மெய்யான முன்னுதாரணங்கள்
அன்புள்ள ஜெ,
மீரா பற்றிய நினைவு அருமை. அவருடைய பங்களிப்பென்ன ஆளுமை என்ன என்று அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மை. இந்தியச்சூழலில் ஒரு சர்வசாதாரணமான ஆங்கில எழுத்தாளர் பெறும் முக்கியத்துவத்தை கி.ராஜநாராயணன் பெறமுடியாது. ‘பார்ட்டி தொடர்புகள்’ என்று ஒன்று உண்டு. பிஸினஸில் திறமை, தகுதியைவிட அதுதான் முக்கியமானது. இங்கே இலக்கியத்திலும் அது மெல்ல நுழைந்துகொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் இலக்கியத்திற்கு கௌரவம் இல்லை. ஆகவே இங்கே வந்து இடம்பிடிக்க ‘பார்ட்டி மென்’ முயலவில்லை. இப்போது அதற்குள் நுழையத் தொடங்கிவிட்டனர். அவர்களின் தொடர்புவலை, ஊடகத்திறனை கடந்து உண்மையான பங்களிப்புள்ள ஆளுமைகளைப்பற்றிச் சொல்வது மிகக்கடினம். சொல்லிக்கொண்டே போகவேண்டியதுதான்.
பார்த்துக்கொண்டே இருங்கள், பத்தாண்டுகளுக்குப்பின் தமிழ்ப்பதிப்புலகமே க்ரியா ராமகிருஷ்ணனை நம்பி இயங்கியதாக எழுதிவிடுவார்கள்
அர்விந்த்
***
அன்புள்ள அர்விந்த்
எழுதலாம். ஆனால் சொல்லிச் சொல்லி உண்மையைக் கடத்தும் ஒரு சிறு மரபுச்சரடு எப்போதும் இருந்துகொண்டிருக்கும். அவர்களின் வலிமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியை எவர் தொடர்ந்து நினைவில் நிறுத்துகிறார்கள்? பதிப்பாளர் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியை வரலாற்றில் அழியாமல் வைத்திருப்பது யார்? ஊடகவாதிகளா என்ன? இந்தச் சிறிய வட்டத்தின் சொல்வழி வரலாறுதானே? அது என்றுமிருக்கும். என்றாவது ஒருநாள் அது மைய ஓட்டமாகவும் ஆகக்கூடும்
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன்
க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய கட்டுரையில் ‘ சுரேஷ்குமார இந்திரஜித் தன் சிறுகதைகளை சொந்த செலவில் வெளியிட்டார் ‘ என்ற குறிப்பு உள்ளது.
நான் சொந்த செலவில் புத்தகம் வெளியிடவில்லை. என் முதல் தொகுப்பு ‘ அலையும் சிறகுகள் ‘-யை பாளையங்கோட்டை சிவசு அவர்கள் ‘ இலக்கியத் தேடல் ‘ என்ற அமைப்பின் மூலமாக வெளியிட்டார் . . இரண்டாவது தொகுப்பு ‘ மறைந்து திரியும் கிழவன் ‘-யை அன்னம் மீரா வெளியிட்டார்.இது பரவலாக பலரையும் அடைந்தது .
எனவே இக்கடிதத்தின் முதல் பாராவில் கண்ட என்னைப் பற்றிய குறிப்பை நீக்கிவிட கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
சுரேஷ்குமார்
***
அன்புள்ள ஜெ
மீராவைப்பற்றிய நினைவுகளை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது கொஞ்சம் வேகமாக எழுதிவிட்டீர்கள். அது அவர் ஒரு போராளி என்ற பிம்பத்தை அளிக்கிறது. முன்பு எழுதும்போது அவருடைய வேடிக்கை, கொண்டாட்டம் எல்லாம் எழுதப்பட்டிருந்தது. [திதி குடுத்திடறோம், போங்க]
கோணங்கி அவரைப்பற்றி சொன்ன அந்த என்கவுண்டர் வேடிக்கையை எங்காவது பதிவுசெய்யலாம்
ராமகிருஷ்ணன்
***
அன்புள்ள ராமகிருஷ்ணன்
மீரா எங்களிடம் எப்போதும் வேடிக்கையும் விளையாட்டுமாகவே இருந்தார். அவருடைய வரலாற்று இடம் வேறு, அவ்வளவுதான். அதை அவரே மறைத்துக்கொள்வார். ஏனென்றால் அன்று நாங்கள் மிக மிக இளையவர்கள்
அந்தக் ‘கதை’ இதுதான். கோணங்கி ஒருமுறை அவனுக்கே உரியமுறையில் வேடிக்கைச் சித்திரம் ஒன்றை உருவாக்கிக்கொண்டே சென்றான். நக்ஸலைட்டுகளை வேட்டையாடி முடித்தபின் வங்காள கவர்னர் சித்தார்த்த சங்கர் ரேயை உளவுத்துறை தமிழகம் அனுப்புகிறது. இங்கே சிலபேர் மர்மமான முறையில் ஐம்பது பிரதிகளில் புரியாத எதையோ அச்சிட்டு புழங்கிக்கொள்கிறார்கள். பத்துபேர் ரகசியமாகச் சந்தித்து அதைப்பற்றி புரியாமல் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அவர்களை போட்டுத்தள்ளி சட்டம் ஒழுங்கை பராமரிக்கவேண்டும் என ஆணை.
