தற்சிறை

ஈரட்டி பங்களாவின் சமையலறை விஸ்தாரமானது, ஐம்பதுபேருக்குச் சமைக்கலாம். அதற்கு தேவையில்லாமல் வடிவமைப்பாளர் ராஜமாணிக்கம் பிரம்மாண்டமான கண்ணாடிச்சன்னல்களை அமைத்திருந்தார். வெளியே பூத்த புதர்க்குவை ஒன்று முற்றாகவே அதை நிறைத்து அந்த சன்னலே ஓர் ஓவியமெனத் தோன்றியது.

டீ போட்டுக்கொண்டிருக்கும்போது லொட் லொட் என ஏதோ ஓசை. பாத்திரத்தில் நீர்த்துளி சொட்டுகிறதா? மழையும் இல்லையே. கொஞ்சநேரம் தேடியபிறகே கண்டுபிடித்தேன். சன்னல் கண்ணாடியில் ஒரு நீலப்பறவை வந்து கொத்திக்கொண்டிருந்தது

அருகே சென்று பார்த்தபோது எழுந்து பறந்தது. ஆனால் நான் அசையாமல் நின்றபோது மீண்டும் அருகே வந்தது.மீண்டும் லொட் லொட். கொத்தும் விதத்தை கவனித்தேன். சிரான லொட் லொட் அல்ல. நாலைந்து லொட் லொட். கொஞ்சம் யோசனை, தயக்கம் மீண்டும் இரண்டு லொட் லொட். சிறகடித்து எழுந்து பறந்து இன்னொரு இடத்தில் லொட் லொட்

ஏதோ ஆராய்ச்சிதான் செய்கிறது. கண்ணாடியை ஒரு செங்குத்தான குளம் என்று நினைத்துக்கொண்டதா? இந்த நீர்ப்பரப்பு ஏன் நெகிழ்ந்து அலைகொள்ளவில்லை என்று யோசிக்கிறதா? அல்லது பறக்கக் கிடைத்த காற்றுவெளி எப்படி சுவரென்று ஆகி தடுக்கிறது என்று ஆராய்கிறதா?

நான் சற்று அசைந்ததும் அது பறந்து சென்றது. வராது என நினைத்தேன். ஆனால் அருகில் இருந்த மலர்ப்புதரில் சென்று அமர்ந்து ரிக் ரிக் ரிக் என்று ஓசையிட்டது. மீண்டும் எழுந்து வந்து சன்னல் விளிம்பில் அமர்ந்தது. சிறகடித்து பறந்து கொத்த ஆரம்பித்தது

வெளியே ஒளி, உள்ளே அரையிருள். ஆகவே சன்னல் கண்ணாடி ஆடிபோல ஆகியிருக்கலாம். அதன் உருவை அதற்கே காட்டலாம். குருவிகள் கண்ணாடிகளுடன் காதல்கொள்வதுண்டு. தற்காதல், நார்ஸிஸம்.தன்னைத்தானே முத்தமிட்டபடி கண்ணாடிமேலேயே அமர்ந்திருக்கும். எத்தனை விரட்டினாலும் திரும்ப வரும்.

கண்ணாடியை எடுத்து திருப்பி போடாவிட்டால் அதுவே அக்குருவியின் சாவிடம். ஒருநாளைக்கு தன் எடைக்குமேல் உணவை உண்ணவேண்டிய பறவை குருவி. ஊணொழிந்து அவ்வண்ணம் தன்னைத்தானே முத்தமிட்டுக்கொண்டிருந்தால் அது ஓரிருநாளில் சிறகோய்ந்து சாவுக்கு ஒருங்கிவிடும்.

ஒருகட்டத்தில் சாவை அது விரும்புவதுபோலிருக்கும். துரத்தினால் பறக்காது. கைகளால் பற்றிவிடமுடியும். பூனை பிடித்தாலும் உடலை அளிக்கும். அப்போது அதைப்பார்க்கையில் ஒரு பெருந்திகைப்பு ஏற்படும். எந்த சிறையை விடவும் பெரியது தற்சிறை. அதை தானே உருவாக்கிக் கொள்கிறோம். தன்னை உடைத்தாலொழிய அதை உடைக்கமுடியாது.

