காடு- கதிரேசன்

எப்படி எழுதி விட்டீர்கள் காடு நாவலை அந்த மலையத்திப் பெண்ணை ஏன் கொன்றீர்கள். அவள் காட்டின் தேவதை அவள் இல்லாத காடு மெல்ல மெல்ல அழிகிறது. கிரிதரனும் மெல்ல அழிகிறான்.

ஒரு மிளா, ஒரு பெண்,ஒரு காடு, ஒரு கவிஞன். வாழ்வை இழந்த கவிஞன் விதியின் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட கவிஞன். கடைசியில் மிளா இல்லை காடில்லை பெண்ணுமில்லை, கவஞனுமில்லை.

இளமையின் கனவுகளில் திளைக்கும் எனக்கு பெரும் அச்சத்தை அளிக்கிறது இக்காடு. கிரியைப் போல நானும் விதியின் வசம் என்னை இழந்து விடுவேனா என்ற கவலை பற்றிக் கொள்கிறது.

கடுங்காப்பி குடிக்கத் தோன்றுகிறது. இடுக்கியின் குளிருக்காக சீவீடுகளின் கத்தலுக்காக மனம் ஏங்குகிறது.

இங்கு நாகையில் கடலிருக்கிறது. கடல் அலைகளின் ஓசை காதில் அறைகிறது. கடல்  அலைகளை உற்றுப் பார்க்கும் போது ஒரு கணம் என்னை தன்னுள் ஏந்திக் கொண்டுவிடுமோ என த் தோன்றுவதுண்டு. சமீபத்தில் படித்த மண்ணும் மணிதரும் நாவலில் கடல் ஒரு பிரதான படிமம். கடல் பிடித்திருக்கிறதா எனத் தெரியவில்லை. கடலின் பிரம்மாண்டம் ஒரு பயத்தை அளிக்கிறது. காடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது.

அதிகாலை குளிர். பறவைகளின் சத்தம். மரக்கூட்டங்களை ஊடுருவிக் கொண்டு பாயும் ஒளிக்கதிர்கள். மண்ணில் ஊரும் பூச்சிகள். எதிர்பாரா தருணம் மிரட்டும் விலங்குகள்..காடு அளிக்கும் பரவசத்தை எனக்கு  கடல் அளிப்பதில்லை.

கிரியைப் போல் எத்தனை எழுத்தாளர்கள், கவிஞர்கள் விதியின் வசத்தால் தங்களை இழந்திருப்பார்கள்.  சில நேரம் நானும் அவர்களில் ஒருவனாகிவிடுவேனோ என்று பயம் தோன்றுகிறது.

நான் வளர்ந்த இடுக்கி எவ்வளவு அழகான ஊர் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வானை முத்தமிடும் மலைச் சிகரங்கள். வானம் பிளந்து கொட்டும் மழை. மாலையும் காலையும் மலைகளைத் தழுவிச் செல்லும் மஞ்சு.

இடுக்கியில் ஒருபோதும் இனி என்னால் நிரந்தரமாகப் போய் இருக்க முடியாது. அந்த மண்ணை நேசிக்க அதன் வெளியிருந்தாக வேண்டுமென்றே தோன்றுகிறது.

காடு நாவல் மூலம் எனக்குள் இருந்த காட்டை எழுப்பிக் கொண்டேன்.  இடுக்கியின் மலை உச்சியில் வேலை செய்த தருணங்கள். மரங்களைச்  சுழற்றும் பெருங்காற்று, மண்ணை வெட்டியவுடன் வரும் மண்ணுளிப் பாம்பு. தோட்ட முதளாலிகள்.எண்ணற்றவை நினைவில் வருகின்றன.

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

வேலை செய்வோருக்கு காடு ஒரு பழக்கப் படுத்தப்பட்ட விலங்கு. உண்மையில் இடுக்கியில் புல் மலைகளைத் தவிர காடு இருக்கிறதாவென்றே தெரியவில்லை. என் கண்முன்ணே நான் வளர்ந்த சிறுகிராமம் மும்மடங்காய் விரிந்திருக்கிறது. பளபளக்கும் கண்ணாடி ஜன்னல் பதித்த வீடுகள், காங்ரீட் ரோடுகள். வாகங்களின், இரைச்சல்.

