வெண்முரசில் இசை

அன்புள்ள ஜெ,
கடந்த 17-06-2018 அன்று பல்லடம் தீபன் இல்லத்தில் நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில் வெண்முரசில் வரும் இசை அனுபவங்களை பற்றி பேசினேன். அதையும், விடுபட்ட இரண்டு இடங்களையும் இங்கு தொகுத்துள்ளேன். 
தாமரைக்கண்ணன்
வெண்முரசில் இசை
ஜெ தனது ஒரு உரையில் ஒரு புலனால் நாம் அடையும் அனுபவங்களை வேறு புலன் அனுபவங்களாக மாற்றி வர்ணிக்கலாம் என்கிறார். உதாரணமாக இசை மூலமாக ஒரு பாத்திரம் அடையும் அனுபவங்களை காட்சி அனுபவங்களாக ஓவியத்துடன் அல்லது இயற்கை காட்சிகளுடன் ஒப்பிடலாம். நாம் ஒரு இசையை கேட்கும் பொழுது அடையும் அனுபவங்களை முற்றாக வரையறை செய்துவிடமுடியாது. மனம் தொடர்ச்சியாக பல காட்சிகள், நினைவுகள், மற்றும் உணர்வுகள் என தாவிக்கொண்டே இருக்கும். வெண்முகில் நகரம் பகுதி 83ல் இளைய யாதவன் காந்தாரியின் அறையில் குழல் இசைப்பதை கேட்கும் அனுபவம் அந்த இசையின் பெயரிலிருந்து தொடங்கி ஒரு நீண்ட பயணமாக விரியும்.
பூரிசிரவஸ் மீண்டு வந்து அந்த இசையை பற்றிக்கொண்டான். எந்தப்பண்? பெரும்பாலையின் மணல் அலைகளை காட்டும் பண் அது. காந்தாரத்திற்கு வடக்கே பால்ஹிகநாடுகளுக்கும் மேற்கே காம்போஜத்தில் உருவானது. ஆகவே அதை காம்போஜி என்றனர். தக்கேசி என்று அதை வகுத்தது தென்னக இசை மரபு. ஆனால் அது காம்போஜத்திற்குரியதுமல்ல. காம்போஜத்தில் அது முறைப்படுத்தப்பட்டது அவ்வளவுதான். அதற்கும் வடக்கே மானுடக்கால்கள் படாத மணல்விரிவில் கதிர்ச்சினம் பரவிய வெண்ணிறவெறுமையில் பசித்து இறந்த ஓநாய் ஒன்றின் இறுதிஊளையில் இருந்து உருவானது அது என்பது சூதர்களின் கதை. அதைக்கேட்ட சூதன் பித்தானான். அவன் பித்திலிருந்து எழுந்தமையால் அதை பித்தின் பெரும்பண் என்றனர். மலையிறங்கும் நதியென அது பாரதவர்ஷம் மேல் பரவியது. ஓடைகளாயிற்று. ஒவ்வொரு கிணற்றிலும் ஊறியது. பசும்புல்வெளியில் துள்ளும்பண் ஆக மாறியது. யதுகுலத்திற்குரிய பண். செவ்வழி. சீர்கொண்ட பெருவழி. செம்மைவழியும் பாதை. குருதியின் வழிவு. குருதியைத் தேடிச்செல்கிறது விழியொளிரும் வேங்கை. மெல்லிய மூச்சு. மென்பஞ்சு காலடிகள். வேங்கையின் உடலில் எரியும் தழல். வேங்கையுடலாக ஆன காடு
இந்த காம்போஜி இசை இன்று ராகா காமஜ் என்று ஹிந்துஸ்தானியில் உள்ளது. இது செவ்வியல் இசை. ஆனால் இது மீண்டும் ஓநாயின் ஊழையை, குருதியை நினைவுறுத்துகிறது. பின் மழை, ஓடை, நதி என கனிகிறது.
மழைப்பாடல் பகுதி 12ல் பீஷ்மர் காந்தாரத்திற்க்கு மண தூதுடன் சிந்துவை கடந்து பெரும் பாலையில் பயணம் செய்து கொண்டிருப்பர். பின் ஒரு சூதர் குழுவுடன் இனணந்து கொள்வார். பாலைவன பயணம் வெறுமையானது. அங்கு சூதர்கள் பாடும் பாடல் பாலைவனத்தில் பசுமையும் வாழ்வையும் கொண்டுவந்து நிரப்பினவையாக சித்தரிக்கபட்டிருக்கும்.
