ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள் குறித்து வசித்துக் கொண்டிருந்தபோது, அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து உலக அரங்குக்கு கொண்டு வந்த எர்னஸ்ட் போவிஸ் மாதர்ஸ் [Edward Powys Mathers ]குறித்த சுட்டி கிடைத்தது. சுவாரஸ்யமான ஆளுமை. புதிர் விளையாட்டுக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்குவதில் உலக அளவில் சிறந்த நிபுணர்களில் ஒருவர்.
நாவலாசிரியரும் கூட. இவர் எழுதிய கெய்ன் தாடை எலும்பு [Cain’s Jawbone] ஒரு துப்பறியும் நாவல். நாவலின் (கலைந்து கிடக்கும்) இறுதி நூறு பக்கங்களை வாசகர்களே அதன் உட்குறிப்புகளை கொண்டு துப்பறிந்து சரியாக அடுக்குவதன் வழியே, குற்றம் செய்தவர் எவர் என்பது துலங்கி வருமாம். பல்வேறு காம்பினேஷன் களை உருவாக்கும் இந்த புதிருக்கு ஒரே ஒரு (காம்பினேஷன்) விடை மட்டுமே உண்டு. பதிப்பகம் வாசகர்களுக்கு பரிசுகள் அறிவித்தும் 1934 இல் வெளியான இந்த நாவலுக்கு இதுவரை மூன்று பேர் மட்டுமே சரியான விடை சொல்லி இருக்கிறார்களாம்.
ரூபிக் க்யூப் புதிரை வித விதமாக திருக்கலாம். வித விதமான காம்பினேஷன்கள் கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு காம்பினேஷன் மட்டுமே அந்த புதிரின் தீர்வாக இருக்கும். அது போன்ற நாவல். (ரூபிக் புதிர் என்றோ ரூபிக் என்பவரால் 1974 இல் கண்டுபிடிக்க பட்டது)
தமிழில் இந்த நாவல் குறித்து பின்நவீன எழுத்தாளர்கள் எவரும் பேசி நான் கேட்டதில்லை. இத்தகு நான் லீலியர் வடிவமும், வெகுஜன வாசிப்பு கலாச்சாரத்தோடு இனம்காணப்படும் துப்பறியும் வகைமையும், வாசகனை பங்கு பெற அழைக்கும் அதன் விளையாட்டும் என எல்லாவகையிலும் அவர்களுக்கு உவப்பான நாவல் . சுவாரஸ்யமான கேளிக்கை விளையாட்டு வாசிப்பு என்றாலும் சுஜாதா கூட இது குறித்து எழுதியது போல தெரியவில்லை. ஈரோடு கிருஷ்ணன் இத்தகு விஷயங்களில் தொடர் ஈடுபாடு கொண்டவர். அவரும் இந்த நூல் குறித்து சொன்ன நினைவில்லை.
நீங்கள் இந்தப் புனைவை வாசித்ததுண்டா? இந்த வகைமையில் இந்த ஒரே ஒரு நாவல் மட்டுமே இருக்கிறது என்று இணையக் குறிப்புகள் சொல்வது மெய்யா? அந்த அளவு வடிவ ரீதியாக யூனிக் ஆன புனைவா இது?
கடலூர் சீனு
அன்புள்ள சீனு
இந்நாவல் பற்றி தொண்ணூறுகளில் மலையாளத்தில் சில பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் பேசினார்கள். நான் அப்போது இதைப்பற்றி கேலியாக எழுதியிருக்கிறேன். ஒரு சர்ஜன் ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் கத்திகளை தூக்கிப்போட்டு விளையாடுவார், அதைப்பார்த்து நர்ஸ் பேஷண்டிடம் ‘ரொம்ப திறமையான டாக்டர்’ என்று சொல்வார். மதன் இப்படி ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார். அந்த கார்ட்டூனை மேற்கோள்காட்டி கிண்டல் செய்திருந்தேன்
பொதுவாக எழுவாய் பயனிலை இல்லாமல் எழுதுவது, பலபக்கங்கள் பத்தி பிரிக்காமல் எழுதுவது, ஓர் எழுத்து இல்லாமல் எழுதுவது, ஒரே சொற்றொடரில் எழுதுவது போன்ற சோதனைகள் தொண்ணூறுகளில் கொஞ்சம் நடந்தன. அவற்றை இங்கே சிலர் மெய்சிலிர்த்து பின்பற்ற முயன்றனர். எம்.ஜி.சுரேஷ் அவ்வாறு கொஞ்சம் முயற்சிகள் தமிழில் செய்து பார்த்தார்.இன்றும் அந்த மயக்கம் சிற்றிதழ் எழுத்தாளர்களில் சிலரிடம் உண்டு.
