பாலகுமாரனும் வணிக இலக்கியமும்
அன்புள்ள ஜெ!
நீலம் உள்ளிட்ட நான்கு வெண்முரசு நூல்களை வெளியிட்ட விழா நிகழ்ச்சிகளை மறுபடியும் நேற்று பார்க்க நேரிட்டது. அந்த விழாவில் என் மனதில் பட்ட ஒரு விஷயம் பாலகுமாரனின் வருகை. விழாவில் ஒரு மூலையில் அவர் உட்கார்ந்திருந்தார். தற்பொழுது யோகிராம் சுரத்குமார் பற்றிய உரை ஒன்றில் பவா செல்லத்துரை அவர்கள் பாலகுமாரனின் சில அகவுணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டியிருந்தார். அந்த உரையில் ஜெயமோகன் மீதான பாலகுமாரன் அவர்களின் வன்மம் நிறைந்த எதிர்வினைகளும் பதிவாகியிருந்தன. இந்தப் பின்னணியில் நீலம் வெளியீட்டு விழாவில் பாலகுமாரனின் வருகை குறித்த என் எண்ணங்களை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன்.
விழாவுக்குப் பாலகுமாரன் அழைக்கப்பட்டிருந்தாரா? அல்லது அவரது வருகை எதிர்பாராததா?விழா நிகழ்வின்போது அவர் சமநிலையில் இருந்திருப்பார் என்று எனக்குத்தோன்றவில்லை. ஒருவேளை பவா குறிப்பிடும் நிகழ்ச்சி நடந்து, பல்லாண்டுகளுக்குப்பின் நடைபெறும் நிகழ்ச்சி இது. இந்த இடைப்பட்டக் காலக்கட்டத்தில் உங்களுக்குள் ஏதேனும் நல்லெண்ணச் சந்திப்புகள் நடைபெற்றிருக்கின்றனவா? அப்படியே இருப்பினும் அவரை இன்னும் நீங்கள், உங்கள் அளவுகோல்களின்படி நாஞ்சில் நாடன் போன்ற இலக்கியவாதிகளுடன் ஒத்துநோக்கும் நிலை வரவில்லை என்றே நினைக்கின்றேன்.
ஜெ! நான் என் ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பதின்ம வயதுகளில் பாக்கெட் நாவல்களின் வரிசையில் பாலகுமாரனை நான் வாசித்திருக்கின்றேன். ஆனால், மற்ற பாக்கெட் நாவல்களில் இருந்து அவர் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருந்தார் என்பதே எனது கணிப்பு. அதாவது அவர் மற்றவர்களிலிருந்து தனித்துத்தெரிந்திருக்கிறார். அக்காலத்தில் எனக்கு நீங்கள் குறிப்பிடும் முதல்தர எழுத்தாளர்களோடு அறிமுகம் ஏதும் இல்லை. (உடையாரை என்னாலும் ரசிக்கமுடியவில்லை.)
பிற்காலத்தில் முதல்தர எழுத்தாளர்களோடு எனது அறிமுகம் ஆனபிறகு, முதலுக்கும் மூன்றாம் தரத்திற்கும் நடுவில் பாலகுமாரன் தத்தளிக்கிறார் என்று கருதுகிறேன்.
இங்கே எனது கேள்வி நாஞ்சில் நாடன் அவர்களோடு தொடர்புடையது. மேடையில் நாஞ்சிலாருக்கு நீங்கள் மரியாதை செய்திருந்தீர்கள். அதற்கு அவர் முழுத்தகுதி உடையவர்தாமா? பாலகுமாரனுக்கும் நாஞ்சிலாருக்கும் எனக்குப் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளிலான உங்கள் படைப்புக்கள் உடனான வாசிப்பில் நாஞ்சிலாரின் தரம் எனக்குள் அவ்வாறுதான் உறுதிப்பட்டிருக்கிறது. கொரானா கால உங்கள் சில கதைகளில் நீங்கள் நாஞ்சிலாரை எவ்வாறு ‘ஓவர்டேக்’ செய்துவிட்டுப் போகிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். பெண் பாத்திரங்களுடனான உறவைப் பேசும் தருணங்களில் நாஞ்சிலாரும் சருக்கியதுண்டு; பாலகுமாரனுக்கும் அது உண்டு. அது ஒரு வாசகனைக் கீழிழுக்கும் செயல். அந்த நிலையில் நீங்கள் உயர்ந்துநிற்பதைக் காண்கிறேன்.
