உலகுக்குப் புறம்காட்டல்

அன்புள்ள ஜெ

நான் தங்களின் வாசகன் .உங்கள் மூலம் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் அறிமுகம் செய்து கொண்டவன்.வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே எழுத வேண்டும் என்ற அசையும் வந்து விட்டது வாசிக்க ஆரபித்தது 18 வயதில்.வெண்முரசு தான் வாசல்.

நான் வேத பாடசாலையில் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்றேன் இப்பொழுது சென்னையில் புரோகிதம் செய்து வருகிறேன்,இதில் சிக்கல் என்னவெனில் நான் முழுமூச்சாக இதில் இறங்க வேண்டிய சூழல் வந்துள்ளது ஆனால் என் மனம் இதுவல்ல நான் என்றே சொல்கிறது

நான் பள்ளிப்பாடம் படிக்கவில்லை இப்பொழுது தான் 10 வது எழுதப்போகிறேன் வேறு துறையை அடைந்து மேலேறுவதற்குள் காலம் கடந்து விடும் என்று நினைக்கிறேன்.ஜாதிக்குள் சிக்கி வாழ்க்கை அதன் போக்கிலே சென்று விடுமோ என்று பயமாக இருக்கிறது.இதற்குள் இருந்து செயல் படமுடியுமா என்று அச்சமாகவே உள்ளது. தன்மீட்சியும் வாசித்தேன் இருப்பினும் தங்களின் சொற்கள் என்னை வழிநடத்தும் என்று நம்புகிறேன்

அன்புடன்

எம்

அன்புள்ள எம்

பதினைந்தாண்டுகளுக்கு முன் மௌல்விக்கு படித்த என் நண்பர் இதே சொற்களை என்னிடம் சொல்லியதை நினைவுறுகிறேன். அவர் இன்று அச்சகத்தொழில் செய்து வாழ்கிறார். என் நண்பர் சிறில் அலெக்ஸ் பாதிரியாருக்கான படிப்பை பாதியில் விட்டு கணிப்பொறிக்கல்விக்கு வந்தவர்.

இந்தச் சிக்கல் கொஞ்சம் அரிதானதுதான். நம் கல்வியில் நவீனக்கல்வி எல்லாத்துறைக்கும் பொருந்தும். ஒன்றை பயின்று பிடிக்காமல் இன்னொன்றுக்குச் செல்வது எளிதாகவே உள்ளது. ஆனால் மதக்கல்வி போன்ற தனித்த கல்விகளுக்குப் பின் நாம் திரும்பிச் செல்ல முடியாது. அது ஒருவழிப்பாதை. அல்லது நல்ல செல்வநிலை இருக்கவேண்டும். ஆனால் நல்ல செல்வநிலை உள்ளவர்கள் மதக்கல்விக்குச் செல்வதில்லை.

இப்பிரச்சினையை உணர்ச்சிகரமாக அல்லாமல் யதார்த்தமாகவே கையாளுங்கள். உங்கள் இலக்கு என்ன, இலக்கியவாதி ஆவது அல்லவா? அவ்வாறென்றால் நீங்கள் அதை முதன்மையாக கருதி பிறவற்றை அதற்கேற்ப ஒழுங்குசெய்துகொள்ளுங்கள்.

அதாவது நான் என்ன செய்தேனோ அதை. என் தொழிலை, புறவாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக, சிக்கலற்றதாக, ஆக்கிக்கொண்டேன். அதில் எந்த பெரிய கனவுகளையும் இலக்குகளையும் வைத்துக்கொள்ளவில்லை. அங்கே பொதுவாக மேலதிகாரிகளால் கவனிக்கப்படாத, எளிமையான ஒருவனாக என்னை வைத்துக்கொண்டேன். என்னை பிறர் அறியத்தொடங்கியதெல்லாம் நான் புகழ்பெற்றபின்னர்தான்.