திருவல்லிக்கேணியில் அசோகமித்திரனை சுடுகிறார்கள். அவர் ராயர் காபிகிளப் முன்னால் ‘ஹே ராம்’ என்று முனகியபடி விழுகிறார். சுந்தர ராமசாமியை துணிக்கடையில் சுடுகிறார்கள். துப்பாக்கியை கண்டதும் அவர் தலையைச் சீவிக்கொள்கிறார். இப்படியே போகும்.ச.தமிழ்ச்செல்வன் முன்னால் நாற்பதுபேர் ‘எங்களை சுட்டுவிட்டு அண்னனை சுடுடா!’ என்று நெஞ்சுகாட்டி நிற்கிறார்கள். குண்டு ஒன்றுதான் இருக்கிறது. ஆகவே நாற்பது முறை கிளிக் ஓசை மட்டும் எழுப்புகிறார் ரே. நாற்பதுபேரும் குண்டுபட்டு விழுந்து துடிதுடித்துச் செத்தபின் தமிழ்ச்செல்வனைச் சுடுகிறார்கள்.
பக்கத்தில் அமர்ந்திருந்த மீரா ‘கோணங்கி, நான் வரலையே… நான் இதிலே எங்க?”என்றார்
“சித்தார்த்த சங்கர் ரே மருதை கோனார் மெஸ்ஸிலே கோளா உருண்டையோட மட்டன்பிரியாணி சாப்பிடுறார். சாப்பிட்டுட்டு கை கழுவப்போறார். அப்ப நீங்க கைகழுவிட்டு குறுக்காலே போறீங்க. அவருக்கு உங்களை தெரியாது. நீங்க அவரை பாக்கவுமில்லை. அண்ணாச்சி, சொல்லிட்டேன், உங்களுக்கு அவ்ளவுதான் எடம். ஜாஸ்தி கேக்காதீங்க” என்றான் கோணங்கி
அன்று சிரித்து உருண்டோம். முப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன.
ஜெ
***
அன்புள்ள ஜெ
நீங்கள் வெளிநாட்டு ஆசாமி என்று சொல்பவர் டேவிட் ஷுல்மான், இஸ்ரேலிய இந்தியவியலாளர். அவரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்காது. அவரைப்பற்றி சற்று தேடியிருக்கலாம்
ஆனந்த்ராஜ்
***
அன்புள்ள ஆனந்த் ராஜ்,
அவரைப்பற்றி நன்றாகவே தெரியும். ஒருமுறை பார்த்துமிருக்கிறேன். பொதுவாக இந்தியாவுக்கு வந்து இங்குள்ள உயர்குடி தொடர்புவட்டத்திடம் மட்டும் அளவளாவி ஏதாவது முனைவர்பட்ட ஆய்வுடன் செல்பவர்கள் மேல் எனக்கு அவமரியாதையே உள்ளது.
அவர்கள் முனைவர் பட்டங்கள் பெறுவதில் அல்ல. அவர்கள் எழுதிவிடும் அரைகுறைப்பதிவுகள் வழியாகவே உலகம் நம்மைப் பார்க்கநேர்கிறது. நாம் அவற்றை நினைத்தாலும் திருத்தமுடியாது. அவற்றை பைபிளுக்கு நிகராக நம்பும் அரவிந்தன் கண்ணையன்களிடமே நாம் நம் சொந்த அப்பாபெயரை நிரூபிக்க முடியாது. இந்தியசிந்தனை என்று ஒன்று உருவாகாமல் தடுக்கும் மிகப்பெரிய சக்திகள் இவர்கள்
ஜெ
***
அன்புள்ள ஜெ
அன்னம் நவகவிதை வரிசையில் நூறு கவிதைத் தொகுதிகள் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டது, ஆனால் நூறு தொகுதிகள் வெளியாகவில்லை. ராஜசுந்தரராஜன் ஈறாக பதினெட்டு அல்லது பத்தொன்பது தொகுதிகள் வெளியாகின என்பது என் எண்ணம்.
ஆனால் அந்த இயக்கத்தை தொடர்ச்சியாக மேலும் பல ஆண்டுகள் அன்னம் முன்னெடுத்தது, ஏறத்தாழ முப்பது புதியகவிஞர்களை வெளியிட்டது என நினைக்கிறேன்.
சாரதி
***
அன்புள்ள சாரதி,
நான் அந்நூல்களில் பெரும்பாலானவற்றை பார்க்கவில்லை. முக்கியமானவை மட்டுமே என் கவனத்துக்கு வந்தன. அன்று அவர்களில் பல கவிஞர்கள்மேல் விமர்சனங்கள் இருந்தன.
நூறு தொகுதிகள் என்பது ஓர் அதீதமான கனவுதான். நூறு கவிஞர்களை தேற்றமுடியாது.
ஜெ