தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?

அன்புள்ள ஜெ,

உங்களைச் சுற்றிலும் நலம் அமைய விழைகிறேன்.  எனக்கு உலக மற்றும் தமிழ் இலக்கியம் உங்களால் அறிமுகமானது.  எனது வாழ்வை மாற்றிய படைப்புகள்  உங்கள் மூலம் தான் என்னை அணுகியது.  கேட்பதற்கு ஓராயிரம்  கேள்விகள் இருந்தது.  பெரும்பாலான என் கேள்விகளுக்கு முன்னரே உங்கள் தளத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.  என்னை   ஒரு இலக்கிய வாசகனாக அடையாளப்படுத்த சற்று தயக்கமாக உள்ளது.  செவ்விலக்கியங்கள் பற்றி  செரியான கருத்துக்களை எழுதும்போது அந்த பட்டத்தை நோக்கி செல்வேன் என்று நம்புகிறேன்.

இங்கு என் கேள்வி ” சங்க இலக்கியங்கள் தொடங்கி பக்தி இயக்கப் பாடல்கள் வரை வண்ணத்துப்பூச்சியின் குறியீடை  காண முடியவில்லை.  இயற்கை வர்ணனைளில் வரும் பறவைகள் மற்றும் ஊர்வன பற்றிய குறிப்புகள் நான் சங்க இலக்கியங்களில் கண்டுள்ளேன்.  கம்பனின் பாடல்களில் மயில் அன்னம் மான் அரவம்  போன்ற உயிரினங்களை காண்கிறேன்.  ஆனால் இன்று பாடல்களிலும் கவிதைகளிலும் நிரம்பி வழியும் வண்ணத்துப்பூச்சியின் குறிப்பை நவீன தமிழ் இலக்கியத்திற்கு முன்பு  அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.

பண்டைய இந்திய தத்துவங்களிலும் இந்த பூச்சிகளை பற்றிய குறிப்பு ஏதும் தென்படவில்லை.  ஆனால் மேற்கு உலக தத்துவங்களில், கதைகளில் கணிசமான இடத்தை பட்டாம்பூச்சி ஈட்டியிருக்கிறது. என் நண்பனிடம் இந்த அவதானிப்புகளை கூறியபோது, ” அந்தக்காலத்தில பட்டாம்பூச்சி எல்லாம் இருந்திருக்காதுடா”, என்றான்.  இந்த பதிலுக்கு பின்பு நான் எவரிடமும் இது தொடர்பாக பேச முயற்சிக்கவில்லை.

உங்களிடம் நான் வினவுவது, ” எதனால் வண்ணத்துப்பூச்சியை நம் புலவர்கள் விட்டுவிட்டனர்? வளர்ந்த நாகரீகம் எதன்பொருட்டும் ஒரு உயிரினத்தை குறிப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க முயலுமா?”.

என்  சிறிய வாசிப்பனுபவத்தை கொண்டே இக்கேள்விகளை முன் வைக்கிறேன்.  என் புரிதல் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

ஆனந்த் குரு

***

அன்புள்ள ஆனந்த்

சங்க இலக்கியங்கள் மிகத்தொன்மையானவை. அன்று சொற்கள் எப்படி பொருள்கொள்ளப்பட்டன என்று தெரியவில்லை. பின்னர் வந்தவர்கள் பல சொற்களுக்கு தங்கள் குறைவுபட்ட அறிவைக்கொண்டு பொருள்கொண்டனர். ஆகவே நாம் இன்று வாசிக்கும் சங்க இலக்கியம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டே நம்முடன் உரையாடுகிறது

குறைவுபட்ட பொருள் என ஏன் சொல்கிறேன் என்றால் சங்க இலக்கியங்கள் ஏட்டில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு உரைகள் எழுதப்பட்டபோது அவை தமிழறிஞர்களுக்குள்தான் வாசிக்கப்பட்டன, விவாதிக்கப்பட்டன. அந்தத் தமிழறிஞர்கள் அறிந்த தமிழ் என்பது ஓரிரு நூற்றாண்டுகள் பழமைகொண்டது மட்டுமே. சங்க இலக்கியம் அவர்களிடமிருந்து மிகத்தொலைவில் இருந்தது.

