ஆதி இந்தியர்கள் – ஒரு நச்சுநூல்-கடலூர் சீனு

இனிய ஜெயம்

சமீபத்திய நாஞ்சில்  கதை ஒன்றில்  தேவிடியானு கூப்பிட்டா  அசிங்கம், ஆனா பாலியல் தொழிலாளி னு கூப்பிட்டா அசிங்கம் இல்ல. செய்யுறது என்னவோ அதேதான். இந்த ரீதியில் கும்பமுனி உரையாடல் ஒன்று வரும், அதற்கு இணையான நூல் ஒன்றை வாசித்தேன்.  டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள். சயின்ஸே சொல்லுது அடிப்படையில், ஆரிய படையெடுப்பை நிறுவும் நூல். (ஆரிய படையெடுப்பு என்று சொல்லக் கூடாது ஸ்டெபி பரம்பரை இடப்பெயர்ச்சி என்று சொல்ல வேண்டும்.) பாடையில் ஏறிவிட்ட இந்த கோட்பாட்டை இந்த 2020 மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியை செவ்வனே செய்திருக்கிறார் டோனி.

இம்முறை இந்த கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒன்று எல்லாம் இல்லை. உறுதியாக நிறுவப்பட்டு விட்டது.  எந்த வெள்ளைத்தோல் வெத்து மண்டையன்கள்  கூடி  நிறுவினான் என்பதை  பக்கம் பக்கமாக விவரிக்கிறது நூல். இம்முறை வெத்துமண்டயன்கள் துணைக்கு அழைத்துக் கொண்டிருப்பது மரபணு ‘ஆய்வு’ முடிவுகளை.

மரபணு அறிவியலில் மைட்டோகாண்ட்ரியா வழியிலான மூதாதை  ஆய்வுகள் சில நம்பகமான முடிவுகளை அளித்த வகையில்,  2010 துவங்கி அது சர்வ ரோக நிவாரணியாக மாறாத் துவங்கியது. 2010 இல் மனித மரபணுவில் ஒரு சதவீதம் நியாண்டர்தால் உடையது எனும் புரட்சி முடிவு வெளியானது. 2014 இல் மரபணுவில் மற்றொரு சதவீதம் மற்றொரு சக மனித இனமான டெனிசோவன்கள் உடையது என்று ‘கண்டு பிடிக்க’ பட்டது. இந்த புரட்சிகள் அப்படியே பரவி, இனக்குழு மரபியல் இடபெயர்ச்சி மரபியல் என்றெல்லாம் பூத்துக் குலுங்கி, 2017 இல் அது உச்சம் தொட்டது.

அங்கே நிகழ்ந்து, வெண்தோல் வேந்தர்கள் இங்கே அளித்தவற்றை, ‘நானே சிந்திச்சேன்’ கோவை சரளா ஆகி டோனி ஜோசப் ‘சிந்தித்து’தொகுத்து இயம்பிய நூல்தான் ஆதி இந்தியர்கள்.  நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது இந்தியப் பண்பாடு போன்ற உயரிய கருத்துக்களையும் விழுமியங்களையும் முன்வைக்கும் இந்த நூல், ஆனா பாருங்க அறிவியல் என்ன சொல்லுத்துன்னா என்று துவங்கி, கழக கண்மணிகள் பேசும் அத்தனை வெறுப்பு பேச்சையும் அறிவியல் ஆய்வு உண்மை என முன்வைக்கிறது.

நூலில் ஆய்வு உண்மைகளாக பேசப்போடும்  தமாஷான விஷயங்கள் இரண்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. முதல் தமாஷ். யுரேஷியா ஸ்டெபி வெளியில் இருந்த ஆரியர் குழு இந்தியாவுக்கு இடம்பெயரும் வகையையும், இந்தியாவில் வந்து ரொம்ப கொஞ்சூண்டு கலப்புடன் அவர்கள் நீடித்திருப்பாதாகவும் ஆய்வுகள் இயம்புகிறாதாம்.

R 1a-z 93 இதுதான் ஆரியர்கள் அதாவது பிராமணர்களின் மரபணு எண்ணாம். :) இந்த எழவு வசதி இல்லாததால்தான் மகாபாரதம் முழுக்க யார் பிராமணன் என மாஞ்சி மாஞ்சி பேசி செத்திருக்கிறார்கள். இந்த எண்ணைக் கொண்டு மொத்த டீடைலையும் ஆய்வாளர்கள் உருவி விட்டார்கள். பாடையில் ஏறிவிட்ட மொழிக்குடும்பம் எனும் அறிவியல் பூர்வ ஆய்வும் இதனுடன் இணைந்து கொள்ள, (இன்றிலிருந்து சரியாக சிந்து வெளி நாகரிக முடிவில்) ஆரிய வந்தேறிகள் புராணம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுகிறது.

சிந்து வெளியின் தெய்வங்கள் சார்ந்த  தொல்லியல் தடங்கள் ‘வேண்டும் என்றே அழித்த வகையில்’ தான் கிடைத்திருக்கிறது. அப்படி அழிந்த தெய்வங்களை வேதங்கள் இழிவாகவே பேசுகின்றன. ஆகவே ஆரியர் இந்த சிந்து நாகரீகத்தை பல்வேறு காரணிகள் ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை என்று இந்த நூலில்சிந்தனையாளர் டோனி ஜோசப் முன்வைக்கும் சிந்தனைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. (அந்நிய மதத்தினர் படையெடுப்புக்கு  முன்பாகவே படையெடுத்து சிலைகளை உடைக்கும் கலாச்சாரத்துக்கு பிதாமகர்கள் ஆரியர்கள் என்பதே இங்கு sub text என்பதை அறிக).

