காவியங்களை வாசித்தல்

கலேவலா – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

நான் வெண்முரசு நாவல்களில் முதர்கனல், மழைப்பாடல் இரண்டையும் இப்போதுதான் படித்து முடித்தேன். சென்ற பத்தாண்டுகளில் நான் தமிழில் அதிகமாக எதையும் படிப்பதில்லை. என் ஆராய்ச்சிப்பணிகளுக்கான வாசிப்பே பெரும்பாலும். ஆங்கிலத்தில் டிரெண்டிங் ஆன நூல்களை வாசிப்பதுண்டு. என் கல்லூரி நாட்களில்தான் கிளாஸிக்குகளை படித்திருக்கிறேன். அப்போது சவாலான ஆக்கங்களைப் படிக்கவேண்டும் என்ற பதற்றம் இருந்தது. அப்போதுதான் கெத்து என்று நினைத்தேன்.

கமல் சொல்லியிருக்காவிட்டால் வெண்முரசு வரை வந்திருக்க மாட்டேன் என்று சொல்வதில் தயக்கமில்லை. நான் பொதுவாக நம்முடைய சினிமா அரசியலை மட்டும் கவனிப்பவன். என் கவனம்வரை வெண்முரசு வந்தமைக்கும் அது முக்கியம் என எனக்குத் தோன்றியமைக்கும் கமல் காரணம். அதன்பின் உங்கள் தளத்தில் வந்த சிலகுறிப்புகளை வாசித்தேன். சட்டென்று வெண்முரசை ஒருநாள் தொடங்கி பன்னிரண்டு நாட்களில் இரண்டு வால்யூமை முடித்துவிட்டேன்.

வெண்முரசு நாவல் எனக்களித்த அனுபவங்களுக்காகவே இந்த கடிதத்தை அனுப்புகிறேன். எனக்கு இத்தனை தீவிரமாக இந்நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொள்ளும் என்று தெரியாது. ஒரு சின்ன சுவாரசியத்துடன் தான் இதை ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு ஏற்பட்டது மொழிசார்ந்தும் பண்பாடு சார்ந்தும் ஒரு முழுமையான அனுபவம்.அதை விமர்சனமாக என்னால் சொல்லிவிடமுடியாது. ஆனால் எப்படியாவது அதை பதிவுசெய்துவிடவேண்டும் என்றும் நினைக்கிறேன். வேறுபலர் சிறப்பாக எழுதியிருந்தார்கள்.

பொதுவாக ஆங்கில விமர்சகர்கள் நவீன இலக்கிய வாசிப்பு காவிய வாசிப்பு இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இந்தவேறுபாடுகளை உணர்ந்த ஒருவரால்தான் வெண்முரசு போன்ற ஒரு காவியத்தை சரியானபடி வாசிக்க முடியும். ஒரு நவீன இலக்கியத்தில் வாழ்க்கை வாழ்க்கையாகவே காட்டப்படுகிறது. அது புனைவுதான், ஆனால் எந்த அளவுக்கு வாழ்க்கையின் கிட்டத்தில் அது இருக்கமுடியுமோ அந்தளவுக்கு கிட்டத்தில் காட்டப்படுகிறது. அதுதான் வாசகனை இது வாழ்க்கையின் சித்திரமே என்று நம்பவைக்கிறது

நவீன இலக்கியம் வாழ்க்கையின் பிரச்சினைகளையும் அதேபோல உள்ளது உள்ளபடியே என்றுதான் காட்டுகிறது. உண்மையான வாழ்க்கைச்சிக்கல்களுக்குள் நாம் சிக்கிக்கொண்டு நாம் அதன் தீர்வை தேடுவதுபோன்ற அனுபவமே நமக்கு உருவாகிறது. டால்ஸ்டாயையும் டாஸ்டாயெவ்ஸ்கியையும் வாசிக்கும்போது அந்த அனுபவத்தையே நாம் அடைந்துகொண்டிருக்கிறோம்

நவீன இலக்கியத்திலுள்ள சிந்தனைகளுக்கும் இந்த சமீபத்தன்மை உள்ளது. அவை ஒரு கதாபாத்திரமோ ஆசிரியரோ சிந்திப்பதுபோல அமைந்தவை. ஆகவே அவற்றின் சிந்தனைகளின் ஓட்டம் நமக்கு நெருக்கமாக உள்ளது. ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ் ஆகவோ வேறுவடிவிலோ மனசு சொல்லப்பட்டால்கூட அதுவும் நமக்கு நெருக்கமான வடிவில் உள்ளது