அந்த வெறுமையை வாழ்வால் நிறைத்தவை சூதர்களின் பாடல்களே. அவை இரவின் தனிமையில் வானில் மந்திரவெளியில் இருந்து பசுமையையும் நீரலைகளையும் வண்ணங்களையும் கொண்டுவந்து ஆன்மாவில் நிறைத்தன. பாலைவனப்பயணம் முழுமையாக தொலைந்துவிட்டிருக்கிறோம் என்ற அச்சத்தை நெஞ்சின் ஆழத்தில் கரையாமல் நிறுத்திவைப்பது. சூதர்களின் பாடல்கள் சென்றுசேரவிருக்கும் பசுநிலத்தை கையெட்டும் அருகே கொண்டுவந்து நிறுத்தின. பாலைவனப்பயணம் மண்ணில் வேறு மனிதர்களே இல்லை என்ற பிரமையை ஆழநிலைநாட்டுவது. சூதர்களின் பாடல்கள் வழியே வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களுமான பல்லாயிரம்பேர் வந்து தோளோடு தோள்முட்டி அமர்ந்துகொண்டார்கள். சூதர்களின் பாட்டில் வந்த அனல் அமர்ந்து ஊரும் கொடுங்காற்றுகளை மூன்றுமுறை பீஷ்மர் கண்டார்.
செந்நா வேங்கை பகுதி 11ல் படை புறப்பாட்டிற்க்கு முன் நடக்கும் கொற்றவை பூஜையில் கிராததாளம் இசைக்கப்படும். குருதி மற்றும் குரோதத்தின் இசை.
துணைப்பூசகர் சூக்தன் காரி கைகாட்ட இசை எழத்தொடங்கியது. சிம்மங்கள் போரிடுவதுபோல என்று அந்த ஓசையை சாத்யகி எண்ணினான். கொம்புகள் யானைத்திரளின் பிளிறல்கள். மணிகள் மலைக்கழுகுப்பூசல். உள்ளமைந்திருந்த கொடுவிசை அனைத்தையும் ஓசையென்று வெளியே உமிழும் வெறி திகழ்ந்த இசை.
இசை வர்ணனைகளாக மட்டுமல்லாமல் குறியீடாக வரும் இடங்களும் உள்ளன. பிரயாகை பகுதி 69ல் மதுகரம் என்ற இசை கருவியின் இசையை உதாரணமாக சொல்லலாம். வாரணவத ஏரி நிகழ்விற்கு பின் பாண்டவர்கள் இடும்ப வனத்திற்குள் மறைந்துள்ளனர். அதனால் துரியோதனனுக்கு முடிசூட்ட முடிவெடுக்கபடுகிறது. அப்பொழுது பலராமர் அவைக்குள் நுழைந்து தனது மாணவன் பகனை கொன்றது யார் என்று வினவுகிறார். பகன் வதையை தனக்கு பாடிய சூதனையும் அழைத்து வந்து அங்கு பாடவைக்கிறார். அவன் கொண்டுவந்த இசைக் கருவி மதுகரம் பட்டு நூல்லால் ஆனா ஒற்றை தந்தி மட்டுமே கொண்டது. இசைக்கும் பொழுது வண்டின் குரல் எழும். அதனாலேயே அது மதுகரம் என சுட்ட படும்.
பிரமதன் அதை மெல்ல மீட்டத்தொடங்கியதும் மெல்லிய வண்டின் இசை எழுந்தது. வண்டு சுழன்று சுழன்று பறந்தது. பின் அந்த ஒலியில் செம்பாலைப்பண் எழுந்தது. துடித்தும் அதிர்ந்தும் தொய்ந்தும் எழுந்தும் பண் தன் உருவைக்காட்டத் தொடங்கியதும் திருதராஷ்டிரர் முகம் மலர்ந்து “சிறப்பு! மிகச்சிறப்பு!” என்றார்
பாண்டவர்கள் வாரணவததில் இறக்கவில்லை என்பதை அனைவரும் முன்னரே உணர்ந்திருந்தனர். அதை சுழன்று சுழன்று பறந்த வண்டின் மெல்லிய ரீங்காரம் குறிப்பதாக கொள்ளலாம்.
இசை அனுபவத்தினால் பாத்திரங்கள் அடையக்கூடிய தரிசனங்கள் மிக முக்கியமானவை. எரிதழலில் பகுதி 53ல் அபிமன்யு பிரத்யும்னனிடம் 14 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இளைய யாதவரின் அவை அமர் நிகழ்வை கூறுவான். அங்கு இளைய யாதவரின் குழல் இசையில் தான் கண்ட கனவை கூறும் பொழுது இவ்வாறு தொடங்குகிறான்.
இசை இனியதென்று சொல்கிறார்கள். அது மெய்யல்ல. பேரிசை பெருவெளியின் காட்சி போலவே எண்ணத்தை மலைக்கச்செய்து அச்சத்தை எஞ்ச வைப்பது. தனிமையின் துயரை நிறைப்பது. அனைத்தையும் பொருளற்றதாக்கி முழுமையின் வெறுமையை அளிப்பது. அன்றிரவு நான் தேன்புழு என இனிமையில் திளைத்தேன், அனலில் என வெந்துருகவும் செய்தேன்