நாஞ்சிலாருக்கு நீங்கள் என்ன அளவுகோல்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. முடிந்தால் இருவரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதமுடியுமா? எம்போன்ற வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
கடந்த ஆண்டு நிகழ்ந்த பொன்னீலன் நிகழ்வுக்குப்பின் குமரிமாவட்ட இளம்படைப்பாளி ஒருவரின் படைப்பு முயற்சி குறித்து (தமிழகம் முழுவதும் அவரின் ஒரு சிறுகதைத்தொகுப்பின்மூலம் அறியவும் பாராட்டவும் பட்டுக்கொண்டிருந்தார்) நாலு நல்ல வார்த்தை கூறவேண்டும் என்று உங்கள் துணைவியார் வேண்டிக்கொண்டதைக் கருத்தில் கொண்டு அந்த இளம்படைப்பாளி இன்னும் நிறைய வளரவேண்டும் என்பதைக் குறிப்பாகச் சுட்டி, பெயர்குறிப்பிடாமல் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். எனது கணிப்பின்படி, அவர் பொன்னீலனுக்கு நெருக்கமானவர் போல வெளியுலகுக்குத் தோன்றினாலும் அவர் நாஞ்சிலாரின் வழிவந்தவர். அவரின் கதைகளில் நாஞ்சிலாரின் போதாமைகளும் ஒவ்வாமைகளும் முண்டிக்கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
மறுபடி நீலம் நிகழ்ச்சிக்கு வருவோம். பாலகுமாரன் இலக்கியத்துடன் வாழ்ந்தவர்; சரியோ தப்போ அதைக்கொண்டு பிழைத்தவர். நாஞ்சிலாரைப்போலவே தமிழ்த்தொண்டு புரிந்தவர்.அவரின் இருப்பை நீங்கள் கவனப்படுத்தியிருக்கலாமோ? என்று தோன்றியது. நீங்கள் இன்னும் அவரை ஒரு நல்ல படைப்பாளியாக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நடந்தது சரியே. ஆனால் அவரின் கடைசிக்காலத்தில் பலபத்தாண்டுகள் வாழ்ந்த இலக்கிய வாழ்வினை அங்கீகரிக்காத ஒரு கூட்டத்தில் அவரின் இருப்பு தர்மசங்கடமாக எனக்குத்தோன்றியது. விழாவில் நீங்கள் முத்தாய்ப்பாகப் பேசியதுதான் அவருக்கான பதிலாக எடுத்துக்கொள்கிறேன்:
“வருங்காலத்தில் எனது படைப்புகளை சிறுமுயற்சி என ஆகச்செய்யும் வருங்கால தலைமுறை வரவேண்டும்” என்பதுபோலக் கூறினீர்கள். ஆனால் பாலகுமாரன் வாழுங்காலத்திலேயே (உங்களால்) தகுதியற்றவர் என்று கேட்டு நொந்துதான் போயிருப்பார் அல்லவா?
பாலகுமாரனுக்கு இல்லாத பெருமையும், மதிப்பும் நாஞ்சிலாருக்கு மட்டும் ஏன்? இதுதான் என் கேள்வி.
அன்புடன்
ராஜரத்னம்
அன்புள்ள ராஜரத்னம்,
இந்த கேள்வி ஓர் இலக்கிய உரையாடலாக ஆவதற்கு தடையாக அமையும் பல முட்கள் கொண்டது. ஆயினும் இதை உரையாடலுக்கு எடுப்பதன் நோக்கம் இதில் தெரியும் பற்று. ஒரு வாசகனுக்கு ஓர் எழுத்தாளன் மேல் இருக்கும் பற்று என்பது ஒருவகையில் புனிதமான உணர்வு. அதில் உலகியல் இல்லை. உடைமைகொள்ளுதலும் அடையாளம் நாடலும் இல்லை. அறிவார்ந்தது அது. அத்தகைய பற்றுகள் வழியாகவே இலக்கியமும் அறிவுச்செயல்பாடும் முன்னகர்கின்றன. உங்களுக்கு பாலகுமாரன் மேலிருக்கும் அந்த அன்பை நான் மதிக்கிறேன். அதில் மகிழ்கிறேன்.
சிலவிஷயங்களை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். பாலகுமாரன் எனக்கு நான் சினிமாவில் நுழைந்தபின் அணுக்கமானவராக ஆனார். மூத்தவர் என்றவகையில். வழிகாட்டி என்றவகையிலும். சினிமாவில் செயல்பட நல்ல ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். அவர் செயல்படமுடியாத உடல்நிலை அடைந்த போது சில வாய்ப்புகளை எனக்கு திருப்பிவிட்டிருக்கிறார். சந்திக்கையில் அணுக்கமாகவே பேசுவோம். என்னை ‘டா’ போட்டு அழைக்கும் உரிமையை எடுத்துக்கொண்டார். நானும் அவ்வண்ணமே அவரிடம் இருந்தேன்.
