சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்

இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

இரம்யாவின்’’இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை’’ பதிவை வாசித்தேன். தேவாலயத்தின் பலிபீடத்தின் முன் நின்று ’’என்னை பயன்படுத்து’’ என்ற அவரின் வேண்டுதல்  நிறைய யோசிக்க வைத்தது. தேவனுக்கே இப்படியான வேண்டுதல் மிகப்புதிதாக இருந்திருக்கும். அருமையான பதிவு. ஆக்கிரமிப்பு மரமான சீமைக்கருவேலம் [ Prosopis juliflora ] வைக்குறித்தும் எழுதியிருந்தார். அவரது கவலை நியாயமானது.

1877ல் ஜமைக்கா’விலிருந்து இந்தியாவுக்கு தருவிக்கப்பட்டதால் ’’சீமைக்கருவேலம்’’  (foreign acacia) என்றழைக்கப்படும், பெரு’வை தாயகமாக கொண்ட இந்தத் தாவரத்தை குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

கிரேக்க மொழியில்  இதன் அறிவியல் பெயரான புரோசோபிஸ் ஜுலிஃப்ளோரா’வில்(Prosopis juliflora)   ‘pros’, என்பதற்கு ‘towards’, என்றும் ‘Opis’, என்பது அறுவடை மற்றும் விவசாயத்தின் கடவுளாக கிரேக்க தொன்மவியலில் கருதப்படும் Saturn ன் மனைவியும், மிகுதியான வளத்தின் கடவுளுமான (God of Abundance and fertility)  ’opis’ன் பெயரையும் குறிக்கின்றது. சிற்றினத்தின்  juliflora (julus, சாட்டையைபோன்ற) சிறு கயிறு போல தொங்கும் இதன் மலர்க்கொத்தை (flora) குறிக்கின்றது. இதன் பல்கிப்பெருகும் இயல்பு பெயரிலேயே இருக்கின்றது.

சீமைக்கருவேலம், வேலிக்காத்தான், வேலிக்கருவை, உடைமரம்,  டெல்லி முள் செடி, மலையாளத்தில் முள்ளன், தெலுங்கில் முள்ளு தும்மா எனவும் ஆங்கிலத்தில் பொதுவாக Mesquite என்றும்  அழைக்கப்படும் இந்த மரத்தின் விதைகள் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் மிக அதிக எண்ணிக்கையில் எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய  அறிமுகப்படுத்தப்பட்டதென்றாலும், 1877-ம் ஆண்டே வெள்ளையர்களால் இவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன.

சந்தனம், செம்மரம், தேக்கு, வேங்கை, போன்ற மரங்களை ஏராளமாக தங்களின் தேவைகளுக்கென அழித்த ஆங்கிலேயர்கள் அவற்றிற்கு பதிலாக, அடர்ந்த வேர்த்தொகுப்புக்கள் கொண்டு மண் அரிப்பைத் தடுக்கும் என்பதனாலும் உறுதியான மரம் விறகுக்கு ஏற்றது என்பதனாலும்  வறட்சியை தாங்கி விரைவாக வளருமென்பதனாலும், தரிசு நில மேம்பாடு போன்ற காரணங்களை முன்வைத்து இம்மரங்களை அறிமுகப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. தென்னிந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் விளைவிக்க இம்மரத்தின் விதைகளை அப்போதைய மதராஸின் வடக்கு மாகாண வனப்பாதுகாவலராக இருந்த  Col. R.H. Bendome என்பவர்  1877’ல் ஜமைக்காவிலிருந்து இதன் விதைகளை தருவித்தார். இதன் பொருட்டு அவரெழுதிய கடிதமே அரசுஆவணங்களில் இருக்கிறது அதன் ஒரு பகுதியை இணைத்திருக்கிறேன்.

