மீரா- கடிதங்கள்-2

மெய்யான முன்னுதாரணங்கள்

அன்புள்ள ஜெ

க்ரியா பற்றி எழுதியிருந்தீர்கள், காலச்சுவடு பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?

ராஜசேகர்

அன்புள்ள ராஜசேகர்

காலச்சுவடு கண்ணனுக்கும் எனக்கும் பல தனிப்பட்ட சிக்கல்கள் உண்டு. ஆனால் காலச்சுவடு க்ரியா வழியாக சுந்தர ராமசாமி என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்யும் ஒரு பதிப்பகம்

அது தொடர்ச்சியாக இளையபடைப்பாளிகளை அறிமுகம் செய்கிறது. உலக இலக்கியத்தை கொண்டுவருகிறது. அதற்கு ஒரு படிமேலாக தமிழின் அத்தனை முந்தைய தலைமுறை படைப்பாளிகளையும் தரமான அச்சில் வெளியிட்டு எப்போதும் சந்தையில் வைத்திருக்கிறது. பதிப்பகம் செய்யவேண்டிய பணி இதுதான். காலச்சுவடு ஓர் அறிவியக்கம்  

ஜெ

அன்புள்ள ஜெ

முன்பொருமுறை பேசும்போது க்ரியா ராமகிருஷ்ணன் சி.மணிக்கு தமிழகத்து தோண்டுகிணறுகள் என்ற நூலை மொழியாக்கம் செய்யக்கொடுத்தது அவருடைய படைப்பூக்கத்தை அழித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள்.அதை இப்போது நினைவுபடுத்திக்கொண்டேன்

பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்

சி.மணியை அவருடைய முப்பது வயதில் சந்தித்த சி.சு.செல்லப்பா ‘ஒருநாள் இந்த இளைஞர் நோபல் பரிசு பெறக்கூடும்’ என்று சொன்னதாகச் சொல்வார்கள். அத்தனை அறிவார்ந்த தேடலும் துடிப்பும் கொண்டிருந்தார். ஆழ்ந்த படிப்பு இருந்தது.

ஆனால் அன்றைய தமிழ்ச்சூழல் சி.மணியை முடக்கியது. அங்கீகாரமில்லை. வாசிப்பதற்கே எவருமில்லை. அது அவரை ஒருவகை நரம்புத்தளர்ச்சி நோக்கிச் செலுத்தியது. அவருடைய படைப்பூக்கம் அழிந்தது. பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கியவராக ஆனார்

அவர் ஒருவேகத்தில் வேலையை விட்டார். அவரால் வேலைபார்க்கமுடியாத உடல்நிலை என்றும் சொல்லப்பட்டது. அவருக்கு ‘உதவ’ கிரியா ராமகிருஷ்ணன் அளித்த பணி என்பது அவர் நிதிக்கொடைபெற்று வெளியிட்ட ‘தமிழகத்து தோண்டுகிணறுகள்’ என்ற நூலின் மொழியாக்கம்

அதைச் செய்யத் தொடங்கி சி.மணி மெல்லமெல்ல சோர்வுக்குமேல் சோர்வுக்குச் சென்றார். அவருடைய அகமொழி அழிந்தது. அவர் மீண்டு வரவே இல்லை.

நான் ஒரு கட்டத்தில் இத்தகைய சில பணிகளைச் செய்திருக்கிறே. அப்போது சுந்தர ராமசாமி இதைச் சொல்லி என்னை எச்சரிக்கை செய்ததுண்டு. எழுத்தாளன் எந்த வேலையையும் செய்யலாம், மொழியை இயந்திரத்தனமாக கையாளும் வேலையைச் செய்யக்கூடாது

க்ரியா சி.மணிக்கு ஒரு நல்ல முழுத்தொகுப்பு கொண்டு வந்திருக்கலாம். அவர் மொழியாக்கம் செய்த டி.எஸ்.எலியட் கட்டுரைகள், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கட்டுரைகள், ஜே.கிருஷ்ணமூர்த்தி உரைகள், தாவோ குறித்த நூல் ஆகியவற்றை நூலாக்கியிருக்கலாம். அவருக்கு அது உதவியிருக்கும். அவை பெரும்பாலும் அச்சேறாமலேயே போயின

ஜெ

அன்புள்ள ஜெ,

அன்னம் மீரா பற்றிய குறிப்பில் அவர் நடத்திய அன்னம் விடுதூது இதழ் மற்றும் அவர் ஒருங்கிணைத்த கவிதைநிகழ்வுகள் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள்

ராஜ்

அன்புள்ள ராஜ்,

அது ஒரு முழுமையான நினைவுக்குறிப்பு அல்ல. ஒரு தருணத்துக்காக நினைவுகூர்ந்தது மட்டுமே.

2002ல் மீரா மறைந்தபோது எனக்கு ஊடகமில்லை. ஆகவே விரிவான நினைவுக்குறிப்பு எழுதவில்லை. சிறுகுறிப்பே எழுதினேன். பின்னர் நூலாக எழுதவேண்டும் என எண்ணினேன். முடியவில்லை. உதிரி உதிரியாக ஆங்காங்கே கிடக்கின்றன நினைவுக்குறிப்புகள்

ஒர் ஆளுமையின் நினைவு பசுமையாக இருக்கையிலேயே பதிவுசெய்யவேண்டும், நூல்வடிவிலேயே எழுதிவிடவேண்டும் என இன்று நினைக்கிறேன். அதற்குக் காரணம் இதுதான். இலக்கிய இயக்கம் என்பது இந்த நினைவுகூர்தல் வழியாகவே நீடித்த பெருக்காக மாறுகிறது. தலைமுறையிலிருந்து தலைமுறைக்குச் செல்கிறது. உலகமெங்கும் இலக்கியவாதிகளை நினைவுகூர்ந்து எழுதப்பட்டவை இலக்கியப்படைப்புகளின் அளவுக்கே உள்ளன.

அன்னம் விடுதூது மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. அதில் நான் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். என்னிடம் ஓர் இதழ்கூட இல்லை. அன்னம் நடத்திய கவிதைநிகழ்வில் அப்துல் ரகுமான் கவிதை வாசிக்க நான் பார்வையாளனாக கலந்துகொண்டிருக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைக்யோஜன்
அடுத்த கட்டுரைஇயற்கையின் சான்றுறுதி