கொதி[ சிறுகதை]

“கொதின்னு கேள்விப்பட்டதுண்டா?” என்று ஃபாதர் சூசை மரியான் கேட்டார்.

நாங்கள் காரில் திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தோம். நோயுற்றிருக்கும் வயோதிகரான ஃபாதர் ஞானையாவைப் பார்ப்பதற்காக. அம்பலமுக்கில் வயதான பாதிரியார்களுக்கான ஓய்வில்லத்தில் அவர் இருந்தார். ஆஸ்பத்திரியில் பலமாதங்கள் இருந்தார். அப்போதும் சென்று பார்த்திருக்கிறோம். நேற்று தன்னை திரும்ப தன் வீட்டுக்கே கொண்டுசெல்லச் சொல்லியிருந்தார். ஓய்வில்லத்தில் ஓடைக்கரையில் ஒரு பழைய ஓட்டுவீடுதான் அவருடைய வாழ்விடம். இருபதாண்டுகளாக அங்கேதான் தனிமையில் இருந்தார்.

டிரைவர் இருக்கையின் அருகே ஏசுதாஸ் அமர்ந்திருந்தான். ஃபாதர் சூசைமரியான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் அருகே நான். வசதியான கார்தான். மீன் ஏற்றுமதிக்காரர் ஜானி ஃபெர்னாண்டோவிடமிருந்து நான் இரவல் வாங்கியது. ஃபாதர் சூசைமரியானுக்கு முதுகுவலி கொஞ்சம் உண்டு. ஆகவே தலையணையை வைத்து நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருந்தார்.

“கொதிப்புன்னு கேட்டிருக்கிறேன்… தண்ணி கொதிக்கிறது…” என்றேன்.

“டேய் ஏசுதாஸ், சொல்லுடா. கொதின்னா என்ன?” என்றார் ஃபாதர் சூசைமரியான்.

“வேற தெரியல்ல ஃபாதர்” என்றான் ஏசுதாஸ்.

“செரி, உங்க ஏரியாவிலே கொதிக்கு ஓதுறது உண்டா?”

“புரியல்ல ஃபாதர்.”

“சர்ச்சிலே எங்கியாவது கொதிக்கு ஓதுற சடங்கைப் பாத்திருக்கியா?”

“நம்ம சர்ச்சுகளிலேயா?”

“பின்ன என்ன பெந்தேகோஸ்துகாரன் ஓதுற சர்ச்சையா சொன்னேன்?”

“இல்ல ஃபாதர், கேள்விப்பட்டதே இல்லை.”

“நீ இந்த ஊருதானே?”

“ஆமா ஃபாதர், மலையடிவாரம். களியல். அம்மை அங்கதான் இருக்கா.”

“அதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லியா?”

“இல்ல ஃபாதர்.”

ஃபாதர் சூசைமரியான் “கர்த்தருக்குத் துதி” என்று சொல்லி சிலுவை போட்டுக்கொண்டார்.

“என்ன ஃபாதர் அது?” என்றேன்.

“கொதின்னா சரியான தமிழிலே தண்ணியோ வேற திரவமோ குமிழியிட்டு கொப்பளிக்கிறது. இப்ப சூடுபண்ணி கொப்பளிக்க வைக்கிறதை மட்டும்தான் கொதின்னு சொல்றோம். மற்ற அர்த்தம்லாம் பின்னாடி வந்து சேர்ந்தது. ஆனா இங்க கன்யாகுமரி மாவட்டத்திலே பேசுற தமிழ் ஒரு ஐநூறு வருசம் பழசு… பல வார்த்தைகள் அதோட அசல் அர்த்ததிலேயே இங்கே இருக்கும். பல வார்த்தைகளுக்கு காலப்போக்கிலே புதிய அர்த்தம் வந்திருக்கும். அதிலே ஒண்ணுதான் இந்தக் கொதி”

”கேள்விப்பட்டதில்லை” என்று நான் சொன்னேன்.

“மலையாளத்திலே இதே அர்த்தத்திலே புழக்கத்திலே இருக்கு…” என்றார் ஃபாதர் சூசைமரியான். “நான் இங்கே தொண்டுக்கு வந்தது எழுவத்தொண்ணிலே. அப்ப இருபத்தாறு வயசு எனக்கு. நல்ல துடிப்பான பிராயம். அப்ப விடுதலை இறையியல் எங்கபாத்தாலும் கேட்டுக்கிட்டிருந்தது. நான் ஒரு சின்ன கையெழுத்துப் பத்திரிகையெல்லாம் நடத்தி ஃபிடல் காஸ்ட்ரோவையும் ஏசுவையும் ஒப்பிட்டு கவிதையெல்லாம் எழுதிட்டிருந்தேன். நேரா போனது மலையடிவாரத்திலே நெட்டாங்கிற ஊரிலே. அங்க ஒரு சர்ச். நூறுவருசம் முன்னாடி கட்டினது. அதிலே நான் பொறுப்பு.”

ஃபாதர் சூசைமரியான் சொன்னார். நூறுவருசம் முன்னாடி அங்க மலைவாழ்மக்களுக்காக ஒரு கஞ்சித்தொட்டியும் ஆஸ்பத்திரியும் கட்டியிருக்காங்க. அப்ப அங்க இருந்தவங்களுக்காக கட்டின சின்ன சர்ச் அது. பின்னாடி கொஞ்சம் பெரிசாக்கி கல்லாலே கட்டியிருக்காங்க. ஆஸ்பத்திரி இப்ப பெரிய நிறுவனமாகியிருக்கு. ஆஸ்பத்திரியோட இணைஞ்சு இப்ப அந்த சர்ச் இருக்கு. அப்ப அந்த சர்ச்சுதான் பெரிசு. ஆஸ்பத்திரிக்கு வாரம் ரெண்டுநாள் நெடுமங்காட்டிலே இருந்து டாக்டர் ஒருத்தர் வந்திட்டுப்போவார். அதை கட்டினப்ப அங்க கொஞ்சம் வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. கொஞ்சம் ஆதிவாசிகளும் வந்திட்டிருந்திருக்காங்க. அப்ப ரொம்ப சின்ன ஊரு. ஊரே இல்லை, ஒரு மலையடிவாரத்து பாதைச்சந்திப்பு.

நான் போனப்ப குடியேற்றக்காரங்க நெறையபேர் வர ஆரம்பிச்சாச்சு. ஞாயித்துக்கிழமை மாஸுக்கு ரோட்டிலே ஆள் நிக்கும். எல்லாம் மலைகூலிக்காரங்க. பரம ஏழைங்க. பொழைக்க வழியில்லாம புள்ளைகுட்டிகளோட மலையேறி காட்டுவேலைக்கு வந்தவங்க. காட்டிலே புறம்போக்கு மண்ணை ஆக்ரமிச்சு குடிசை கட்டி, மலைக்குளிரிலே மழையிலே பாம்பு யானை பண்ணின்னு சகல தொந்தரவுகளோடே வாழுற ஜனங்க. அப்ப மலேரியா பெரிய பிரச்சினை. துள்ளப்பனின்னு சொல்லுவாங்க அங்கெல்லாம். சாயங்காலமானா உடம்பு துள்ள ஆரம்பிச்சிடறதனாலே அந்தப் பேரு. அறுபதுகளிலே ஏராளமான ரப்பர் எஸ்டேட் வந்தாச்சு. அதெல்லாம் கோட்டயம் பாலா பகுதி கத்தோலிக்கர்கள். அவங்கள்லாம் வேற சர்ச்.

