உடனிருத்தல்

காடுசூழ் வாழ்வு

ஈரட்டியில் செல்பேசியால் பயனில்லை. ஜியோ கிடைக்காது. பிஎஸ்என்எல் கிடைக்கும், ஒரே ஒரு மரத்தடியில். ஆனால் அவ்வப்போது தொடர்பு நின்று நின்றுவரும். மின்னஞ்சல் வாட்ஸப் எதற்கும் வாய்ப்பில்லை. நான் அங்கே செல்லும்போது பத்துப்பதினைந்துநாட்களுக்கு என் இணையதளத்தின் உள்ளடக்கங்களை வலையேற்றம் செய்துவிட்டே செல்வேன். ஆகவே அங்கே சென்றதுமே கீழிருக்கும் உலகுடன் தொடர்பை அறுத்துக்கொள்வேன்.

ஈரட்டியைச்சுற்றியிருக்கும் காடு உயிர்த்துடிப்பானது. மழைக்காடு அல்ல. மழைக்காடு ஆழ்ந்த மர்மமான ஓர் உள்ளம். அதற்குள் மழைத்துளிகளின் சொற்கள் சொட்டிக்கொண்டிருக்கின்றன. தரைமுகில்கள் மூடி அமைதிசூழ்கிறது. பகலிலேயெ இரவெழுகிறது. பெயரறியாத விலங்குகள் ஓசையிடுகின்றன. நீரோசை நிறைந்திருக்கிறது. இது பருவக்காடு. மழையில் பொலிந்து கோடையில் வரண்டு தவம்செய்து மீண்டும் மழையைப் பெறுகிறது

காட்டைப் பார்த்தபடி நாட்களைச் செலவிடுவதென்பது ஓர் அருந்தவம். தோரோ அதை பதிவுசெய்தார். நான் எழுதும் குறிப்புகளும் அவ்வகையிலேயே. ஒவ்வொருநாளும் காலை எழுந்து அமர்ந்துகொண்டு முகில்கள் எதிரே மலைச்சரிவில் நுரையெனக் கரைந்தும் பளிங்கெனத் திரண்டும் சென்றுகொண்டிருப்பதை பார்ப்பேன். ஊரில் காணக்கிடைக்காத பலவகையான பறவைகள். ஓரிருநாட்களிலேயே அவற்றின் நாளொழுங்கு நமக்கு பிடிகிடைத்துவிடும். அதன்பின் தெரிந்த முகங்களையே கண்டுகொள்ளமுடியுமென்று தோன்றும்.

மாலைவரை ஒரு திரைப்படமென நிகழ்ந்துகொண்டிருக்கிறது இயற்கை. அதை பார்க்கையில் முதலில் எழுவது வியப்பும் பரவசமும். அது விலக்கத்திலிருந்து எழுவது. பின்னர் அது பழகிவிடுகிறது. உணர்வெழுச்சிகள் இல்லை. பரவசம் ஒரு நிலைகலைவு. அலுப்பில்லாத ஓர் சலிப்பை உணர்வதே இயற்கையில் இயையத் தொடங்குவதன் முதற்படி. உள்ளம் அதன் பழகிப்போன பாய்ச்சல்களை மறக்கிறது. ஓயாதோ ஓடும் தறியசைவு தளர்கிறது. துணி தரையில் படிவதைப்போல் அசைவில்லா அலைகளென அமைந்திருக்கிறது.

அது ஓர் ஒன்றுதல் நிலை. உண்மையில் அது ஒரு பேரின்பம். ஆனால் இன்பமென நாம் உலகியலில் உணர்வதெல்லாமே  அலைக்கழிப்புகளைத்தான். துள்ளிக்குதிக்கவைக்கும் இன்பம் ஒரு சிலகணங்களுக்கே. இன்பத்தில் இருப்பதென்பது கரும்பாறை மலையுச்சியில் முகிலாடி அமர்ந்திருப்பதைப்போல ஓர் ஊழ்கநிலை. ஓர் முற்றமைவுநிலை. அதில் நாம் அமர்ந்திருக்க இயற்கை எதிரில் அமர்ந்திருக்கிறது.

வெறுமே திகழ்வதே இயற்கையின் இயல்பு. இயற்கையுடன் இணைந்திருக்கையில் நாமும் அவ்வண்ணமே வெறுமே திகழ்ந்திருக்கிறோம். இயற்கையில் ஒவ்வொரு கணமும் ஏதேதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் சமன்செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே ஒன்றுமே நிகழாததுபோல, மாபெரும் ஓவியம்போல் சிற்பம்போல் அது நம் முன் இருக்கிறது.

