அழகியநம்பியின் ஊர்- கடிதம்

அழகியநம்பியின் நகரில்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு ,

என் பதின்வயதில் ஊர் பொது நூலகத்தில் சங்கச்சித்திரங்கள் தொடர்  வழியாக அறிமுகமான தங்கள் எழுத்து , இத்தளம்  ( அ ) இத்தலம் :)  ( jeyamohan.in ) வழியாக நீடிக்கிறது.  தன்னியல்பான தயக்கம் தவிர்த்து ஒருவாறு மின்னஞ்சல் அனுப்ப முடிந்ததில் என்னளவில் சிறு நிறைவு .

தங்களின் அழகியநம்பியின் நகரில் பதிவை ஒட்டி சில .

திருக்குறுங்குடி கோவில் பெரும் சிற்பங்களுக்கு நிகராகவே சித்திர கோபுர வரிசை சிறு சிற்பங்களும் செறிவானவை. சில்பியின் “தென்னாட்டுச் செல்வங்கள்” தொகுதி நூல்அளித்த நெகிழ்ச்சிக்குப் பின் உறவினர் உபநயனத்துக்கு சென்ற போது அவற்றில் சிலவற்றை படமெடுக்க முடிந்தது. வெயிலொளியில் அக்கணத்தில் ஆழ்ந்து நோக்க இயலாது பின் கணினியில் ஏற்றிய பின்பே நுணுகி அறிய முடிந்தது. கண்ணனின் லீலைகள் , கஜகன்னிகள்,அஸ்வகன்னிகள் சிறு பரப்பில் மனதைப் பெரிதும் விரியச் செய்கின்றன.இன்று நாயக்கர்கால  சமூகச் சித்திரங்களை மீண்டும் காணும் போது  பத்தேமாரியில் (?!) சரக்குகளுடன் வந்திறங்கும் வணிகர்களை வரலாற்றில் பொருத்திப் பார்க்க முடிகிறது.

நோய்த்தொற்று பணிச்சூழலின் நிமித்தம் தற்போது திருவிதாங்கூரின் கைமாறிய எல்லைகளுள் ஒன்றான சேரன்மகாதேவியில் இருக்கிற எனக்கு   தங்களின் தளம் நம்மைச் சுற்றியுள்ள தொல்லிடங்கள், கோயில்களை வரலாற்றுணர்வுடனும் கலையுணர்வுடனும் உணரத் தூண்டுவதாக உள்ளது.

இத்தளத்தின் களஞ்சியத் தன்மையைக் கருதி (நிபுணத்துவம் அல்லாது ஆர்வம் நிலைத்த கணத்தில் எடுத்த ) சில புகைப்படங்களை அதிக அளவு கொண்டதாக இருப்பதால் பதிவேற்றியுள்ளேன்.

நேரம் கிடைக்கும் போது கீழுள்ள சுட்டியில் பார்க்கவும்.

திருக்குறுங்குடி

வணக்கங்களுடன்

சே.தோ.ரெங்கபாஷ்யம்

அன்புள்ள ஜெ

திருக்குறுங்குடி பற்றிய உங்கள் பதிவு ஒரு கனவை எழுப்புகிறது. இன்னமும்கூட அழகான நல்ல ஊர்கள் நம் தமிழகத்தில் உள்ளன. நாம் ஒரு வகை போதைக்கு ஆட்பட்டு பெருநகர்களில் உழல்கிறோம். உண்மையில் பெருநகர்கள் எல்லாமே சிறிய சிறிய அறைகள்தான். பெரிய அலுவலகத்தில் அகன்ற ஹாலில் சிறிய கண்ணாடி கேபின்களில் அமர்ந்திருக்கும்போது பெரிய கூடத்தில் இருப்பதாக தோன்றும். ஆனால் உண்மையில் நாமிருப்பது சின்ன அறைக்குள்தான். அதைப்போலத்தான் இதுவும். நங்கநல்லூரில் வாழும் நான் சென்னையில் வாழ்வதாக நினைத்துக்கொள்கிறேன். நங்கநல்லூர் என்ற வசதியே இல்லாத சின்னக்கிராமத்தில்தன உண்மையில் இருக்கிறேன். ஆண்டுக்கு ஓரிருமுறைதான் சென்னைக்கு சென்றுவருகிறேன்

சென்னையுடன் நாம் கிராமங்களை ஒப்பிடுகிறோம். நங்கநல்லூருடன் ஒப்பிடவேண்டும். இங்கே கோயில் இல்லை. சாக்கடைதான் ஆறு. எல்லாமே நெரிசல். குப்பைக்கூளம். தமிழகத்தில் தஞ்சையிலெல்லாம் அழகான சின்ன கிராமங்கள் பல உள்ளன. இந்த வேலைச்சுமை குறைந்தால் அங்கே எங்கேயாவதுபோய் குடியேறவேண்டும்

ஆர்.சங்கரநாராயணன்

முந்தைய கட்டுரைமனுதர்ம சாஸ்திரம் – அயோத்திதாசரும் பெரியாரும்  
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- அகதைசொல்லியின் பாதை