நான் போனதுமே முடிவுபண்ணினது என்னோட விடுதலை இறையியலுக்கு வேலைவந்தாச்சுன்னுதான். உடைவாளை உருவுடா ரெட்சணிய வீரனேன்னு நினைச்சுக்கிட்டேன். ஏழைச் சனங்க. மூர்க்கமானவங்க. படிப்பறிவே கிடையாது. குடிப்பழக்கமும் கஞ்சாப்பழக்கமும் உண்டு. அவங்களுக்கும் மலைச்சாதி மக்களுக்கும் அடிதடிகள் நடக்கும். அப்ப அங்க சர்க்கார் பள்ளிக்கூடம்லாம் வந்தாச்சு. ஆனா புள்ளைங்களை படிக்க அனுப்ப மாட்டாங்க. மலையிலே எருமை மேய்க்க அனுப்பிருவாங்க. அங்க கடுமையா வேலைசெஞ்சேன். நினைச்ச ஒண்ணுமே நடக்கலை. ஆனா ரொம்ப வெறியோட இருந்தேன். நம்ம கடமையைச் செய்வோம், பயனை கர்த்தர் பாத்துக்கிடுவாருன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள ஏமாற்றமும் கசப்பும் நிறைஞ்சுட்டுது. அது ஒருநாள் சட்டுன்னு வெடிச்சுட்டுது.

அங்க நான் சர்ச்சுக்கு பின்னாடி தனியா ரெண்டு ரூமுள்ள சின்ன வீட்டிலே தங்கியிருந்தேன். ஓட்டுவீடு. சர்ச்சோட இணைஞ்ச ஒற்றை அறையிலே கோயில்குட்டி நல்லபண்டாரம் தங்கியிருந்தாரு. மலைசாதி ஆளு. நாங்க ரெண்டுபேருதான் அங்க. நல்லபண்டாரம் இல்லேன்னா ஒண்ணும் நடக்காது. அவருக்குத்தான் ஊரு தெரியும். அவரு அங்கெயே இருபத்தஞ்சு வருசமா இருக்கிறவரு. பக்கத்திலே கிறிஸ்டோ காலனியிலே அவருக்கு வீடு. கோயில்குட்டி வேலை ஒரு மக்கள் தொடர்புக்காகத்தான். அவருக்கு மலைச்சரக்கு வாங்கி விக்கிறது, மாடு வாங்கி கொண்டு வந்து விக்கிறதுன்னு பல தொழிலு. எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை ஜாஸ்தி கிடையாது. என்னை அவருக்கு அவ்ளவா பிடிக்காது, பிடிக்காதுங்கிறதைவிட மரியாதை இல்லை.

ஒருநாள் என்னோட நல்லபண்டாரம் இல்லை. நான் மட்டும்தான் இருக்கேன். ஒரு பொம்புளை சின்னக்குழந்தையோட வந்திட்டா. பாத்தாலே தெரியும் மலைக்கூலிப் பொம்புளை. “சாமி, எனக்க பிள்ளைக்கு கொதிக்கு ஓதிக்கெட்டுங்க” ன்னு சொல்றா.

எனக்கு என்னன்னே புரியலை. “என்னது?” ன்னு கேட்டேன்

”புள்ளைக்கு கொதி விளுந்துபோட்டுது… வயித்திலே மாந்தம். கஞ்சித்தண்ணி குடிக்காம கெடக்கு… ஓதுங்க” ன்னு சொன்னா.

“ஓதுறதா? இது சர்ச்சு. ஆண்டவரோட எடம்… எல்லா துக்கத்துக்கும் நோய்க்கும் ஆண்டவரிட்டே மன்றாடினா போரும். வா ஜெபம் செய்யுதேன்” ன்னு சொன்னேன்.

“ஜெபம் வேண்டாம், ஓதிக்கெட்டினா போரும்” னு அவ சொல்லுதா.

“இங்க அதெல்லாம் செய்யுறதில்லை… வேணுமான மருந்து தாறேன். நாளைக்கு வா. டாக்டர் இருப்பார்” னு நான் சொன்னேன்.

“இல்ல, ஓதிக்கெட்டினாத்தான் செரியாகும்… சின்ன சாமியாரு ஓதிக்கெட்டுவாரு. அவரு எங்கே?” ன்னு கேட்டா.

அப்பதான் எனக்கு விஷயம் புரிய ஆரம்பிச்சுது. “இதுக்கு முன்னாடி ஓதிக்கெட்டியிருக்கியா?” ன்னு கேட்டேன்.

“ஆமா,நாலஞ்சுதடவை மூத்தவளுக்கு கெட்டியிருக்கேன்… இங்கதான் எல்லாரும் ஓதுறாங்க.”

“எதுக்காக ஓதுறாங்க?”

“சாமி இந்த மலையிலே எனக்க புருசன் கொஞ்சம் கையிலே காசுள்ள ஆளு. மலை எஸ்டேட்டிலே வாச்சுமேனாக்கும். அங்கே பைசா வரும்படி உண்டு. இங்க திங்கிறதுக்கு சோறும் கறியுமுள்ள வீடு நாங்கதான். ஆனா வீட்டைச்சுத்தி சோத்துக்குச் செத்த கூட்டம். வேற எடம் போலாம்னா இந்த வீட்டை என்ன செய்ய? ஒருவாய் நிறைஞ்சு சோறு திங்க முடியாது. நாக்க ஊறவைச்சுகிட்டு வந்திடுங்க. அதுகளுக்க பார்வை இருக்கே, எரந்து திரியுத தெருநாய்க்க பார்வை. எனக்க பிள்ளை நல்லது என்னமாம் தின்னா உடனே நாக்கு நுணைச்சு கொதிபோட்டுதுக… அந்தாலே வயிறு உப்பி இப்டி சடைஞ்சு கிடந்திருது”

என் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. “சொல்லு, கொதிக்கு ஓதினா என்ன ஆகும்?”

அவ உற்சாகமா “கொதிக்கு ஓதினா கொதிபோட்டவங்களுக்கு இந்த சீக்கு திரும்பிப் போயிரும்லா? அதுக வயிறுவலிச்சு பாடுபடும்லா? பிறவு கொஞ்சநாள் நம்மளை பாத்து எச்சி இறக்காதுல்லா?” ன்னு சொன்னா.

”சின்னச் சாமியாரு செய்யுதாரா? நீ எவ்ளவு குடுப்பே?”

“எட்டணா குடுப்பேன்…” ன்னு சொல்லி “உங்களுக்கானா ஒரு ரூவா குடுக்கேன்”ன்னு குரலை தாழ்த்தினா.

“செரி நீ இங்கே இரு… அவரு வந்தா ஓதிட்டு போ” ன்னு சொன்னேன். “நான் பள்ளிக்கூடம் வரை போகணும். வர தாமதமாகும்” சொல்லி உடனே கிளம்பிட்டேன்.

ஒருமணிநேரத்திலே நல்லபண்டாரம் வந்திட்டார். நான் அவர் வர்ரதை பாத்தேன். உடனே திரும்பி வந்தேன். நல்லபண்டரம் உள்ளே ஓதிட்டிருக்கார். சர்ச் ஜன்னல் வழியா எட்டிப்பாத்தேன். என்ன பண்ணிட்டிருக்காருன்னு.