காவியங்கள் அப்படி ஒரு சமகாலவாழ்க்கையைச் சொல்வதில்லை. அவை வாழ்க்கையை சித்தரிப்பது கிடையாது. அவை வாழ்க்கையை சுருக்கி அடர்த்தியாக்கி ஒரு concentrated space ஐ உருவாக்கி பேசுகின்றன. அதிலுள்ளது வாழ்க்கை அல்ல, வாழ்க்கைபோன்ற குறியீட்டுநாடகம்தான். அதிலுள்ள எந்த மனிதரும் உண்மையான மனிதர்கள் அல்ல, மனிதர்களைப்போன்ற குறியீடுகள்தான். அந்த மொத்தக் கதைக்களமே ஒரு குறியீட்டு வெளிதான்

ஒரு சமூகம் வாழ்க்கையை தொடர்ச்சியாக ஆராய்ந்து உருவாக்கிக்கொண்ட ஒரு குறியீட்டுவெளியிலே புகுந்து அதைக்கொண்டு மேலும் புதிய ஒரு நகர்வை உருவாக்குவதுதான் காவியம் என்பது.காவியங்கள் பல படிகளாலானவை. அவை பெரும்பாலும் மக்களிடையே தானியங்கியாக உருவான நம்பிக்கைகள் கதைகள் உருவகங்கள் [Myth, Beliefs]  போன்றவற்றிலிருந்து தொடங்குகின்றன. அவை பிறகு வாய்மொழிக்காவியங்களாக [oral epics] மாறுகின்றன.

பிறகு அந்த வாய்மொழிக்காவியங்களிலிருந்து தொடக்ககால காவியங்கள் [primitive epics] உருவாகின்றன. அந்தக்காவியங்களிலிருந்து பண்பட்ட பெருங்காவியங்கள் [classic epic ]உருவாகின்றன. அந்தப்பெருங்காவியங்கள் ஒரு பண்பாட்டின் அடிப்படைகளாக மாறிவிடுகின்றன. அதன்பின் அந்தப்பெருங்காவியங்களை அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப மறுபடியும் எழுதுகிறார்கள். இவை நவீன காவியங்களாக [modern epic] ஆகின்றன.

இந்த நவீனகாவியங்களை ரொமாண்டிக் காலகட்டத்தில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். பழைய கதைகளை திரும்ப எழுதிய காவியங்கள் பிரிட்டிஷ் இலக்கியத்தில் பெரிய அலையை உருவாக்கியவை. அதன்பிறகு வந்தவை பிந்தையநவீன காவியங்கள் [postmodern epic] இவற்றுக்கும் நவீன காவியங்களுக்குமான வேறுபாடு என்னவென்றால் இவை பழையகாவியங்களை புதியமுறையிலே மறுபடியும் எழுதிக்காட்டுவதை மட்டும் செய்யவில்லை. அந்த காவிய எழுதுமுறைகளை எல்லாமே இவை பலவகையான உத்திகளாக கலந்துகொள்கின்றன.

நவீன காவியங்கள் பண்பட்ட காவியங்களின் வளர்ச்சியாக உள்ளன. இந்த பிந்தைய நவீன காவியங்கள் வாய்மொழிக்காவியங்கள், ஐதிககக்கதைகள், பண்பட்ட காவியங்கள் எல்லாவற்றையும் கலந்துகொள்கின்றன. தன்னை காவியங்களின் தொகுப்பாக ஆக்கிக்கொள்கின்றன. அதன்வழியாக ஒரு பெரிய காவியப்பரப்பையும் அந்தக் காவியங்கள் மீதான விமர்சனத்தையும் ஒரே சமயம் நிகழ்த்துகின்றன.

வெண்முரசை நான் ஒரு பிந்தைய நவீன காவியமாகவே பார்க்கிறேன். அதன் ஒரு பகுதி தொடக்ககால காவியங்களையும் இன்னொருபகுதி பண்பட்ட காவியங்களையும் பின்தொடர்கிறது. ஐதீகக்கதைகளும் ஊடுருவி வருகின்றன. அது தனக்குள்ளேயே ஒன்றையொன்று விமர்சிக்கும் பல பகுதிகளின் தொகுப்பாக உள்ளது. நான் வாசிக்க ஆரம்பித்தபோதே பலவகையான சிந்தனை நெருக்கடிகளை அடைந்தேன். அது நாகர்களின் கதையை பழங்கதைகளில் இருந்து நேரடியாக எடுத்துக்கொண்டு சொல்வதுபோலவும் புராணக்கதைகள் பலவற்றை பண்பட்ட காவியத்திலிருந்து எடுத்து சொல்வதுபோலவும் உள்ளது. அந்த தொடர்ச்சியான அடுக்குதலும் கலைத்தலும்தான் இந்த நீண்ட காவியத்தை ஒரு பெரிய அறிவனுபவமாக ஆக்குகிறது

இந்த காவியத்தை வெறுமே ஒரு பழமையான காவியத்தை வாசிக்கிறோம் என்று வாசிப்பவர்கள் அதன் கதைகளாலும் உணர்ச்சிகளாலும் ஆழமான அனுபவத்தை அடையமுடியும். ஏனென்றால் உண்மையில் பண்பட்ட காவியம்தான் செயற்கையான ஒழுங்கும் இறுக்கமும் உடையது. நாம் வாசிக்கும் அடிப்படையான காவியங்களெல்லாமே இதேபோலத்தான் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை வாசிக்க நமக்கு எந்தத் தடையுமில்லை.