அவருக்கு அவர் மீதான என் மதிப்பீடு என்ன என்று தெரியும். பெரும்பாலும் இயல்பாக எடுத்துக்கொள்வார். ஓரிருமுறை திட்டியும் இருக்கிறார். ஆனால் பாலகுமாரன் பொதுவாக இலக்கியம் போன்றவற்றிலிருந்து விலகிச்சென்றபின் நான் அவரைச் சந்தித்தேன். ஆகவே அவர் பெரிதாக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் பொதுவாகவே அனைவருக்கும் உதவிகள் செய்பவர், பிறருக்குப் பொறுப்பேற்றுக்கொள்பவர், நட்பானவர்.
விழாவுக்கு அவரை அழைத்தேன், ஆனால் உடல்நிலை மோசம் என்று தெரிந்து வரவேண்டாம் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சிரமப்பட்டு வந்துவிட்டார். அதுவும் விழா தொடங்கியபின்பு. அவருக்கு உரிய வரவேற்பும் இடமும் அளித்தோம். மேடைக்கு அழைப்பது, அல்லது மேடையில் குறிப்பிடுவது போன்ற வழக்கங்கள் நவீன இலக்கியச் சூழலில் இல்லை. அதை அவரும் அறிவார்.அன்று அந்த அவையிலேயே சினிமா, இலக்கியம் சார்ந்த பல முக்கியமானவர்கள் இருந்தனர்.
நான் பார்வையாளனாக பல அரங்குகளுக்குச் சென்றுள்ளேன். எங்கள் அரங்குகளில் மணிரத்னம் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். பிற விழாக்களில் ஒரு முக்கியமானவர் வந்ததுமே ஒரு கொண்டாட்டம் உருவாகும். அது நவீன இலக்கிய அரங்குகளில் இல்லை, இருக்கவும்கூடாது. அழைப்பிதழில் பெயரில்லாதவர்கள் பேசவும் கூடாது. இது சிற்றிதழ்ச்சூழலில் பலகாலமாக இருந்துவரும் மரபு.
ஆகவே பாலகுமாரன் அங்கே எவ்வகையிலும் அவமதிக்கப்படவில்லை. அவரே கசடதபற என்னும் தீவிரப்போக்குள்ள சிற்றிதழிலிருந்து வந்தவர். அவருக்கும் அதெல்லாம் தெரியும். அந்த விழாமுடிந்தபின் நேரில் சந்தித்துப் பேசிவிட்டே சென்றார்.
பாலகுமாரனைப் பற்றிய உங்கள் கேள்விக்கான பதிலை முன்னர் இத்தளத்தில் எழுதியிருக்கிறேன். அவர் அவற்றை வாசித்திருக்கிறார். “என்ன பலமா அடிக்கிறே?”என்று ஒருமுறை கேட்டார்.தன் படைப்புக்கள் காலத்தில் நிலைகொள்ளும் என நினைத்தார். இலக்கியங்கள் மக்கள் நினைவிலேயே நீடிக்கின்றன நூலகங்களிலல்ல என்பது அவருடைய கருத்து. “புதுமைப்பித்தனைவிட கல்கிதாண்டா உயிரோட இருக்கார்” என்று அவர் சொல்வார்.
பாலகுமாரனை பற்றி நான் மிகக்கடுமையான கருத்துக்களை இளமையில் சொன்னதுண்டு. ஒன்று என் இளமையின் முதிர்ச்சியின்மை. இளமை தீவிரநிலைபாடுகளை எடுக்கிறது, அதிலிருந்து அடையாளங்களை உருவாக்கிக்கொள்கிறது. இன்னொன்று, அக்காலச் சூழல். அன்று இலக்கியம் சிலநூறுபேரிடம் தேங்கியிருந்தது. சிற்றிதழ்களை வாசிப்பவர்களுக்கே இலக்கியமும் இலக்கியமதிப்பீடுகளும் அறிமுகமாகியிருந்தன. மறுபக்கம் வணிக இதழ்களில் சுஜாதா பாலகுமாரன் ஆகியோர் பேருருக்கொண்டு திகழ்ந்தனர்.