Prosopis   பேரினத்தின் 44 சிற்றினங்களில் பலவற்றை அப்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தாலும் ஜூலிஃப்ளோராவும் பல்லிடாவுமே இங்கு செழித்து வளரந்தது. இப்போதும் P. juliflora மற்றும் P.pallida இரண்டுமே  தோற்றம், வளர்ச்சி,பூக்கும் காலம் உள்ளிட்ட பல ஒற்றுமைகளை கொண்டிருப்பவை. இவ்விரண்டையும் அத்தனை சுலபத்தில் வேறுபடுத்திவிட தாவரவியலாளர்களாலேயே முடியாது.  இதன் சிற்றினங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துதலில் பலமுறை (taxonomical errors)  இனங்காணுதலின் பிழைகள் ஹவாய், சூடான் மற்றும் பெரு’வில் பலமுறை நடந்து பின்னரே சரி செய்யப்பட்டிருக்கின்றது.

அப்போது அத்தனை விரைவாக இந்தியாவில் பரவியிருக்காத இவற்றை 1953ல் மதராஸ் கால்நடைதீவனத்துறை விறகுக்காகவும் தீவனத்திற்காகவும் அதிகம் வளர்க்க முடிவுசெய்தது. இவற்றின் விதைகளும் நாற்றுக்களும் கிடைக்குமிடங்கள் நாளிதழ்களில் கூட விளம்பரப்படுத்தப்பட்டன. பின்னர் இதன் பயன்களை தெரிந்து காமராஜர் இவற்றை தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் அறிமுகப்படுத்தினார்.

நிலத்தடி நீரை நாடிச்செல்லும் வேர்களைக் கொண்டிருக்கும் phreatophyte  வகையைச் சேர்ந்த தாவரமான இம்மரத்தில் பசுமஞ்சள் உருளைகளாக மலர்க்கொத்துக்களும், சங்கிலி்களைப்போலிருக்கும் வெடிக்காத கனிகளும், மிக உறுதியான முட்களும் இருக்கும். சிறிய கூட்டிலைகளையும் பிசினையும் கொண்டிருக்கும்  இவை நீர்வளம் இருக்கும் பகுதிகளில் வளருகையில் தரமான தேனையும் கொடுக்கும். நட்ட மூன்றாவது வருடத்திலிருந்து பூத்துக்காய்க்க துவங்கும். பூக்கும்காலங்களில் மழைப்பொழிவிருப்பின 3 அல்லது 4 மடங்கு கனிகளை உருவாக்கும்.

எட்டு மாதங்களுக்கு முற்றிலும் மழையில்லாவிட்டாலும்கூட பசுமை மாறாத மரங்களாகவே இருக்கும். செடியாகவும், அடந்த புதராகவும், விறகுக்காகவெனில் மரங்களாகவும் இவற்றை  தேவைக்கேற்ப வளர்க்கலாம்.

அறிமுகப்படுத்தப்பட்ட இருபது ஆண்டுகளில் உலகின் பலபகுதிகளிலும் சாதாரணமாக காணப்படும் மரமாகிவிட்ட இவற்றின் ஆயிரக்கணக்கான விதைகள் விழுந்து ஏராளமான  நாற்றுக்களும் முளைத்தன. இதன் விதைகளை உண்ணும் கால்நடைகளின்  சாணத்திலிருக்கும் செரிமானமாகாத விதைகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளுக்கு பல்கிப்பரவி,  அறிமுகப்படுத்தபட்ட சில வருடஙகளிலேயே இதன் பயன்பாடுகள் குறித்த வெற்றிக்கதைகளினால் Royal plant என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆக்ரமிக்கும் இதன் இயல்பினால் 2004ல் உலகின் மிகக்குறைவாக விரும்பப்படும் 100 தாவரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்து சாத்தானின் செடி என்று பெயர் வாங்கியது.