நம் கண்முன் உயிர்கள் உணவுதேடி அலைகின்றன. உண்கின்றன, உண்ணப்படுகின்றன. இந்த இளவெயிலில் பலநூறு சிறுபூச்சிகள் கனலொளித்துளிகள் போல சுழன்று பறக்கின்றன. தாவித்தாவி அவற்றை உண்ணுகின்றன பனந்தத்தைகள். கொலை, சாவு. ஆனால் பிறப்பால் அவையும் சமன்செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு களியாட்டமென இதைப் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது

ஒளியை பொருட்கள் என்று மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். விண்ணிலிருந்து உருகிவழிவதென பெருகும் காலைப்பொன்னொளியை, கண்கூசவைக்கும் அதன் வெண்பொலிவை, நிழல்களின் ஆடலை, இலைநுனிகளின் கூர்மின்னலை, கான்தழைப்பில் அலைகொள்ளும்  பசுஞ்சோதிப்பெருக்கை இங்கே என முன்பு பார்த்திருக்கிறேனா?

பார்த்துக்கொண்டிருக்கவே முதிர்ந்து கொண்டிருக்கிறது பகல். இங்கே இரவில் நல்ல பனி. காலையில் மழையென இலைகளும் கூரைகளும் சொட்டுகின்றன. புல்லில் நடக்கையில் நீரில் நனைகின்றது பாதம். வெயிலில் ஆவியெழுந்து ஒளியில் புகைபோல் நெளிகிறது. விரைவிலேயே காய்ந்துவிடுகின்றது. குளிருக்கு வெயிலில் அமர்ந்திருக்கையில் குருதி சூடேறுவதன் இளமயக்கம். கண்கள் சொக்கி துயிலில் என உருகிப்பரவும் நினைவுகளும் எண்ணங்களுமாக நெடுந்தொலைவு சென்றபின் வெயில் சுடத்தொடங்கியிருப்பதை உணர்கிறோம்

மாலை மதியத்துடனேயே தொடங்கிவிடுகிறது. மழையெழப்போவதுபோல் ஓர் இறுக்கம். காற்று அசைவிழக்க, மரங்கள் செயலற்று நின்றிருக்கின்றன. நிழல்களும் அசைவற்று படங்களென மாறிவிட்டன. மழை என நம் உடலுணர்கிறது. மழையை அறிந்த தவளைகளும் பூச்சிகளும் ஓசையெழுப்புவதில்லை. காற்றுவீசத்தொடங்கும்போது அப்பாலுள்ள காட்டின் குளிருடன். முதலில் செவிமடல்களில் பின்னர் மூக்குநுனியில் பின்னர் மூச்சில் குளிர். பின்னர் நடுக்கம்.

நிழல்பரவுவதுபோல் அந்தி. காடு தொலைவில் நன்கு இருட்டி பச்சைப் பசைப்பரப்பென தெரிய அதன்மேல் தழைப்பின் அலைகள் ஒளியில் சுடர்விடுகின்றன. வானம் அணைந்துகொண்டிருக்கிறது. இலைநுனிகள் அணைகின்றன. உச்சிமலைப்பாறை மங்கி மூழ்கி மறைகிறது. வானில் எஞ்சிய ஒளியும் மறைகிறது. ஒவ்வொரு அணைதலுக்கும் உரிய வெவ்வேறு பறவையோசைகள் எழுந்தணைகின்றன.

இரவின் ஓசையென சீவிடுகளின் முழக்கம். மிக அருகே காட்டுயானையின் குரல், பன்றிகளின் அமறலோசைகள். குளிர்ந்த இரவு வந்து சூழ்ந்துகொண்டிருக்கிறது. இங்குள்ள இரவு அழுத்தமானது. இங்குள்ள இருட்டுக்குச் செறிவும் எடையும் மிகுதி. அதை கையாலேயே அளையமுடியும் என்பதுபோல. இருட்டில் இருந்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருக்கலாம். விண்மீன்கள் ஈரட்டியளவுக்கு அருகே தெரியும் இன்னொரு இடம் தென்னகத்தில் இல்லை. ஒவ்வொன்றும் தனிச்சுடர்கள் என துலங்கித்தெரியும்.

இங்கே இருக்கையில் எல்லாம் மிகமிக அரிதென்றும் எல்லாம் மிகமிக எளிதென்றும் தோன்றிவிடுகிறது.

முந்தைய கட்டுரைஉறுப்புமாற்றம் பற்றி…
அடுத்த கட்டுரைகி.ரா.சந்திப்பு இன்று