ன்பு ஆசிரியருக்கு,
தங்கள் அன்பை என்றும் மறவா மாணவி இந்த ஆசிரியர் தினநாளில் தங்களுக்கு குரு வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு எழுதுவது.
தங்களின் வெண்முரசுவை தாங்கள் நினைத்ததைப் போலவே தங்களின் வாழ்நாளில் எழுதிமுடித்து சாதித்துவிட்டீர்கள். ஆண்டவனின் அனுக்கிரகம் பெற்ற ஒருவரை நான் ஆசானாக அடைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
எத்தனை பிரச்சனைகள் இடையூறுகள் வந்தாலும் அதை மனதுக்குள் புகுத்திக் கொள்ளாமல் எடுத்த காரியத்தில் மட்டும் கவனம் கொண்டு அதைச் செவ்வனே செய்து முடிப்பதை தங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் அதற்கு பயிற்சியும் பக்குவமும் தேவைப்படுகிறது.
வெண்முரசுவில் கிராதம் முடித்து மாமலர் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இடையிடையே மற்ற சிறிய வாசிப்புக்களும் உண்டு. பணிமாறுதல் வேலைப்பளு மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் விஷ்ணுபுர விழாவிற்கு நேரடியாக வந்து தங்கள் பாதம் பணியும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மானசீகமாக தங்களின் ஆசீரைப் பெற்றபிறகே எனது ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது.
தங்களுக்கு எழுதவேண்டும் எழுதவேண்டும் என்ற என் ஆசை இன்றுதான் நீண்டநாட்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. அதற்கு இந்த ஆசிரியர்தினம் மகத்தான உதவி புரிந்துள்ளது. இதை நான் என்றும் மறக்கமாட்டேன்.
அருண்மொழி அக்கா, சைதன்யா தங்கை மற்றும் தம்பி அஜிதன் ஆகியோரின் நலத்தை விசாரித்ததாகச் சொல்லவும். தங்களின் உடல்நலத்தையும் நன்கு கவனித்துக்கொள்ளவும்.
இங்கு எங்கள் சார் ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆகிவிட்டது. என் பையன் இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். இன்று காலைதான் அவன் கேட்டான், ‘ எப்படிம்மா காலையில் நாலரைக்கு எழுந்திருச்சி படிக்கிறீங்க; கீழே போய் வீட்டு வேலை பார்க்கிறீங்க; ஆஃபீஸ்க்கும் போய் வேலை பார்த்துட்டு வர்றீங்க; வீட்டுக்கு வந்தும் மறுபடி வேலை பார்க்கிறீங்க; புள்ளைங்களுக்கும் சொல்லிக்குடுத்துக்குறீங்க; அப்புறம் பதினோரு மணி வரைக்கும் படிக்கிறீங்க; எனக்கு ஒம்போது மணிக்கு எழுந்திருப்பதே கஷ்டமா இருக்கேம்மா” என்று.
நான் சொன்னேன், “கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் இதெல்லாம் எல்லோராலும் சாத்தியம்டா” என்று. அப்போது எனக்கு உங்கள் ஞாபகம் வந்துவிட்டது. எப்படி அசுரன்போல் வாசிப்பவர் நீங்கள்! சளைக்காமல் எழுதுபவர் நீங்கள் என்று! ஆனால் அப்போது எனக்கு இன்றே உங்களுக்கு கடிதம் எழுத நேரம் அமையும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அனைத்தும் ஆண்டவனின் பிராப்தம் போல.
ஆம். நல் எண்ணங்களை, நல் விருப்பங்களை நிச்சயம் ஆண்டவன் அங்கீகரிப்பான்; அவன் நம்மை கவனித்துக்கொண்டேயிருக்கிறான்; நமது காரியங்களை தராசில் நிறுத்துக்கொண்டேயிருக்கிறான் என்பது உண்மையே. ஆகையால் கிருஷ்ணன் கூறியிருப்பதுபோல, “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!” என்பதை மட்டுமே நம் தாரகமந்திரமாகக் கொள்ளவேண்டும் என்று இச்சமயம் மீண்டுமொருமுறை எனக்கு நானே கூறிக்கொள்கிறேன்.
என் எண்ணங்களும் என் விருப்பங்களும் ஒவ்வொன்றாக நிறைவேறிவருவது மூலமாகவும் நடந்துகொண்டிருப்பது மூலமாகவும் அல்லது நான் சறுக்கிவிழுவதன்மூலமாகவும் என்னை நானே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு பரிசோதனை செய்துகொள்வதையே முதன்முதலில் எனக்கு இலக்கியம்தான் கற்றுக்கொடுத்துள்ளது. ஆம். நான் காந்தியின் “சத்தியசோதனை”யை என் சிறுவயதிலேயே வாசித்துள்ளேன். ஆனால் பாதிபுத்தகத்திற்கு மேல் அந்த வயதில் என்னால் தாண்ட இயலவில்லை. ஆனால் மனதில் அவரைப்போல கட்டுப்பாடோடும் ஒழுக்கத்தோடும் நேர்மையோடும் பொய் சொல்லாமலும் இருக்கவேண்டும் என்று மட்டுமே புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொள்ள முயன்றேன். அது வழிநடத்திய பாதைதான் தங்களிடம் கொண்டுவந்து சேர்த்துள்ளது.