அச்சூழலில் இலக்கியம் வணிக எழுத்து என்னும் வேறுபாட்டை தீவிரமாக முன்வைக்கவேண்டியிருந்தது. அதை அன்றைய இலக்கியமுன்னோடிகள் எல்லாருமே செய்திருக்கிறார்கள். அதிலும் பாலகுமாரன் இலக்கிய உச்சம் என்றே கருதப்பட்ட காலம் அது. ஆகவே அவரை முற்றாக மறுத்தே இலக்கியமதிப்பீடுகளை முன்வைக்கவேண்டியிருந்தது. கல்கி முதல் அகிலன், நா.பா, பாலகுமாரன் வரையிலானவர்களை அவ்வண்ணம் அன்றைய சிற்றிதழ்மரபு மறுத்தது.
நான் சிற்றிதழ் சூழலில் இருந்து வந்தவன். அதிலேயே எழுதிக்கொண்டிருந்தவன். சிற்றிதழ் நடத்தியவன். நச்சிலக்கியம், நுகர்விலக்கியம், கேளிக்கை இலக்கியம் என்றெல்லாம் அன்றைய மையஓட்ட எழுத்து விமர்சிக்கப்பட்டது.அம்மதிப்பீடுகளே இன்றும் என்னிடம் உள்ளன. அவற்றையே தொடர்ச்சியாக முன்வைக்கிறேன். ஆனால் அன்றுபோல மூர்க்கமாக அல்ல. அன்றுபோல அறுதியான வகைப்பாட்டையும் இன்று செய்வதில்லை.
இன்று நான் பாலகுமாரனை எப்படிப் பார்க்கிறேன்? தமிழின் இலக்கியச்சூழலில் ஒரு வகை ‘மெல்லிலக்கியம்’ உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன்,வண்ணநிலவன் ஆகியோர் அதன் முகங்கள். ஆண்பெண் உறவைப்பற்றிய மெல்லுணர்ச்சிகளை எழுதியவர்கள். சிலசமயம் நுட்பமாக, பலசமயம் வெறுமே வாசகர்களுக்குச் சுவையூட்டும்விதமாக. அந்தவகை எழுத்தை நீட்டி வணிக எழுத்தாக ஆக்கியவர் என்று பாலகுமாரனை மதிப்பிடுவேன். அவருக்கு முன்னோடி என்றும் சிலர் உள்ளனர். ஆர்வி, பி.எம்.கண்ணன் போன்ற சிலரை சொல்லலாம்.
அவர் எழுதியவற்றில் மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள் ஆகியவை ஜானகிராமனுக்கு அணுக்கமானவை. ஓரளவு இலக்கியமதிப்பு கொண்டவை. பின்னர் அந்த வகை எழுத்தை ஒரு பயிற்சியாகச் செய்ய தொடங்கினார். அந்த மொழிநடை, வடிவம்,பார்வை ஆகியவற்றை மிகமிக இழுத்து நீட்டி எழுதினார். அவை வெறும் வணிக எழுத்துக்கள்
விதிவிலக்காக இன்று இலக்கிய அளவுகோலின்படித் தேறும் ஆக்கங்கள் ‘அப்பம் வடை தயிர்சாதம்’ என்னும் நாவலும் ‘உடையார்’ நாவல்களின் முதல்பாகமும். அவற்றுக்கு ஓர் இலக்கியமதிப்பு உண்டு என நினைக்கிறேன். ’அப்பம் வடை தயிர்சாதம்’ கொஞ்சம் தன்வரலாற்றுத்தன்மை கொண்டது. ஒருகாலகட்டத்தை மொத்தமாக வளைத்துக்கொண்டு சொல்ல முற்படுகிறது. தலைமுறைகளின் பரிணாமம் அதிலுள்ளது. உடையார் மிகமிகப்பெரிய கனவு கொண்ட முயற்சி. அதன் அடித்தளம் மிக ஆழமானது. ஆனால் பின்னர் அது வழிதவறி அலைகிறது, ஆழமற்ற நீண்ட பேச்சுக்களாக மாறிவிடுகிறது
நாஞ்சில்நாடனையும் பாலகுமாரனையும் ஒப்பிட்டு மதிப்பீடுகளுக்கு வருவது உங்கள் ரசனை, வாசிப்புத்திறன் ஆகியவற்றைச் சார்ந்தது. அதை நான் வழிநடத்தமுடியாது. வாதிட்டு நிறுவவும் முடியாது. என் பார்வையைச் சொல்கிறேன், நீங்கள் இல்லையேல் இன்னொருவர் அதை பற்றி சிந்திக்கக்கூடும்