ஒரு அகலமான பாத்திரத்திலே தண்ணிய விட்டு அது முன்னாலே குழந்தையை உக்கார வைச்சு மறுபக்கத்திலே அவரு உக்காந்திட்டிருக்கார். குழந்தை நெத்தியிலே சிலுவை போட்டுட்டு என்னமோ முணுமுணுன்னு சொல்றார். பைபிள் வசனமா இல்லை ஏதாவது மலைதெய்வத்தோட மந்திரமான்னு தெரியல்லை. குழந்தைகிட்டே அந்த தண்ணியிலே துப்பச் சொன்னார். குழந்தை மூணுமுறை துப்பிச்சு. அந்த தண்ணி நடுவிலே ஒரு சின்ன மரக்கட்டையை வைச்சு அதிலே ஒரு மெழுகுவத்தியை கொளுத்தி வைச்சார். மறுபடி மந்திரம். பிறகு ஒரு செம்பை எடுத்து மரக்கட்டையோட அந்த மெழுகுவத்தியை அப்டியே மூடினார். செம்பு தட்டிலே தொட்டுக்கிட்டிருக்கு. அதை தொட்டுட்டு மந்திரம் சொன்னார். ‘ஏசுவே கர்த்தரே!’ன்னு கூவிக்கிட்டே செம்பை மெல்ல தூக்கினார். தண்ணி துணிமாதிரி செம்புக்குள்ள இழுபட்டுது. பாதி தண்ணி செம்புக்குள்ளே மேலே ஏறிட்டுது”

நல்லபண்டாரம் குழந்தையை தொட்டு “சுத்தமா எடுத்தாச்சும்மா… பிதாசுதன் பரிசுத்த ஆவிக்கு தோத்திரம்” னார்.

“இவ்ளவு கொதி இருந்திருக்கு… நாசமாப்போறவங்க… செத்தொளிஞ்சு போகணும் சனியனுங்க” ன்னு அவ சொன்னா.

“ஏசு உடனிருப்பார்”னு நல்லபண்டாரம் சொன்னார் “பிதாசுதன் ஆவியின் நாமத்தாலே ஆமேன்.”

அவ கும்பிட்டு காசுகுடுக்கிறப்ப நான் ஆவேசமா பாய்ஞ்சு உள்ளே போய்ட்டேன். காலாலே உதைச்சு அந்த தாம்பாளத்தை தெறிக்கவிட்டேன். “வெளியே போடா நாயே… இது ஆண்டவரோட எடம். இங்க என்னடா உனக்கு வேலை? பிசாசுக்க மந்திரத்தை இங்க கொண்டு வாறியா? பொடா வெளியே”ன்னு கத்தினேன்.

அவரு திருப்பி கத்தினாரு. “நீரு போவும் வேய். வெள்ளைக்காரன் காலம் முதல் இங்க இதெல்லாம் நடந்திட்டிருக்கு… நீரு இப்ப புதிசாட்டு வந்து நொட்டுவீரா? போவும்வே…”ன்னு என்னைய பாத்து கைய நீட்டினாரு.

நான் அவரை அடிக்கப்போனேன். அந்த பொம்புளை தடுத்தா. பெரிய வாய்ச்சண்டை ஆயிடுச்சு. அவரு வெளியே போயி சட்டுன்னு சர்ச்சை பூட்டி சாவியை எடுத்துக்கிட்டார். “இது எனக்கு பெரிய சாமி குடுத்த சாவி. நான் அவருகிட்டே குடுக்கேன்… நீரு போவும்வே”ன்னு சொல்லிட்டே போய்ட்டார்.

நான் எரிஞ்சுட்டிருந்தேன். சுங்கக்காரங்களையும் பரிசேயக்காரங்களையும் எத்தனை தடவைதான் தேவாலயத்திலே இருந்து வெரட்டுறது? நேரா குலசேகரம் போனேன். அங்கே அப்ப பொறுப்பிலே இருந்தவரு ஃபாதர் ஞானையா. நான் அவரை அதுக்கு முன்னாலே நாலைஞ்சு தடவை சடங்குகளிலே பாத்ததோட சரி. நேர்ல சந்திக்கிறது அப்பதான்.

தீயோட போய் அவர் முன்னாடி நின்னேன். கத்து கத்துன்னு கத்தினேன். இப்பவே நல்லபண்டாரத்தை அனுப்பிடணும். இனி அவன் சர்ச்சு பக்கம் வரப்பிடாது. என்னென்னமோ சொன்னேன்.

ஃபாதர் ஞானையா நிதானமா கேட்டார். “சரி, சாவிய தந்திடறேன். நீங்க மலையிலே போயி இன்னொரு கோயில்குட்டியை கண்டுபிடிக்கணும்.”

“நூறுபேரு கிடைப்பாங்க”ன்னு நான் சொன்னேன்.

“ஒருத்தர்கூட கிடைக்க மாட்டாங்க”ன்னு ஃபாதர் ஞானையா சொன்னார். “அவரு வெளியே போய் ஒரு சர்ச்சு தொடங்கினா நம்ம சர்ச்சுலே நாம மட்டும்தான் இருப்போம்.”

“அதுக்காக இந்த ஷாமனிஸத்தை எல்லாம் அனுமதிக்கணுமா? பிறகு எதுக்கு சிலுவை?”

“சிலுவை சண்டை போடுறதுக்கில்லை.”

“சிலுவைப்போர் நடந்திருக்கு.” என்றேன்.

“ஆமா, ஆனா அது இந்த மாதிரி ஏழைங்க கூட இல்லை.”

“அப்ப இதெல்லாம் நடக்கட்டும்னு சொல்றீங்களா?”

“நடந்தா என்ன? நம்ம வேலை அவங்களுக்கு எதையாவது முடிஞ்சதைச் செஞ்சு குடுக்கிறது. கர்த்தரோட வார்த்தையை அவங்களுக்குக் குடுக்கிறது. அவ்ளவுதான்.”

“என்னாலே முடியாது, நான் வேற எங்கயாவது போறேன்”

“சரி… ”ன்னு அவர் அலட்டாம சொல்லிட்டார்.

“ஃபாதர் இதை நீங்க செய்வீங்களா?”ன்னு கண்ணீரோட கேட்டேன்.

“நெறைய செஞ்சிருக்கேன்…”

நான் அப்டியே திகைச்சுப்போய் பாத்தேன். அவர் ரொம்ப ஒழுக்கமான ஃபாதர்னு தெரியும். செயிண்டுன்னே அவரை கொஞ்சம் கிண்டலா கூப்பிடுவாங்க.

“ஏன்னா ,எனக்கு ஃபாதர் ப்ரென்னன் அதை செஞ்சிருக்கார்”

“ஃபாதர் பிரென்னென்னா?” என்றேன்.

”ஃப்ரெடெரிக் பிரென்னென். ஐரிஷ்காரர். அவருதான் அந்த சர்ச்சையும் ஸ்தாபிச்சவர். இந்த மலைப்பகுதிகளிலே அம்பதுவருசம் செர்வீஸ் பண்ணியிருக்கார்.”

என்னாலே பேசவே முடியலை.

“என்னோட ஊர் பக்கத்திலே வலியகுந்நுதான். தெரியுமா?”

“இல்லை.”

“அது ஒரு மலையடிவார ஊர். நான் பிறந்தப்ப அங்க எஸ்டேட் கூலிங்கதான் அதிகமும். நான் ஆயிரத்தி தொளாயிரத்தி இருபத்தொன்பதிலே பிறந்தேன். அப்பல்லாம் பஞ்சம், பட்டினி, சீக்கு. அதான இங்க வாழ்க்கை. மலைக்கிழங்கும் கொஞ்சம் வேட்டை எறச்சியும் கிடைச்சதாலே சாகாம கிடந்தோம். ஆனா அதுக்கே சண்டை அடிதடி… மண்ணிலே ஒரு நரகம்னா அதுதான்னு நான் நினைச்சுக்கிடறது உண்டு”ன்னு ஃபாதர் ஞானையா சொன்னார்.