இதுபோல ஒவ்வொரு காரியங்களிலும் அது என்னை எங்கு கொண்டு செல்கிறது என்ற முடிவுப்புள்ளியைக் கவனித்தால் அங்கு முதலாவதாக நிற்பது நல் எண்ணங்களும் நற்செயல்களுமே. எங்கேனும் நான் சறுக்கியிருப்பேனென்றால் அங்கு நான் நிதானத்தை இழந்து அவசரப்பட்டு வார்த்தையை விட்டிருப்பேன். அது என் முன்கோபத்தால் நிகழ்ந்திருக்கும். ஆகையால் ஒரு உயர்வான செயலில் ஒரு முடிவு நிகழுமென்றால் அதற்கு ஆரம்ப சிந்தனை மிக முக்கியம். அதனோடு அது கடந்து வரும் பாதையில் கொள்ளப்படும் பொறுமையும் நிதானமிழக்காமையும் இன்னும் அவசியம்.
இன்னும் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் நிறைவேறிய இரண்டு விஷயங்களைச் சொல்வேன். எனக்கு சிறுவயதிலிருந்தே குருகுலக்கல்வி மீது ஒரு ஆசை. அல்லது இப்படியும் சொல்லலாம். அதாவது மேரி கியூரி போல வீட்டிலிருந்தே கல்வியறிவைப் பெறுவது. இன்னொன்று நான் கற்றுக்கொண்டதை சிறுகுழந்தைகளுக்குக் கற்றுத்தருவது. அதாவது இப்பொழுதுதான் படிக்க பேச கற்றுக்கொள்ளும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்துக்குள் என வைத்துக்கொள்ளுங்களேன்.
இந்த இரண்டும் நான் மேரி கியூரியைப் பற்றியும் தாமஸ் ஆல்வா எடிசனையும் பற்றித் தெரிந்துகொண்டபிறகு என் உள்ளத்தில் எழுந்து பற்றிக்கொண்ட பெரு நெருப்புகள்.
என் தேடல் எனக்குத்தெரிந்த வரையில் சுரேஷைக் கண்டடைய வைத்தது. சுரேஷால் தங்களிடம் ஆற்றுப்படுத்தப்பட்டேன். அதற்கு என் வாசிப்பு முக்கியக்காரணமாக இருந்தது. ஆனால் அது இலக்கிய வழி என்று அறியாமலே உட்புகுந்தேன்.
கொற்றவை, காடு, பின்தொடரும் நிழலின் குரல், வெண்முரசு, அன்னா கரீனினா, விஷ்ணுபுரம், ஆரோக்கிய நிகேதனம், தோட்டி மகன், செம்மீன், போரும் அமைதியும், குற்றமும் தண்டனையும், கரமசேவ் சகோதரர்கள், அசடன், மண்ணும் மனிதரும் என பெரும் நாவல்களை வாசிக்கவைத்தது. விட்ட சத்தியசோதனையை நன்கு புரிந்து வாசித்தேன்.
இவற்றையெல்லாம் வாசிக்க வாசிக்க தாகம் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே தவிர அந்த வாசிப்புதாகம் குறைவதாய்த் தெரியவில்லை. இப்படி என் வாசிப்பை அங்கீகரித்து மகிழ்ச்சியடைந்த கடவுள் அத்தோடு நிற்கவில்லை. இன்னும் இன்னமுமாய் எனக்கு ஆசிரியர்களைத் தேடி நான் கண்டடைந்து கற்றுக்கொள்ளும்வண்ணமாய் வைத்திருக்கிறார். பால்மணம் மாறா மூன்று அரிச்சுவடிக் குழந்தைகளை நான் கற்றுத்தரும்வண்ணமாய்க் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் இந்த கொரோனாவால் என் வாழ்வில் நிகழ்ந்த நன்மைகள்.
இதனால்தான் ஒரு நிகழ்கின்ற நிகழ்வு நன்மையானது அல்லது அது தீமையானது என்று அறுதியிட்டுக் கூறமுடிவதில்லை. ஒருவருக்கு ஒரு சொல்லோ செயலோ நன்மையை விளைவிக்கலாம். அல்லது மீளவியலா கடுந்துயரத்தை வீசிவிட்டுச் செல்லலாம். அதனால் ஆரம்ப சிந்தனையில் உள்ள நல்நோக்கு ஒன்றே இலக்காகக்கொண்டு சிற்றடிகளாக வைத்து நடக்க ஆரம்பித்தாலே போதும். கடவுள் போக வேண்டிய இடத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்.
