வசந்தம், மலர்

அன்புள்ள அப்பாவுக்கு,

நலமாக இருக்கிறீர்களா?

“அம்மா அத்தனை குழந்தைகளுக்கும் விதவிதமாக தீனி கொடுப்பாள். வேகவைத்த பயறில் கருப்பட்டி கலந்து கொட்டாங்கச்சியில் போட்டு கொடுப்பாள். பொதுவாக இட்லி, தோசை. வெறும் சோறில் பால்விட்டு கொடுப்பதும் உண்டு. எப்போதும் கருப்பட்டி. எங்கள் வீடு முழுக்க எங்கு வேண்டுமென்றாலும் பாதிசப்பிய கருப்பட்டி மிதிபடும். எல்லா அறைகளிலும் முற்றாச் சிறுநீர் மணம், பால்புளித்த பீமணம்.

ஒவ்வொரு குழந்தையும் தன்னால் முடிந்த எல்லையில் சென்றுதான் எதையாவது செய்யும். ஒருவயது ஆகியிருக்காது, சன்னல் கம்பியின் நாலாவது அடுக்குவரை தொற்றி ஏறி நின்று இரட்டைப்பல் காட்டி சிரிக்கும். அண்டாவுக்குள் நுழைந்து ஓசையுடன் உருளும். குடத்திற்குள் கைவிட்டு எடுக்க முடியாமல் அலறும். எந்த கைவேலையாக இருந்தாலும் அம்மா எல்லாவற்றையும் அறிந்திருப்பாள். ஒவ்வொன்றும் எங்கே எந்த நிலையில் இருக்கிறது என்று கணிப்பு இருக்கும். எந்நேரமும் கையில் ஏதாவது ஒரு பையை எடுத்துக்கொண்டு ‘ஊருக்குக் கிளம்பும்’ நெல்சன் என்ற ஒரு ஐட்டம் இருந்தது. அதற்கு மட்டும் தனியாக காவல் போட்டிருப்பாள். தங்கம்மா அதை தரதரவென இழுத்துக்கொண்டு வருவாள். தன்னை எவரேனும் வன்முறையாகக் கையாண்டால் ‘லேசுவே லேசுவே’ என்று மனிதகுமாரனை வேண்டும் வழக்கம் அதற்கு இருந்தது”

– ‘அருளப்படுவன’ கட்டுரையிலிருந்து… (ஜனவரி 23, 2020)

எனக்கு கர்ப்பம் உறுதியான சில நாட்களில் இந்தக் கட்டுரையை வாசித்தேன். என்றும் மனதைவிட்டு அகலாத ஒரு கட்டுரை இது. குழந்தையையும், குழந்தைமையும் வளர்க்கும் பொறுமை மற்றும் பொறுப்பு சிறிது கூடிவிட்டது எனக்கு. நோயச்ச காலத்திலேயே பெரும்பான்மையான கர்ப்ப நாட்கள் அமைந்தது எனக்கு ஒரு வரம்கூட. தங்கள் வலைதளம் வாசிப்பது, டாக்குமெண்ட்ரி சீரீஸ் பார்ப்பது என சிறப்பாக நாட்கள் நகர்ந்தன. ‘வெண்முரசு தினம்’ zoom கூடுகையில் பங்கேற்றது மற்றுமொரு தீராமகிழ்ச்சி.

என் முதல் கடிதத்திற்கு நீங்கள் எனக்களித்த பதில்கடிதமான ‘ஆயிரங்கால்களில் ஊர்வது’ கட்டுரையைப்பற்றி புதுநண்பர்கள் உரையாடுவது இதுநாள்வரையில் எனக்கு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த சொல்லாசி உங்களால் நிகழ்ந்த ஒன்று. அதில் நீங்கள் காந்தியைப்பற்றி சொல்லுமிடத்தில் ‘ஒரு மளிகைக்கடைக்காரருக்குரிய வகையில் சலிப்புறாது அன்றாடச்செயலில் ஈடுபடுபவர் அவர் என அவரைப்பற்றி கோவை அய்யாமுத்து சொல்கிறார்’ என்கிற குறிப்பை எழுதியிருந்தீர்கள். ஆச்சரியம் என்னவென்றால் என் தந்தையும் ஒரு எளிய மளிகைக்கடைதான் வைத்துள்ளார். ஒரு மளிகைக்கடைக்காரரின் மகளுக்கு எழுதிய கடிதத்தில் அவ்வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்திருந்தது எனக்கு தற்செயலாக நிகழ்ந்த ஒரு அற்புதமெனவே மனங்கொள்ளத் தோன்றுகிறது.