நவீன இலக்கிய விமர்சன மதிப்பீடுகளின்படி இலக்கியத்தின் அடிப்படைகளாக அமைவன சில உண்டு. இவை எந்த அதிகாரபீடத்தாலும் வகுக்கப்பட்டு நிறுவப்பட்டவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்ட பேரிலக்கியங்களின் அடிப்படையில், அவற்றின் தொடர்ச்சியாகவும் கடந்துசெல்லலாகவும் அடுத்தகட்ட ஆக்கங்கள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உருவாகிவந்தவை. இவற்றுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது இவை நுண்ணிய வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பதே.இவற்றை எவரும் மறுக்கக்கூடாது என்றில்லை, மறுத்தால் தண்டனையும் இல்லை, ஆகவே இவை ‘அதிகாரங்கள்’ அல்ல. இவை மேலோங்கிய தரப்புகள் அவ்வளவுதான்
இந்த அளவீடுகள் ஒவ்வொரு அழகியல்வகைமைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. நாஞ்சில்நாடன், பாலகுமாரன் ஆகிய இருவரும் யதார்த்தவாத அழகியல்முறைமைக்குள் இயங்கியவர்கள். யதார்த்தவாத அழகியலின் அடிப்படைகள் என்னென்ன, அவற்றின்படி அவர்களின் வெற்றிதோல்விகள் என்னென்ன என்று பார்த்து அவர்களை மதிப்பிடலாம்
யதார்த்தவாதம் என்பதே ‘புறவயமான நம்பகத்தன்மையை’ புனைவுக்கு அளித்து அதனூடாக வாழ்க்கையின் உண்மைகளை நோக்கி வாசகனை கொண்டுசெல்லும் பொருட்டு உருவாக்கப்பட்ட அழகியல்தான். அதாவது, இது கதையல்ல உண்மை, இப்படியே இது நடந்தது என்று வாசகன் நம்பும்போதுதான் அந்த கதையிலிருந்து உண்மையான வாழ்க்கைத்தரிசனத்தை நோக்கி அவன் செல்கிறான்.அப்படி நம்பவைப்பதே யதார்த்தவாதத்தின் முதல் அறைகூவல்.
இந்த நம்பகத்தன்மை மூன்று தளங்களில் நிகழவேண்டும்.
அ.சூழல்சார்ந்த நம்பகத்தன்மை.
ஆ.கதைமாந்தர் சார்ந்த நம்பகத்தன்மை.
இ.உணர்ச்சிகள் சார்ந்த நம்பகத்தன்மை.
நுணுக்கமான தகவல்கள் வழியாக உண்மையான ஒரு வாழ்க்கைச்சூழலை காட்டுவது யதார்த்தவாதத்தில் முதன்மையானது. நுணுக்கமான தகவல்கள் என்னும்போது ஏராளமான தகவல்கள், சின்னச்சின்ன செய்திகளைச் சொல்லவில்லை. வாசகனின் கற்பனையை விரியச்செய்து அந்த நிலத்தையும் வாழ்க்கையையும் முழுமையாக உருவாக்கிக்கொள்ள உதவும் நுண்தகவல்களை சொன்னேன்
அந்தக்களத்தில் கதைமாந்தர் நம்பகமானவர்களாக உருவாக்கப்படவேண்டும். கதைமாந்தரின் பேச்சு, தோற்றம், நடத்தை ஆகியவற்றை நுட்பமாகவும் நம்பகமாகவும் காட்டுவது முதல்தளம். இது புறவயமானது. அந்தக் கதைமாந்தரின் மனம் ஓடும் விதம், அவர்களின் குணங்கள் மாறிவரும் விதம், அதற்கேற்ப அவர்களின் நடத்தைகளில் வரும் மாற்றங்கள் ஆகியவற்றை கூர்மையாக காட்டி வாசகன் அவர்கள் உண்மையான மனிதர்களின் பதிவுகளே என்று ஏற்கவைக்கப்படவேண்டும்.
