குப்பத்துமொழி
அன்புள்ள ஜெ.,
‘குப்பத்து மொழி’ குறித்த உங்கள் கருத்துக்களைப் படித்தேன். நான் மதுரையில் இருந்தபோதே அங்கு பேசப்பட்ட சில வார்த்தைகள் கண்முன்னே வழக்கொழிந்து போவதைக் கண்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ‘கொனட்டுவது’ – அதாவது ஓவராக ‘பிகு’ செய்து கொள்வது. ‘வெள்ளன வந்திரு தம்பி’ ‘பொளுசாய வாய்யா’, சூதானம்,பைய்ய போன்ற வார்த்தைகள் மதுரைக்காரனுக்கே இந்நேரம் அந்நியமாக ஒலிக்கத்தொடங்கியிருக்கும்.
அழிந்து போனவை பேச்சு மொழி மட்டுமா? உடல் மொழியும் கூட. அன்றைக்கு கையைத் தட்டி இடது மணிக்கட்டின்மேல் வலது முழங்கையை வைத்து வலது கையால் வாயை மூடி ஆச்சரியப்பட்ட அக்காக்கள் எங்கே?
எழுத்தில் மதுரைத்தமிழ் ஆவணப்படுத்தப்பட்டது மிகக்குறைவே. ஓரளவிற்கு ‘வாடிவாச’லில். மற்றபடி எங்குமில்லை. திரையில் ‘விருமாண்டி'(கருமாத்தூர் தமிழ், மதுரைத் தமிழிலும்கூட வேறுபட்டது),’ஆடுகளம்’ இரண்டிலும் சிறப்பாக ஆவணப் படுத்தியிருந்தார்கள்.
நான் 1996 இல் மதுரையிலிருந்து சென்னை வந்தேன். இந்த 25 வருடங்களிலேயே சென்னை மொழி நிறைய மாறி விட்டது. எல்லாம் என்னைப்போல வந்தேறிகளால்தான். வெளியூரில் இருந்து வருபவர்களைத் முதலில் திணறச்செய்வது சென்னைத் தமிழின் மாறுபட்ட ஒலிஉச்சரிப்புதான். கிணறுக்கு, கம்பீரத்திற்கு வருகிற ‘க’ வும், பள்ளத்திற்கு பல்லிக்கு, பஜ்ஜிக்கு வருகிற ‘ப’ வும் தான் உபயோகப்’படுத்துவது’.
இரண்டாவதாக வார்த்தைக்கு வார்த்தை உபயோகப்படுத்தும் அந்த முன்னொட்டுக் கெட்டவார்த்தை. நான் முதன்முதலில் சென்னை வந்தபோது ‘என்னஇது, எல்லோரும் அம்மன் பக்தர்களோ? அடிக்கடி ஆத்தா பேரைச் சொல்லுகிறார்களே’ என்று நினைத்தேன். என் சகஊழியரிடம் கேட்டேன். ‘என்ன சார், இதெல்லாம் கேட்டுக்னு’ என்று அவருக்கு வெட்கம் தாளவில்லை. ஆபிசிலேயே சீனியரான சம்பத் அய்யங்காரிடம் கேட்க, அவர் விரிவாக விளக்கப் போந்தார். எனக்கு வெட்கம் தாளவில்லை.
‘சூப்ரவைசர் அந்த வார்த்தையைச் சொன்னோன்ன எப்பிடி வேலை வேகமா முடியறதுன்னு மட்டும் பாருங்கோ’ என்றார். அந்த முன்னொட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும் ஒரு வினையூக்கச் சொல் என்று புரிந்தது. சென்னைத் தமிழில் எனக்குப் பிடித்த ஒரு சொல் ‘பால்மாறுவது’ – இங்குமில்லாமல் அங்குமில்லாமல் தடுமாறுவதைக் குறிக்கும் சொல். உபயோகம் – ‘த்தா! பால்மார்னெகிராம்ப்பா..,இன்னான்னு கேளு?’
‘வரும் போது, போகும் போது’ என்று என்று ஊரில் கேட்டவனுக்கு ‘வர சொல்லோ, போக சொல்லோ’ வித்யாசமாக ஒலித்தது. ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்று பக்திப்பாடலிலும் சென்னைத் தமிழ் உண்டு என்று தெரிந்து கொண்டேன். வலி என்றால் இழு என்று அர்த்தம். ‘பத்து வயசுலயே பீடி வல்ச்சுனு கீராம்ப்பா’ என்று மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பார் ஒருவர் தெருவில்.