அவரு என்ன சொல்ல வாறாருன்னு எனக்கு புரியல்லை.

“எனக்கு சின்னவயசிலே கொதியன் கோரன்னு பேரு தெரியுமா?” ன்னு ஃபாதர் ஞானையா கேட்டார்.

“கோரன்னா?”

“நான் கன்வெர்ட் ஆனப்ப ஃபாதர் பிரென்னன் போட்ட பேருதான் ஞானையா. அவரோட ஆசிரியரோட பேரு ரேமார்ட். அதுக்கு தமிழ் அர்த்தம் ஞானையா” ஃபாதர் ஞானையா சொன்னார். “நான் அவரை பாக்கிறப்ப எனக்கு ஏழு வயசு. அப்பா மலைக்கூலி. அம்மாவும் ஊரிலே காட்டுலே சுள்ளி பொறுக்குவா. ஒரு மாடு உண்டு. எட்டு பிள்ளைங்களிலே நான் கடைசி. எங்கம்மா பெத்தது பதினேழு பிள்ளைங்க. மிஞ்சினது எட்டு. நான் கடைசிக்கு முந்தினவன். எங்க வீட்டிலே அப்பல்லாம் ராத்திரி எதையாவது சமைச்சா உண்டு. மத்தபடி பிள்ளைகளுக்கு வேளைக்கு சாப்பாடு குடுக்கிற வழக்கமே இல்லை. எங்கம்மா காலையிலே கெளம்பிப்போனா சாயங்காலம்தான் வருவா. அப்பா வாரம் ஒருநாள் வருவார். பகல் முழுக்க நாங்க கோழிகள் மாதிரி கொத்திக்கொத்தி தீனிக்கு அலைவோம். எந்த முட்டையானாலும் குடிச்சிருவோம்… பாம்புமுட்டையைக்கூட”

நான் திடுக்கிட்டதிலே கை ரெண்டும் நடுங்கிட்டுது.

ஃபாதர் ஞானையா புன்னகைச்சு “பாம்புமுட்டைய குடிக்கலாம்… ரொம்ப சின்னதா இருக்கும். ஆனா நஞ்சு கிடையாது…” ன்னு சொன்னார்.

எனக்கு குமட்டல் வந்திட்டுது.

“அப்பல்லாம் காட்டிலே நிறைய கிடைக்கிறது பாம்புமுட்டைதான். ஒருநாளைக்கு அம்பது முட்டைகூட குடிச்சிருக்கோம். ஆனா முட்டைய தொட்டுப்பாக்கணும். அதுக்குள்ள குஞ்சுபாம்புக்கு உடம்பு வந்திருக்கக்கூடாது. கருவாத்தான் இருக்கணும்… அது தொட்டுப்பாத்தா தெரிஞ்சிரும். பாம்பு முட்டை தோல்மாதிரித்தான் இருக்கு… ஓடைக்கரையிலே முதலைமுட்டை கிடைக்கும். அது கொஞ்சம் வயிறார கிடைக்கும். அதையும் குடிப்போம். சின்ன பாம்புகளை பிடிச்சு தலையை வெட்டி போட்டுட்டு உரிச்சு சுட்டு திம்போம். முதலைக்குட்டிகளை பிடிச்சு கொன்னு உரிச்சு திம்போம். ஓணான்கூட திம்போம். எல்லா காய்களும் பழங்களும் திம்போம். அன்னாசிச்செடியோட குருத்து இருக்கே அதைப் பிடுங்கி திம்போம்… இன்னதுதான்னு இல்லை. தின்னா சாகக்கூடாது, அவ்ளவுதான். அப்பப்ப தின்னது பிடிக்காம வாந்தி வரும். பாம்புகடிச்சு, முதலைபிடிச்சு, நஞ்சு உள்ளபோய் செத்துக்கிட்டே இருப்பாங்க. என் சின்னத்தம்பி ஒருத்தனை மலைப்பாம்பு புடிச்சு விழுங்கிட்டுது. அந்த மலைப்பாம்பை புடிச்சு கிழிச்சப்ப தம்பி உள்ளே ஒடிஞ்சு சுருண்டு கருப்பிள்ளை மாதிரி இருந்தான். அந்த பாம்பை வெட்டி கறியா பங்கு போடுறதுக்கு ஊரிலே அடிதடி சண்டை”

ஃபாதர் ஞானையா ஒருமாதிரி சிரிப்போடே சொல்லிட்டிருந்தார். எனக்கு என்ன முகபாவனை காட்டுறதுன்னே தெரியலை.

“அப்டி ஒரு வாழ்க்கை. பசிவாழ்க்கைன்னு நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். தாறேன், படிச்சுப்பாருங்க. அந்த வாழ்க்கையிலே எல்லாருமே தீனிவெறியனுங்கதான். அதிலே எனக்கு கொதியன்னு பேருன்னா நான் எப்டி இருந்திருப்பேன்? தீனிப்பைத்தியம். எங்க எவரும் எதை தின்னுட்டிருந்தாலும் போயி வாய்பாப்பேன். கேப்பேன். அவங்க கீழே போட்டதை எடுத்து சப்பிப்பாப்பேன். துரத்தினாக்கூட போகமாட்டேன். என்னோட கொதிப்பார்வை ரொம்ப சக்தியானதுன்னு ஊர்லே பேச்சு. நான் சும்மா பாத்தாலே போரும், சாப்பிட்டவங்களுக்கு வயிறு உப்பிரும். அதுவும் நல்லதுதான். எனக்கு ஒரு துண்டாவது வீசி எறிஞ்சிருவாங்க.”

“அப்ப எங்கூர்லே ஃபாதர் பிரென்னன் வருவார். ஒரு சைக்கிள் வச்சிருந்தார். ரொம்ப சின்ன சைக்கிள். அதை ஓடையிலே எல்லாம் தூக்கி அந்தப்பக்கம் போவார். தென்னை மரப்பாலம் வழியா சைக்கிளை தூக்கி தலைமேலே வைச்சுகிட்டு நடப்பார். நல்ல வளத்தியான ஆள். அவ்ளவுபெரிய மூக்கு. அதிலே சின்னச்சின்னச் சிவப்பு பருவா இருக்கும். பச்சைக்கண், உதடே கிடையாது. பல்லு கூழாங்கல்லு நெறம். எப்பவுமே சிரிச்சுட்டே இருப்பார். ஆனா அவரை ரெத்தபூதம்னு ஊர்லே சொல்லுவாங்க. அவரைப் பாத்ததுமே பாதிப்பேர் ஓடிருவாங்க. தொப்புளை கூர்ந்து பாத்து கண்ணாலே ரெத்தத்தை உறிஞ்சிருவாருன்னு பயம்”

“ஆனா கொஞ்சம் கொஞ்சமாட்டு அவரு ஊரிலே பழகிட்டாரு. ஜெபம் பண்ணுவாரு, மருந்து குடுப்பாரு, கூடவே மந்திரமும் போடுவாரு. பேய்பிசாசுக்கு ஓதிக்கெட்டுதது, ஊதிவிடுறது எல்லாம் செய்வாரு. அப்டித்தான் ஜனங்க அவருகிட்டே நெருங்கினாங்க. நாங்கள்லாம் தூரத்திலே இருந்து பாத்து ‘ரெத்தபூதமே கூ!’ன்னு சத்தம்போட்டுட்டு ஓடிருவோம்…”னு ஃபாதர் ஞானையா சொன்னார். நான் அவர் பேசுறத பிரமைபுடிச்சு கேட்டுட்டு இருந்தேன்.

