படிமங்களின் உரையாடல்

அன்புள்ள ஜெமோ,

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு ஆன்மீக கட்டுரை பார்த்தேன். சிவனின் அவதாரமான காலபைரவர் பற்றிய கட்டுரை அது. அதில் வந்த படத்தை இணைத்துள்ளேன். மிக வித்தியாசமான படம். காலபைரவர் படமும் புகழ் பெற்ற ஸர்ரியலிஸ ஓவியமான Dali வரைந்த  என்ற persistence of memory படமும் இணைந்த ஓவியம் அது.

இது பல கேள்விகளை எழுப்புகிறது. இது உண்மையிலேயே இது ஒரு வகை ஸர்ரியலிஸ முயற்சியாக தெரிகிறது. நான் இதுவரை காலபைரவர் என்ற பெயரில் உள்ள ‘கால ‘ என்ற பகுதியை பற்றி அதிகம்  யோசித்ததில்லை யமன் போல அழிக்கும் கடவுள் என்ற அளவிலேதான் என் அபிப்ராயம்.

என் கேள்வி , இந்த புகைப்படத்தை எப்படி புரிந்து கொள்வது ? இதை  கடந்து போகவும் முடியவில்லை.

மேலும் இப்படி இந்து மத symbols/Iconsஐ ஒரு புகழ் பெற்ற ஓவியத்தை தழுவி அமைக்கலாமா? கால பைரவரை வணங்கும் எனக்கு இந்த புகைப்படம் பார்த்தால் பக்தி வரவில்லை ஒருவகையான திகைப்பே வருகிறது. இது போன்ற புகைப்படங்களை நான் எப்படி எதிர்கொள்வது?

கோகுல்

காலபைரவர் சோழர் செப்புதிருமேனி

அன்புள்ள கோகுல்,

இந்த விஷயம் பற்றிய விரிவான விவாதங்கள் நடந்தது எம்.எஃப்.ஹுசெய்ன் சரஸ்வதியை வரைந்தது தொடர்பான எதிர்ப்பின்போது. அன்று நான் என் தரப்பை எழுதினேன். அது முதல் பலகோணங்களில் இதை எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக இதைப்பற்றி பேசிக்கொண்டுமிருக்கிறேன்.

இன்று இந்த விவாதம் அதிகாரக்குரலுடன் எழுந்துவருகிறது. ஒருவகையில் நாட்டை முற்றாக கைப்பற்றிக்கொண்டிருக்கும் அதிகாரமாக ஆகிறது. அரசியல் தலைமை ,மதத்தலைமை ,பெருந்திரள் தலைமை எல்லாம் அதில் அடங்கியிருக்கின்றன. இச்சூழலில் இது சிந்தனையுரிமை, வழிபாட்டுரிமை, படைப்புரிமைக்கான குரலாக உருமாறவேண்டியிருக்கிறது. பன்மைத்தன்மைக்கான வலியுறுத்தலாக ஆகவேண்டியிருக்கிறது.

எதிர்காலத்தில் இது இன்னும்பெரிய பிரச்சினையாக ஆகிவிடும். ஏனென்றால் ஒரு தத்துவ- அழகியல்- ஆன்மிகப் பிரச்சினை அதிகார அரசியலுக்குள் சென்றுவிட்டதென்றால் அதன்பின் அது அதிகாரப்பிரச்சினை மட்டுமே. அதில் ஆதிக்கத்தின் மூர்க்கமே ஓங்கித்தொழிற்படும்.

இந்துப்புராணங்கள், இந்துமதக்குறியீடுகள் போன்றவற்றை இரண்டு தளம் கொண்டவையாகவே காணவேண்டும். ஒன்று, அவை வழிபாட்டுக்குரிய உருவகங்கள், வடிவங்கள். இரண்டு, அவை இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும்.

