பாரதியின் ஊழிக்கூத்து
அன்புள்ள ஜெ
இன்றைக்கு தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த இசையமைப்பாளர் ராஜன் அவர்களின் ஊழிக்கூத்து பற்றி என் எண்ணத்தை சொல்ல வேண்டும். அந்த பாடல் வெளிவந்த உடனே கேட்டிருந்தேன். அதை கேட்ட அன்று அது அத்தனை பெரிதாக அப்பாடல் என்னை கவர்ந்ததாக தெரியவில்லை. முதலில் ஏதோ ஒன்று என விட்டுவிட்டேன். மறுநாள் காலையில் கண் விழிக்கையில் அன்னை அன்னை ஆடும்கூத்தை நாடச்செய்தாய் என்னை என்ற ஈற்றுவரி மனதில் ஓடிகொண்டே இருந்தது. அப்போது தான் நானே உணர்ந்தேன் அப்பாடல் என்னை அத்தனை ஊடுருவியிருக்கிறது என்று. அதன்பின் இரண்டொரு முறை மீண்டும் கேட்டேன். என் உள்ளம் கவர்ந்த பாடல்களில் ஒன்றானது. அப்பாடலுக்கான பரதமும் பொருத்தமாக காட்சியை கண்முன் நிறுத்துகிறது.
இங்குள்ள பெரும்பாலானவர்களை போலவே கர்நாடக சங்கீதம் குறித்து ஏதுமறியாதவர்களில் ஒருவனே நானும். அவற்றை எப்போதாவது கேட்டாலும் ஏதும் புரியாது தெரியாததால் கூர்ந்து கேட்பதில்லை. ஆனால் ராஜன் அவர்களின் பாடல்கள் கர்நாடக சங்கீதம் போல சில இடங்களில் வந்தாலும் அதில் அவர் சேர்க்கும் வெவ்வேறு வகையான இசை கருவிகள் வழியாக என்னை போல வெகுஜன இசை ரசிகனையும் கட்டிபோட்டு விடுகின்றன. உண்மையை சொல்லவேண்டுமென்றால் சினிமா பாடல்களை தாண்டி நம் மரபிசையின் சாயல் கொண்டவற்றில் நான் விரும்பி ரசிப்பவை ராஜன் அவர்களின் பாடல்களை தான். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த பாடலான பாலும் தெளிதேனும் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றானது.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள ஜெ
பாரதியின் ஊழிக்கூத்து பாடலை நான் இரண்டு மூன்று முறை கேட்டேன். இந்தப்பாடல்களுக்கு நமக்கு பலவகையான வடிவங்கள் ஏற்கனவே தெரிந்தவையாக உள்ளன. பெரும்பாலும் கர்நாடக சங்கீத வடிவங்கள். அவை ஒருவகை நிறைவை நமக்கு அளிக்கின்றன. ஆனால் அதற்குமேலும் நமக்கு தேவையாகிறது. ஒருவகையான புதிய உணர்வை அளிக்கும் பாடல்கள். ஏனென்றால் நாம் நம்மையறியாமலேயே மேலை இசைக்கு பழகிவிட்டிருக்கிறோம். மேலையிசையின் நுட்பங்களை நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் முழுக்கமுழுக்க மேலையிசையில் தமிழை கேட்பதும் நமக்கு உவக்கக்கூடியதாக இல்லை. நாம் ஃப்யூஷனை ரசிப்பது இதனால்தான். இந்தப்பாடலில் இசை கர்நாடகசங்கீதமாகவும் பின்னணி இசைக்கோப்பு மேலைநாட்டு இசையாகவும் அமைந்துள்ளது. அது அளிக்கும் உற்சாகமும் துடிப்பும் ஒருநாள் முழுக்க நீடிக்கிறது
சிவக்குமார். எம்