இப்ப அவரோட அந்த முகத்தை நேரிலெ பாக்கிற மாதிரி இருக்கு. அப்ப வேற மாதிரி இருப்பார். கட்டுமஸ்தான உடம்பு. சிரிப்பு மாறாத ஆளு. நல்ல கறுப்பு நெறம். நீளமுகம். பெரிய கண்ணும் பெரிய பல்லுவரிசையும் கருப்பு முகத்திலே பளிச்சுன்னு தெரியும். ஒரு மழைநாளிலே அவர் கல்லுமலை சர்ச்சிலே பிரேயர் பண்ணினது ஞாபகம் வருது. மழை இருட்டு. அவரோட பல்லும் கண்ணும் மட்டும்தான் தெரியுது… ஒரு மனுசனோட புன்னகையை அவன் உடம்பிலே இருந்து பிரிச்சு எடுத்து தனியா வைச்சதுமாதிரி

ஃபாதர் சூசைமரியான் தொடர்ந்து சொன்னார். ஃபாதர் ஞானையாவுக்கு அருமையான கனக்குரல். சில கருப்பு ஜாஸ் பாடகர்களுக்கு அப்டி குரல் உண்டு. பேசினா குரல் நம்மை அப்டியே சூழ்ந்துகிடும். குகைக்குள்ள நாம நிக்கிற மாதிரி இருக்கும். பாடினா கார்வை நம்ம வயித்திலே வந்து நிறையும். அன்னிக்கு அவரு ஒரு சம்பவம் சொன்னாரு. அதை இப்ப நினைச்சுகிட்டேன்.

ஃபாதர் ஞானையா எங்கிட்ட சொன்ன சம்பவம் இது. ஒருநாள் பிரென்னன் துரை ஊருக்குள்ள வாரப்ப நாலஞ்சுபேர் ஃபாதர் ஞானையாவை காட்டுகொடிகளாலே கையையும் காலையும் கட்டி தூக்கிட்டு போறாங்க. அவரு சின்னப்பையன் அப்ப. நல்லா அடிச்சிருக்காங்க. பையன் மயங்கி கிடக்கான். “எங்க தூக்கிட்டு போறீங்கன்னு” பிரென்னன் துரை கேட்டிருக்காரு.

“சாமி, இவன் உடம்பிலே மலைக்கூளிப் பேயி இருக்கு. இவனுக்க ஆத்மாவை அது தின்னுட்டுது. இப்ப உள்ள அதுதான் இருக்குது. அதனாலேதான் இவனுக்கு என்ன தின்னாலும் கொதி கூடிட்டே இருக்கு. ஊரிலே ஒரு குழந்தையும் ஒருவாய் சோறு திங்கமுடியல்லை. நேத்து சவுண்டனுக்க எளைய மக சுட்ட சீனிக்கிளங்கு திங்கிறப்ப இவன் அவ கீளே போட்ட தோலை எடுத்து தின்னிருக்கான். கொதி விளுந்துபோட்டு. குட்டிக்கு ராத்திரிக்கு கொடலுகுத்து வந்து துடிச்சா… காலம்பற செத்துட்டா… இனி இவனை விடமுடியாது. காட்டிலே கொண்டுபோயி போடுததுக்கு போறோம்’னு சொல்லுறாங்க.

“இந்த கூளியை இங்கே காட்டிலே விட்டா இவன் செத்ததும் அது திரும்பி இன்னொருத்தன் மேலே ஏறிடுமே”ன்னு பிரென்னன் துரை சொன்னாரு

அவனுக பயந்துட்டானுக. என்ன செய்யுறதுன்னு தெரியாம நின்னு தடுமாறினாங்க.

“எங்கிட்ட குடுங்க. நான் கூட்டிட்டுப்போயி பெரிய சாமியை வைச்சு கூளிய ஓட்டுறேன்… கூளி இங்க திரும்பி வராது” ன்னு பிரென்னன் துரை சொன்னாரு. அப்டியே பையனை குடுத்திட்டாங்க. சைக்கிளிலே வைச்சு கூட்டிட்டு வந்திட்டாரு.

ஃபாதர் ஞானையா அதுக்குப்பிறகு பதினெட்டு வருசம் பிரென்னன் துரைகூடத்தான் இருந்தாரு. சிலுவையை ஏத்துக்கிட்டு ஞானையாவா ஆனாரு. பிரென்னன் துரை அவரை படிக்கவைச்சாரு.

வளந்ததும் இவரே ஃபாதர் ஆகணும்னு பிரென்னன் துரை கிட்டே சொன்னாரு. ’இல்லே, நீ வாழ்க்கையை வாழ்ந்து பாரு… நீயும் உன் ஏழு தலைமுறையும் தின்னுகுடிச்சு சந்தோசமா இருந்தவங்க கிடையாது. நீ அப்டி இரு. அதாக்கும் கர்தருக்க சித்தம்’னு பிரென்னன் துரை சொன்னாரு. ‘நான் துறந்துட்டு வந்தேன்னா அதுக்கு காரணம் வேறே. எனக்கும் சேத்து என் அப்பா தாத்தா தலைமுறை அனுபவிச்சாச்சு.”

“இல்லே எனக்கு எதிலேயும் நிறைவு தோணல்லை. நான் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கமுடியும்’னு இவரு சொன்னாரு. ஆறுமாசம் கெடு குடுத்த பிறவு இவருக்க உறுதியைப்பாத்துட்டு பிரென்னன் துரை இவரை செமினாரியிலே சேத்துவிட்டாரு.

ஃபாதர் சூசை மரியான் சொன்னார். இதான் ஃபாதர் ஞானையாவோட கதை. அவரு எங்கிட்ட சொன்னாரு “என்னை ஏன் பிரென்னன் துரை காப்பாத்தினாருன்னு ஒரு தடவை சொன்னாரு. பசியுள்ளவனுக்குத்தான் ருசியிருக்கும். கொடும்பசியிருந்தா உலகமே இனிக்கும். நீ பசியுள்ளவன். நீதான் கர்தரோட கனியை ருசிப்பேன்னு தோணிச்சு’ன்னு. அது உண்மைதான். பசியா இருக்கேன். நானறிஞ்ச உணர்ச்சின்னா பசி மட்டும்தான்.”

நான் என்ன சொல்லுறதுன்னு தெரியாம உக்காந்திட்டிருந்தேன். ஃபாதர் ஞானையா சொன்னாரு “பாவப்பெட்ட சனங்க. பசிதான் அவங்களுக்கு எல்லாமே. அது வெறும் சோத்துப்பசி இல்லை. ஒண்ணுமே போய்விழாத அவ்ளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு. அதை நிறைக்கிறதுக்கு உண்டான வெறியைத்தான் பசீன்னு நினைச்சுக்கிடுறானுக. கொண்டா கொண்டான்னு உடம்பும் மனசும் ஆத்மாவும் சத்தம்போடுது. அது அதலபாதாளம், ஆனா அள்ளிப்போடுதது அஞ்சுவிரல் கைப்பிடி…”

அந்த நாள் நல்லா ஞாபகமிருக்கு.வெளியே மழைக்காறலிலே மங்கலா இருக்கு. அறை பாதி இருட்டு. ஃபாதர் ஞானையாவுக்க பல்லும் கண்ணும் மட்டும் தெரியுது. அவரு பேசிக்கிட்டே போனாரு. சிலசமயம் நாம நமக்கு முன்னாடி இருக்கிறவங்களை சாமின்னே நினைச்சு பேசுவோம் இல்ல, அப்டி.