வழிபாட்டுக்குரிய உருவகங்கள், வடிவங்களை வழிபடுவோர் ஒரு நிலைத்த வடிவுக்கு கொண்டுவருவது இயல்பானதுதான்.ஏனென்றால் அவை வழிபடுவோரின் நினைப்புக்கு ஏற்ப மாறுபடுவன அல்ல. தொடர்ச்சியான நீண்டகால வழிபாடு, தலைமுறை தலைமுறைகளாக நீளும் வழிபாடுதான் அந்த உருவகங்களையும் வடிவங்களையும் ஆழுள்ளத்துக்குச் செலுத்துகிறது. தோன்றும் கருத்துக்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றிக்கொண்டிருந்தால் அவை ஆழ்ந்த அகவுள ஊடுருவலை நிகழ்த்தாமலாகும். அவை வெறும் பாவைகளாக, குறியீடுகளாக மட்டுமே நீடிக்கும்.

காலபைரவன் வட இந்தியா

அவ்வாறு உருவகங்களையும் வடிவங்களையும் ஆழுள்ளத்துக்குச் செலுத்தும் பொருட்டே பக்திப்பாடல்கள் , தோத்திரங்கள் போன்றவை தொடர்ச்சியாக அவற்றைப்பற்றி வர்ணிக்கின்றன. முருகனின் வேல்,மயில் போன்றவை எப்படி மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்.

இந்த உருவகங்களும் வடிவங்களும் நிலைத்த தன்மைகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆகமங்களும் தாந்த்ரீகநெறிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்ன தெய்வம் இன்னின்னமாதிரி இருக்கவேண்டும், இவ்வாறெல்லாம்தான் வகையில் ஆலயங்கள் அமையவேண்டும், இந்தவகையிலான வழிபாட்டுமுறைகள் நிகழவேண்டும் என அவை வரையறை செய்கின்றன

ஆகவே ஒரு பக்தர் இந்த உருவகங்களையும் வடிவங்களையும் மாற்றுவதற்கு எதிராக இருப்பது இயல்பானதும், ஒருவகையில் இன்றியமையாததும்கூட.  மதவழிபாட்டின் எல்லைக்குள் தெய்வங்களை உருவம் மாற்றுதல் மட்டுமல்ல அவற்றுக்கான தொல்முறைமைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யக்கூடாது என்பதே என் கொள்கை.

காலபைரவர், தென்னிந்தியா

அந்த வகையிலேயே ஆலயங்களில் ஆகமமுறைக்கு விரோதமாக செய்யப்படும் பூசைகள் அலங்காரங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. சிலைகளுக்கு அழுக்குத்துணி சுற்றிவைப்பது, பகல்முழுக்க ஏதாவது காப்பு போட்டு மூடிவைப்பது, வழிபாட்டு நேரங்களை விருப்பப்படி மாற்றுவது என இன்று தமிழகத்தில் செய்யப்படும் ஆகமமீறல்கள் ஏராளம். பக்தர்களும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவை வழிபாட்டின் சாராம்சமான உளநிலைகளை அழிப்பவை என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. மையவழிபாட்டு முறைகளில் இருந்து பிரிந்துசென்று துணைவழிபாட்டு முறைகள் உருவாவதென்பது இந்துமதத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அவ்வண்ணம் கிளை பிரிந்து வளர்ந்துகொண்டே இருப்பதுதான் இந்த மரபை ஒரு இறுக்கமான மதநிறுவனமாகவோ, மாறாத கொள்கையாகவோ அல்லாமல் ஒரு ஞானமரபாக, ஒரு மெய்யியல் வெளியாக நிலைகொள்ள வைத்திருக்கிறது.

நாராயணகுரு தீபத்தையும் சொற்களையும் தெய்வமாக பதிட்டை செய்தார். வள்ளலார் ஜோதியை தெய்வமென நிறுவினார். இவ்வண்ணம் மைய உருவகங்களிலேயே பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தன. ஜக்கி வாசுதேவ் நிறுவிய லிங்கபைரவி சிலை மகிஷாசுர மர்த்தனியின் ஒரு நவீன ஓவியம்போல உள்ளது.