பெரும்பாலும் தெரிந்த முகங்கள் தான் முன்னர் பெயர் தெரியா விட்டாலும் முகம் தெரியும். சிறு புன்ன்னகை

எப்பொ வன்நு

என்ற கேள்விகளை எதிர்கொள்ளும் போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியும் குறுகுறுப்பும் வரும். இப்போதெல்லாம் இடுக்கி செல்லும் போது புதிய முகங்கள் ஏராளம். தெரிந்த முகங்களைப் பார்த்தாலும்     தலை குனிந்து கொண்டு சென்று விடுகிறேன்.

காடு ஒரு கட்டற்ற வெளியை அளிக்கிறது. மனதில் கனவுகளையும் காதலையும், காமத்தையும் நிறைக்கிறது.

இங்கே இருப்பவர்கள் நாட்டில் தோல்வியுற்று காடேறியவர்கள் காட்டை வென்றடக்கி பிழைக்க முயல்பவர்கள். அது முடியாதவர்களுக்கு காட்டில் இடமில்லை.

முன்பு மலைகளோடு சேர்ந்திருந்த பெரும் பாறையடுக்குகள் கல் குவாரிகளாகிவிட்டன. முன்பு சிறுவயதில் வீட்டின் அருகிலிருக்கும் மலைக்கு விடுமுறை நாட்களில் போவோம் மலைப் புதர்களுக்குள் ஒளிந்து விளையாடுவோம். மஞ்சளாகி பின்னர் கருப்பாகும் ஈன்ச்சப்பழம் தேடி அலைவோம். வெயிலில் அலைந்து மலைப் புற்கள் கொடுத்த தாகத்துடன் தண்ணீர் ஊற்றை நோக்கி ஓடுவோம். அவ்வளவு சுவையான நீரை பின்னெப்போதும் அறிந்த்ததில்லை. அன்று என்னோடு இருந்த சிறுவர்களை இன்று நினைக்கும் போது திகைப்பாகயிருக்கிறது.

அன்று அழகிய பெண்ணானா அப்புவின் அக்காவும் அப்புவும் அவர்கள் குடும்பத்தோடு  கடன்   தொல்லை தாளாமல் ஊரைவிட்டி    ஓடிவிட்டார்கள்.  விஸ்ணு படிக்காமல் ஆட்டோ ஓட்டுகிறான் மே மாத விடுமுறைக்கு வரும் மணிமேகலை அவள் அண்ணண்களும் இப்போதெல்லாம் வருவதில்லை. மணிமேகலைக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணமாகிவிட்டதென்று நினைக்கிறேன். சானு சஜி இருவரும் மரம் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். ராஜா அண்ணா தூக்கில் தொங்கி விட்டான். அவன் பிணம் யாரும் காணமல் நான்கு நாட்கள் அழுகிக் கிடந்ததாம்.

நாடும் காடும் இருவேறு உலகங்கள் ஒன்றிலிருப்பவர்களுக்கு மற்றொன்று உவப்பில்லை. எனது வீடு இரண்டு மலைகளுக்கு நடுவிலிருக்கிறது முன் பக்கம் செகுத்தான் மலை. பின் பக்கம் குரிசு மலை. இடப்பக்கம் சில வீடுகள் வலப்பக்கம் கொஞ்ச தூரம் இரங்க்கிப் போனால் தேயிலைத் தோட்டங்கள் வழியில் மலைகளின் எல்லையை அறிவிக்கும் நீரோடைகள். புதியவர்களின் சட்டையைப் பற்றி விசாரிக்கும் உண்ணிச் செடிகள். பின் மதியத்தில் கவியும் திடீர் இருள். காடு காடு காடு என் அகமெல்லாம் மலர்கிறது காடு. இந்நாவலைப் படித்த பரவசத்தில் எனக்குள் எழுந்த காட்டை ஒரு பத்து பக்கம் எழுதிவைத்துள்ளே பின்நாள் அது ஒரு காடாக வளர வேண்டும்.

கதிரேசன்

கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்

காடு இரு கடிதங்கள்

காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58
அடுத்த கட்டுரைபத்ம விருதாளர்கள்