“நல்ல பசிவேணும்டேன்னு பிரென்னன் துரை சொன்னாரு. அதை நான் பிடிச்சுக்கிட்டேன். படிப்பிலே பசியோட இருந்தேன். அந்தப்பசிதான் இங்க கொண்டுவந்து சேத்துது. இங்க உக்காந்து இந்த சனங்களைப் பாக்குதேன். எறும்புக்கூட்டத்தை பாக்கிற மாதிரி இருக்கு. பசிவெறியிலே தீனி இல்லேன்னா அப்பவே செத்துடுவோம்கிற மாதிரி எறும்புகள் அலையுதத பாத்திருக்கேருல்ல, அதுமாதிரித்தான். பாவப்பட்ட ஜனங்கய்யா. பாவப்பட்ட ஜனங்க, ரொம்ப பாவப்பட்ட ஜனங்க. அதை மட்டும் சொல்லிட்டே இருங்க. இதாக்கும் ஞானமந்திரம். நல்லவங்களா கெட்டவங்களான்னு பாக்காதீங்க. அறிவுண்டா இல்லியான்னு பாக்காதீங்க. ரெட்சிக்கப்பட்டவங்களா இல்லையான்னு பாக்காதீங்க. பாவப்பட்ட ஜனங்க, பசிச்ச ஜனங்க. அதைமட்டும் பாருங்க. அவங்களை மேய்க்க நீங்க வரலை. அவங்களுக்கு குடுக்க மட்டும்தான் வந்திருக்கீங்க.”

நான் அழுதிட்டேன். ஃபாதர் ஞானையா எந்திரிச்சு வந்து என் தோளை தொட்டாரு. “சரி விடுங்க. உள்ள நல்ல போர்க் வறுக்குத மணம் வருது. வாருங்க ஓரோ பிடி பிடிப்போம்”னு சொல்லி கூட்டிட்டுப் போனாரு. போறவழியிலே எங்கோ பாத்துக்கிட்டு பேசினாரு.

“நமக்கு அப்ப முதல் இப்ப வரை வயித்துப் பசியும் ஜாஸ்தியாக்கும். பிரென்னன் துரை கூட வந்த நாள் முதல் இன்னைக்கு வரை ஒருநாள் ஒருவேளைகூட நான் இறைச்சி இல்லாம சோறு தின்னதில்லை பாத்துக்கிடுங்க. கோழியெல்லாம் நமக்கு பத்தாது. நல்ல போர்க் இல்லேன்னா பீஃப் வேணும். நல்லா கடிச்சு சவைச்சு தின்னாத்தான் தின்னமாதிரி இருக்கும். சொன்னா நம்பமாட்டீங்க, ராத்திரி பத்துமணிக்கு மூக்குமுட்ட தின்னுட்டு போயி படுப்பேன். நடுராத்திரியிலே முழிப்பு வரும். அய்யோ, சாப்பிடாம படுத்திட்டோமேன்னுதான் முதல் நினைப்பு. சமையலறையிலே சாப்பாடு இல்லியோன்னு மனசு பதைக்கும். அந்தாலே ஓடிப்போயி சட்டிபானைகளை உருட்டி அள்ளிப்போட்டு தின்னாத்தான் நிறைவு. ஒவ்வொருநாளும் காலையிலே கண்முழிக்கிறப்ப முதல் நினைவு கர்த்தாவுன்னா அடுத்த நினைவு தீனிதான்…” அவரோட முகம் அப்டி சிவந்து பழுத்தமாதிரி இருந்தது.

நான் பாத்திட்டே இருந்தேன். ஃபாதர் ஞானையா சிரிச்சுக்கிட்டே சொன்னார் “நான் அப்டி ஆயிட்டேன், என்னத்த சொல்ல? நம்மளைப் பத்தி கேட்டுப்பாருங்க. எந்த விருந்திலேயும் முதல் பந்திதான். அடிச்சுப்புரண்டு போயி உக்காந்திருவேன். சோத்தப்பாத்தா பிறகு என்னைய என்னாலே கட்டுப்படுத்திக்கிடமுடியாது. பிரசங்கத்திலே நான் சொல்லுத உதாரணமெல்லாம் தீனியப்பத்தித்தான்.கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், சங்கீதம் முப்பத்துநாலு எட்டு. எனக்குப் பிடிச்ச பைபிள் வார்த்தை அதாக்கும். நாகர்கோயிலுகாரனுக சிரிப்பானுக. கொதியன் ஞானையான்னு இப்பமும் சிலர் சொல்லுறது உண்டு. சொல்லிட்டுப் போறானுக. நமக்கு கொதி இருக்கிறது வாயிலேயோ வயித்திலேயோ இல்ல, ஆத்மாவிலேயாக்கும்.”

நாங்க ரெண்டுபேரும் போய் உக்காந்து போர்க் எறைச்சியும் சப்பாத்தியும் சாப்பிட்டோம். ஃபாதர் ஞானையா சாப்பிடுறதைப் பாத்தா நிஜம்மாவே பயந்திருவோம். அப்டி அள்ளி அள்ளி சாப்பிடுவார். பூதங்கள் சாப்பிடுததுபோல. அவருக்கு தீனிப்பூதம்னும்பேரு உண்டு.

“எனக்கும் கொதி விழுறதுண்டு. அப்பப்ப வாயு ஏறிடும். புளிச்சஏப்பம் வந்திடும்… கொதிக்குன்னு ஒரு ஜெபம் வச்சிருக்கேன், செரியாயிடும்… நீங்க பாத்தியளே அந்த மந்திரவித்தையைக்கூட செய்யுறது உண்டு…. தண்ணியிலேன்னா பாதி தண்ணி உள்ள போகும். ஒயினிலேன்னா முழுசாட்டு உள்ளே போயிடும்”. அவர் சிரிச்சப்ப நானும் சிரிச்சேன்.

நான் கிளம்புறப்ப என் தோளிலே தட்டி ஞானையா சொன்னாரு. “தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து வாழணும்னு வேதம் சொல்லுது. எசக்கியேல் பதினெட்டு ஏழு. ஆனா பத்துபிள்ளை பெத்து ஒத்த கைப்பிடி சோறு வைச்சிருக்கிற அம்மைகிட்ட அதைச் சொல்லமுடியாது. இல்லாத கூட்டம் இது. அயலானுக்குக் குடுத்து தின்னா எல்லாரும் சேந்து சாவணும்னு இருக்கு வாழ்க்கை. அப்டித்தான் இருப்பாங்க. அம்மைகள் அப்டித்தான் இருந்தாகணும். அவங்க பிள்ளைகளை சாகாம காப்பாத்தணும்ல?”

நான் அவர் முகத்தை பாக்கலை. நான் வெளியே போறப்ப அவர் பின்னாடியே வந்து நின்னாரு. “நல்லபண்டாரம் நல்லவன். அவன்கிட்டே சொல்லிடுறேன்… மனசை பழக்கிக்கிடுங்க. தீனி திங்கிறவன் குற்றவுணர்ச்சி இல்லாம நிறைஞ்சு தின்னு சந்தோசப்படுற ஒரு காலம் வரும். அந்த நாளிலே எல்லாருக்கும் கைநெறைய என்னமாவது திங்கிறதுக்கு இருக்கும். அப்ப இதெல்லாம் மறைஞ்சிரும். பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே”ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணினார்.

