நூற்கொடைகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒரு படைப்பை யாருக்கு சமர்ப்பணம் செய்வது என்பதில் ஏதாவது பொது விதிமுறைகள் இருக்கின்றனவா? அல்லது நீங்கள் அப்படி ஏதாவது விதிமுறைகள் வைத்திருக்கிறீர்களா? குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

மேலும், சமர்ப்பணம் என்ற சொல்லுக்கு மாற்றாகத் ‘தாள்வைப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இது சரியானது தானா?

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்

பொதுவாக இந்த நூல் சமர்ப்பணங்களைப் பற்றி அவ்வப்போது சிலர் சற்றுக் கேலியாக ஏதேனும் சொல்வதுண்டு. சிலர் அதை தவிர்ப்பதை ஒரு வகை புரட்சியாகவும் சொல்லிக் கொள்வார்கள்.

வெவ்வேறு காலங்களில் நூல்கள் தொடர்பான பல நடைமுறைமைகள் இருந்துள்ளன. அவற்றுக்கு என்று சில நோக்கங்கள் உண்டு. ஒரு நூலை பொதுவில் நோக்குபெறச் செய்வதற்கும், நூலாசிரியனின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் அமைந்தவை.

பழங்காலத்தில் நூல்களின் முகப்பில் சில முன்னோட்டப் பகுதிகள் இருந்தன

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

என்று நன்னூல் அதைச் சொல்கிறது. முகவுரை என்பது ஆசிரியனால் எழுதப்படும் தன்னறிவிப்பு. பதிகம் நூலின் உட்பொருள் குறித்து பத்துப்பாடல்களில் சொல்லப்படுவது. அணிந்துரை சான்றோரால் அளிக்கப்படுவது. புறவுரை என்பது பின்னாளில் அந்நூலுக்கு அளிக்கப்படும் சிறப்புரை. தந்துரை என்பது அந்நூலைப்பற்றி புரவலர் போன்றோரால் அளிக்கப்படும் பாராட்டுரை. புனைந்துரை அந்நூலைப்பற்றிய கதை. இவையனைத்தையும் உள்ளிட்ட பொதுத்தலைப்பே பாயிரம். இதுவே பொதுப்பாயிரம் சிறப்புப் பாயிரம் என இருவகை எனப்படுகிறது

இந்தப் பாயிரப்பகுதியிலேயே அவையடக்கம் ஒரு கூறு. ஆசிரியன் தன்னுடைய எளிமையையும் தான் எதிர்கொள்ளும் சான்றோர் அவையின் சிறப்பையும் தன் பேசுபொருளின் அருமையையும் சொல்வது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

என கம்பனே பூனை பாற்கடலை நக்கிக் குடிப்பதுபோல நூலின் பெருமையைச் சொல்லி தன்னை தாழ்த்திச் சொல்கிறான்.

இவை தவிர காப்பு, வாழ்த்துக்கள் என பல நூல்பகுதிகள் பண்டைய நூல்களில் உண்டு. இவற்றை வெறுமே மரபுசார் உரைகள் என எடுத்துக்கொள்ள முடியாது. இவற்றில் அந்நூலாசிரியனின் உள்ளம், அவனுடைய நோக்கம், அவன்மேல் பிறர்கொண்டிருக்கும் மதிப்பு வெளிப்படுகிறது

அதைப்போல புதியகாலத்தில் நூல்களில் பதிப்புரை, அணிந்துரை, முன்னுரை, சமர்ப்பணம், அட்டைக்குறிப்புகள் ஆகியவை நூல்முகப்புப் பகுதிகளாக உருவாகி வந்துள்ளன.

அரிய நூல்கள் என்றால் பதிப்புரை தேவை. அப்பதிப்பில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதும், அப்பதிப்பின் நோக்கம், பதிப்பு நிகழ்ந்தவிதம், பதிப்பில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும் முறைமைகளும் ஆகியவற்றைப் பற்றிய குறிப்பாக அது அமைதல் வழக்கம்.