ஆனால் நவீன இலக்கியங்களை வாசிப்பதுபோல யதார்த்தம் சார்ந்து தேடலுடன் வாசிப்பவர்களுக்கு இதிலுள்ள பலவகையான கதைமுறைகளின் சிக்கல் பிரச்சினையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் இது யதார்த்தமாக இல்லை, இது நம்பகமாக இல்லை என்றெல்லாம் நினைக்கக்கூடும். இந்தக்கதையின் சிலபகுதிகள் நாட்டுப்புறக்கதை போலவும் சிலபகுதிகள் கிளாசிக் கவிதை போலவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு சிக்கலாக இருக்கும் என்று நினைக்கிறேன்

ஒரு காவியத்தை வாசிக்கையில் அது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் சாராம்சத்தை உருவகப்படுத்தி வைத்திருக்கும் ஒரு sublime space ல் நடக்கும் கதை என்று உணர்ச்சிகொண்டே வாசிக்கவேண்டும். அதன் கவித்துவம் உருவகமே நமக்கு தெரியவேண்டும். அதை நேரடியான வாழ்க்கையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் நாமறிந்த எல்லா வாழ்க்கைகளுடைய சாராம்சத்தையும் அதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு நவீன காவியத்தை வாசிக்கையில் அது முந்தைய காவியத்தை எப்படி மாற்றுகிறது, எந்தெந்த வேல்யூஸை மாற்றியமைக்கிறது என்றவகையிலே வாசிக்கவேண்டும். அது மாற்றியமைக்கும் விஷயங்களிலுள்ள ஒழுங்கும் அழகும்தான் முக்கியம். அதன் தத்துவார்த்தமான பொருத்தப்பாடும் முக்கியமானது. அது புதிதாக என்ன சொல்லவருகிறது என்பது முக்கியம்.

ஆனால் பிந்தைய நவீன காவியத்தை வாசிக்கையில் அது எப்படி மாற்றியமைக்கிறது என்பதுடன் அது எப்படி அந்த யூனிட்களைக்கொண்டு விளையாடுகிறது என்பதும் முக்கியம். ஒன்றோடொன்று ஒவ்வொன்றையும் அது மோதவிடுகிறது. அது ஒரு விளையாட்டு. நம்முடைய நீதியுணர்வுடனும் நம்முடைய சிந்தனைகளுடனும் அது விளையாடுகிறது.

முதற்கனலை வாசிக்கையில் பீஷ்மர் என்ற மாபெரும் அப்பாவைத்தான் நான் வாசித்தேன். நம் வீடுகளிலெல்லாம் அப்பாக்கள் உண்டு. அவர்கள் அனைவருமே நன்றிமறக்கப்பட்டவர்கள்தான். அவர்களின் தியாகம் பயனில்லாமல்போகும். அவர்கள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பார்க்கிறோம். அப்பாக்கள் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்கொண்டே ஆகவேண்டும்

அதேபோல சிகண்டி கதையிலும் ஒரு சமகாலச் சாராம்சம் உண்டு. எல்லா வீடுகளிலும் உருப்படாத குழந்தை உண்டு. அழகும் தகுதியுமில்லாதவன். அவன் தான் அப்பாவின் முதலெதிரி. அப்பாவை கொல்லவும் செய்வான். அதாவது உணர்ச்சிகளாக. ஆனால் அவனுக்கு அப்பாவின் மானசீகமான ஆசியும் இருக்கும்

இப்படி எப்போதுமுள்ள வாழ்க்கையின் சாராம்சங்களே கதாபாத்திரங்களாகவும் கதைச்சந்தர்ப்பங்களாகவும் மாறித்தான் ஒரு காவியத்தில் இடம்பெறுகின்றன. அவற்றை அவ்வாறு வாசித்து எடுப்பவர்களுக்கே காவியங்களால் சுவை உண்டு. பிந்தைய நவீன காவியம் என்பது அந்த கதையைக்கொண்டு தானே பலபடியாக மேலும் பின்னிக்கொள்பவர்களுக்காக எழுதப்படுவதாகும்

ஆர்.எஸ்.குமரவேல்

முந்தைய கட்டுரையானை டாக்டர் இலவசப்பிரதிகள்
அடுத்த கட்டுரைஇயற்கையின் சான்று- கடிதங்கள்