”அதுக்குப்பிறகு நான் பலமுறை ஃபாதர் ஞானையாவைச் சந்திச்சதுண்டு. நாங்க சேந்து நிறைய பயணம் செஞ்சிருக்கோம். அவரோட ஞானபுத்திரன்னு என்னைய சொல்லுவாங்க. அந்த முதல்நாளுக்கு பிறகு அவரைப்பத்தி புதிசாட்டு தெரிஞ்சுகிடிறதுக்கு எனக்கு ஒண்ணுமே இல்லை….” என்று ஃபாதர் சூசைமரியான் சொன்னார். புன்னகைத்து “மத்தவங்களுக்கு தமாஷா இருக்கும். திருவனந்தபுரம் பிஷப் ஹவுஸிலே பெரிய விருந்து. சாப்பிட்டுட்டு அப்டியே நாகர்கோயில் வாறோம். கோவளம் பக்கத்திலே ஒரு சின்ன ஓட்டலிலே வீட்டுச்சாப்பாடுன்னு போட்டிருந்தான். சாக்பீஸிலே பீஃப் பிரைன்னு எழுதியிருந்தான். இவரு அதைப் பாத்துட்டு நாக்கை நுணைச்சுக்கிட்டு வேய், நல்லாயிருக்கும் போல, சாப்பிட்டுப் போலாம்னு சொல்றார். என்ன சொல்ல? விடமாட்டார். இறங்கிப்போயி மறுபடியும் சாப்பிட்டோம். அவரோட மனசும் வயிறும் எலாஸ்டிக்காலேன்னு சொல்லுவாங்க”

ஃபாதர் சூசைமரியான் தனக்கே என சொல்லிக்கொண்டே போனார். “இங்க நோன்பிருந்து பட்டினியாலே மெலிஞ்ச பலபேர் உண்டு. ஆனா சாமானிய ஜனங்கள் ஃபாதர் ஞானையாகிட்டதான் வருவாங்க. அவருதான் அவங்களுக்கு நெறைஞ்ச சாமி. அவரு தொட்டா நோய் குணமாகும், ஜெபிச்சா ஆண்டவருக்குக் கேட்கும். அப்டி ஒரு நம்பிக்கை. அவரும் அவங்களுக்க ஆளுதான். அம்பதாண்டுகள் அவங்களுக்க எல்லா சுகதுக்கங்களிலேயும் கூட இருந்தவர். அவர் இந்த சனங்களுக்குச் செய்த அளவுக்கு செய்தவங்க யாருமில்லை.”

அதன்பின் அவர் பேசாமல் வெளியே பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஏசுதாசன் செல்போனை நோண்ட ஆரம்பித்தான். நான் அவர் சொன்னதை தொகுத்துக் கொள்பவன்போல யோசிக்க ஆரம்பித்து வேறெங்கோ சென்றுவிட்டேன்.

அம்பலமுக்கு சென்று சேர்ந்தபோது வெயில் ஏறியிருந்தது. நேராக சாப்பிடத்தான் சென்றோம். ஃபாதர் ஞானையா தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர் விழித்துக்கொண்டதும் அவர் வீட்டுக்குச் சென்றோம்.

ஓட்டுவீடு. வெளியே தெரிந்ததைவிட அதிக இடம் உள்ளே இருந்தது. உள்ளே தாழ்வான கட்டிலில் ஃபாதர் ஞானையா படுத்திருந்தார். அருகே ஒர் உதவியாளன் நின்றிருந்தான். கம்பவுண்டர் பையன். நாங்கள் வருவதைச் சொல்லியிருந்தார்கள். அவர் விழித்திருந்தார். அவர் உடல் முதுமையால் மிகவும் வற்றியிருந்தது. ரத்தக்குறைவால் உடலின் கருமை வெளிறியிருந்ததாக தோன்றியது. சுருங்கிய தோல் எலும்புகள்மேல் தளர்வாக படிந்த கைகள் தசைகள் வற்றி இழுபட்டமையால் வலிப்பு போல இழுபட்டு வளைந்திருந்தன. நகங்கள் நீண்டு விரல்களும் கோணலாகி ஒன்றோடொன்று பின்னியிருந்தன. முகத்திலிருந்து தசையும் தோலுமாக உருகி வழிந்து தாடையிலிருந்து தொங்கிக்கிடப்பதுபோல, எக்கணமும்  பிய்ந்து விழுந்துவிடும் என்பதுபோல தோன்றியது. மூக்கு புடைத்து பளபளவென்றிருந்தது. தசைவளையங்கள் தொங்கும் கண்கள் பழுத்து நிறமிழந்திருந்தன. மூக்கினுள் இருந்த அடர்த்தியான நரைத்தமுடி அவர் தலையை சற்று தூக்கியிருந்தமையால் தெளிவாக தெரிந்தது.

மிகமெல்ல “ம்ம்” என்றார் ஞானையா. அந்த முனகல் வழியாக சமகாலத்துக்கு வந்தார். “வரேல்லியேன்னு நினைச்சேன்” என்றார்.

“கொஞ்சம் வேலை… இப்ப நல்லா இருக்குதியளா?” என்றார் ஃபாதர் சூசைமரியான்.

“என்னத்த நல்லா? இனி ஆஸ்பத்திரியாலே பிரயோசனமில்லை. போறநேரம். இங்கேருந்து போனா வழி கொஞ்சம் பக்கம்…” புன்னகைத்து “அங்க சிட்டியிலே எங்க பாத்தாலும் பைசாவுக்க சத்தம்டே. பிரார்த்தனைகள் ஏசுவுக்கு கேட்காது” என்றார்.

ஃபாதர் சூசைமரியான் “இது நல்ல எடம்” என்றார்.

ஞானையா “போறதுக்குண்டான எடம்… ஆனா காம்பு இன்னும் அறமாட்டேங்குது. கனி விழாம நின்னுட்டிருக்கு… பாப்போம்” என்றார். “சாப்பிட்டியளா?”

“சாப்பிட்டாச்சு” என்றார் ஃபாதர் சூசைமரியான்.

ஃபாதர் ஞானையா என்னைப் பார்த்து புன்னகைத்தார். வைப்புப் பற்களுடன் அவருடைய சிரிப்பு மிக அழகாக இருந்தது. சின்னக்குழந்தைபோல.

“இவரு நம்ம அசிஸ்டெண்டு… சிறில் ஐசக்னு பேரு…” என்றார் ஃபாதர் ஞானையா.

“கடப்பொறம் ஆளாடே?” என்றார்.

“ஆமா” என்றேன்.

”அந்த ஏரியாப்பக்கம் போகாதே. அவனுகளுக்குள்ள ஆயிரம் சண்டை. அதிலே உன்னையும் இளுத்து விட்டிருவானுக… மலைப்பக்கமா போ. பாவப்பெட்ட சனங்களாக்கும் அங்க…”

“செரி”

“மலையிலே இப்ப எவ்ளவோ முன்னேற்றம்… ரப்பர் வந்து நல்லது பண்ணியிருக்கு. ஆனா இன்னும் நெறைய செய்யணும்” என்றார் ஞானையா.

சூசைமரியான் “நாங்க வாறப்ப மலயை பத்தித்தான் பேசிட்டு வந்தோம்” என்றார். “மலையிலே அந்தக்காலத்திலே இருந்த ஒரு பழக்கம் இருந்ததே, கொதிக்கு ஓதுறது..”

