுக்கு வந்த பெருங்கூட்டம் தனக்கான கூட்டம் என மதுரை ஆதீனம் எடுத்துக்கொண்டார். ஆகவே அவரே ஒரு கட்சி ஆரம்பித்தார். இந்து மக்கள் கட்சி என்று நினைக்கிறேன். அதன் கொடியை அறிமுகம் செய்ய அவர் வந்தார் என்று நினைவு. ஆனால் இம்முறை கூட்டமே இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கவந்த சிலர் மட்டுமே

மதுரை ஆதீனம் மூன்றரை மணிநேரம் பேசினர். ஆதீனங்கள் என்றால் ஏதோ பிச்சைக்காரர்கள், பண்டாரங்கள் என்று நினைக்கிறார்கள் அப்படியல்ல. நாங்கள் தங்கத்தட்டில்தான் சாப்பிடவேண்டும் சப்ரமஞ்சத்தில்தான் தூங்கவேண்டும் பல்லக்கிலேதான் போகவேண்டும் என்றார். தன் கழுத்தில் போடப்பட்டிருக்கும் நகையை எடுத்துக்காட்டி அதன் பெயரைச்சொல்லி அது எத்தனை பவுன் என்று விளக்கினார். ஆதீனங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மகாராஜாக்கள் என்றார்.

பிரிட்டிஷ்காரர்கள் மதுரை ஆதீனத்துக்கு ராவ்பகதூர் பட்டம் கொடுத்தார்கள். நீதிமன்றத்துக்கு ஆதீனம் செல்லத்தேவையில்லை, நீதிபதி ஏதாவது கேட்கவேண்டுமென்றால் ஆதீனத்துக்கு வந்து அவர் முன் தரையிலே அமர்ந்து கேட்டு தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் உலகிலேயே பழமையான மதம் சைவ மதம். பல லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது அது. உலகிலேயே மூத்த கடவுள் சிவபெருமான். உலகிலேயே பழமையான சைவ மடம் ஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவிய மதுரை ஆதீனமடம்

அப்படிப்பட்ட மகாராஜா இப்போது இறங்கி வந்திருக்கிறோம். ஏனென்றால் மக்கள் சேவை என்றவர் ஒரு மரத்தாலான சிவலிங்கத்தை எடுத்து அதன் பாகங்களைக் காட்டி இது இன்னது என்று விளக்கினார். தனித்தனியாக பிரித்து மாட்டிக் காட்டினார். அதன் பின்னர் திருநீற்றை எடுத்துப்பூசிக்கொண்டு திருநீறு பற்றி ஒரு பாடலை அசுரவேகத்தில் பாடினார்.

அதன்பின்னர் இஸ்லாமியர்களின் அரபுமொழி துதி ஒன்றை உரக்க முழங்கினார். அதன் பின் ஏசு கிறிஸ்து ஏலா ஏலா என்று கூவியதை அவரும் பயங்கரமாகக் கூவிக்காட்டினார் . ஆதீனத்துக்கு எல்லா மதமும் தெரியும். ஆதீனம் முழங்குவதுபோல இஸ்லாமிய மந்திரத்தை முல்லாக்கள் முழங்கமுடியாது என்றார். அதன்பின் எல்லாரையும் கைதட்டச்சொல்லி கேட்டுக்கொண்டார்.

அதன்பின் நிறைய உதிரிப்பாடல்கள். நடுநடுவே பெருமிதம் ததும்ப சிரிப்பு. அவரது பேச்சின் சிறப்பு என்னவென்றால் ஒரு சொற்றொடருக்கும் இன்னொரு சொற்றொடருக்கும் இடையே தொடர்பே இருக்காது. சித்தம் சிவன் போக்கு. அப்படியே மூன்றரை மணிநேரம்.

அதன் பின்னர் மதுரை ஆதீனம் கட்சியைக் கலைத்துவிட்டு நெடுமாறனுடன் சேர்ந்துகொண்டார். அதன் பின்னர் நடராஜனுடன் சேர்ந்து செயல்பட்டுவருகிறார். அவ்வப்போது அவரைப்பற்றிய செய்திகளைப் படிப்பேன்.

கால்நூற்றாண்டு! நான் எங்கெங்கோ போய் ,என்னென்னவோ எழுதி, ஏதேதோ ஆகிவிட்டேன். நாடும் எப்படி எப்படியோ மாறிவிட்டது. ஆனால் இம்முறை மதுரை ஆதீனம் பேசியதும் அதே பேச்சுதான். அச்சு அப்படியே. அதே சொற்றொடர்கள். சிரிப்புகூட அப்படியேதான். ஏன், அதே மரச் சிவலிங்கம்! அதே விபூதிச்சம்புடம்!

மறுநாள் நாளிதழ்களில் அவர் பெயரும் பேச்சும்தான் வந்திருந்தது. நாளிதழாளர்களுக்குத் தெரிந்த ஒரே பிரபலம் அவர்தான். எப்படி பிரபலமாகாதிருப்பார்!

முந்தைய கட்டுரைகும்பகோணம்
அடுத்த கட்டுரைஅரதி : கடிதங்கள்