அந்தத் தளத்தில் உங்களை ஒரு வெறும்சாட்சியாக, ஈடுபடாதவனாக, ஊடாடாதவனாக வைத்திருப்பதே உங்கள் அகவுலகைப் பேணிக்கொள்ளும் வழி. அகவுலகு சார்ந்தது எழுத்து. அங்கே வாசியுங்கள், எழுதுங்கள், கற்பனைசெய்யுங்கள். அந்த உலகை உங்கள் புறவுலகுடன், தொழிலுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. அங்கே எந்தவகையிலும் உங்களை காட்டிக்கொள்ளவேண்டியதில்லை

உங்களுக்கான தனியடையாளம் உருவாவதுவரை புனைபெயரில் எழுதலாம். நீங்கள் உங்களை தைரியமாக முன்வைக்கும் காலம் வரும், அந்த தருணம் உங்களுக்கே தெரியும். அதுவரை புனைபெயரில் எழுதினால் அந்த சுதந்திரம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். இல்லையேல் உங்கள் தொழிற்சூழலின் கூர்நோக்குகள், விமர்சனங்கள், ஏளனங்கள் உங்களை தொந்தரவு செய்யும். எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அவை உங்களை நிலைகுலையச் செய்யும்.

எழுத்துதான் உங்கள் வாழ்வென்றால், உங்கள் நிறைவு அங்குதான் என்றால், அதன்பொருட்டு நீங்கள் புறச்சமரசங்களைச் செய்துகொள்ளலாம். அது பிழை அல்ல. ஓர் அரசு வேலையில் இருப்பதேகூட அப்படி ஒரு சமரசம்தான். அந்த தொழிலுக்கு தேவையான தோற்றம், பேச்சு எல்லாவற்றையும் கொள்ளலாம். எழுத்தாளர்கள் என்னென்னவோ தோற்றங்களில் இருக்கிறார்கள். 2008 வரை நானே அரசூழியர்களுக்கு உரிய தோற்றத்துடன் தான் இருந்தேன்

எழுத்து இலட்சியவாதச் செயல்பாடு. அதன் சாராம்சமாக ஒரு அறவுணர்வும் அதிலிருந்து எழும் ஒவ்வாமையும், சீற்றமும் உள்ளது. ஆனால் எவராயினும் எழுதவேண்டுமென்றால் கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளவேண்டும். கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாதவர் எதையும் எழுதமுடியாது – சமரசம் செய்துகொள்ளாதவர் என்ற அடையாளத்துடன் வீணாகி அழியவேண்டியதுதான்.

ஒன்று யோசித்துப்பாருங்கள். ஊழல் மிக்க ஓர் அரசுநிறுவனத்தில் ஊழியராகச் செயல்படுவது எழுத்தாளனை எந்த அளவுக்கு அறச்சரிவுக்கு ஆளாக்கும் என. ஒரு வணிகநிறுவனத்தில் அதன் எல்லா மோசடிகளுக்கும் உடந்தையென இருப்பது எப்படி அவனை அகச்சிதைவுக்கு உள்ளாக்கும் என. அதை அவன் செய்யவில்லை என்றால் உயிர்வாழமுடியாது. எழுதவும் முடியாது. எழுதும்பொருட்டு வாழ்பவர் வாழும்பொருட்டு அதைச் செய்யலாம், பிழையில்லை. அதைச்செய்யாதவர் எவருமில்லை

அத்துடன் ஒப்பிட்டால் நீங்கள் சொல்லும் துறை ஒன்றும் மோசமில்லை. அதிலிருப்பது சாதிசார்ந்த ஒரு பழமைநிலை. அந்த மனநிலையை நான் கூர்ந்து பார்த்திருக்கிறேன். பிராமணர்களில் உயர்பொருளியல் நிலையில் இருப்பவர்களுக்கு சாதியால் அடையாளம் தேவையில்லை. ஆகவே அவர்களுக்கு தாராளவாதம் போதுமானதாக உள்ளது. அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் பொருளியல் வல்லமை இல்லாதவர்கள். அவர்களுக்கு பெருமிதமாக உள்ளது சாதி மட்டுமே. ஆகவே அவர்கள் கொஞ்சம் மிகையான மேட்டிமைப்பாவனை கொண்டவர்கள்.

அத்துடன் அவர்கள் ஒரு சிறு தொழிற்குழு என்பதனால், அதற்கான புறஅடையாளம் உடையவர்கள் என்பதனால், எங்கும் அப்படியே தோற்றமளிப்பார்கள் என்பதனால், தங்களை அது சார்ந்து தொகுத்துக்கொள்ளும் பொருட்டு அந்த சாதியப்பாவனைகளை கறாராக கடைப்பிடிக்கிறார்கள். இது எல்லா மதப்பூசகர்களிடையேயும் உள்ள மனநிலை

அங்கே நீங்கள் சங்கடமாக உணரவாய்ப்புள்ளது அதுதான். ஒரு நவீன உள்ளம், ஒர் இலக்கியவாதி அத்தகைய தோற்றத்தை, அந்தக் குறுங்குழு வாழ்க்கையை ஒவ்வாமையுடன் மட்டுமே பார்க்கமுடியும். அதை அவனால் உவந்து சூடிக்கொள்ள முடியாது.

