இயற்கையின் சான்றுறுதி

போப்பிக்கு அஞ்சலி

நவீன் அவருடைய பிரியத்திற்குரிய நாய் போப்பியின் மறைவைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்.நான் போப்பியை பார்த்திருக்கிறேன். பேய்ச்சி நாவலிலும் அதை குட்டியாக கண்டெடுத்த நிகழ்வு வருகிறது.

நவீனின் கட்டுரையில் நான் கவனித்த ஒன்று, வீட்டை மறுகட்டமைப்பு செய்யும்போது போப்பிக்கு தூசி ஒவ்வாது என்பதனால் அதை நாய்களுக்கான காப்பிடத்தில் கொண்டுசென்று விட்டதாக எழுதியிருக்கிறார். போப்பி அதனால் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகி சோர்வுற்றது. அதற்கு உரிமையாளர் மீதிருந்த நம்பிக்கையே உடைந்தது

இது சிறிய அளவில் ஹீரோ விஷயத்திலும் நிகழ்ந்தது. அப்போது எங்களுக்கு இருநாய்கள். இரண்டும் விளையாடட்டும் என வாங்கினோம். ஆனால் வளர்ந்ததுமே டெட்டி என்ற டாபர்மான் நாய் ஹீரோவை எங்கு பார்த்தாலும் கடிக்க தொடங்கியது. தன் எல்லைக்குள் அது வேறெந்த நாயையும் விடவில்லை. ஆகவே இருவரையும் கடைசிவரை தனித்தனியாகவே வளர்த்தோம்.

பகலில் ஹீரோ வெளியே இருப்பான். இரவில் அவன் கூண்டுக்குள் செல்ல கூண்டில் இருக்கும் டெட்டி வெளியே வருவான். இருவருக்கும் வேறுவேறு கூண்டுகள். ஒருவர் கூண்டில் இன்னொருவர் இருக்க மாட்டார்கள். எப்போதாவது கூண்டுமாற்றிவிட்டால்கூட அமைதியிழந்து முனகிக்கொண்டிருப்பார்கள்.

ஊருக்குச் செல்லும்போதுதான் சிக்கல் வந்தது. இருவரையும் என்ன செய்வது? டெட்டியை காம்பவுண்டுக்குள்ளேயே திறந்து விட்டுவிடுவோம். டாபர்மான் நாய்கள் தங்கள் நில எல்லையை மாற்ற விரும்பாதவை. மிக விழிப்பாக எல்லைக்காவல் செய்பவை. லாப்ரடார் இன நாயான ஹீரோவை கொண்டுபோய் டாக்டர் டேவிட்டின் நாய்க்காப்பகத்தில் விட்டோம்.

தன் எல்லையை கடக்க வளர்ந்தபின் நாய்கள் விரும்புவதில்லை. அவை அப்படியே ஒடுங்கிவிடுகின்றன. அவற்றால் புதிய சூழலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நம்பிக்கையிழக்கின்றன, எரிச்சலும் பதற்றமும் கொள்கின்றன. உணவுண்ணாமல் உயிர்விடும் நாய்கள்கூட உண்டு. ஹிரோ மிகவும் கஷ்டப்படுவான். ஆனால் வேறுவழி தெரியவில்லை.

முதல் முறையாக காப்பகத்தில் கொண்டுவிட்டுவிட்டு இரண்டுநாட்களுக்குப் பின் சென்றபோது பின்பக்கம் கூண்டில் அவன் இருப்பதாகச் சொன்னார்கள். சென்று பார்த்தால் கூண்டு காலியாக இருந்தது. ஒருகணம் கழித்தே அதன் மூலையில் கரிய நிழலாக தெரிந்தது ஹீரோதான் என்று கண்டேன். நான் அவனை அழைத்தபோதும் அவன் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. எழுந்து மிகமிக மெல்ல நடந்துவந்தான். உடல் மெலிந்திருந்தது. கண்களில் பீளை, வாய் உலந்திருந்தது.

அவனுக்கு காய்ச்சலா என்று சந்தேகப்பட்டேன். டாக்டரிடம் சொன்னேன். அவர் பார்த்துவிட்டு நன்றாகத்தான் இருக்கிறான் என்றார் ஆட்டோவில் உந்தி ஏற்றவேண்டியிருந்தது. என்னை அவன் அடையாளம் காணவே இல்லை. உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ஆட்டோ வீட்டை நெருங்கியபோது அவனிடமிருந்து ஒரு முனகல் எழுந்தது. நெஞ்சடைத்ததுபோன்ற ஓர் அழுகை. இறங்கியதுமே வாலை தாழ்த்தியபடி ஓடி அவனுக்கான இடத்தில் போய் அமர்ந்துகொண்டான். ஒரு காலை தூக்கிவைத்து அழுதுகொண்டே இருந்தான்.