மூன்றாவதாக உணர்ச்சிகள். யதார்த்தவாதக் கதையில் மனித உணர்ச்சிகள் மூன்றுவகையில் வெளிப்படும். செயற்கையான கதைச்சூழலை உருவாக்கி அனைவருமறிந்த வழக்கமான உணர்ச்சிகளையே உச்சகட்டமாக்கி வெளிப்படுத்துவது மிகைநாடகத்தன்மை. [Melodrama] என்று சொல்லப்படுகிறது. உண்மையிலேயே மனிதர்கள் கொண்டிருக்கும் அடிப்படை உணர்ச்சிகளை தொட்டுச் சீண்டிவிடும் நோக்குடன் எழுதப்படும் உணர்ச்சிச் சித்தரிப்பு மெல்லுணர்ச்சி எழுத்து எனப்படுகிறது. [sentiments ]. இவ்விருவகையான உணர்ச்சிவெளிப்பாடும் நவீன இலக்கியத்திற்கு ஒவ்வாதவை, எதிரானவை
இலக்கியத்தரமான உணர்ச்சிவெளிப்பாடுகள் இரண்டு. அரிய உணர்வுநிலைகளும் நுட்பமான உணர்ச்சிகளும் வெளிப்படுவது ஒருவகை. இது உணர்ச்சிவெளிப்பாடு [Emotions, Pathos] என்று சொல்லப்படுகிறது. இது உண்மையான உணர்வுநிலைகள் உச்சமடைவதன் வழியாகவும், உணர்ச்சிகளின் நாடகீயமான மோதல் வழியாகவும் நிகழ்கிறது. அறம்சார்ந்த மன எழுச்சியும், ஒட்டுமொத்தப்பார்வை அளிக்கும் நிறைவுணர்வும் இன்னொருவகை உணர்ச்சிகள். இது உணர்வெழுச்சி [Sublime] என சொல்லப்படுகிறது.
இலக்கியத்தில் உள்ள உணர்ச்சிவெளிப்பாடும், உணர்வெழுச்சியும் கண்கலங்கவைக்கும், மனம்கிளரவைக்கும் உணர்வுநிலைகள்தான். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படிப்பவர் பல கட்டங்களில் கண்ணீர் சிந்தக்கூடும். ஆனால் அதற்கும் செயற்கையாக கட்டமைக்கப்படும் மிகைநாடகத்தன்மைக்கும், மெல்லுணர்ச்சிக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.
நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது. ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் அவர் உருவாக்கி அளிக்கிறார்.
அவர் எழுதிக்காட்டிய நாஞ்சில்நாடு நாஞ்சில்மண்ணையே ஒருமுறைகூட பார்க்காதவர்களும் கற்பனையில் வந்து வாழ்ந்து சென்ற ஓர் இடமாக உள்ளது. ஓடையில் துணிதுவைக்கும் கல்லில் ஒட்டியிருக்கும் சிவப்பு சோப்பு ஏன் சொல்லப்படவேண்டும்? ஒரு கணத்தில் நம் கற்பனையை சீண்டி அது அந்த ஓடையையே நம் கண்முன் காட்டிவிடுகிறது
நாஞ்சில்நாடனின் கதைமாந்தர் அந்த நாஞ்சில்நாட்டிலேயே இயல்பாகக் காணக்கிடைப்பவர்கள். இயல்பான அற்பத்தனமும், அன்பும், பதற்றங்களும் கொண்டவர்கள். அசாதாரண கதாபாத்திரமான ‘பிராந்து’ முதல் சர்வசாதாரணமான கதாபாத்திரமான திரவியம் [தலைகீழ்விகிதங்கள்] வரை. அவர்கள் என்ன எண்ணமுடியுமோ அதையே எண்ணுகிறார்கள். அவர்கள் எதைப்பேசுவார்களோ அதையே பேசுகிறார்கள். அவர்கள் இயல்பாக எப்படி வளர்ச்சியடையமுடியுமோ அப்படி வளர்ச்சி அடைகிறார்கள்
அந்த நம்பகமான சூழலில் நம்பகமான மனிதர்கள் அடையும் உணர்ச்சிகளே அவர் படைப்பில் வருகின்றன. மிகப்பெரும்பாலும் அவர் உணர்ச்சிகளை நேரடியாக காட்டுவதில்லை.வாசகனுக்கு உணர்த்திவிட்டுச் செல்கிறார் கடும்பசியுடன் இரு மகள்களின் வீட்டுக்குச் செல்கிறார் ஒருவர். அவர் சாப்பிட்டுவிட்டு வந்தார் என நினைத்து இருவருமே சாப்பிட அழைக்கவில்லை. பசியுடன் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் அவருடைய உணர்ச்சிகளை அவர் சொல்வதில்லை, வாசகனுக்கே விட்டுவிடுகிறார்
நாஞ்சில்நாடனின் படைப்புலகில் மிகைநாடகம் இல்லை. மெல்லுணர்ச்சிகளும் இல்லை. உணர்ச்சிநிலைகள் உள்ளன. சாலப்பரிந்து போன்ற சிறுகதைகள் உதாரணம். ஆனால் அவருடைய மிகச்சிறந்த கதைகள் உணர்வெழுச்சித்தன்மை கொண்டவை. ‘யாம் உண்பேம்’ ஓர் உதாரணம். அப்படிப்பட்ட ஐம்பது கதைகளையாவது சுட்டமுடியும். அங்கே வாசகன் உணர்வது துக்கம்போன்ற உணர்ச்சிகளை அல்ல. ஒரு பெரிய அறத்தை அல்லது வாழ்க்கைமுழுமையை தரிசித்ததன் சிலிர்ப்பை. அவற்றை எழுதியமையால்தான் நாஞ்சில்நாடன் தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவர். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி வரிசையில் வைக்கத்தக்கவர். அத்தகைய கதைகள் அனைத்தைப்பற்றியும் நான் எழுதியிருக்கிறேன், வாசித்துப்பாருங்கள்.