அத்தகைய ஒவ்வாச்சூழலிலேயே பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லவந்தேன். ’நான் உங்களில் ஒருவன் அல்ல’ என்றுதான் எழுத்தாளன் அந்த வகையான சூழலை நோக்கிச் சொல்லிக்கொண்டிருக்கிறான். அது ஒரு ஆப்தமந்திரம். அதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் வெளியே அவர்களிடம் முடிந்தவரை வேறுபாடில்லாமல் இசைந்திருங்கள். ஒத்துப்போக முயலுங்கள். இது முட்டைப்பருவம், சிறகுகள் முளைத்தால் முட்டையோடு தானாகவே உடையும்.

நீங்கள் அப்படி அவர்களிடம் ஒத்துப்போவதனால் அவர்களில் ஒருவனாக ஆவதில்லை. உலகம் அப்படி நினைக்கலாம், அப்படி அல்ல என்று நீங்கள் அறிந்திருந்தால்போதும். அது உங்களை கட்டுப்படுத்தாது. அது உங்கள் அடையாளமாக ஆகாது.

ஆனால் இலக்கியம் போலவே அந்த தளத்திலும் உங்களுக்கு இலட்சியங்களும் செயல்வேகமும் இருந்து தீவிரமாகச் செயல்படுவீர்கள் என்றால் காலப்போக்கில் நீங்கள் அந்த அடையாளத்தில் சிறைப்படுவீர்கள். அது எழுத்தாளனாக உங்களுக்கு வீழ்ச்சியே. அதைப்பற்றிய எச்சரிக்கை போதும்

இன்றையச் சூழலில் இந்து புரோகிதர் வேலை என்பது பெரிய அளவில் வருமானம் வராதது, ஆனால் வருமானம் அற்றதும் அல்ல. அதில் ஒரு குறைந்த பட்ச வாழ்க்கை உறுதிப்பாடு உள்ளது. அது நல்லதுதான். அந்தவகையான உறுதிப்பாடுகூட இல்லாதவர்களே தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள். உலகியல் சார்ந்த உறுதிப்பாடின்மை உருவாக்கும் அகப்பதற்றம் வாழ்க்கையை கொந்தளிப்பானதாக ஆக்கிவிடும். அது எந்த கற்பனையும் எழாமலாக்கும். எந்த சிந்தனையையும் நாட்கணக்கில் கொண்டுசெல்ல முடியாமலாக்கும்

ஆகவே எக்காரணம்கொண்டும் இன்னொரு உறுதிப்பாடு அடையாமல் இதை விட்டுவிடவேண்டியதில்லை. இது ஒரு பிடிமானமாக இருந்துகொண்டே இருக்கட்டும். இது ஒரு நல்வாய்ப்பென்றே உணர்க

ஒரு விஷயம்கூட. இந்த தொழிலில் இருந்துகொண்டு இப்படி எண்ணுவது பிழையா என்று எப்போதாவது தோன்றலாம். அப்படி சொல்லும் ஆசாரவாதிகள் இருப்பார்கள். ஆனால் என் பார்வையில் எழுத்து என்பது ஞானம். ஞானம் எதைவிடவும் மேலானது. எல்லா தளத்திலிருந்தும் ஞானம் நோக்கி நகர்வதே மனிதன் இயல்பாக செய்யவேண்டியது. எங்கிருந்து ஞானம் நோக்கிச் சென்றாலும் அது உயர்ந்த செயல்பாடுதான்

தொடர்பில் இருங்கள். தொடர்ச்சியாக எழுதுங்கள். உங்கள் மொழியும் உள்ளமும் தேர்ச்சி அடையட்டும். நீங்களே நிறைவுறும் ஆக்கங்களை எழுத உங்களால் முடியட்டும். உங்கள் அடையாளம், தனித்திறன் உருவாகட்டும், அப்போது உங்களுக்கான பிற வழிகளுக்கு நானும் உதவுவேன்

பிறருக்கும் பயன்படுமென்பதனால் உங்கள் பெயர்நீக்கி வெளியிடுகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஇலங்கையிலிருந்து ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவியாசபாரதமும் வெண்முரசும்