முன்னுரையை தகுதியான ஒருவர் வழங்குவது வழக்கம். தொல்காலத்தைய பாயிர மரபின் நீட்சிதான் இது. முன்பு ஆசிரியன், மாணவன், மைந்தன், சான்றோன் ஆகியோர் நூலுக்குப் பாயிரம் அளிக்கலாம். இன்று அத்துறை முன்னோடிகளிடமிருந்து பாயிரம் பெறப்படுகிறது. மூத்தபடைப்பாளிகளுக்கு இளையோர் பாயிரம் வழங்குவதுண்டு. எனக்கே சு.வேணுகோபால், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்கள் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள்.

தானே எழுதிக்கொள்ளும் முன்னுரை பலரால் விரும்பப்படுவதில்லை. நூலில் இல்லாததா முன்னுரையில் என்று கேட்பார்கள். முன்னுரை என்பது ஒரு சிறிய முகமனுரைதான். அது வாசகனை புனைவு என்னும் வீட்டுக்குள் அனுமதிக்கும் ஒரு புன்னகையும் வரவேற்பும் என கொள்ளலாம்.

கட்டுரைத் தொகுதி என்றால் அக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலம், அவற்றின் பின்னணி ஆகியவற்றை முன்னுரையில் குறிப்பிடலாம். அக்கட்டுரைகள் எந்த பொதுமையின்படி தொகுக்கப்படுகின்றன, எந்த மையநோக்கு கொண்டுள்ளன என்று சொல்லலாம்.

புனைவுக்கு அணிந்துரை, முன்னுரை தேவையில்லைதான். ஆனால் அப்புனைவு எழுதப்பட்ட சூழல், அப்புனைவுக்கு முன்னும்பின்னும் இருந்த உளநிலைகள், அப்புனைவுக்கு இட்டுச்சென்ற தூண்டுதல்கள் ஆகியவற்றைப்பற்றி ஆசிரியன் எழுதுவது பலவகையிலும் வாசகனை அப்புனைவை அணுக்கமாக உணரவைக்கும்.

புனைவின் ஆக்கத்தில் பங்களித்தவர்களுக்கு நன்றி சொல்லவும், புனைவுக்கு தூண்டுதலாக அமைந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் குறிப்பிடவும் முன்னுரை தேவையாகிறது. இலக்கியச் செயல்பாடு எதுவாயினும் அது ஒரு பெருந்தொடர்ச்சியிலேயே இருக்கிறது. பெரும்படைப்புகூட பேரொழுக்கில் ஒரு கொப்புளமே.அந்த தொடர்ச்சியை தன்னகத்தே உணர்பவர்கள் அதை நன்றிகள் வழியாக முன்னுரையில் தெரிவிக்கிறார்கள்.

தி.ஜ.ரங்கநாதன்

தமிழில் மூத்தோர் அணிந்துரைகளில் பாரதியின் கண்ணன்பாட்டுக்கு வ.வே.சு.அய்யர் எழுதிய முன்னுரையும்,புதுமைப்பித்தன் கதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதிய முன்னுரையும், ஜெயகாந்தன் கதைகளுக்கு தி.ஜ.ரங்கநாதன் எழுதிய முன்னுரையும் முக்கியமானவையாக குறிப்பிடப்படுகின்றன.

சுந்தர ராமசாமி வண்ணதாசன் சிறுகதைகளுக்கும், நாஞ்சில்நாடனின்  ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலுக்கும் கறாரான முன்னுரை எழுதியிருக்கிறார். அதை அணிந்துரை எனச் சொல்லமுடியாது- ஏனென்றால் அது விமர்சனப்பார்வைகொண்டது.

அடுத்த தலைமுறையினர் முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளுக்கு எழுதிய முன்னுரைகளில் க.நா.சு ஐந்திணை வெளியீடாக வந்த புதுமைப்பித்தன் கதைகளுக்கு எழுதிய நீண்ட முன்னுரை முக்கியமானது. திலீப்குமார் மௌனி கதைகளுக்கு எழுதிய முன்னுரை நீளமான ஓர் ஆய்வாகவே கொள்ளத்தக்கது. ப.சிங்காரத்துக்கு நான் எழுதிய முன்னுரை ஓர் ஆய்வுநூலளவுக்கே பெரியது.அவரை மறுகண்டுபிடிப்பு செய்து வரையறைசெய்து நிறுவும்தன்மை கொண்டது.