அப்போதுதான் தமிழில் நவீன அறிவியக்கம் தொடங்கியிருந்தது. நூல்கள் அச்சுக்கு வரத்தொடங்கின. பொதுக்கல்வி அறிமுகமாகியது. நவீன அறிவியலின் பலதுறைகள் வந்துசேர்ந்தன. கல்வெட்டு ஆராய்ச்சி,தொல்லியல் ஆய்வு ,மொழியியல் ஆய்வு போன்றவை தொடக்கநிலையில் இருந்தன.தமிழக வரலாறே அப்போதுதான் எழுதப்பட்டுக்கொண்டிருந்தது.

இந்தியச்சூழலில் தாவரவியல், விலங்கியல் போன்ற அறிவுத்துறைகளின் தொடக்ககாலகட்டம் அது.இந்திய மொழிகளுக்கிடையே மொழியாக்கமும் முறையாகத் தொடங்கவில்லை. நவீன அகராதிகளும் உருவாகவில்லை.

இத்தகைய சூழலில் பழைய சொற்களுக்குப் பொருள்கொள்ளும்போது தமிழறிஞர்கள் தங்கள் நூலறிவின் எல்லையினுள் நின்றே செயல்படவேண்டியிருந்தது. நூல்களுடன் ஒப்பிடுவது, வெவ்வேறு வட்டாரத்து வாழ்க்கைமுறைகளை அறிந்துகொண்டு பொருள்கொள்வது, அறிவியல்செய்திகளை கொண்டு பொருள்கொள்வது எல்லாம் இயல்வது அல்ல.

ஆனால், பின்னர் வெவ்வேறு தளங்களில் பெருவளர்ச்சி நிகழ்ந்தபோதுகூட தொன்மையான இலக்கியநூல்களுக்கு மேலதிக வாசிப்போ பொருள்கோடலோ நிகழவில்லை. சொல்லப்போனால் தமிழாய்வே ஐம்பதுகளுடன் நின்றுவிட்டது. அதற்குப்பின் புதிதாக உரையெழுதப்பட்ட தொல்லிலக்கிய நூல்கள் அரிது. அதுவும் இன்றைய பிறதுறை அறிதல்களை கொண்டு தொல்லிலக்கியங்களுக்கு பொருள்கோடல் செய்பவர்கள் எவருமே இல்லை. இன்று எவரேனும் உரை எழுதினால் பழைய உரைகளை கொண்டு மீண்டும் உரையெழுதுகிறார்கள்.

இச்சூழலில் சங்கப்பாடல்கள் உள்ளிட்ட தொல்லிலக்கியங்களைப் பற்றி நாம் எந்த நம்பகமான கருத்தையும் உருவாக்கிக் கொள்ளமுடியாது. சங்ககாலத்தில் இன்னது இல்லை, இது உண்டு என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உதாரணமாக ஆய்வாளர் தொ.பரமசிவன் சங்ககாலத்தில் தென்னை இல்லை, அச்சொல் பயின்றுவரவில்லை என எழுதினார். தெங்கு, தாழை என்ற பெயர்களில் தென்னை சங்ககாலம் முதலே இருக்கிறது. அதை ஆய்வாளர் விரிவாக எழுதியுமிருக்கிறார்கள். அதை நாஞ்சில்நாடன் சுட்டிக்காட்டவேண்டியிருந்தது

இனி, உங்கள் கேள்விக்கு வருவோம். சங்ககாலத்தில் வண்ணத்துப்பூச்சி பற்றிய செய்திகள் ஏன் இல்லை?

முதலில் வண்ணத்துப்பூச்சி என்பது மிக அண்மைக்காலச் சொல். அதற்கு பொருள் சொல்லும் வையாபுரிப்பிள்ளை பேரகராதி அச்சொல் பயின்றுவரும் சொற்றொடரை பதினெட்டாம்நூற்றாண்டில் எழுதப்பட்ட ஈச்சரநிச்சயம் [சபாரத்தினம் முதலியார்] என்னும் நூலில் இருந்தே சுட்டிக்காட்டுகிறது.

சங்ககாலத்தில் வேறுசொற்கள் இருந்திருக்கவேண்டும். அச்சொற்கள் வெவ்வேறு அறிவுத்துறைகளுக்கு வெவ்வேறாக இருந்திருக்கலாம். பூச்சிகளைப் பற்றிய சொற்கள் மருத்துவம், வேளாண்மை சார்ந்த தளங்களில் புழங்கியிருக்கலாம். இன்று அந்நூல்கள் நமக்கு கிடைப்பதில்லை.சங்ககாலம் முதல் தொடங்கும் தமிழ்ப்பண்பாட்டின் மிகமிகச் சிறிய பகுதியே நமக்கு கிடைக்கிறது என்னும் தெளிவு நமக்கு தேவை.