அந்த கனவில் அவன் போர்க்களத்தில் இறந்து கிடப்பதையும், துவாரகையின் அழிவையும் கண்டிருப்பான்.  இளைய யாதவனின் பேருருத் தோற்ற தரிசனத்தையும் கண்டிருப்பான். இதை கூறும்பொழுது கனவிலென பித்தன் போல் அமர்திருப்பான். இந்த அபிமன்யு இதற்கு முன் வரும் அபிமன்யுவிடமிருந்து ஒரு இரவில் அதிக தொலைவு கடந்து வந்தவன்.
இதே போன்ற வேறொரு தரிசனத்தை பாண்டு அடைந்திருப்பான். பாண்டு சிறுவயதில் தன் அன்னையுடன் பாவைகளை கொண்டு விளையாடுவான். சற்று வளர்ந்த பின் அவன் ஓவியங்களை நோக்கி சென்றுவிடுவான். ஆனாலும் அவன் அன்னை அதே பாவைகளுடன் தான் விளையாடிக்கொண்டிருப்பாள். அம்பாலிகையும் அம்பிகையும் பீஷ்மரால் கடத்தி வரப்பட்ட பின் ஒருமுறை கூட கங்கைக்கு சென்றிருக்கமாட்டார்கள். அம்பாலிகை கங்கை என்று உச்சரிப்பதை ஒரேயொரு முறை தான் பாண்டு கேட்டிருப்பான். அஸ்தினாபுரி மாளிகை சுவரில் தடாகத்தின் மீது விழுந்த ஒளி அலைகள் பிரதிபலித்து நெளிவதை கண்டு தன்னை அறியாமல் கங்கை என்று கூவிவிடுவாள். அதை கேட்ட சிறியவன் பாண்டு “கங்கையா அன்னையே” என்று கேட்பான். அப்பொழுது அவள் பாண்டுவை பார்க்கும் பார்வை அவன் தான் கண்ட இறந்த பூனையின் கடைசி பார்வை போல் இருக்கும். அன்று தான் அவனுக்கு முதல் வலிப்பு வரும். அது அவன் அன்னையின் உள் பொதிந்துள்ள இருள்.
மார்திகாவதியில் நிகழும் குந்தியின் மனதேற்ப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாண்டு விதுரனுடன் இரவில் கங்கையில் சென்று கொண்டிருப்பான். அப்பொழுது கங்கை அவனுக்கு பல்லாயிரம் நாவாய்களை பாவைகளாக்கி விளையாடிக்கொண்டிருப்பவளாக தோன்றும். அப்பொழுது படகில் துடுப்பு இயக்கி கொண்டிருக்கும் குகர்கள் தாளத்துடன் பாட  ஆரம்பிப்பார்கள்.
மூத்த குகன் கைகளைத்தட்டி தாளத்தை தொடங்கி வைத்தான். மற்ற குகர்கள் தொடைகளிலும் மரப்பலகைகளிலும் தாளமிட்டனர். தாளம் மட்டும் தொடர்ந்து ஒலித்தது. அந்தத் தாளமும் துடுப்புகளின் அசைவும் சரியாக இணையும் வரை அவர்கள் தாளமிட்டனர். தாளம் வழியாக தங்கள் தனிச்சிந்தைகளை தனியிருப்புகளை தனியுடல்களை இழந்து அவர்கள் ஒன்றாவது தெரிந்தது. தாளம் இருண்ட சுழியாக ஆகி சுழன்று சுழன்று ஒரு ஆழ்ந்த புள்ளியாக அதனுள்ளிருந்து ஒரு குகனின் கனத்த குரல் எழுந்தது.