நாஞ்சில்நாடனின் கதையுலகை இப்படி வகுக்கலாம். அவருடைய பல கதைகளில் நம்பகமான சூழல், நம்பகமான கதைமாந்தர், உலகியல்சிக்கல் ஒன்று, அதைப்பற்றிய அவருடைய பார்வை ஆகியவை இருக்கும். இவை அவருடைய சாதாரணமான கதைகள். அவருடைய உணர்ச்சிகரமான கதைகளில் நம்பகமான உணர்வெழுச்சி பதிவாகியிருக்கும். அவருடைய சிறந்த கதைகளில் ஒரு மகத்தான மானுடவிழுமியம் வெளிப்பட்டிருக்கும்.
நேர்மாறாக, பாலகுமாரன் உருவாக்கும் யதார்த்தத்திலேயே போதாமைகள் உண்டு. அவர் அதை தன் வாழ்க்கையனுபவத்தில் இருந்து, தான் பார்த்தவற்றிலிருந்து உருவாக்கவில்லை. அவருடைய சொந்த வாழ்க்கையனுபவங்கள் மெர்க்குரிப்பூக்களில் உண்டு. ஆனால் அவர் அவற்றைக்கூட இன்னொரு புலத்தில் வைத்து விரிக்கிறார், அங்கிருந்துகொண்டு ஒரு போலியான யதார்த்தத்தை உருவாக்குகிறார்
அது என்ன? தமிழில் வணிக எழுத்து உருவாகி வந்த நூறாண்டுகளில் ஏராளமான படைப்புக்கள் வழியாக ஒரு பொய்யான வாழ்க்கைப்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கும் இல்லை. வெறுமே வாசிப்பில், கற்பனையில்தான் உள்ளது. வாரஇதழ் கதைகளை வாசித்தால் கொஞ்சநாளில் அதே போல நாமும் எழுதமுடியும். அந்த பொய்யான உலகில் கதைச்சூழல், கதைமாந்தர் எல்லாமே பொய்யானவர்கள். வாசகனுடைய விருப்பக்கற்பனையை சார்ந்தவர்கள். எழுத்தாளன் அந்த விருப்பக்கற்பனையை தன் எழுத்தால் வளர்க்கிறான்
[இதுவே சினிமாவிலும் நிகழ்கிறது. சினிமா சென்ற நூறாண்டுகளில் ஒரு கற்பனையான வாழ்க்கைப்புலத்தை உருவாக்கியிருக்கிறது. அது பகற்கனவுகளால் ஆனது. ரசிகனின் கனவு, சினிமாக்கலைஞர்களால் வளர்க்கப்பட்டது. அதில் சாகசநாயகன், அடித்தளத்திலிருந்து சவால்விட்டு வருபவன், சுட்டிப்பெண் கதைநாயகி, ஆணவக்காரி, கிராமத்து அழகி என பல உருவங்கள். நானும்கூட சினிமாவில் அவற்றைக்கொண்டுதான் மீண்டும் சினிமாவை எழுதுகிறேன். பாலகுமாரன் நாவலெழுதியதுபோல. அந்த உலகம் என்ன, அதை எப்படி கையாள்வது என்று தெரிந்து செய்வது அது. ஆகவே அதை இலக்கியம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வதில்லை]
கல்கி,சாண்டிய்ல்யன், ஆர்வி, எல்லார்வி, பிவிஆர், சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி, சுஜாதா, பாலகுமாரன், ரமணி சந்திரன், முத்துலெட்சுமி ராகவன் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய ஓர் உலகம் அது. அங்கிருக்கும் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பேசப்படும் கருக்களையும் அவ்வாறே கொஞ்சம் மாற்றிக்கொள்கிறார்கள்.