“ஆமா, நம்மளை கொதியன் ஞானையன்னு சொல்லுறதுண்டு… இப்ப அதெல்லாம் ஆரும் ஓதுறதில்லை” என்றார் ஞானையா.

“ஆமா” என்றார் சூசை மரியான்.

“இப்ப ஒரு கொதிக்கு ஓதிப்பாத்தா என்ன?” என்று ஞானையா கேட்டார்.

“யாருக்கு?” என்றார் சூசை மரியான்

“எனக்குதான்டே… கொதியிலே ரெண்டு வகை உண்டு. வருகொதி, போக்கொதி. இன்னொருத்தன் நம்மளைப் பாத்து கொதிபோடுறது வருகொதி. நாம கொதி விட்டுட்டு இருக்கிறது போக்கொதி… அது என்னான்னா, நம்ம மனசிலே நிறையாம இருக்குதது… எதையாவது எண்ணி மனசுக்குள்ளே கொதிபோட்டுட்டே இருக்கிறவன் மெலிஞ்சு வெளுத்திருவான். வயிறு உப்பிக்கிட்டே வரும்… அவனுக்கு கொதி ஒழிக்கணும்னு ஓதுறது போக்கொதி. வருகொதி தண்ணியிலேயோ பாலிலேயோ வைப்பாங்க. போக்கொதி குருதியிலே வைக்கணும்”

“குருதியா?”

“இந்த காணிக்காரங்க வைப்பாங்களே. மஞ்சத்தூளையும் சுண்ணாம்பையும் கலந்து செங்குருதி… அதிலே.”

”அது இப்ப…” என்று சூசைமரியான் தயங்கினார்.

“பாப்பம்டே. சும்மா ஒரு இதுதானே…”

ஃபாதர் சூசைமரியான் என்னை பார்த்தார். நானும் ஏசுதாசனும் சமையலறைக்குச் சென்று ஒரு அகன்ற பாத்திரத்தையும் செம்பையும் எடுத்துவந்தோம். நான் ஒரு பாக்கெட் மஞ்சள்தூளும் நாலைந்து சாக்குகட்டிகளும் எடுத்துக்கொண்டேன்.

ஃபாதர் ஞானையாவின் அறையில் வைத்து கொதி ஓதும் குருதியை தயார்செய்தோம். மஞ்சள்தூள் கரைத்த நீரில் சாக்பீஸ் பொடியை கலந்ததுமே ரத்தம்போல ஆகியது

“ஏசுகிறிஸ்துவோட ரத்தம்” என்று ஃபாதர் ஞானையா சொன்னார். “நம்ம சர்ச்சிலே இந்த ரத்ததை காட்டியிருந்தா இன்னும் கொஞ்சம் காணிக்காரனுக வந்திருப்பானுக…”

ஃபாதர் சூசைமரியான் ஒருவகையான சங்கடத்துடன் இருந்தார். அந்த பேச்சை ஏன் எடுத்தோம் என அவர் எண்ணுவது தெரிந்தது

“செய்டே” என்றார் ஃபாதர் ஞானையா.

ஃபாதர் சூசைமரியான் மேலும் தயங்கினார்.

”நீ கொதிக்கு ஓதுறது நெறைய செஞ்சிருக்கே இல்ல?”

“ஆமா , அந்தக்காலத்திலே…”

“என்ன மந்திரம் சொல்வே?”

“பைபிள்தான்…”

“செய் பாப்பம்”

ஃபாதர் சூசைமரியான் என்னை சங்கடமாக பார்த்தார். நான் புன்னகைச் செய்தேன்.

“இனி எனக்கு நிறையவேண்டியது என்னன்னு பாருடே…” என்றார் ஃபாதர் ஞானையா.

ஃபாதர் சூசைமரியான் வேறுவழியில்லை என்பதுபோல தலையை அசைத்தபின் தாம்பாளத்தின் அருகே அமர்ந்தார். தாம்பாளத்தின் செந்நீரை தொட்டபடி கண்களை மூடி ஜெபம் செய்தார். அவர் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன.

பின்னர் தாம்பாளத்தை தூக்கி ஃபாதர் ஞானையா அருகே கொண்டுசென்றார். “தொடுங்க” என்றார்

ஃபாதர் ஞானையா அதை சுட்டுவிரலால் தொட்டார்.

மீண்டும் ஜெபம் செய்தபடி தாம்பாளத்தில் இருந்த சிவந்த நீரின் நடுவே மரக்கட்டியில் மெழுகுவத்தி ஏற்றி வைத்தார். கனமான பெரிய மெழுகுவர்த்தி, ஃபாதர் பிரார்த்தனைக்கு ஏற்றுவது. சுடர் பந்தம்போல பெரிதாக எழுந்து ஆடியது

ஃபாதர் சூசைமரியான் “பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே” என்று சொன்னபடி செம்பை எடுத்து அதன்மேல் கவிழ்த்தார்.சற்றுநேரத்தில் குருதிபோல் அலைகொண்ட சிவந்த நீர் உள்ளே சென்றது. உரத்த உறிஞ்சும் ஒலி கேட்டது. மொத்த நீரும் உள்ளே போய்விட்டது. ஒரு சொட்டுகூட தாம்பாளத்தில் இல்லை

“ஒரு சொட்டு மிஞ்சல்ல… அதாக்கும்டே, ரெத்தம். தூயரெத்தம்” என்றார் ஃபாதர் ஞானையா.

ஃபாதர் சூசைமரியான் செம்பை அந்த தாலத்தில் வைத்துவிட்டு எழுந்தார். கைகளை கட்டிக்கொண்டு நின்றார்.

“அவ்ளவுதான்…” என்றார் ஃபாதர் ஞானையா “நாளைக்கு இல்லேன்னா நாளைக்களிஞ்சு… அதுக்குமேலே இல்லை.”

ஃபாதர் சூசைமரியான் ஒன்றும் சொல்லாமல் பார்த்து நின்றார்.

“தொண்ணூத்தொண்ணு வருசமாச்சு… அறிஞ்சது எல்லாம் பசிதான். பசி அடங்கணும்… கடேசிப்பசி.”

அவர் கண்களை மூடிக்கொண்டார். சுருக்கம் விழுந்து மடிந்த இமைகளுக்குள் கருவிழிகள் ஓடிக்கொண்டிருப்பதை கண்டேன்.

“ரெஸ்ட் எடுங்க ஃபாதர்” என்றார் ஃபாதர் சூசைமரியான்.

ஃபாதர் ஞானையா தலையை அசைத்தார்.

காலடியோசை கேட்காமல் வெளியே வந்தோம். ஃபாதர் சூசைமரியான் விடுவிடுவென முன்னால் சென்றுவிட்டார். நானும் ஏசுதாசனும் பின்னால் சென்றோம். ஏசுதாசன் கையில் அந்த தாம்பாளம் இருந்தது. அதில் நீர்நிறைந்த செம்பு அழுத்தமாக ஒட்டியிருந்தது. பிடுங்கித்தான் எடுக்கவேண்டும்.

“இதை என்ன செய்ய?” என்றான்.

“கொண்டுபோயி சர்ச்சிலே வையி” என்றேன் “அது ஒரு திருஇருதயமாக்கும்.”

***

 

[ கனடாவிலிருந்து வெளிவரும் ‘காலம்’ இதழின் ஜனவரி 2021 இலக்கத்தில் வெளியான கதை]\


1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைவிவாதம்,மொழி, எல்லைகள்
அடுத்த கட்டுரைசொல்வளர்காடு