ஏன் அந்த பெரும்பித்து? ஆடியில் தெரிவது தானே என குருவி அறிவதில்லை. அது பிறிதொரு குருவி என நினைக்கிறது. தான் சொல்வதற்கெல்லாம் மறுசொல் எடுப்பது. அதுவும் தான் சொல்வதற்கு மிகமிகச் சரியான மறுசொல். உடலாலும் குரலாலும். தனக்கு உகந்த மறுசொல்லை தானேதான் எடுத்துக்கொள்ள முடியுமா என்ன? தான் விழையும் அந்த மறுமொழி தன்மொழியின் ஆடிப்பாவை வடிவம் மட்டும்தானா?

விஷ்ணுபுரம் நாவலில் ஆடியில் சிக்கிக்கொண்ட ஒரு குருவி வரும். நகரமே ஊழியில் அழிந்து மூழ்கிக்கொண்டிருக்கும். ஓர் இல்லத்தில் ஒரு குருவி ஆடியில் சிக்கி அமர்ந்திருக்கும். மிக எளிதாகப் பறந்தகலும் வாய்ப்புள்ளது. அது தன்னை விட்டு விலகவில்லை. விஷ்ணுபுரத்தின் தொன்மையான கொள்கைகள்மேல் அதுகொண்ட பற்று அதன் பெருந்தளை. அது தன்னைத்தானே வியந்து தன்னையே தான் காதலித்து அழிவில் அமைந்த மாநகர்

நான் டீ போட்டுக்கொண்டு வந்துவிட்டேன். ஒருமணிநேரம் கழித்துச் சென்றேன். அங்கேயே இருந்தது அப்பறவை. வேறுபறவையா என்று பார்த்தேன். அதுதான். பகல் முழுக்க அங்கேயே இருந்தது. இரவில் அந்தக்கண்ணாடிப்பரப்பு மறைந்தபோது அது சென்று அந்த பூச்செடியில் அமர்ந்துகொண்டது

மறுநாள் முதல் வெளிச்சத்திலேயே லொட் லொட். எந்த திறவாக்கதவின் மேல் அந்த தட்டு? எந்த விடையின்மையின்மேல் முட்டுகிறது அந்த வினா? எந்த நெகிழ்வின்மையின் முன் அந்த மாபெரும் மன்றாட்டு? அதை பார்த்துக்கொண்டிருந்தேன். தட்டுவது தளர்வுற்றிருந்தது. அவ்வப்போது சில முத்தங்கள். மற்றபடி தலைசரித்து தலைசரித்து பார்த்துக்கொண்டே இருந்தது

என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆடி என்றால் திருப்பி வைக்கலாம். கண்ணாடிச் சன்னலை என்ன செய்வது? பகல் முழுக்க அங்கேதான் இருந்தது. சோர்ந்திருந்தது, பெரும்பாலும் வெறுமே பார்த்துக்கொண்டு, மூக்கால் தொட்டுக்கொண்டு, நோக்கியபடி தொற்றியிருந்தது.

மறுநாள் அது அங்கே இல்லை. நான் மறுபக்கம் சென்று பார்த்தேன். அது எங்கும் தென்படவில்லை. எங்கிருக்கும்? விடுபட்டுச் சென்றிருக்கும் என்று நம்ப விரும்பினேன். இன்னொருபக்கம் அப்படியே உயிர்விட்டிருக்கும் என்றும் எண்ணினேன். ஒன்று யதார்த்தமான ஆசை, இன்னொன்று ஒரு இலட்சியவாத மோகம்.

முந்தைய கட்டுரைஉலகுக்குப் புறங்காட்டல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி- எம்.வேதசகாயகுமார்