சங்ககாலத்தை எடுத்துக்கொண்டால் அது ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் நீண்டது. இரண்டாயிரத்தி முந்நூற்றி எண்பத்தொரு பாடல்களே நமக்கு கிடைக்கின்றன. காப்பியகாலகட்டம் மேலும் இருநூறாண்டுகள் நீள்வது. மூன்று பெருங் காப்பியங்களும் ஒரு சிறுகாப்பியமும்தான் கிடைக்கின்றன. இவற்றைக்கொண்டு தமிழில் அன்றிருந்த அறிவியக்கம் என்ன என்று சொல்லிவிடமுடியாது. இவை எல்லாமே இலக்கிய நூல்கள். இலக்கியப் பயன்பாட்டுக்குள் என்னென்ன இருந்தனவோ அவை மட்டுமே இப்பாடல்களில் உள்ளன

நமக்கு கிடைக்கும் இந்தச் சிறிய இலக்கியநூல்களின் வட்டத்திற்குள் வண்ணத்துப்பூச்சி உண்டா? ஒரு சொல் காணக்கிடைக்கிறது. ‘தும்பி’. நமக்கு எல்லாருக்கும் தெரிந்த சங்கப்பாடல்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

குறுந்தொகை 2, இறையனார்

திருவிளையாடல் வசனத்திலேயே  ‘தும்பி இனத்தைச் சேர்ந்த உயர்ந்தசாதி வண்டே’ என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. மிகப்பிற்கால அகராதியான திவாகர நிகண்டுவில் இருந்து அந்த பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

இதில் ஒரு வினா எழுகிறது. தும்பி என்பது வண்டு என்றால் இருசொற்களும் மாறிமாறிப் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வண்டு என்ற சொல் தனியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

[ஓதலாந்தையார், குறுந்தொகை 21]

வண்டு பெண்களின் கண்களுக்கு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. தும்பி ஒருபோதும் அப்படிச் சொல்லப்பட்டதில்லை. வண்டு ஒரு தும்பியாகலாம், ஆனால் தும்பி என்றால் வண்டு மட்டும் அல்ல

தும்பி என்ற சொல் எப்படியெல்லாம் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? தும்பி என்னும் சொல் யானை என்று பயன்படுத்தப்படுகிறது. அதன் நீள்மூக்கு தும்பிக்கை எனப்படுகிறது. தும்பி என்பது ஒரு குறிப்பான சொல்லாக அல்லாமல் ஒரு பொதுச்சுட்டுச் சொல்லாக, ஒரு சிறப்புச் சொல்லாக இருந்திருக்கிறது

பழந்தமிழ்ச் சொற்கள் இயல்பாக புழக்கத்திலிருக்கும் மொழி மலையாளம். அங்கே தும்பி என்பது குழந்தைகளுக்கு இளமையிலேயே அறிமுகமாகும் சொல். இன்று அச்சொல் வண்டைக் குறிப்பது அல்ல. பேச்சுமரபில் தட்டாரப்பூச்சியை குறிப்பது. கவிதையில் அது பட்டாம்பூச்சி உட்பட எல்லா தேனுண்ணும் பூச்சிகளையும் குறிப்பது.

பளியர் போன்ற மலைக்குடிகளில் தும்பி என்ற சொல் தேனுண்ணும் பூச்சிகள் அனைத்தையும் குறிப்பிடுகிறது. தும்பிதுள்ளல் என்னும் ஆடல் அவர்களிடமுண்டு. அது இருகைகளையும் பட்டாம்பூச்சிபோல ஆட்டியபடி ஆடுவது [’நம்பியம்பதி மலைநிரையில் தும்பிதுள்ளுண தொடியிலு பம்பமுட்டணு பறமுழங்கணு சுவடு வைக்கடி தத்தச்சி’ -சினிமாப்பாடல். ]

குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் தேன் உண்பதற்கான வளைவான உறிஞ்சுகுழாய் கொண்ட பூச்சிதான் தும்பி. யானையிடம் இருப்பதும் அதுதான் என பழங்குடிமொழியின் எளிய கவித்துவம் உருவகித்துக்கொண்டது. ஆகவேதான் அது தும்பிக்கை.