அவ்வண்ணம் தங்கள் மெய்ஞானத்தை தொன்மையான உருவகங்களையும் வடிவங்களையும் சற்றே மாற்றியமைப்பதனூடாக வெளிப்படுத்துவது ஞானியர் என்றும் இங்கே செய்துவந்ததுதான். எப்போதும் அது நிகழ்ந்து வந்தது, இனிமேலும் அவ்வாறே தொடரும்.

அந்த கிளைபிரியல்களை மரபுவாதிகள் எதிர்ப்பதும் அவை பயனற்றவை என வாதிடுவதும் வழக்கம்தான். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் தங்கள் மரபார்ந்த நோக்கை முன்வைக்கிறார்கள், அவ்வளவுதான். நாராயணகுருவை, வள்ளலாரை மரபுவாதிகள் அப்படித்தான் எதிர்த்தனர். அது ஓர் உள்விவாதம். அத்தகைய மறுப்பும் விவாதமும் தத்துவதளத்தில் மிகுந்த பயன் அளிக்கும் செயல்பாடுகள்தான்.

சரஸ்வதி எம்.எஃப்.ஹுசெய்ன்

நாராயணகுரு அவருடைய கோயில்களை அவரே நிறுவினார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கக்கூடாது. ஆனால் அவர் பழைய கோயிலுக்குள் சென்று அங்கிருக்கும் உருவத்தை அகற்றினாலோ மாற்றினாலோ அது பிழை. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. தமிழகத்தின் தொன்மையான ஓர் ஆலயத்தில் லிங்கபைரவி நிறுவப்படுமென்றால் அது பிழையான செயல். ஆனால் அதை ஞானியர் செய்ததே இல்லை.

மத, வழிபாட்டு எல்லைக்கு வெளியே நின்றுகொண்டு இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும் என இந்த உருவகங்களையும் வடிவங்களையும் பார்ப்பது என்பது இரண்டாவது பார்வை, விரிவான பொதுவான ஒரு பார்வை.

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பண்பாடும், ஒட்டுமொத்த மெய்ஞானமும் இந்து மரபில்தான் உள்ளது. பண்பாட்டு நோக்கில் பௌத்த, சமண, சீக்கியப் பண்பாடுகளேகூட இந்து மரபின் கூறுகளே. இந்து மரபின் உருவகங்கள், குறியீடுகளைக் கொண்டே அவையும் பேசுகின்றன.

இந்து மரபு பேணப்படவேண்டும் என்று, பயிலப்படவேண்டும் என்று, அது அழிந்தால் இந்தியா அகவயமாக அழிந்துவிடும் என்று, நான் சொல்வது அதனாலேயே. இந்தியாவுக்கு எதிரான சக்திகள் இந்துப்பண்பாட்டை சிறுமைசெய்வதும் பழிசுமத்தி அழிக்கமுயல்வதும் இதனாலேயே. அதற்கு எதிரான செயல்பாடாகவே என்னுடைய சென்ற முப்பதாண்டுக்கால அறிவியக்கச் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எஞ்சும் நாளிலும் அவ்வாறே.

இந்நிலத்தில் வாழும் தொன்மையான பண்பாட்டுமரபின் ஆழ் படிமங்களும் குறியீடுகளும் இந்துமரபுக்குள் உள்ளன என்பதனாலேயே அவை இந்து மதத்துக்கு உரியவை அல்ல. இந்து மத நம்பிக்கையாளர்களின் உடைமை அல்ல. அவர்களுக்கு அவற்றின்மேல் முற்றுரிமை இல்லை. அவை இந்தியர்கள் அனைவருக்கும் உரிய மரபுச்செல்வம். உலகப் பண்பாட்டுக்கும் உலக மெய்ஞானத்துக்கும் பெருங்கொடை. மானுடர் அனைவருக்கும் அதில் உரிமை உண்டு.

