ஐந்து குரல்கள்

இனிய ஜெயம்

இதோ மற்றொரு பாடலில் தாஸேட்டன்.  எந்தன் கனவின் தாமரை தடாகத்தின் பாடலில் உள்ள தாஸேட்டன் இளைஞன் எனில், இந்த இந்திர நீல தாஸேட்டன் பதின் பருவமும் விலகாத இளமைப் பருவம் இன்னும்  முகிழாத இடைநிலை பருவத்தினன். (ஆமாம் இந்த பருவ மயக்க வயதுக்கு தமிழில் என்ன பெயர்?). மூக்கை தவிர்த்துவிட்டு பார்த்தால், இதே வயதில் இருக்கும் கொஞ்சம் கமலின் சாயலில் தெரிகிறார். இந்தப் பாடலில் இருந்து அந்தப் பாடலுக்கு தாஸேட்டன்  ‘நடிப்பிலும்’ சற்றே முன்னேற்றம் தெரியத்தான் செய்கிறது .

P.b. ஸ்ரீனிவாஸ் கம்பீரமாக இருக்கிறார். ஆலாபனையின் துவக்கமும் கம்பீரமாக இருக்கிறது. அவரால் அக்ஷர சுத்தமாக தெலுங்கிலேயே மலையாளப் பாடல்  (பாடலு)  பாட முடியும் என்பதை இந்தப் பாடல் வழியே அறிந்தேன். :)

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

ஒரு ஆர்வமூட்டும் பழைய படம் இது.குருதத்தின் ப்யாஸா [1957] என்ற படத்தை தழுவி கன்னடத்தில் ஒரு படம் எடுக்கப்பட்டது. அது கன்னடத்தில் ராஜ்குமார் நடிக்க கண்தெரடுநோடு என்றபெயரில் 1961ல் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அதை மலையாளத்தில் காவ்யமேளா என்ற பெயரில் 1965ல் மலையாளத்தில் எடுத்தார்கள். மூன்றுமொழிகளிலும் பெரிய வெற்றி

மூலத்தில் ஒரு கவிஞன் புகழுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் செய்யும் முயற்சிகளும் அவனுடைய காதலும் வெற்றியும்தான் கதை. கன்னடத்தில் கண்தெரியாத கவிஞனாக ஆக்கிவிட்டார்கள். மலையாளத்தில் பிரேம் நசீர் கண் தெரியாத கவிஞனாக நடித்திருக்கிறார். மலையாளப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பரிசுகளும் பெற்றது.

தமிழில் அந்த உரிமையை வாங்கி தேவி என்ற பெயரில் எடுத்தனர். படுபாதாள தோல்வி என்று தெரிகிறது. முத்துராமனை கவிஞனாக ஏற்க நம்மவர்களால் முடியவில்லையா, அல்லது கவிதை, புத்தகவெளியீடு, பதிப்பகத்தார் நடுவே பூசல் என்பதெல்லாம் தமிழர்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லையா என்று தெரியவில்லை.

மலையாளத்தில் தட்சிணாமூர்த்தி இசையமைத்த எல்லா பாடல்களுமே புகழ்பெற்றவை. அதில் இந்தப்பாடல் இன்றும் பெரிதும் விரும்பப் படுகிறது. கண்தெரியாத கவிஞனின் கவிதையை இன்னொருவன் திருடி தன் கவிதை என்று சொல்லி பிரசுரித்து பெரும்புகழ் பணம் எல்லாம் ஈட்டுகிறான். கவிஞன் போராடி தன்னை நிரூபிக்கிறான். ஆனால் ஒரு கவிதையின் ஆன்மாவை உணரத்தெரியாமல் போலியை நம்பிவிட்ட சமூகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு நாடோடியாக கிளம்பிவிடுகிறான்.

[எந்த ஊரில் நடக்கிறது என்ற குழப்பம் அக்கால ரசிகர்களுக்கு வரவில்லை. எல்லாம் நடக்கச்சாத்தியமான சினிமாவில்தான். தமிழில்தான் பத்துபேரை ஒருவர் அடிக்கும் சண்டையை நம்பத்தெரிந்த மக்களால்கூட இதை நம்ப முடியவில்லை]

ஸ்வப்னங்ஙள், ஸ்வப்னங்ஙளே
நிங்ஙள் ஸ்வப்ன குமாரிகளல்லோ
நிங்கள் ஈ பூமியில் இல்லாயிருந்நெங்கில்
நிச்சலம் சூன்யம் ஈ லோகம்