இந்த நம்பிக்கை மட்டுமே என்றும் என் மூலதனம். உங்களைப்போல என் கடமையை மட்டும் செவ்வனே நான் செய்துவிடுவதால் அனைத்துப் பொறுப்புகளும் அவர்தலைமேல் சென்றுவிடுகின்றன. முடிவை அவர் பார்த்துக்கொள்வார். அதனால் நான் எதற்கும் அஞ்சுவதில்லை. மடியில் கனம் இருந்தால்தானே பயம். அனைத்தையும் அவன் எனக்குத் தருகிறான். நான் பெற்றுக்கொண்டதை அடுத்தவருக்கு தானமாகத் தந்துவிடுகிறேன். பின் யாருக்காக எதற்கு பயப்படவேண்டும்?
சமீபத்தில் நான் தேடிக்கண்டடைந்த என் ஹிந்தி ஆசிரியர் வகுப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் தவறாமல் சொல்வது பின்வருமாறு:
ஒன்று: நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் உனக்கு ஆசான் போல.
மற்றொன்று: நீ கற்றதை அடுத்தவருக்கு கற்றுக்கொடுக்கும்போது நீ கற்றது இருமடங்காகிறது.
இவ்வாறு கற்றலும் கற்பித்தலும் செவ்வனே நிகழ்ந்துவருகிறது. இதன் முடிவு எவ்வாறாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் நல்லது என நினைத்து நான் செய்யும் செயல்கள் அல்லது சொல்லும் சொற்கள் பலருக்கு வெறுப்பைத் தோற்றுவிப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அவை எனக்கு மிகுந்த வியப்பைத் தருகின்றன. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்துள்ள இந்த நவீன உலகில் மானுட மனமும் பெற்றுள்ள அசுர வளர்ச்சியைப் பார்த்து நான் மலைத்துப் போகிறேன்!!
இருந்தாலும் எனக்கென நானே உருவாக்கிக்கொண்ட ஒரு குருகுலம். எனக்கென ஆசிரியர்கள்; எனக்கென மாணவர்கள். நல் மாணவியைப் பெற்ற மகிழ்ச்சியை என் ஆசிரியர்கள் குரலில் காண்கிறேன். நற்குணங்களையும் தவறில்லாமல் மொழிகளைப் பேசவும் கற்கவும் என்னிடம் பழகிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்ப்பதில் நான் பேரானந்தம் அடைகிறேன். ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சந்திக்கும் மூவருக்கு கற்றுத் தருவார்கள். அதுவும் நற்பண்புகளோடு சரியானவைகளை! இதுதான் இன்றையத் தேவை. இவையே என் சொத்தும் சுகமும். இந்த மகிழ்ச்சியை இந்த நன்னாளில் தங்களிடம் பகிர்ந்துகொள்ளவே எழுத ஆரம்பித்திருக்கிறேன் என எழுதி முடிக்கையிலேதான் எனக்கே தெரிகிறது.
நிஜமாகச் சொல்கிறேன். இரண்டே வரிகளில் தங்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துக்கள் கூற மட்டுமே இந்த அலைபேசியை எடுத்தேன். அது இப்படி வந்து முடிந்துள்ளது. இவ்வாறுதான் என் வாழ்க்கையும் சென்றுகொண்டிருக்கிறது. நான் சொல்ல விழைந்ததை சரியாக தங்களிடம் சேர்ப்பித்துவிட்டேனா என்பது தெரியவில்லை.
மீண்டும் தங்களுக்கு வணக்கங்கள் கூறிக்கொண்டு ஆசீர்களைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மாணவி,
கிறிஸ்டி.
அன்புள்ள கிறிஸ்டி
தாமதமான கடிதம்
வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான மகிழ்ச்சிகள் வழியாக செல்வோம். ஒவ்வொன்றும் அதன் எல்லையை அடைந்ததும் பொருளிழக்கின்றன. கடைசிவரை தொடரும் மகிழ்ச்சி என்பது கற்றல்தான்
இதை எழுதும்போது இன்று திரிவிக்ரமன் தம்பி அவர்களின் நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். குமரிமாவட்ட நாட்டாரியல் அறிஞர், மலையாள எழுத்தாளர். என் இல்லத்தின் அருகே வாழ்ந்தார். மறைந்து பத்தாண்டுகளாகின்றன. வயதுமுதுமையில்கூட மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருப்பார். ஒரு சிறு தகவலுக்காக உடல்நலமின்றி இருக்கையிலும் நீண்ட பயணம் மேற்கொள்வார்
“படிக்கிறேன், கற்பிக்கிறேன். அதுதான் வாழ்க்கையில் எஞ்சும் மகிழ்ச்சி’ என்று நான் ஒருமுறை சாலையில் அவரை சந்திக்கும்போது சொன்னார். அப்போது புத்தன்கடை என்ற ஊரில் ஏதோ ஏட்டுச்சுவடியை தேடிச் சென்றுகொண்டிருந்தார்
பெரிய ஆசிரியர்கள் நமக்குக் கற்பிப்பது அதையே
ஜெ