அதன்பின் ஓரிருமுறை கென்னலில் விட்டிருக்கிறோம். ஒரு நாள், மிஞ்சிப்போனால். வெளியூர்ப் பயணம் என்றால் எவரையாவது வரச்சொல்லி வீட்டில் தங்கவைத்துவிட்டே சென்றோம். வெளிநாட்டுப் பயணங்களில் அருண்மொழியின் பெற்றோர் எங்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.

நாய்கள் இடம் சார்ந்தவை. மிகச்சிறிய இடமேகூட போதும், ஆனால் அதில் மாறுதலை அவற்றால் ஏற்கமுடியாது. தெருநாயிலேயே அயலிட நாய் அதன் அனைத்து கம்பீரங்களையும் இழந்து ஒடுங்கி பக்கவாட்டில் கால்வைத்து, கண்களை முன்னும் பின்னும் பார்க்கும்படி தலையை சரித்துவைத்து, ஓடுவதைக் காணலாம்

நாயை இடம் மாற்றுவது முடிந்தவரை தவிர்க்கப்படவேண்டும். இடம் மாற்றினால் நாமும் உடன்சென்று தங்கவேண்டும். அது அந்த இடத்தை பழகிக்கொள்ள நாம் உதவவேண்டும். வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் நாய்க்கு நாம் புரியவைக்கவேண்டும். அது சீரான பழக்கங்களில் அமைந்த வாழ்க்கை கொண்டது. உணவுநேரம் மாறினால், உணவு மாறினால், உணவுப்பாத்திரம் மாறினால்கூட குழம்பி ஏமாற்றம் அடைகிறது. அதற்கு நாம் விளக்கவேண்டும். சிறிய செய்கைகள் வழியாக. அதை எப்படிச் சொல்வது என நாய் வளர்ப்போர் அறிவார்கள். ஆச்சரியமளிக்கும் வேகத்தில் நாய் அதையெல்லாம் புரிந்துகொள்ளும்.

நவீன் போப்பிக்கு வேறு உணவு அளித்ததில்லை என்கிறார். ‘மகிழ்ச்சியான நாய் என்பது ஒரே இடத்தில் ஒரே உணவை ஒரே தட்டில் ஒரே வேளையில் பெற்று வாழ்வது’ என்று ஒரு சொல் உண்டு. நாய்களுக்கு வெவ்வேறு வகை உணவுகள்மேல் ஏக்கமோ எதிர்பார்ப்போ இல்லை. உண்ணமுயலும். அவற்றுக்கு எண்ணை, புரோட்டீன், புலால் மணங்கள் பிடிக்கும். ஆனால் உணவை மாற்றாமலிருந்தால்தான் அவை மகிழ்ச்சியாக இருக்கும்

நாய்களுக்கு மனிதன்மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவை ஒருபோதும் மனிதனை கைவிடுவதில்லை,தானாக வெறுப்பதில்லை. இயல்பான வெறியால் கடித்துவிட்டால்கூட கடுமையான குற்றவுணர்ச்சி அடைகின்றன. ஒரே ஒருமுறை நான் வளர்த்த நாட்டுநாய் என்னை மெல்ல கடித்திருக்கிறது. ஆனால் பத்துப்பதினைந்து நாட்கள் கடித்த இடத்தை நக்கி என்னை ஆறுதல்செய்து மன்னிப்பு கோரியபடியே இருந்தது.

பதிலுக்கு மனிதன் நாயின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளவேண்டும். அதன் விருப்பத்தை மதிக்கவேண்டும். ஒரு கட்டத்தில் ஹீரோ அவனுக்காக கட்டிய கென்னலில் நுழையவே மாட்டேன் என்று சொல்லிவிட்டான். வீட்டு முகப்பில்தான் படுப்பேன் என்று அறிவித்தான். கொஞ்சம் சொல்லிப்பார்த்தோம், அதன்பின் விட்டுவிட்டோம். டோராவை கட்டிப்போடவே முடியாது, பத்துநிமிடம்கூட தாங்க மாட்டாள். கட்டிப்போட்டுப் பார்த்தோம், பிடிக்காமல் இருந்தமையால் விட்டுவிட்டோம்

அதுதான் நாய்க்கு நம் மீது நம்பிக்கையை உருவாக்கும் செயல். அந்நம்பிக்கை அறுபட விட்டுவிட்டால் இப்புவியில் நாம் அடையச்சாத்தியமானவற்றில் மகத்தான ஓர் உறவை இழந்துவிடுகிறோம் என்று பொருள்