சரஸ்வதி பேலூர்

பண்பாட்டுமரபின் ஆழ்படிமங்களும் குறியீடுகளும் எப்போதுமே மறுஆக்கத்திற்கு உரியவை. அவை நாம் எப்படி உலகைப் பார்க்கிறோம் என்பதை நம் உள்ளிருந்து தீர்மானிப்பவை. நாம் என்ன கண்டோம் என்பதை வெளிப்படுத்துவதற்கான கருவிகள். நமக்கு பிறர் கண்ட மெய்யறிதல்கள் வந்தடையும் வழிகள். இம்மூன்று தளங்களிலும் நாம் அறிந்தோ அறியாமலோ அவை தொழிற்பட்டபடியே உள்ளன.

உதாரணமாக, சென்றவாரம் நான் என் ஈரட்டி வனவிடுதியில் இருக்கையில் இரு நாய்களின் காதல்களியாட்டை கண்டேன். அதிலிருந்த கொந்தளிப்பும் களியாட்டும் என்னை ஒரு பரவசநிலையை அடையச்செய்தன. அதை சிவசக்தி லீலையாகவே என்னால் காணமுடிந்தது, ஏனென்றால் அந்த ஆழ்படிமம் எனக்குள் உள்ளது. அது என் மரபுச்சொத்து.

நான் அதை எழுதும்போது லீலை என ஒரு சொல்லை பயன்படுத்துகிறேன். உடனே நான் சொன்னவை மட்டுமல்ல, சொல்லப்பட்டவற்றுக்கு பின்னணியிலுள்ள மொத்த உணர்வுநிலையும் தரிசனமும் வாசகனுக்குப் புரிந்துவிடுகிறது. இப்படித்தான் கலையிலக்கியங்களில், ஆன்மிகத்தில் அறிதலும் தொடர்புறுத்தலும் நிகழ்கின்றன.

அந்த ஆழ்படிமம் என்றோ எங்கோ தோன்றி இங்கே கலையிலக்கியமாக உறைகிறது. அதில் வியாசன், காளிதாசன் முதல் பாரதிவரையிலான கவிஞர்களின் மரபு உள்ளது. எல்லோரா முதல் சுசீந்திரம் வரையிலான சிற்பங்களின் மரபு உள்ளது.

அந்த ஆழ்படிமம் எனக்குள் இருப்பது எனக்கு தெரிகிறது. தெரியாத ஒருவரின் உள்ளேயும் அதுதான் இருக்கும். சிவசக்தி உருவகம் சார்ந்த குறிப்பே இல்லாமல் ஒருவர் இந்த அனுபவத்தை அடைந்து ,அதை முற்றிலும் புதிய ஒரு படிமம் வழியாக தொடர்புறுத்த முடியும். ஆனால் அந்த படிமத்துக்கு அடியில் ஆழ்படிமமாக இருப்பது சிவசக்தி என்னும் உருவகம்தான்.

ஆழ்படிமம் என்பதே அதுதான். [Archetype] படிமங்களுக்கெல்லாம் ஆதாரமாக பண்பாட்டின் கூட்டுநனவிலியில் [collective unconscious] உறையும் தொன்மையான ஆதிப்படிமம் அது. அவைதான் பண்பாடு தனிமனிதனுக்கு அளிக்கும் கொடைகள். தனிமனிதனுக்கு என ‘தனியான’ அகம் ஏதும் இல்லை. அவனுடைய அகம் என்பது இந்த பேரொழுக்கில் ஒரு துளிதான். அத்தனை மனிதர்களும் இதில்தான் இருக்கிறார்கள்.

இந்தியநிலத்தில் பிறந்து இந்த மொழியில் உளம்கொண்டு இச்சூழலில் வாழ்வதனாலேயே இந்த ஆழ்படிமங்களை நான் அடைந்துவிடுகிறேன். நான் என் கல்வியால் இவற்றை மேலும் கூர்மையாக அறிந்துகொள்கிறேன். இவை நான் சிந்திக்க, கண்டடைய, தொடர்புறுத்த உதவுகின்றன.