ஆச்சரியம் என்னவென்றால் சென்ற ஆண்டு ஒரு மலையாள எழுத்தாளர் இம்மாதிரி ஒன்றைச் செய்து எனக்கு அந்நூலை நேரில் அளித்தார். அதாவது அந்நூலில் ம என்ற எழுத்தே இல்லை. எப்படி எழுதினீர்கள் என்று கேட்டேன். தன்பாட்டுக்கு எழுதியபின் கம்ப்யூட்டர் சேர்ச் உதவியுடன் ம என்னும் எழுத்துள்ள வார்த்தைகளை கண்டுபிடித்து சமானமான வார்த்தைகளை போட்டார், அதற்காக சொற்றொடர்களை மாற்றிக்கொண்டார். மாற்றுச்சொற்களையும் கூகிள் உதவியுடன் கண்டுபிடித்தார். ஒரேநாள் வேலை. இது ஐம்பதாண்டுகளுக்கு முன் இலக்கிய உத்திச்சோதனை!
இலக்கியம் என்னும் கலைக்கே எதிரானவை இவை என்பது என் எண்ணம். இலக்கியம் மூளையுடன் ஆடும் விளையாட்டு அல்ல. அது கற்பனையுடன் கொள்ளும் உறவாடல். வாழ்க்கைக்கு நிகராக இன்னொரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளுதல். இலக்கியத்தை ஒருவகை மொழித்திறமையாக, வடிவத்திறமையாக ஆக்கிக்கொள்வதன் வழியாகவே இவ்வகையான எழுத்துக்கள் உருவாகின்றன.
ஆனால் உலகம் முழுக்க இலக்கியத்தில் இவ்வகை வடிவங்கள் உண்டு. இவை எப்படி உருவாகின்றன என்றால், ஒரு மொழியில் இலக்கியப்பெருக்கம் நிகழ்ந்து இலக்கியம் ஒரு தனித்த பெரிய அறிவுத்துறையாக ஆகிவிடும்போது அதில் தொழில்திறனாளர்கள் உருவாகிவிடுகிறார்கள். அத்திறனை ரசிக்கும் ஓர் அறிவார்ந்த கூட்டமும் உருவாகிவிடுகிறது. அவர்களுக்காக திறன்வெளிப்பாடு மட்டுமே கொண்ட படைப்புக்களும் உருவாகின்றன
அந்த திறன் மொழித்திறன், வடிவத்திறன் என இருவகைப்படும். மொழித்திறன் ஆங்கிலத்தில் pun,rhyme, limerick போன்ற பலவகைகளில் வெளிப்படும். இங்கே தமிழில் இரட்டுற மொழிதல் மொழித்திறனின் மிகச்சிறந்த வெளிப்பாடு. எங்களூர் செய்குத்தம்பிப் பாவலர் அதில் மிகத்தேர்ச்சி கொண்டவர். அவருக்கு யாரோ ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்ற ஈற்றடியை கொடுத்தார்கள். அவர் முந்தைய வரியில் நுனியை மடக்கி ‘பரத லட்சுமண சத்- துருக்கனுக்கு ராமன் துணை’ என முடித்தாராம். இது மொழித்திறன்.நாகபந்தம், ரதபந்தம் போன்றவை வடிவத்திறன். கோலத்தில் சுருக்கெழுத்துபோல எழுத்துக்களை அமைத்துச் செய்யப்படும் விளையாட்டுக்கள் இவை.
இலக்கியத்தை அப்படி ஓர் திறன்விளையாட்டாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்றால் இலக்கியத்தின் இயல்பான பணிகள் முக்கியமல்ல என்று தோன்றும் அறிவுச்சூழல் அமையவேண்டும். ஒரு சமூகத்தில் பண்பாட்டுவிவாதம், தத்துவ விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தால் இலக்கியம் அதை பிரதிபலிக்கும். சமூகமாற்றம், அரசியல்மாற்றம் போன்றவை இலக்கியத்தை ஆட்டிப்படைக்கும். அந்த வகையான மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏதுமில்லாமல் அச்சூழலே வெறுமையாக இருந்தால்தான் இலக்கியங்கள் சோர்வுறத்தொடங்கும். அங்கே இலக்கியவிளையாட்டு ஆரம்பமாகும்
ஆனால் இலக்கியவிளையாட்டு நிகழும் காலகட்டம் அந்தச் சமூகத்திற்கும் பண்பாட்டுக்கும் சோர்வுக் காலகட்டம் அல்ல. அப்பண்பாடும் சமூகமும் வளர்ச்சியடைந்து, தன்னிறைவடைந்து, செழிப்பிலிருந்து உருவாகும் ஒருவகையான மெத்தனத்தை அடைந்துவிட்ட காலம் அது. சாப்பிட்டுவிட்டு மெத்தையில் படுத்து நறுமணத் தாம்பூலம் போட்டு சொகுசாக அமர்ந்திருக்கும் காலம். அப்போது கொந்தளிப்புகள் இல்லை, தேடல்கள் இல்லை, எனவே விளையாட்டையே உள்ளம் விரும்பும்.இன்று ஐரோப்பா பெரும்பாலும் அப்படி இருக்கிறது.