நாயை அடிப்பது நம் ஆத்மாவை நாமே அடித்துக்கொள்வது. நாயை அடிப்பவர்கள் அகஇருள் நிறைந்த வன்முறையாளர்கள். நீங்கள் அடிக்க அடிக்க அந்த அடியை உங்கள்மேல் மாறா அன்புடன் பெற்றுக்கொள்ளும் ஓர் உயிரை, அதன் கனிந்த கண்களை பார்த்தபடி அடிக்கிறீர்கள். அதன் அழுகைக்குரல் வலியால் மட்டுமல்ல, உங்கள்மீதான நம்பிக்கை உடையும் துயரத்தால் என்றுகூட உணராமலிருக்கிறீர்கள். முனிவர்களை வதைப்பதற்கு நிகரான செயல் அது.

நாய்க்கு எதையுமே  அடித்து கற்பிக்கமுடியாது. நாய்க்கு நீங்கள் அடிப்பது எதனால் என்று அறிந்துகொள்ள முடியாது. நாய்க்கு ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் ஒற்றைச்சொல்லில் திரும்பத்திரும்ப அறிவுறுத்துவதே ஒரே வழி. அது ஒன்றை தொடக்கூடாது என்றால் தொடும்போதெல்லாம் ‘நோ’ சொன்னால்போதும். ஒன்றை செய்யவேண்டும் என்றால் சொல்லிச் செய்யவைத்தபின் சற்றே பாராட்டினால்போதும். என் வீடெல்லாம் புத்தகங்கள். என் நாய்கள் ஒரு தாளைக்கூட கிழித்ததில்லை. எடுத்து கொண்டுவந்து பத்திரமாக வைப்பதுகூட உண்டு ‘படிக்க ஆரம்பிச்சிரும்போல’ என்று அருண்மொழி சொல்வாள்.

நாட்கணக்கில் நாயுடன் விளையாடாமலிருப்பது, அதை புறக்கணிப்பது பெரும்பிழை. நாயை அது சோர்வுறச்செய்யும். நாய் நம் கொஞ்சலை எதிர்பார்த்து, நம் பாராட்டை எதிர்பார்த்து குழைந்தபடி அருகே வரும்போது அதை துரத்திவிடுவது அதை அடிப்பதற்கு நிகர்தான். நாய்கள் புண்படுகின்றன, அவமதிக்கப்பட்டதாக உணர்கின்றன. அவற்றின் செயல்களைப் பார்த்தால் அதன் தன்மதிப்பு அடிபட்டிருப்பதாக அது உணர்வதை கண்டுபிடிக்கமுடியும்.

நாய் தவறு செய்துவிட்டால் கண்களை தாழ்த்தி ஒடுங்கி அமர்ந்திருக்கும். அதுவே குற்றவுணர்வு அடைந்துள்ளது என்று பொருள். அப்போது சற்றே முறைக்கலாம், அது செய்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கலாம். ஆனால் அதை அதன்பின்னரும் தண்டிப்பதனால் அதை ஆழமாக புண்படச்செய்கிறோம்.

நாம் நாயின் உரிமையாளன் அல்ல. அது நம் அடிமை அல்ல. நாயின் உலகில் அவ்வகை உறவுகள் இல்லை. நாய் நம்மை அதன் ‘கூட்டத்தை’ சேர்ந்த உயிர் என நினைக்கிறது. நம் குடும்பம் அதன் Pack மட்டுமே. நம்மில் ஒருவரை அது கூட்டத்தின் தலைவராக எண்ணிக்கொள்கிறது. கூட்டத்தின் தலைவருக்கு தனக்கு உணவளிக்கும் பொறுப்பு உண்டு, கூட்டத்தை பாதுகாப்பதும் வழிகாட்டுவதும் ஏவப்படுவதை செய்வதும் தன் பணி என அது நினைக்கிறது.

என் டாபர்மான் நாய்கள் வேட்டையாடுபவை. ஓணான் கொக்கு என எதையாவது பிடித்தால், அரிதாக பூனைகளையே கொன்றுவிட்டால், கொண்டுவந்து என் வீட்டு முற்றத்தில்போட்டுவிட்டு என்னை அழைக்கும். நான் வந்து அதன் இதயத்தையும் ஈரலையும் உண்டுவிட்டு எஞ்சியதை அதற்கு அளிக்கவேண்டும். அதுதான் அவர்களின் உலகத்து நெறிமுறை.

பாலு மகேந்திரா நாய்களுடன் சேர்ந்து ஊளையிடுவார். ஏன் என்று கேட்டேன். ‘நான் அதோட பேக் லீடர். நான் ஊளையிட்டா அது சந்தோஷப்படும்’ என்றார். நாயை தன் உடைமை என, அடிமை என நினைப்பவர் நாயின் அன்பை உண்மையில் அடையாமலிருக்கிறார். நாய் நண்பன், துணைவன் மட்டுமே. உலகியலுக்கு மட்டுமல்ல, ஆத்மாவுக்குக்கூட.