தெருவிலே யாராவது ‘ஜோரா வலி’ (வேகமாக இழு) என்று சொன்னால் அவர் ஊர் கர்நாடகா என்று ‘சுகுரா’ (ஷ்யூரின் மரூ? எதிர்ச்சொல் ‘குல்சா’ ) கச் சொல்லிவிடலாம். ‘இந்நேரம் வண்டி வந்துட்ருக்கும்’ என்று யார் சொல்வதையாவது கேட்டு மெதுவாகப் போனால் ட்ரையினை விட வேண்டியதுதான். அதாவது ‘வந்துட்ருக்கும்’ என்றால் வந்து கொண்டிருக்கும் என்றல்ல, வந்து போயிருக்கும் என்று அர்த்தம் சென்னைத் தமிழில்.
சென்னை மொழியை நான் முதன்முதலாகக் கேட்டது ‘லூஸ் மோகன்’ கண்ணை இடுக்கிக் கொண்டு ‘இந்தா பாருமே ..’ என்று சினிமாவில் பேசுவதுதான். அவருக்கும் முன்னோடி சந்திரபாபு. அந்த மொழித் தூய்மை கெட்டு ரொம்ப நாளாகிவிட்டது. மார்வாடித்தமிழ், பிராமணத்தமிழ், ஆற்காட்டுத் தமிழ், காஞ்சீபுரம் நெசவாளர் தமிழ் என்று சகலதமிழும் கலந்தடித்து இன்று ‘ஒரே பே..ஜா..ராப் பூட்ச்சுமா’ என்று சொல்லுகிற அளகில்தான் இன்றைய சென்னைத்தமிழின் நிலைமை.
சென்னைத் தமிழை எழுத்தில் சிறப்பாக ஆவணப்படுத்தியவர்கள் ஜெயகாந்தன் மற்றும் சுஜாதா. ‘அரை அவ்ரா அப்டியே கெட்க்காம்ப்பா’ ரயிலில் கிடக்கும் பிணத்தைப்பார்த்து சகபயணியிடம் சொல்வார் ஒருவர். அவர் ஏறிய இடம் செங்கல்பட்டு. திரையில் ‘சட்டம் என் கையில்’, ‘எல்லாம் இன்ப மயம்’, ‘சவால்’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘ வசூல்ராஜா’ என்று தொடர்ந்து சென்னைத் தமிழை ஆவணப் படுத்தி வந்திருப்பவர் கமல்தான். ‘சதிலீலாவதி'(கொங்கு தமிழ்), ‘பாபநாசம்'(திருநெல்வேலித்தமிழ்), ‘விருமாண்டி’ (மதுரை கருமாத்தூர் தமிழ்), ‘தெனாலி (இலங்கைத் தமிழ்) என்று மாறுபட்ட வட்டார வழக்குகளையும் ஆவணப்படுத்தியவர் அவர் மட்டுமே. நிற்க.
பிராமணபாஷை கிண்டலடிக்கப்படுவதில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ஆத்துக்கு’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டே நான் படித்த நிலக்கோட்டை பள்ளியில் சர்வகேலி செய்யப்பட்டிருக்கிறேன் – இத்தனைக்கும் தூய தமிழ்ச்சொல் அஃதே. எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் சொல்லி யாரும் நம்பியிருக்கப் போவதில்லை. அதிலிருந்து அபிராமண மொழியிலேயே, மதுரை வட்டார மொழியே பேசி வந்தேன். இப்போது வட்டார வழக்கும் ஒழிந்து ஒரு பண்பட்ட வெற்றுமொழியைப் (Neutralised Accent) பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். உறவினர்களோடு மட்டும் பிராமணவழக்கில். என் அப்பாவும், பெரியப்பாவும் சாதாரணமாக உரையாடலில் பயன்படுத்திய சௌஜன்யம், பௌருஷம், சிலாக்யம், சிசுருஷை, லவலேசம், அகஸ்மாத், ரௌத்ரம், நிஷ்ட்டூரம், ஸ்ரேயஸ்,துர்லபம் போன்ற பல வடமொழிச் சொற்களை ஒழிந்துவிட்டேன்.
இந்தத் தலைமுறை பிராமணர்கள் ஒழிந்த அந்தச் சொற்களை லா.ச.ரா, தேவன், கல்கி போன்ற எழுத்தாளர்களைப் படித்து வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ளலாம். குப்பங்களே அழிந்து கொண்டிருக்கும்போது ‘குப்பத்து பாஷை’ மட்டும் அழியாமல் இருக்குமா? தெருக்கூத்து,தோல்பாவைக்கூத்து போன்ற அழிந்துபட்ட கலைகளைப்போல ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.ஏதோ நம்மால் முடிந்தது. ஆமாம், தாராவியில் நம் தமிழர்கள் பேசிக்கொண்டிருக்கும் ‘குப்பத்து இந்தி’ எப்படி இருக்கும்?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்