என்னுடைய அவதானிப்பு ஒன்று உண்டு,எப்போதெல்லாம் இசை மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் அடைகின்றதோ அப்போதெல்லாம் இலக்கியம் தேக்கமடைந்து இத்தகைய இலக்கியவிளையாட்டுக்களாக ஆகிவிடுகிறது. சமூகம் பொருளியல் வளர்ச்சி அடைந்து, நிலையான ஆட்சியில் நிறைவான வாழ்க்கையை அடையும்போதே இசை மறுமலர்ச்சி அடைகிறது. ஆனால் அப்போது இலக்கியத்தில் புதிய அலைகள் நிகழ்வதில்லை.
அதேசமயம் இலக்கியத்தில் இது சோர்வுக்காலகட்டம் என்று ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. புதிய இலக்கியங்கள், பேரிலக்கியங்கள் உருவாகாது. ஆனால் இலக்கணநூல்களும் உரைநூல்களும் பெருகும். அகராதிகள் போன்றவை உருவாகும். பெரிய தொகைநூல்கள் வெளிவரும். அதாவது அறிவுச்செயல்பாடு பலமடங்காக வளரும். அவ்வகையில் பார்த்தால் அது ஓர் அடித்தளக்கட்டுமானம் நிகழும் காலகட்டமும்கூட.அதிலிருந்து அடுத்த படைப்பூக்கக் காலகட்டம் வருமென்றால் வலுவானதாக இருக்கும்.
இப்படி ஒரு வளர்ச்சிப்போக்கை உருவகிக்கலாம். நாட்டாரிலக்கியம் அல்லது பழங்குடி இலக்கியம் -> பண்படாச் செவ்விலக்கியம்-> பேரிலக்கியமரபு-> இலக்கியப்பெருக்கம், இலக்கணநூல்கள், உரைநூல்கள்-> இலக்கியவிளையாட்டு நூல்கள்.
தமிழகத்தில் அப்படிப்பட்ட இரு காலகட்டங்கள் பிற்காலச் சோழர்காலம் மற்றும் நாயக்கர் ஆட்சிக்காலம். சோழர் ஆட்சிக்காலத்தில் தோன்றி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிறைவடைந்த கலம்பகம் முதலிய சிற்றிலக்கியங்கள் எல்லாமே அடிப்படையில் இலக்கியவிளையாட்டுத் தன்மை கொண்டவைதான். அவற்றில் காவியச்சுவை உண்டு, ஆனால் அக்காவியச்சுவை அசலானது அல்ல. அது ஏற்கனவே எழுதப்பட்ட காவியங்களிலிருந்து திரட்டி உருவாக்கப்பட்டது. அவை பெரும்பாலும் சொற்சுவையால், விளையாட்டால் நிலைகொள்பவை.
அவை புலவர் நுகரும் அழகியல் கொண்டவை. செவ்வியலிசை கேட்பதுபோல. இலக்கண வரம்புக்குள் நின்றுகொண்டு ஏற்கனவே உருவாக்கப்பட்ட அழகியல்களை நுண்மையாக்கம் செய்து விளையாடி ரசிப்பது அது. ஓர் அவையில் ஒருவர் அந்த திறனை நிகழ்த்த மற்றவர்கள் ‘ஆகா!’ போட்டு சுவைப்பார்கள்.