வ.வே.சு.அய்யர்

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் முன்னுரைகள் மதிப்பு மிக்கவை. சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதை நாவலுக்கு எழுதிய முன்னுரையில் அவர் இடதுசாரிகளிடம் கொண்ட விலக்கத்தை பதிவுசெய்தார். அது அன்று பெரிய அலைகளை உருவாக்கியது

அட்டைக்குறிப்புகள் முன்னுரையின் பகுதிகளாக அமையலாம். அணிந்துரையின் பகுதியாகவும் அமையலாம். ஒரு புத்தகக் கண்காட்சியிலோ அல்லது நூலகத்திலோ அட்டைக்குறிப்புகளை வாசிப்பதென்பது வாசகனின் இன்பங்களில் ஒன்று. நுனிப்புல்மேய்தல்தான், ஆனால் நுனிப்புல் சுவையானது, மொத்தப்புல்வெளியையும் அறிமுகம் செய்வது

இந்த வரிசையில்தான் சமர்ப்பணம் வருகிறது. அவ்வாறு ஒரு வழக்கம் இந்தியமரபில் இல்லை. அச்சுநூல்களை நாம் மேலைநாட்டு வழக்கப்படி அமைத்துக்கொண்டபோது வந்தது அது. ஐரோப்பாவில் நூல்களை dedicate செய்யும் வழக்கம் உண்டு, அதன் தமிழ்வடிவம் சமர்ப்பணம். அதை படையல், காணிக்கை, கொடை என்றெல்லாம் தமிழ்ப்படுத்திக்கொள்வதுண்டு. தாள்வைப்பு நல்ல சொல்தான், ஆனால் நண்பருக்கு ஒரு நூலை அளிக்கையில் அச்சொல் மிகையாக ஆகிவிடும். ஆசிரியர் மூத்தோர் சான்றோருக்கென்றால் சரி.

தமிழில் நூல்சமர்ப்பணங்கள் பொதுவாக ஆசிரியர்களுக்கே செய்யப்பட்டன. இன்றும் பெரும்பாலும் அப்படித்தான். அதுவே முதன்மையானது. ஏனென்றால் இலக்கியமோ தத்துவமோ மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கே கைமாறப்படுகின்றன. ஆசிரியர்- மாணவர் என்ற உறவே அதை நிகழ்த்துகிறது. உலகமெங்கும் இப்படித்தான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கென கல்வியும் ஞானமும் சென்றுகொண்டிருக்கிறது.

தன்னை ஆழ்ந்து பாதித்த ஆசிரியர் இல்லாத ஒருவர் எத்தகுதி கொண்டவர் என்றாலும் அவரிடம் ஆழமிருப்பதில்லை. விந்தையானதோர் தற்செருக்கும், பணியவேண்டிய இடங்களில் பணியாத சிறுமையும் அவரிடமிருப்பதை காணலாம். அத்துடன் அவர் அமைப்புகள், நம்பிக்கைகளுக்கு அடிமையாகிவிடுவதை, சாதி மதம் போன்ற அடையாளங்களால் இயக்கப்படுவதையும் காணமுடிகிறது. விழுமியங்கள் வாழும் ஆசிரியரின் கொடையெனவே அமைய முடியும்.

தமிழில் புகழ்பெற்ற சமர்ப்பணங்கள் பாரதி செய்தவை. ‘ஸ்வதேச கீதங்கள் ‘ என்ற தமது முதல் கவிதைத் தொகுப்பை, 1908- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டார். அதை அவர் தன் குருவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். “கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்”

இந்த குரு யார் என்பதைப்பற்றிய விவாதங்கள் உள்ளன. பாரதியின் தேசபக்திப் பாடல்களின் இரண்டாம் தொகுதி ‘ஜன்மபூமி’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் 1909 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. இந்த நூலை அவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதாவுக்குச் சமர்ப்பணம் செய்தார். “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.” தொடர்ந்து ஞானரதமும் நிவேதிதாதேவிக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டது.