சரஸ்வதி சோழர்காலம்

இவை இந்துமதம் சார்ந்தவை, ஆகவே இந்துமதத்தவரால் கட்டுப்படுத்தவேண்டியவை என ஆகுமென்றால் என்ன பொருள்? என் முழு அகத்தையும் இவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்றுதானே? தங்கள் அரசியல் ஆதிக்க நோக்குக்காக என் கனவுகளையும் கடிவாளமிட்டு ஆட்சி செய்வார்கள் என்றுதானே? அதன்பின் சிந்தனைச் சுதந்திரம், மெய்த்தேடல்சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்பது என்ன? ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அகத்தின்மேலும் எவருக்கு கட்டுப்பாடு இருக்கமுடியும்?

அப்படி ஒரு அதிகாரத்தை எவருக்கு அளிக்கமுடியும்? அதற்கான தகுதி எவருக்கு உண்டு? அரசியல்வாதிகளுக்கா? மதநிறுவனத் தலைவர்களுக்கா? கும்பல் தலைவர்களுக்கா? அப்படி ஒரு அதிகாரத்தை அளிப்பதைப்போல பண்பாட்டுத் தற்கொலை வேறு உண்டா?

அறிதல்- தொடர்புறுத்தல் இருநிலைகளிலும் இந்த உருவகங்களையும் வடிவங்களையும் தொடர்ச்சியாக உருமாற்றிக்கொண்டேதான் இருக்கமுடியும். மறுஆக்கம் செய்வது என்பது அதனால்தான். வெவ்வேறு ஞானங்களுடன் இணைப்பது, வெவ்வேறு உருவகங்களுடன் கலப்பது, வெவ்வேறு மரபுகளுடன் உரையாடவைப்பது வழியாகவே அந்த மறுஆக்கம் நிகழ்கிறது.

அந்த மறுஆக்கத்தை காளிதாசன் முதல் பாரதிவரை அனைவருமே செய்திருக்கிறார்கள். இந்தியவைன் மகத்தான எழுத்தாளர்கள் அனைவருமே செய்திருக்கிறார்கள். ராஜா ரவிவர்மா முதல் கொண்டையராஜு வரை அனைவருமே செய்திருக்கிறார்கள். அது நடந்துகொண்டே இருக்கிறது, இனியும் நிகழும்.

மகிஷாசுர மர்தனி

அது நின்றுபோகும்போது இந்திய ஞானமரபு தேங்கி ஒரு உறைந்த நிறுவனமாக ஆகும். வெறும் கட்டளைகளும் சடங்குகளும் கொண்டதாக மாறும். ஒரு தலைமுறைக்குள் வெறும் அதிகாரக் கட்டமைப்பாக அல்லது வரலாற்றுச் சின்னமாக மாறும். உயிரற்றவை காலப்போகில் அழியும் எனபது விதி.

ராஜா ரவிவர்மா பற்றிய நூல் ஒன்றில் ஆசிரியரான என்.பாலகிருஷ்ணன் நாயர் அவருடைய ஓவியங்களுக்கு அன்று மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சொல்கிறார். தெய்வங்களை அவர் பார்ஸிநாடக நடிகர்களின் தோற்றத்தில் வரைந்தார். உயிருள்ள பெண்களை தெய்வங்களுக்கு மாடல்களாக ஆக்கினார். சாமுத்ரிகா லட்சணப்படி வரையவில்லை. இன்று அவையே தெய்வ உருவகங்களாக ஆசாரவாதிகளாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.

பாரதியைப் பற்றிய உரையாடல் ஒன்றில் பேரா.ஜேசுதாசன் எஸ்.வையாபுரிப்பிள்ளை சொன்ன ஒரு நிகழ்வைச் சொன்னார். பாரதிக்கு திருவனந்தபுரம் சைவப்பிரகாச சபையினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சக்தியை பாரதமாதாவாக அவர் உருவகம் செய்தது தவறு என்று. இன்று பாரதி ஒருவகை சித்தபுருஷராக ஆகிவிட்டார்.