நான் பிறந்த அதே மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி, எனக்கு சுகப்பிரவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். ‘மாசிலன்’ என பெயரிட்டிருக்கிறோம். குக்கூ மனிதர்கள் தேர்வுசெய்து அளித்த பெயரிது. ‘மாசிலன்’ என்ற பெயரை என் குழந்தைக்கு உறுதிபடுத்த உங்களுடைய குறளினிது உரைகளும் ஒரு விருப்பக்காரணம். குறள்சொல் ஒன்று இனி குடும்பத்தில் நிதமொலிப்பதே ஆனந்தம்தான்.

ஒரு குழந்தைக்குத் தாயாக நான் மாறிநிற்கும் இத்தருணத்தில், உங்கள் மகள் சைதன்யாவின் குழந்தைப்பருவத்தை அவதானித்து நீங்கள் எழுதிய “ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு” நூலானது தன்னறம் நூல்வெளி வாயிலாக மறுபதிப்பு அடையப்போகிறது என்பதை அறியநேர்ந்தது. என் மாசிலனின் சிந்தனை மரபை உடனிருந்து அவதானிக்கவே இந்த படைப்புத்துணையின் அருகாமை நிகழ்ந்தது என நான் நம்புகிறேன்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை ஒரு பரிசுடன் உங்களுக்கு தெரிவிக்க யோசித்து யோசித்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது, மன்னிக்கவும். தற்போது கிடைக்கப்பெற்ற நேரங்களில் ஒரு யானை பொம்மையைத் தைத்து (உங்களுடைய ‘ஆனையில்லா!’ கதைநினைவாக) கொரியரில் அனுப்பி உள்ளேன். புளியானூர் ‘துவம்’ தையல்பள்ளியில் தற்போது பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள் தைப்பதோடு இதுமாதிரியான சிறுசிறு பொம்மைகளையும் தயாரித்து வருகிறோம்.

எடுத்துவைக்கும் காலடி சறுக்கிட நேர்கையில் எல்லாம் ‘ஆயிரம் கால்கள் இருந்தும் மெல்லவே செல்லும் அட்டைபோல அன்றாடத்தின்  கால்கள்மேல் உங்கள் கனவு நிதானமாக ஊர்ந்துசெல்லட்டும்’ என்ற சத்தியச்சொற்களை நினைத்து உளவூக்கம் பெற்று முன்னகர்கிறோம். இனியும் அப்படியே! அடுத்து ஏதேனும் சந்திப்பு நிகழ்கையில் மாசிலனோடு உங்களை நேரில் பார்க்க காத்திருக்கிறேன் அப்பா. அம்மாவுக்கும், அஜிதன் மற்றும் சைதன்யாவுக்கும் என் அன்புகள்!

அன்பும் நன்றியும்,

பொன்மணி

குக்கூ காட்டுப்பள்ளி.

***

அன்புள்ள பொன்மணி

பின்னாளில் திரும்பிப் பார்க்கையில் வாழ்க்கையின் மிக இனிய நாட்களை கடந்துகொண்டிருந்தீர்கள் என உணர்வீர்கள். உலகியலுக்கு அப்பால் எதையாவது செய்வது, அதில் மகிழ்வதுதான் உண்மையிலேயே வாழ்க்கையை நிறைவுபடச்செய்கிறது. அத்துடன் குழந்தை. அது ஒரு பெரும் பரிசு. மாசிலனுக்கு என் முத்தங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஎண்ணும்பொழுது – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?