இந்தியாவில் அப்போது இதன் விதைகளை வாங்க உழவர்கள் வரிசையில் காத்திருந்தனர். உயிர்வேலியாக இதன் உபயோகத்தை  கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தார்கள். இனிக்கும் இம்மரத்தின் காய்களை ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிட்டன.  தமிழக சத்துணவு கூடங்களின் அடுப்புகளிலும் சீமைக்கருவேல விறகுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதனால்  விறகுக்காக முன்னர்  வெட்டப்பட்டுக்கொண்டிருந்த பிற காட்டு மரங்களும் பிழைத்தன.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியிருக்கும் இவை இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம், சிக்கிம் மற்றூம் அருணாச்சலபிரதேசத்தை தவிர அனைத்துப்பகுதிகளிலுமே பரவியிருக்கின்றது.

கடும் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது, நோயோ பூச்சிதாக்குதலோ நெருங்காத எதிர்புச்சக்தி கொண்டிருப்பது, சீராக புகைகுறைவாக எரியக்கூடிய விறகையும் நல்லதரமான கரிக்கட்டிகளையும் தரக்கூடியது, மனிதர்களுக்கு உணவாகவும் கால்நடைத்தீவனமாகவும் ஆவது,  நல்லசுவையான தேனை கொடுக்கின்றது,  பல உபயோகங்களைக்கொண்டிருக்கும் பிசினை தருகின்றது, மரச்சாமன்களை செய்ய அழகிய வண்ணங்கள் உள்ள உறுதியான மரத்தையும் கொடுக்கின்றது, வேர்கள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்துவதால் மண்ணை வளமாக்குகின்றது- என இதன் பயன்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். உலகின்  பல பகுதிகளில் வளமான நிலங்கள், பாலையாகுதல் (Desertification) எனும் வறட்சிக்கு உள்ளாகுதலையும்  இந்த மரம் மட்டுமே தடுத்து நிறுத்தியது.

இவை மண் அரிப்பை தடுக்கும், பாலைகளை பசுமையாக்கும். இவற்றின் கனிகளின் பொடி உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. கிராமப்புறங்களின் எரிபொருள் தேவைகளை இப்போதும்   இம்மரங்களே தீர்க்கின்றன.

விறகாக, கரியாக, கரித்துகளாக மாற்றம் செய்யப்பட்ட இம்மரம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கும், நீராவியால் இயங்கும் ஆலைகளுக்கும், எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கரும்பு ஒரு டன் விலை 2000 த்திலிருந்து 4000 ரூபாய். ஆனால் ஒரு டன் சீமைக்கருவேலங்கரி 11 ஆயிரம் வரை விலை போவதால், இவை வளரும் பகுதிகளில்  விறகு வெட்டும் தொழில் அதிகளவில் நடக்கிறது. கார்பன் மற்றும் லிக்னின் அதிகமாக இருப்பதால் நல்ல வெப்பத்துடன் சீராக எரியும் உறுதியான விறகு இதிலிருந்தே கிடைக்கின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரம் வளர்த்து, விறகாக வெட்டி கரிமூட்டம் போட்டு விற்பனை செய்வது அதிக அளவில் நடக்கும் தொழில். குஜராத் வியாபாரிகள் இம்மரத்தின் கரிகளை ஏராளமாக வாங்கி மும்பை உள்ளிட்ட பல பகுதிகளிலும் விற்பனை செய்கிறார்கள்.

சீமைக்கருவேல மரங்களின் விறகை கரிமூட்டம்போட்டு எடுக்கப்படும் செங்கற்களைப்போன்ற  பெரிய கரிக்கட்டிகளைக்கொண்டு உறுதியான கட்டிடச்சுவர்களும்   கட்டப்படுகின்றது. விவசாயம் செய்யவே முடியாத வறண்ட நிலங்களில் எரி்கரிக்காக இவற்றை வளர்த்து பல குடும்பங்கள் நிமிர்ந்திருக்கின்றன.