இரண்டாவது தமாஷ் இணையற்றது. பிருகத்ரக மௌரியன் காலத்துக்குப் பிறகு, (அதாவது மனு ஸ்ம்ருதி அதிகாரத்துக்கு வந்த பிறகு) சாதி படி நிலையில் சமூகம் ‘தளைக்கப்’ பட்டு விட்டதை, மரபணு ஆய்வுகள் நிரூபித்து விட்டது. எப்படி எனும் கேள்வி எழுந்து எவருக்கேனும் உச்சி முடி நட்டுக்கொண்டால் நூலை வாசித்து அதை பிய்த்துக் கொள்ளலாம். அவ்வளவு சுவாரசியமான ஆய்வுகள்.

நூலில் எனக்கு பிடித்த பகுதி மேதகு டோனி ஜோசப், ஆசிரியர் அம்பேத்கார் அவர்களை மறுக்கும் இடம். இந்த 2020 இல் இப்படி ஒரு மொண்ணைத்தனமான நச்சு நூல் ஒன்றினை, இத்தனை தடித்தனத்துடன் டோனி ஜோசப் போன்ற ஒருவரால்  முன்வைக்க முடியும் எனில், அது எவர் அளிக்கும் கூலியால் நிகழ்கிறது? இங்கிருக்கும் கழக கண்மணிகளை  நம்பித்தானே இத்தகு மக்காத குப்பைகள் தமிழ் நிலத்தில் வந்து விழுகிறது.  முன்பே இந்த தளத்தில் இந்த டோனி கூமுட்டை எழுதிய கட்டுரை மீதான விவாதங்களை வாசித்திருக்கிறேன். எனில் புத்தக தலைப்பின் கீழ் டோனி ஜோசப் பெயரை கண்டதும் நான் அதை புறமொதுக்கி இருக்க வேண்டும் தானே? விதி, குரங்குக்கு புண்ணு வந்ததா சொறிஞ்சி சொரிஞ்சே சாகுமாம்.

கடலூர் சீனு

பின் குறிப்பு:
உண்மையில் நூல்  வாசித்து எழுந்த கொதிப்பை கடக்கவே இப்பதிவை எழுதினேன். அந்த நூலில் செயல்படும் இன்டலெக்சுவல் நச்சுத்தனம் (சமீபத்திய ராஜன் குறை ‘ஆய்வு’ போல) அளித்த கொதிப்பு அது. பொதுவாக வெண்தோலர் அனுபவிக்கும் அடிப்படை சிக்கல்கள் மூன்று. பரிணாம வாதம், சிம்பன்சி மூதாதை, ஆப்ரிக்க தோற்றுவாய்.
1890 இல் மானுடவியல் தனித்த அறிவியல் துறையாக செயல்படத் துவங்கிய காலம் தொட்டு, பத்து வருடங்களுக்கு ஒரு முறை, இந்த மூன்றையும் மறுக்கும் ‘அறிவியல்’ தரவுகள் வருகை, அவற்றை அடிப்படையாக கொண்ட ஆரியர் ‘இனம்’ போன்ற  துணை தரவுகளின் பெருக்கம் இவை  மேலை பல்கலை கழகங்கள் வழியே நிகழும். இம்முறை துணைக்கு வருவது மரபியல் கூறு ஆய்வு. (அடுத்த பத்து ஆண்டுகளில் சிம்பன்சி என்பது மனித இனம் என்பதையும், ஆப்ரிக்கர்களின் பூர்வ மூதாதை வெள்ளையர்கள் என்பதையும், ஆப்ரிக்கர் மேல் சாபம் போல விழுந்து அவர்களை மரபணு  ரீதியாக கறுப்பாகிய அறிவியல் தரவுகளையும் இனி மரபியல் ஆய்வு அளிக்கும்) பண்டைய இந்தியாவில்  கி மு 2000 இல் துவங்கி பரபரப்பாக நிகழ்ந்த ‘மானுடக்’ கலப்பு கி பி இரண்டில், திடுக்கிடும் வகையில் அப்படியே உறைந்து நின்று விட்டதை, இந்திய மரபணு ‘துல்லியமாக’ காட்டுகிறதாம்.
இந்தியாவில் சாதி அந்த காலத்தில்தான் தோன்றியதாம்.  இன்னும் இந்தியாவில் மாமிசம் உண்ணாதோரின் மரபணு ‘சிதைவுகள்’ இன்றி (அதாவது தூய்மை நிலையிலேயே) இருக்கிறதாம். ஆரிய வந்தேறி மொழிக்குடும்பம் உள்ளிட்ட எல்லா நச்சுக் கோட்பாடும் அது சரிதான் என்று இன்று இந்த 2010 இந்த மரபணு ஆய்வுகள் உள்ளிட்ட பல துறை ஆய்வுகள் சொல்லிவிட்டதாம். அதுவே இந்த ஆதி இந்தியர் நூலின் மையம்.
இம்முறை இந்த 2010 இல் அடுத்த சைன்ஸே சொல்லுது அலையை ஹார்வர்ட் மருத்துவ பல்கலை சேர்ந்த பேராசிரியர் டேவிட் ரைக் துவங்கி இருக்கிறார். அங்கிருந்து தெறித்த நச்சுத் துளியே இந்த நூல். இந்த நச்சுப் பெருக்கிகளை ஒன்றும் செய்ய முடியாது. மாறாக டோனி ஜோசப் போன்ற சில்லறை ஏஜென்ட்டுகளை (ராஜன் குறை உரிக்கப்பட்டதுபோல) கருத்துத் தளத்தில் உரித்து உப்பு கண்டம் போடுவதே கையருகே உள்ள வழி.
-கடலூர் சீனு
முந்தைய கட்டுரைநீலமும் இந்திய மெய்யியலும்
அடுத்த கட்டுரைகி.ரா- கடிதம்