அம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்

அன்புள்ள ஜெயமோகன்,

மேற்கத்திய அறிவுஜீவியுலகம் எப்போதுமே எல்லா பிரச்சனைகளின் வேர்களையும் கிழக்கிலேயே கண்டடையும். உதாரணமாக ஷெல்டன் போலாக் என்கிற சமஸ்கிருத இந்தியவியலாளர், நாஸி இனப்பேரழிவு, நாஸிக்கள் இந்திய பூர்வ மீமாம்சை உருவாக்கிய அமைப்பை ஐரோப்பாவில் செயலபடுத்த முனைந்ததாலேயே ஏற்பட்டது என்கிறார். அதே வரிசையில் இப்போது மற்றொரு அமெரிக்க பேராசிரியர் விடுதலை புலிகளின் தற்கொலை போராளிகளின் உத்வேகம் நம் எல்லை அம்மன்கள் மற்றும் பெண் மூதாதைகள் வழிபாட்டிலிருந்து பெறப்பட்டது என்கிறார்.

//Harman addresses how Hindu devotionalism played a role in the reasoning for females to give their lives in these bombings, and the fact that these women became deities for giving their lives in support of Hinduism.//
(http://orient.bowdoin.edu/orient/article.php?date=2011-04-01%C2%A7ion=4&id=5)

உங்கள் பல கதைகளில் உயிரிழந்த பெண்கள் தெய்வமானது குறித்து பேசப்படுகிறது. உடனடியாக எனக்கு நினைவு வருவது ‘நிழலாட்டம்’.. அதில் வரும் மலைச்சி அம்மன். நம் கிராமப்புற, குல பெண் தெய்வங்களாக்கப்பட்ட வரலாற்றில் ‘ஹிந்துமதத்தை காப்பாற்ற உயிர்கொடுத்த பெண்கள் தெய்வமாக்கப்பட’வில்லை. பல பெண் தெய்வங்கள் அகால மரணம் அடைந்தவர்க்ள். ஜெயின் கற்பனையாகவே இருந்தாலும் மலைச்சி ‘ஹிந்து’ சமூக அமைப்பினை உடைத்து ’கலகக்காரியாக’ மரணித்தவள்.

பொதுவாக நம் தென்னிந்திய -இத்தகைய பெண் தெய்வச் சடங்குகளில்- அவர்கள் இழந்த வாழ்க்கையை பூரணப்படுத்தும் சடங்குகளே இருக்கின்றனவே ஒழிய அம்மரணங்களை மேன்மையாக்கும் சடங்குகள் கிடையாது. இச்சடங்குகள் ஒரு பெண்ணை தற்கொலைக்கு அதுவும் அரசியல் தற்கொலைக்குத் தூண்டுவதாக அமையும் என்பது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. வெள்ளையம்மாள் போல தற்கொலை மூலம் கோவிலை காப்பாற்றிய பெண்கள் உண்டுதான். ஆனால் அவர்கள் மிகக் குறைவானவர்கள். ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் தற்கொலை பெண் போராளிகள் என்பதே இந்து/ தென்னிந்திய பண்பாட்டின் இருட்கொடை என ’நிரூபித்து’விடுவார்கள் மேற்கத்தியர்கள். இதற்கு நான் எழுதிய ஒரு சிறு மறுப்பு இங்கே:
http://indicvision.sulekha.com/blog/post/2011/04/holocaust-to-suicide-bombing-how-to-blame-it-all.htm

பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன்.

எங்கெல்லாம் போர்ப்பண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் உயிர்த்தியாகம் விதந்தோதப்பட்டிருக்கும். அந்த மனநிலை இல்லாமல் மனிதர்களை போருக்கு அனுப்ப முடியாது. மிகச்சிறந்த உதாரணம் ஜப்பானின் சமுராய் பண்பாடு. அந்த மனநிலையை உருவாக்க, தக்கவைக்க தேவையான எல்லா விழுமியங்கலூம் படிமங்களும் தொன்மங்களும் உருவாகி வந்திருக்கும். தற்கொலை கொண்டாடப்பட்டிருக்கும் அவையெ நவீன காலகட்டத்தில் தற்கொலை மனநிலையாக வெளிவருகின்றன

நம் மரபில் நவகண்டம் போன்று தன் கழுத்தை தானே அறுத்து உயிர்விடும் வழக்கம் தொல்பழங்காலம் முதலே உள்ளது. இட்டெண்ணி தலை கொடுக்கும் மறவர்களைப்பற்றி சிலம்பில் காண்கிறோம். போர்ச்சாதிகளின் பல தெய்வங்கள் தன் கழுத்தில் தானே கத்தி வைத்து நிற்பவை. இந்த குறியீடுகள் தற்கொலைக்கும் வன்முறைக்குமான மனநிலையை உருவாக்குகின்றன. இந்தியாவில் போர்ப்பின்னணி கொண்ட சமூகங்களிலேயே கொலையும் தற்கொலையும் அதிகம் என்பதை இத்துடன் சேர்த்து வாசிக்க வேண்டும்.

நீண்ட பண்பாடு உள்ள எல்லா சமூகங்களிலும் கடந்தகாலத்தில் உருவாகி நிகழ்காலத்தில் நீளும் இத்தகைய மனநிலைகளும் ஆழ்படிமங்களும் இருக்கும். அவையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்று சொல்லி பழைய பண்பாடுகளையே அழித்துவிடலாமா? அதையா இந்த ஆசாமிகள் சொல்கிறார்கள்? அந்த பண்பாட்டுக்கூறுகள் அழிந்தால் தன்னுரிமை மனநிலை இருக்காது. போராட்ட வேகம் இருக்காது. அரை டாலர் ஊதியத்துக்கு 14 மணிநேரம் வேலை பார்க்கும் இந்தோனேசிய தொழிலாளியை உருவாக்கி எடுப்பாது எளிது. மேலே சொன்ன ‘ஆய்வாளருக்கு’ நைக்கி நிறுவனமே நேரடி சம்பளம் கொடுக்கலாம்.

செமிட்டிக் மரபில் உருவாகி ஐரோப்பிய சிந்தனையில் ஊடுருவிய ஆதிபாவம் என்ற கருத்துரு அங்கே உருவாக்கிய குற்ற உணர்ச்சி சார்ந்த, எதிர் குற்ற உணர்ச்சி சார்ந்த உளச்சிக்கல்களை அந்த ஆய்வாளர்கள் கருத்தில் கொள்வதுண்டா?

தாயை கல்லெறிந்து கொல்வதற்கு முன் சூனியக்காரி என்று பட்டம் சூட்டுவது அவர்களின் ஆயிரமாண்டுக்கால வழக்கம் அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைஅறிவுரைகள்
அடுத்த கட்டுரைதேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்