பாலகுமாரனின் புனைவுலகில் அவருடைய சுயமான உலகம் குறைவு. தமிழ் வணிக எழுத்தின் பகற்கனவுப்பரப்பு உருவாக்கிய உலகமே மிகுதி. ஆகவேதான் அவரை இலக்கியத்துக்குள் கருத்தில்கொள்வதில்லை. குறிப்பாக பாலகுமாரனின் பெண்கதைமாந்தர்கள் முழுக்கமுழுக்க அந்தப் பகற்கனவைச் சார்ந்தவர்கள். அவருடைய முதல்நாவலிலேயே சாவித்திரி , சியாமளி இருவரும் அந்த உலகிலிருந்து உருவாக்கிக் கொள்ளப்பட்டவர்கள். அவர்களை அப்படியே பிவிஆர், பி.எம்.கண்ணன், ஆர்வி கதைகளிலும் காணலாம். பிற்கால நாவல்களில் அவர்கள் முழுக்கமுழுக்க அந்த பகற்கனவுப் பிம்பங்கள்தான்
இவர்கள் குறிப்பாக எந்த நிலத்திலும் எந்த இடத்திலும் வேர்கொண்டவர்கள் அல்ல. இவர்களுக்கு தெளிவான கலாச்சார அடையாளங்கள் இல்லை. இவர்களுக்கு உட்சிக்கல்கள் இல்லை. அவர்கள் அடையும் உணர்வுகளும் மோதல்களும்கூட கற்பனையானவை. அவர்களை எந்த நிலத்திலும் உண்மையாக வாழ்பவர்களாக நினைத்துக்கொள்ள முடியாது. அதேசமயம் நாம் அன்றாடம் பார்க்கும் எல்லாரிலும் அவர்களின் ஏதேனும் சிலகூறுகள் தட்டுப்படவும் செய்யும். நாம் நிறைய வாசிக்கும் இளமையில் நம் மனதை நிறைத்திருப்பவை பகற்கனவுகள்.அந்தப்பகற்கனவுகளின் உலகின் நீட்சியாக இருப்பவை இவ்வகை எழுத்துக்கள். ஆகவே நமக்கு அவை உள்ளத்தை கொள்ளைகொள்வனவாக உள்ளன. உண்மையான இலக்கிய அறிமுகமும், அவற்றை வாசிப்பதில் சுவையும் உருவானபின்னரே இவை பகற்கனவுகள் எனத் தெரியும்
சூழலும் கதைமாந்தரும் பகற்கனவுத்தளம் சார்ந்தவை என்பதனால் இவர்கள் மெய்யான உணர்ச்சிநிலைகளை அடையமுடியாது. மிகைநாடகம், மெல்லுணர்ச்சிகளையே அடையமுடியும். ரமணி சந்திரன் போன்றவர்களில் மிகைநாடகம் ஓங்கியிருக்கிறது. பாலகுமாரனில் மெல்லுணர்ச்சிகள் ஓங்கியிருக்கின்றன. இவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை.
இப்புனைவுகள் புழங்கும் தளமே பகற்கனவு சார்ந்தது என்பதனால் இவற்றில் அறவிழுமியங்களோ முழுமைநோக்கின் தரிசனங்களோ நிகழ வாய்ப்பில்லை. வாசகர்களால் ஏற்கப்படும் கருத்துக்களும் பார்வைகளுமே பொதுவாக முன்வைக்கப்படும். பாலகுமாரன் ஒரு படிமேல். அவர் முன்வைப்பவை பொதுவிவேகம் [common sense] சார்ந்த பார்வைகள். அவ்வகையில் வணிக எழுத்தின் தளத்தில் அவை சற்று முதிர்ச்சியானவை.
பாலகுமாரனையும் பிறரையும் ஒப்பிடுவதைவிட அவருடைய பிற நாவல்களை அவருடைய நாவலான ‘அப்பம் வடை தயிர்சாத’த்துடன் ஒப்பிட்டாலே போதும், நான் சொல்லவருவது புரியும். அப்பம் வடை தயிர்சாதத்தில் உண்மையான வாழ்க்கைச்சூழலும் உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள்.
நாஞ்சில்நாடனுக்கும் பாலகுமாரனுக்குமான வேறுபாடு இதுவே. நாஞ்சில்நாடன் தமிழ் நவீன இலக்கியத்தின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று. பாலகுமாரன் தமிழ் வணிக எழுத்தின் திறமையான வெளிப்பாடுகளில் ஒன்று