தெய்வங்களில்ல மனுஷ்யரில்லா பின்னே
ஜீவித சைதன்யமில்லா
சௌந்தரிய சங்கப்ல சில்பங்ஙளில்லா
சௌகந்திகப் பூக்களில்லா

இந்த்ரநீலம் கொண்டு மானத்து தீர்த்தொரு
கந்தர்வ ராஜாங்கணத்தில்
சந்திரிக பொன் தாழிகக்குடம் சார்த்துந்ந
கந்தர்வ ராஜாங்கணத்தில்
அப்சர கன்யகள் பெற்று வளர்த்துந்ந
சித்ர சலஃபங்ஙள் நிங்ஙள்
ஸ்வர்கத்தில் நிந்நும் விருந்ந்து வராறுள்ள
சித்ர சலஃபங்கள் நிங்ங்கள்

ஞான் அறியாதே என்றெ மானச ஜாலக
வாதில் துறக்குந்நு நிங்ஙள்
சில்பிகள் தீர்த்த சுமருகளில்லாதே
சித்ரமெழுதுந்நு நிங்ஙள்
ஏழல்ல எழுநூறு வர்ணங்களால் எத்த
வார்மழ வில்லுகள் தீர்த்து
கண்ணுநீர் சாலிச்சு எழுதுந்நு மாய்க்குந்நு
வர்ண விதானங்கள் நிங்ஙள்

தட்சிணாமூர்த்தி

[தமிழில்]

கனவுகள், கனவுகளே நீங்கள்
சொர்க்கத்தின் புதல்விகள் அல்லவா?

நீங்கள் இப்புவியில் இல்லாமலிருந்தால்
அசைவற்றது வெறுமையானது இவ்வுலகு

தெய்வங்களில்லை மனிதரில்லை பின்னே
வாழ்வின் ஒளியுமில்லை
அழகின் கற்பனைச் சிற்பங்களில்லை
மணம் மிக்க மலர்களுமில்லை

இந்திரநீலத்தால் வானத்தில் கட்டிய
கந்தர்வ அரச சபைபில்
நிலவு பொன் கலசம் சமைக்கும்
கந்தர்வ அரச சபையில்
அப்சர கன்னியர் பெற்று வளர்க்கும்
பட்டாம்பூச்சிகள் நீங்கள்
சொர்க்கத்திலிருந்து விருந்து வரும்
வண்ணத்துப்பூச்சிகள் நீங்கள்

நான் அறியாமல் என் உள்ளத்தின் சன்னல்
வாசலை திறக்கிறீர்கள் நீங்கள்
சிற்பிகள் செய்த சுவர்கள் இல்லாமல்
சித்திரம் எழுதுகிறீர்கள் நீங்கள்
ஏழு அல்ல எழுநூறு வண்ணங்களால்
எத்தனை வானவிற்களை சமைக்கிறீர்கள்
கண்ணீரில் தொட்டு எழுதி அழிக்கிறீர்கள்
எத்தனை வண்ணப்பரப்புகளை நீங்கள்

மகாகவி என்று புகழ்பெற்றுவிட்ட ஜெயதேவனின் கவிதைகளை ஒரு கல்லூரி ஆண்டுவிழாவில் ஐந்து பேர் பாடுகிறார்கள். அவர் புகழ்பெறுவதை காட்டும் காட்சி. மேடையில் திரைக்கதை அமைத்த எஸ்.எல்.புரம் சதானந்தன் இருக்கிறார்.

இந்தப்பாடலில் ஒரு காலப்பதிவு உள்ளது. பி.லீலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏசுதாஸ் மூவருமே பாடகர்கள். ஆனால் இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாஸன், தட்சிணாமூர்த்தி இருவருமே நன்றாகப்பாடுவது ஆச்சரியம்தான்

இந்த பாடலின் தமிழ் வடிவம்தான் தித்திக்கும் முத்தமிழே. இன்னொரு செய்தி, இதை எழுதியவர் பல்லடம் மாணிக்கம்  எனக்கும் பல தமிழ் இலக்கியவாதிகளுக்கும் தெரிந்தவர். தமிழாசிரியர். பின்னாளில் செங்கல்சூளை வைத்து செல்வம் ஈட்டினார். பல்லடத்தில் மிகச்சிறந்த ஒரு நூலகத்தை உருவாக்கினார். இலக்கியவாதிகளின் புரவலராக இருந்தார்

ஜெ

முந்தைய கட்டுரைதல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா
அடுத்த கட்டுரைநீலம் – சுரேஷ் பிரதீப்