பக்கத்துவீட்டில் ஒருமுறை அப்போது வாடகைக்குக் குடியிருந்தவர்கள் வெயிலில் நாயை கட்டியே போட்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களே உணர்வார்கள் என்று காத்தேன். அதன் அலறல் கூடிக்கொண்டே இருந்தது. சட்டென்று பொறுமையிழந்து அவர்களின் வீட்டு கேட்டை ஓங்கி உதைத்து திறந்து உள்ளே போய் நாயை அவிழ்த்துவிட்டு தண்ணீர் வைத்து எச்சரிக்கை செய்துவிட்டு வந்தேன். நான் நாகரீகமானவன், என் அப்பா என்றால் நான்கு அறைவிடாமல் வரமாட்டார். புதுக்கடை பக்கம் பஸ்ஸில் செல்கையில் நாயை அடித்த ஒருவனை பஸ்ஸை நிறுத்தச்சொல்லி பாய்ந்திறங்கி குடையால் அடித்தவர் அவர்

ஒருமுறை மாத்ருபூமியில் என்னை பேட்டி எடுத்தனர். பக்கத்துவீட்டு நாய் குரைத்தபடியெ இருந்தது. சுரணையற்ற முறையில் நாய் வளர்ப்பவர்கள் அவர்கள். அப்போது வீட்டில் எவருமில்லை. பொறுத்துப்பார்த்தபின் நான் காம்பவுண்ட் மேல் ஏறி எட்டிப்பார்த்து ‘என்ன சத்தம்? வேலைநடக்குது தெரியலையா? வாயை மூடு” என ஓர் அதட்டல்போட்டேன். கண்களை தாழ்த்திக்கொண்டு அமர்ந்துவிட்டது. அதன்பின் வேலைமுடிவது வரை அமைதி, அதை மாத்ருபூமியிலேயே எழுதியிருந்தார்கள்.

நாம் இயல்பாக அன்பை நம்புபவர்கள் அல்ல. கருணை தியாகம் எதன்மேலும் நமக்கு உண்மையான நம்பிக்கை இல்லை. ஆகவேதான் சொல்லிச் சொல்லி பெருக்கிக் கொள்கிறோம். கவிதைகளும் கதைகளும் எழுதுகிறோம். சினிமாக்கள் எடுக்கிறோம். அத்தனைக்கும் அப்பால் அன்பு என்பது ஒரு பிரபஞ்சஉண்மை அல்ல, ஒரு லௌகீக ஏற்பாடுதான் என ஆழத்தில் எண்ணிக்கொண்டும் இருக்கிறோம். நாய் அன்பு என்பது இங்கே நாமறியாமல் உயிர்க்குலங்களை ஆளும் மகத்தான சிலவற்றின் வெளிப்பாடு என்று நமக்கு காட்டுகிறது. இயற்கை நமக்கு அளிக்கும் ஒரு நம்பிக்கை, ஒரு சான்று. அதை உணர்வதுகூட அனைவராலும் இயல்வது அல்ல. உணர்வோர் நல்லூழ் கொண்டவர்கள்,  அவ்வளவுதான்.

போப்பி அதன் முழுவாழ்க்கையை வாழ்ந்துவிட்டே சென்றிருக்கிறது. 11 ஆண்டுகள் என்பது வெளிநாட்டு வகை நாய்களுக்கு முழுவாழ்க்கைதான். இந்தியாவின் வெப்பச்சூழலில் அவற்றுக்கு பூஞ்சை, பாக்டீரியா, புழுத்தொற்றுக்கள் மிகுதி. அதற்குமேல் தாக்குப்பிடிப்பதில்லை. கிரேட்டேன் பத்தாண்டை தாண்டுவதே அரிதுதான்.[ஆனால் தெருநாய்கள் அதிகம்போனால் நான்காண்டுகளே வாழ்கின்றன. வளர்ப்புநாய்களே நீடுவாழ்பவை]

போப்பி தன் அன்புக்கு உரியவர்களுடன் இருந்திருக்கிறது. அன்பை திரும்பப்பெற்று தன் இடம் மீண்டிருக்கிறது

போப்பிக்கு அன்பு

இருநாய்கள்

பின்தொடரும் பிரம்மம்

ஊரென்றமைவன…

ஹீரோ

நாயுலகு

அய்யா!

குரைத்தல்வாதம்

டோரா

மை நேம் இஸ் பாண்ட்

இன்னும் அழகிய உலகில்…

முந்தைய கட்டுரைமீரா- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைதோழமை யோகம்