அலுவா என்றொரு மிதமான போதையூட்டும் பானம் பொடியாக்கப்பட்ட இதன் கனிகளிலிருந்து  தயாரிக்கப்படுகின்றது. பன்னெடுங்காலத்திலிருந்தே இதன் கனிகளை தூளாக்கிய மாவிலிருந்து கஞ்சியும் இப்படியான பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. மெக்சிகோவில் இதிலிருந்து தயாரிக்கப்படும் “mezquitamal,” “mezquiteatole,” “pinole,” ஆகிய மது வகைகள்  மிகப்பிரபலம். இதன் மருத்துவப்பயன்களுக்காகவும் இவை பெரிதும் அறியப்பட்டிருக்கின்றன. தென்னமரிக்காவில் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருந்தொன்று இதிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. கிருமித்தொற்றை, புற்றுக்கட்டிகளை குணமாக்க இம்மரத்தின் இலைகளுள்ளிட்ட பல பாகங்களும் பயன்படுகின்றன.

மரப்பட்டைகளிலிருந்து கிடைக்கும் ’டானின்’ தோல்பதனிடும் தொழிலில் உபயோகப்படுகின்றது. பூச்சிஅரிக்காத, உளுத்துப்போகாமல்  நீடித்து உழைக்கும் தன்மையுடைய மரமாதலால்,  வீடுகளின் கட்டுமானப்பணிகளிக்கு, மரச்சாமான்கள் செய்ய, மரத்தரை அமைக்க (Parquet Wood Flooring) என இதன் பயன்கள் மிக அதிகம்.

அதிக புகையோ, தீக்கொழுந்துகளோ இல்லாமல் மந்தமாக எரியும் கடினத்தன்மை மிகுந்த இம்மரத்தின் எரிகரியைத்தான் பார்பிக்யூ அடுப்புக்களுக்கும் விரும்பி உபயோகிக்கிறார்கள். அமெரிக்க பார்பிக்யூ அடுப்புக்களுக்கு உபயோகப்படும் எரிகரியின் பெரும்பகுதி வடக்கு மெக்சிகோவின் சொனாரா பாலையின் ப்ரொசாபிஸ் மரங்களிலிருந்தே வருகின்றது.

தமிழ்நாட்டில் 2016’ல்  இம்மரங்களின் ’தீமைகள்’ குறித்து பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டபோது மதுரை மற்றும் சென்னை நீதிமன்றங்கள் உடனே இவற்றை வேருடன் அகற்ற உத்தரவிட்டிருந்தன. அப்போது சீமைக்கருவேலத்தையும் நாட்டுக்கருவேலத்தையும் பிரித்தறியத்தெரியாமல் பல இடங்களில் அவற்றுடன் சேர்த்து நாட்டுக்கருவேலங்களும் வெட்டப்பட்டன. பின் தாவரவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் தலையிட்டபின்னர் இதன் பின்னிருக்கும் உண்மைகளும், அறிவியல் பூர்வமான தகவல்களும் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டிருக்கின்றது.

இம்மரங்களின் மீது வைக்கப்படும் ’’மேய்ச்சல் நிலங்ளை ஆக்ரமித்தல். இயல்பான தாவரங்களுக்கு வலுவான போட்டியாக இருத்தல், நீராதாரங்களிலிருந்து அதிக நீரை உறிஞ்சுதல்’’ போன்ற  குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கின்றது எனினும் இதை உண்ணும் விலங்குகள் மலடாகின்றன, 150 அடிஆழம் வரை  இம்மரத்தின் வேர்கள் இறங்கும், ஆக்ஸிஜனை குறைவாகவே இது வெளியிடும், போன்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை,

அறிமுகப்படுத்தப்பட்டபோது பாராட்டி சீராட்டி வளர்த்து பயன்பெற்றுவிட்டு இப்போது பட்டிதொட்டிகளிலெல்லாம் பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களும், அடுப்புகளும் வந்தபின்னால் இவற்றை வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றமென்பதைபோல ஒரேயடியாக குற்றம்சாட்டி, வெறுப்பு அலையே வீசிக்கொண்டிருக்கின்றது.  சீமைக்கருவேலம் மட்டுமல்ல எந்த தாவரமுமே இப்படி பேயைப்போல, அரக்கனைப்போல,  வில்லனைப்போல சித்தரித்து வெறுக்கத்தக்கதல்ல என்பதே என் அபிப்பிராயமும், நம்பிக்கையும்.