‘அன்னையே என்ன நினைக்கிறாய்? எதற்காக நீ மெல்லச் சிரித்தாய்? ஜனகன் மகளே, பூமியின் வடிவே, பொன்றாபெரும்பொறையே என்ன நினைத்தாய்? எதற்காக நீ மெல்லச் சிரித்தாய்?’


கண்ணீரின் ஒளியே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா! துயரத்தின் குளிரே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!. தனிமையின் விரிவே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா கங்கா! சொல்லாத மொழியே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா! 

குகர்களின் உடல்நிரை இருண்டு வருவதை பாண்டு முதலில் உணர்ந்தான். அவர்களுக்குப் பின்னால் கங்கை மேலும் மேலும் ஒளி கொண்டது. நதியின் ஆழத்திலிருந்து அந்த ஒளி பரவி வந்து அலைகளில் ததும்பியது. அலைகள் ஆழத்தை மறைக்கவில்லை. மென் காற்றால் சிலிர்க்கும் செம்பட்டுபோல. பீலித்தொடுகையிலேயே அதிரும் சருமபரப்புபோல கங்கையின் அடித்தட்டு தெரிந்தது. 

(மழைப்பாடல் 41)

கங்கையின்  ஆழத்திலுள்ள பேரொளியே அணைத்து அன்னையரிடமும் காண்பது. பாண்டு அடைந்த அன்னையரின் தரிசனம்.
இளைய யாதவனின் குழல் இசைக்கு மயங்கும் பாமை, இந்திரநீலம் 27.
அவன் இடைக் கச்சையிலிருந்து தன் குழலெடுக்கும் ஓசையை கேட்டாள். அக்குழலின் மாயங்கள் நானறிந்தவை. அவற்றுக்கப்பால் உன் விழி நிறைந்திருக்கும் புன்னகையை நான் கண்டிருக்கிறேன். விழி திருப்பமாட்டேன், உடல் நெகிழ மாட்டேன் என்று அவள் நின்றாள். நீலாம்பரியின் முதல் சுருள் எழுந்தபோது மலர்விழுந்த சுனை நீர்ப்படலமென தன்னுடலை உணர்ந்தாள்.

‘அருகே வா! என் அழகியல்லவா!’ என்றது நீலாம்பரி. ‘உன் அடிகள் என் நெஞ்சில் படலாகாதா?’ என்று ஏங்கியது. ‘என் முடி தொட்டு மிதித்தேறி என் விண்ணமர்க தேவி!’ என்று இறைஞ்சியது. ‘என் விழி புகுந்து நெஞ்சமர்க!’ என்று கொஞ்சியது. கைவிட்டு திரும்புபவளை பின்னின்று இடை வளைத்துப் புல்கி புறங்கழுத்தின் மென்மயிர்ச்சுருள்களில் முகமமர்த்தி ‘அடி, நீ என் உயிரல்லவா?’ என்று குலவியது. மெல்ல மென்பலகைக் கதவைத் திறந்து உள்ளே நோக்கினாள். அவன் புன்னகை எரிந்த முகம் அவள் நெஞ்சு அமைந்ததென அருகிலிருந்தது. நீலாம்பரி நிலவிலிருந்து ஏரியின் அலைநீரில் விழுந்து கால்நோக்கி நீண்டுவரும் பொற்பாதையென அவள் முன் கிடந்தது. அதில் கால் வைத்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள் 
 
இங்கு குறிப்பிடப்படாத இசை அனுபவங்களாக, குறியீடுகளாக, மற்றும் தரிசனங்களாக வரும் இடங்கள் வெண்முரசில்  உள்ளன. அவை குறைவேயாயினும் அவற்றிற்கென்று தனித்த பயணம் உள்ளது
முந்தைய கட்டுரைகி.ரா.உரையாடல்
அடுத்த கட்டுரைவெட்டிப்பூசல்,கமல்- கடிதங்கள்