பாரதியின் இந்த சமர்ப்பணங்கள் நூலாசிரியர்களில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தின. ஏனென்றால் தமிழில் நூல்கள் வரத்தொடங்கியபோதே பாரதியின் இந்த சமர்ப்பணங்கள் நிகழ்ந்துவிட்டன.

பின்னாளில், நவீன இலக்கியம் உருவானபோது இந்த சமர்ப்பண மனநிலை சற்று கேலியாகப் பார்க்கப்பட்டது. புதுமைப்பித்தனைச் சந்தித்ததைப் பற்றி எழுதும்போது க.நா.சு ஒன்றை சொல்கிறார். அவர் நூல் ஒன்றை ‘குருவிடமிருந்து சீடனுக்கா?” என்று எழுதி அளித்தார். அப்பக்கத்தை கிழித்து வீசியெறிந்த புதுமைப்பித்தன்  “குரு சிஷ்யன் என்பதெல்லாம் நான்சென்ஸ்” என்றார்.

புதுமைப்பித்தனிடமிருந்த இயல்பான துடுக்கும் கசப்பும் இதில் வெளிப்படுகிறது. அவருடைய தனிப்பட்ட மனநிலை. ஆனால் பின்னால் வந்தவர்கள் அதையே ஒரு ’நவீன’ மனநிலையாக எடுத்துக்கொண்டார்கள். அந்த மனநிலை அசோகமித்திரனுக்கோ சுந்தர ராமசாமிக்கோ இருக்கவில்லை. சுந்தர ராமசாமி க.நா.சுவை தன் ஆசிரியராகவே இறுதிவரை எண்ணியிருந்தார்.

தன் உருவாக்கத்தில் பங்குள்ள ஆசிரியர்களுக்கே நூல்களை முதன்மையாக சமர்ப்பணம் செய்யவேண்டும். அது அவர்களுக்கு நாம் செய்யத்தக்க கைமாறு அது ஒன்றே என்பதனால்தான். வேறு எதை நாம் அளிக்கமுடியும்? அதோடு அது நம்மை நாமே வகுத்து முன்வைப்பதும்கூட.

அடுத்தபடியாக நம்மை ஆட்கொண்டவர்களுக்கு நூல்களை சமர்ப்பணம் செய்யலாம். பெருங்கலைஞர்களுக்கு, சிந்தனையாளர்களுக்கு. அவர்கள் சென்ற காலத்தையவர்களாக இருந்தாலும்.

நம் வாழ்க்கையில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய, நம் மீது அன்புகாட்டி பேணிப் புரக்கும் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நூல்களை சமர்ப்பணம் செய்யலாம். அது வாசகர்களை நோக்கி நாம் சொல்வது அல்ல, நமக்கு நாமே சொல்லிக்கொள்வது. எழுத்தாளன் என்பவன் உணர்வுரீதியாக நொய்மையானவன். உலகியல்ரீதியாக திறனற்றவன். அவனை உற்றார் பேணியாகவேண்டும். பேணப்படுபவர்களே சிறப்பாக பங்களிப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு எழுத்தாளன் திரும்பச் செய்வது இந்த நூற்கொடை மட்டுமே

என் அம்மா இல்லையேல் நான் இல்லை. அருண்மொழி என் வாழ்க்கையை ஒழுங்குசெய்து உடனிருப்பதனாலேயே நான் இயங்க முடிகிறது. என் அறிவியக்கச் செயல்பாடுகளை அறியாதவர்கள் என்றாலும் என் அப்பாவும் அண்ணனும் என் காவலர்கள். என் நண்பர்கள் நான் எண்ணிய எல்லாம் செய்ய என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். ஒருவகையில் தமிழிலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் எல்லாமே சரிவர அமைந்தவன் நானே. அவர்களுக்கே என் நூல்களை சமர்ப்பணம் செய்கிறேன். நான் அளிக்கத்தக்கது அது மட்டுமே என்பதனால்

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்தாளனின் பார்வை- கடிதம்
அடுத்த கட்டுரைகதைகளைப்பற்றி…