இவை முற்றிலுமாக அகற்றப்பட்டால் விறகுக்காக பிற காட்டுமரங்கள் வெட்டப்பட்டு, வனவளம் வெகுவேகமாக குறைந்துவிடும் அபாயம் இருக்கின்றது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சீமைக்கருவேல மரங்கள் விறகுக்காகக் கொண்டு செல்லப்படுவதை சாலையில் பயணிக்கையில் பார்க்கலாம். எரிபொருளின் தேவைகள் இன்னும் அதிகமாகும் சாத்தியங்கள் இருக்கையில் அவசரப்பட்டு இவற்றை முற்றிலுமாக அகற்றக்கூடாது.

நீர்நிலைகளின் அருகில் இருப்பவற்றை கட்டாயமாக வேருடன் பிடுங்கி அகற்றவேண்டும். மூன்று அல்லது நான்கு வருடங்கள் தொடர்ந்து இவற்றின் வளர்ச்சியை கவனமாக கண்காணித்து மண்ணுக்குள்ளிருக்கும் விதைகள் முளைக்கையில் உடனே அவற்றை அகற்றிக்கொண்டுமிருந்தால் இவற்றை ஓரளவுக்கு  கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தரிசு மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் வளரும் இவற்றை  அழிக்கவேண்டியதில்லை. இவற்றின் பயன்பாடுகளை பரவலாக அறியச்செய்து, இவை நீர்நிலைகளின் அருகில் வளர்வதை கவனமாக கட்டுக்குள் கொண்டு வந்தால் போதும்

வேகமாக வளர்கிறது, அதிகமாக பரவுகின்றது என்பதற்காக இவற்றை எல்லா இடங்களிலும் வேரோடு அழிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். இம்மரத்தை வழிபடும் நாடுகள் கூட இன்றும் உள்ளன. இம்மரங்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்படும்  வெனிஸுலா மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்காவின்  மூரித்தானியா (Mauritania) வில் ப்ரொசாபிஸ் மரம் தபால் தலைகளில் இடம்பெற்றிருக்கின்றது.

கோவை வன மரபியல் மற்றும் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனமான  IFGTB (institute of forest genetics and tree breeding) சீமைகருவேலங்களை முற்றிலும் அழிப்பதென்பது சாத்தியமில்லை இவற்றின் விதைகளிலிருந்து இவை மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டேதான் இருக்கும் என்கிறது

ஜோத்பூருக்கு அருகிலிருக்கும் Central Arid Zone Research Institute (CAZRI). மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனமும், வேருடன் அழித்தாலும் சில ஆண்டுகளிலேயே மண்ணுக்கடியில் புதைந்திருக்கும்  விதைகளின் மூலம்  இவை மீண்டும் பல்கிப்பெருகுமென்றே தெரிவிக்கின்றது.

இதன் விதைகளை வறுத்துப்பொடித்து ஜூலி காஃபீ (juli coffee) என்னும் காஃபித்தூளையும், இதன் விதைத்தூளுடன் பழச்சாறூம் பாலும் சேர்த்து  ஒரு சத்துபானத்தையும் தயாரித்து புழக்கத்தில் கொண்டு வந்திருக்கின்றது இந்த ஆராய்ச்சி நிறுவனம். இப்படி உபயோகமாக ஆய்வுகள் செய்யலாம், உடனே வெட்டி அகற்ற  உத்தரவுகள் போடாமல்.

சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றியவுடன் மண் வளம் சீராகிவிடும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துவிடும் என்பதெல்லாம் இல்லை. ஒரிடத்தில் ஏராளமாக பரவி, அதிகமான எண்ணிக்கையில் இருக்கும்  தாவரங்களை ஒரேயடியாக அகற்றுகையில் அந்த இடத்தின் தட்ப வெப்பம் உடனே மாறும்; அதை ஈடு செய்ய மாற்று நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துவிட்டே இவற்றை அகற்ற முனையவேண்டும்

மேலும் இந்த மரங்களின் விறகை, இதிலிருந்து எடுக்கப்படும் தேன், பிசின் மற்றும் கரி ஆகியவற்றை மட்டும்   வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் வறண்ட பூமியைச்சேர்ந்த குடும்பங்களையும் நினைத்துப்பார்க்க வேண்டும்.

இந்தியாவின் மொத்த தாவர இனங்களில் 40 சதவீதம் யூகலிப்டஸ், சீமைக்கருவேலம், பார்த்தீனியம் உள்ளிட்ட அயல்தாவரங்கள்தான். இந்த 40% ல் 25% சதவீதம் ஆக்ரமிக்கும் தாவரங்கள். ஆனால் சீமைகருவேலத்தைக்குறித்து மட்டும் எப்படியோ ஒரு பெரும் வெறுப்பு மக்களிடையே உண்டாகிவிட்டிருக்கிறது.

இப்படியான எந்த பயனுமற்ற நச்சுச்செடியான பார்த்தினிய ஒழிப்பிற்கெல்லாம் யாருமே மெனக்கெடவில்லை. நீதிமன்றம் தலையிட்டதில்லை. மாநில மரமான பனைகளை வெட்டி செங்கல் சூளைகளுக்கு லாரிலாரியாக கொண்டு செல்லப்படுவதறகு யாரும் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. அதற்கு மாற்றாக சீமைக்கருவேலங்களை செங்கல் சூலைகளுக்கு பயன்படுத்தினால் பனைகளும் காப்பாற்றப்படும், இவற்றின் ஆக்கிரமிப்பும் கட்டுக்குள் வரும்.

சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடிநீர் அதிகம் உறிஞ்சப்படுவதென்பது உண்மைதான். ஆனால், இந்த மரங்களை விட அதிகம் நீர் உறிஞ்சும் மினரல் வாட்டர் தொழிற்சாலைகள், கழிவுகளை நீரில் கலக்கும் ஆலைகள், ரிசார்ட்டுகள் ஏராளம் இருக்கின்றனவே! சீமைக்கருவேலமரங்களின் விஷயத்தில் சூழல் ஆர்வலர்களுக்கும்,  தாவரவியலாளர்களுக்கும் இடையிலிருக்கும் இடைவெளியை குறைத்தாலே இந்த பிரச்சனைக்கு  நல்ல தீர்வு  கிடைக்கும்.

இம்மரத்தைக்குறித்து எனக்கு பல ஆண்டுகளாகவே கரிசனமும் கவலையும் இருந்துவருகின்றது. இவற்றையெல்லாம் உங்களுக்கு தெரிவிக்க கிடைத்த வாய்ப்பிற்கான நன்றிகளுடன்

லோகமாதேவி

லோகமாதேவி

இணைப்பு

Request for Prosopis seed made by Lt. Col. RH Bedome, Conservator of Forests of Northern Circle (Madras) to the Secretary of the Revenue Department of Madras in 1876:

“The Prosopis dulcis, the Prosopis pubescens and P. glandulosa – are stated to grow best on dry arid soil. They yield hard and valuable timber and also an abundance of sweet succulent pods which are used for cattle feeding and also ground into meal. It is very desirable to introduce these trees into the fuel plantations in our dry districts; and I have the honour to suggest that the British Consuls at Galveston and San Francisco should be applied to for the seed. The Prosopis juliflora is a species growing in Jamaica which I should be very glad to get seed of

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுப்புகள்
அடுத்த கட்டுரைசிங்கை நாவல்பட்டறை- குறிப்புகள்