ஆகவே சங்க இலக்கியத்தில் வரும் தும்பி என்பது வண்ணத்துப்பூச்சிகள் உட்பட தேனுண்ணும் உறுப்புகொண்ட பூச்சிகளை குறிக்கிறது.  ‘அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி’ என்ற வரி அழகான வண்ணங்கள் கொண்ட சிறகுகளுடைய தும்பி என்று வண்ணத்துப்பூச்சியை குறிப்பிடுகிறது.அது ஒரு தொகைப்பெயர். வண்டும் தும்பிதான்.பல இடங்களில் இசைத்தபடி வரும் வண்டு தும்பி எனப்படுகிறது.

தும்பி சங்க இலக்கியம் முதல் மிக முக்கியமான குறியீடாகவே இருந்துவந்துள்ளது. மலர்களில் தேன் தேடி அலையும் தும்பியை காமவிழைவின் குறியீடாகவும் இன்னும் பலவாகவும் சங்கப்பாடல்கள் உருவகிக்கின்றன.  பின்னாளில் தும்பிவிடுதூது ஒரு கவிதை உத்தியாகவே ஆகியது. ‘கோத்தும்பி’யை தூதனுப்பும் திருவாசகப்பாடல்கள் புகழ்பெற்றவை.

ஆனால் ஜப்பானிய கவிதைகளைப்போல பட்டாம்பூச்சி இங்கே முதன்மை இடத்தைப் பெறவில்லை. வண்ணங்களை விட இசைக்கே இந்த மரபு அதிக முக்கியத்துவம் அளித்தது. ஆகவே தும்பிகளில் யாழ்போல ஓசை இமிழும் வண்டுக்கே அதிக இடம் இருந்தது

அது இயல்பானதே. ஒர் இலக்கியச் சூழலில் சில உயிர்கள், சில பொருட்கள் மட்டுமே குறியீட்டுப்பொருள் கொள்கின்றன. அவையே மேலும் மேலும் கவிதையில் வருகின்றன. நாம் தொல்லிலக்கியமாக கொண்டிருப்பவை அனைத்துமே கவிதைகள் என நினைவில்கொள்ளவேண்டும். கவிதைகள் யதார்த்தச் சித்திரத்தை அளிக்க முற்படுவன அல்ல. அவை செய்திகளைச் சொல்வனவும் அல்ல. அவை அகவயமான ஓர் எழுச்சியைச் சொல்லவே புறவுலகை கையாள்கின்றன. புறவுலகிலுள்ளவற்றை அவை குறியீடுகளாக ஆக்கிக்கொள்கின்றன. அக்குறியீடுகளைக்கொண்டு நுண்ணிய அகநிகழ்வு ஒன்றை முன்வைக்கின்றன

அத்துடன் செவ்விலக்கிய மரபு என்பது புதியபுதிய குறியீடுகளை கண்டடைய முற்படுவது அல்ல. உலகமெங்குமே செவ்வியல் ஏற்கனவே சொல்லப்பட்ட குறியீடுகளைக்கொண்டே மீண்டும் தொடர்புறுத்த முயல்கிறது. நுண்மையாக்கம்தான் [improvisation] அதன் வழி. சொன்னவற்றை மிகநுட்பமாக சற்று மாற்றிச் சொல்லுதல். கைவளை கழல்தல் என்ற ஒரே விஷயம் எப்படியெல்லாம் மீளமீளச் சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.

தமிழ்ச்செவ்வியல் மரபில் தும்பிகளில் வண்டு சரியான குறியீடாக அமைந்துவிட்டது. காரணம் அதன் இசை. ஆகவே பெரும்பாலும் அதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருத மரபில் சலஃபம் என்றும் பதங்கம் என்றும் பட்டாம்பூச்சி குறிப்பிடப்படுகிறது. அது தொடர்ச்சியாக வெவ்வேறு வகையில் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தத்துவத்தில் ‘கம்பளிப்புழு பட்டாம்பூச்சியாவதுபோல’ என்னும் உருவகம் புகழ்பெற்றது. ஈச்சரநிச்சயத்தில்கூட சபாபதி முதலியார் சம்ஸ்கிருத அத்வைத மரபிலிருந்து அந்த உவமையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அது மெய்ஞானம் அடைவதைக் குறிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைவசந்தம், மலர்
அடுத்த கட்டுரைவிசையுறு பந்து