அந்தப்போக்கின் உச்சமே பின்னர் வந்த இரட்டுறமொழிதல் போன்ற கவிதைமொழிகள். ஈற்றடி கொடுத்து எழுதுவது, முதலடிகொடுத்து எழுதுவது போன்று கவிதைத்திறன் வெளிப்படும் ஆக்கங்கள். பாரதி காலம் வரை அவையே கவிதைத்துறையில் ஒருவரின் சிறப்பை வகுத்தளிப்பவையாக இருந்தன
இந்த காலகட்டத்தில் தமிழில் இன்னும் சிக்கலான வடிவவிளையாட்டுக்கள் கொண்ட கவிதைகள் வெளிவந்தன. சொல்லால் ஆன விளையாட்டுக்கள் கொண்டவை மடக்கு, யமகம் எனப்பட்டன. இன்னொருவகை கவிதைகள் சித்திரங்களுடன் இணைந்தவை. பெரிய கோலங்களாக போடப்படுபவை. இவை சித்திரகவிதை எனப்பட்டன. நீங்கள் சொல்லும் நாவலுக்கு மிக அணுக்கமானவை இவை. நாகபந்தம், ரதபந்தம் என இவற்றில் பலவகை உண்டு. வடிவங்களின் சாத்தியக்கூறுகளையும் சொல்லிணைவுகளின் சாத்தியக்கூறுகளையும் வைத்து விளையாடுபவை.
வடிவங்களின் சாத்தியக்கூறுகளை வைத்து விளையாடிய கலைஞர் என்று எய்ஷர் [M. C. Escher sollapp] என்னும் ஓவியர் கருதப்படுகிறார். அங்கே அது தொழில்திறன் மட்டும் அல்ல, கண்ணின் எல்லைகளை மயங்கச்செய்து காட்சி என்பது என்ன என்ற கேள்வியைச் சென்று தொடுவதனால் அது ஓவியக்கலையும் ஆகிறது. அற்புத உலகில் ஆலீஸ் நாவலுக்கு ஏய்ஷர் வரைந்த ஓவியங்களுடன் ஒரு பதிப்பு உண்டு. அது குழந்தைக்கதையும் ஓவியத்திலுள்ள குழந்தைத்தன்மையும் கலந்த ஒரு பெரும்படைப்பு.Alice in Wonderland (with illustrations by M.C. Escher)
லூயி கரோல், ஏய்ஷர் ஆகியோரின் வடிவம்சார்ந்த உணர்வுகளைக்கொண்டு கோடெலின் கணிதம், பாக்கின் இசை ஆகியவற்றை இணைத்து வடிவம் என்பதன் ஆன்மிக உள்ளடக்கம் நோக்கிச் செல்லும் ஒரு பெருஞ்செவ்வியல் நூல் உண்டு. Gödel, Escher, Bach: An Eternal Golden Braid .நித்யாவுக்கு பிடித்தமான நூல்களில் ஒன்று அது. அவருடைய உரைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும். குறுக்கெழுத்துக்களில் நித்யாவுக்கு ஆர்வமுண்டு.
சித்திரகவிதைகளை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். ஒருமுறைகூட அவற்றை புரிந்துகொள்ள முயன்றதில்லை. வடிவச்சோதனை மட்டுமே செய்யும் எந்தப்படைப்பையும் படித்ததில்லை. ஒருமுறைகூட குறுக்கெழுத்துப்போட்டியை போட்டுப் பார்த்ததில்லை
ஏன் என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். நான் சொல்லும் பதில் இதுதான். ஒரு பக்தனிடம் அவனுடைய இஷ்டதெய்வத்தின் மீதான தோத்திரத்தை இவ்வண்ணம் கூறுபோட்டு எழுத்தெண்ணி விளையாடச்சொன்னால் செய்வாரா? ஒரு யோகியிடம் அவருடைய மூலமந்திரத்தை இப்படி விளையாட்டுக்கு வைக்கச்சொன்னால் என்ன சொல்வார்?
இலக்கியம் எனக்கு அப்படித்தான். எனக்கு மொழிமீதான பித்து அதிலிருக்கும் கனவுத்தன்மையால்தான் வரவேண்டும். ஒரு சொல் அடுக்கடுக்காக கனவையும் கற்பனையையும் உணர்வெழுச்சிகளையும் உருவாக்கவேண்டும். அந்நிலையை சற்று குறைக்கும் எதையும் நான் செய்வதில்லை.
அதேபோல எனக்கு தத்துவத்தில் ஆர்வமுண்டு, ஆனால் மெய்மையை நோக்கிச் செல்லாமல் வெறுமே தர்க்கவிளையாட்டாக, பண்டிதப்பிரகடனமாக அது ஆகும் கணமே விலகிவிடுவேன். அது என் மெய்மைநாட்டத்தையே அழித்துவிடும் என எண்ணுவேன்
என்றென்றும் ஆழத்தில் ஒரு சிறுவனாக இருக்கவே விரும்புகிறேன். கள்ளமின்மை அளிக்கும் வியப்பை பரவசத்தை தக்கவைத்துக்கொள்ளவே முயல்கிறேன்.
ஜெ