இந்த முரண்பாடு எப்போதும் உண்டு. ஆனால் இதைமீறித்தான் படைப்பியக்கம் செயல்படும். முரண்படும் பழைய ஆசாரவாதிகள் ஒரு தரப்பாக ஒலிக்கும் வரை பிரச்சினை இல்லை. அவர்களிடம் கட்டுப்படுத்தும், ஒடுக்கும் அதிகாரம் செல்லும்போது அழிவு தொடங்குகிறது. எம்.எஃப்.ஹுசெய்ன், எம்.எம்.பஷீர் விஷயங்களில் வெளிப்பட்டது அதுவே.

லிங்கபைரவி [அடியில் மகிஷனின் கொம்புகள்]

ஆகமமுறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களிலேயேகூட சிற்பிகளின் கற்பனைப்படி சிற்பங்கள் வடிவமாற்றம் அடைந்துள்ளன. சிற்பங்களைப் பார்க்குந்தோறும் அவை எப்படியெல்லாம் மாறுதலடைந்து புதுப்புது அர்த்தங்களை கொண்டிருக்கின்றன என்பதுதான் நம்மை வியப்பிலாழ்த்தும். ஆகமமுறை நெகிழ்ந்து தன் எல்லைகளை விரித்துக்கொண்டு அந்த மாறுதல்களை தன்னுள் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

காலபைரவம் என்ற உருவகம் சாவை, காலத்தை உருவகப்படுத்துகிறது. சில இடங்களில் காலபைரவரின் வாகனமாக நாய் உள்ளது. சில இடங்களில் நாய் மட்டுமே காலபைரவராக உருவகம் செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுபுரத்தில் கரியநாயாக ஒரு நவீனக்குறியீடாக காலபைரவர் வருகிறார்.

கலையில் தெய்வ வடிவங்கள் குறியீடாக திகழ்கையில் மாறுதல் அடையலாம், அடைந்தாகவேண்டும். வழிபாட்டு முறைகள் கிளைத்து பிரிந்து எழுகையில் மாறுதல் அடையலாம், அதை ஞானியர் செய்யலாம். நிலைபெற்றுவிட்ட வழிபாட்டுமுறைகளில் புகுந்து அவற்றை மாற்ற எவருக்கும் உரிமை இல்லை, அது பண்பாட்டு அழிப்பு. இதுவே நான் தொகுத்துச் சொல்வது.

உதாரணமாக, இன்று பிள்ளையாரை வெவ்வேறு நவீன வடிவங்களில் வரைகிறார்கள். பிள்ளையார் என்னும் தொன்மத்தை, ஆழ்படிமத்தை படைப்பூக்கத்துடன் ஓங்காரவடிவமாக புரிந்துகொள்ள அவை உதவுபவை. ஆனால் பிள்ளையாரை வழிபடுவதற்கு அவற்றை பயன்படுத்தக் கூடாது.

ஏனென்றால் கலையின் படிமங்கள் அகக்குலைவை உருவாக்குகின்றன. அதிலிருந்து நூறாயிரம் கிளைகள் பிரியச் செய்கின்றன. அதுதான் நம்மை படைப்பூக்கம் கொள்ளச்செய்கிறது. ஆனால் வழிபாடு நேர் எதிரான பாதை கொண்டது. அகஒருமை கூடவேண்டியது. அங்கே நிலைபெற்ற வடிவங்களுக்கே இடம்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த ஓவியத்தை கலைநோக்கில் காலபைரவம் என்னும் கருதுகோளின் இன்றைய நீட்சியாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் காலபைரவராக வைத்து அதை வழிபடக்கூடாது. அவ்வண்ணம் வழிபடவேண்டும் என்றால் அதை ஒரு ஞானி தன் மெய்யறிவால் கண்டு நிறுவவேண்டும். நீங்கள் அந்த ஞானியின் வழியை பின்பற்றவேண்டும். அவர் அதை ஒரு முழுவழிபாட்டுமுறையாக வகுத்து அளித்திருக்கவேண்டும். அது இந்துமரபுக்குள் ஒரு தனிவழியாக நீடிக்கும்.

ஜெ

 ஆகாயம் [சிறுகதை]

முந்தைய கட்டுரைபிழைப்பொறுக்கிகள்- எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைகொதி- கடிதங்கள்