அன்பு ஜெமோ,
நலந்தானே?
பாரதியின் ஊழிக்கூத்து, என் இசையில் பாடகர் சத்யபிரகாஷ் பாடி வெளியாகியிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது கேட்டால் மகிழ்வேன்.
முதன்முதலில் ஊழிக்கூத்து கவிதையை பனிமனிதன் நாவலில்தான் பார்த்தேன். ஒரு புயலின் போது, இடிகள் முழங்கும் பேரோசையில் மலை பிளக்கும்போது பாண்டியன் பாடுவதுபோல் வரும். பின்னர் ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஜீவா ஆவேசமாக அப்பாடலை உச்சரிப்பதை பார்த்தேன். அதன்பின் பலவருடங்கள் கழித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவருடைய உரையொன்றில் இந்தக் கவிதையை சொல்லி அதைப்பாடி ஆடுவதுண்டு என்று சொல்லியிருந்தார். அதன்பிறகே அக்கவிதையை நான் தேடிப் படித்தேன்.
சக்தியின் பெருவெடிப்பே ஊழிக்கூத்து. காளியின் தாண்டவம். காலமும், வெளியும், மூவுலகும் எரிந்தழியும் காட்சி. அதன்பின் குளிர்ந்து, சிவனுடன் ஆனந்தத் தாண்டவம். பிரபஞ்சத்தின் மறுபிறப்பு. ஊழிக்கூத்தை நம் காதுகளிலும், மனதிலும், வெடிக்கும் வார்த்தைகளில் நிகழ்த்தியிருப்பார் பாரதி. பாரதியின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மின்னலுடன் இடியிடித்து சுழல்காற்று ஊளையிடும் ஓர் இரவில் ஒரு படிமம் தோன்றியது. இந்தப்பாடலை எழுதும் போது பாரதி எப்படி இருந்திருப்பார்? பித்தேறிய கண்களுடன் இரவில் தெருவில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி ‘அன்னை, அன்னை ஆடும் கூத்தை நாடச்செய்தாய் என்னை’ என்று கூத்தாடியிருப்பார். முதலில் ஆவேசத்துடன், பின்னர் அழுகை கலந்த நெகிழ்ச்சியுடன். அந்தப் படிமமே எனக்கு இசையைத் தந்தது.
சிக்கல் என்னவென்றால், அகன்ற குரல் வரம்புள்ள ஒருசில பாடகர்களால் மட்டுமே பாட இயலும் மெட்டு. அப்பாடலின் உணர்ச்சியை சொல்ல அந்த உச்சஸ்தாயி தேவை. அதனால் குரல் வரம்பை வைத்து நான்கு பாடகர்களை தேர்வு செய்தோம். பாடகர் சத்யபிரகாஷ், கேட்டவுடனேயே மிகுந்த ஆர்வத்துடன் களமிறங்கினார். மூன்று வாரங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள், உச்சரிக்கும் விதம், சுவரக்கோவை, ஒவ்வொரு வார்த்தைக்குமான உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பேசியபிறகு ஒலிப்பதிவிற்கு சென்றோம். பெரும் அர்ப்பணிப்புடன் இப்பாடலை அபாரமாக பாடியுள்ளார் சத்தியபிரகாஷ். ஜெர்மன் பிராஸ் (Brass) இசைக்குழு வாசித்திருக்கின்றனர்.
முதல் நான்கு சரணங்கள் காளியின் ருத்ர தாண்டவம். இறுதிச் சரணம், குளிர்ந்தபின் சிவனுடன் ஆடும் ஆனந்தத் தாண்டவம். உணர்ச்சிமிகு காமவர்த்தனி ராகத்தின் இலக்கணத்திற்குள் வரும் சுவரங்கள் மட்டுமே இருந்தாலும், இறுதிச் சரணத்தில் அதே காமவர்த்தனி பாந்தமான அமைதியுடன் வரும். ஒருபக்கம் அழிக்கும் உக்கிரமான காளி, மறுபக்கம் காக்கும் பேரன்னை இரண்டுமே ஒன்றின் இருமுகங்கள் தானே.
கவிதையில் ஓரிடத்தில் தலையோடு தலைகள் முட்டி உடையும் போது வரும் தாளத்தைப் பற்றி ஒருவரி வரும். அதற்குமுன்னால் வரும் இடையிசையில், தலைகள் உடையும் சத்தம் தரும் தாளவாத்திய இசை இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். உடுக்கைபோன்ற ஓசைதான் ஆனால் இன்னும் கொஞ்சம் எலும்பின் ஒலி கூடியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாளவாத்தியக் கருவிகளை கேட்டுப்பார்த்தேன். அபுருகுவா (Aburukuwa) என்ற ஆப்பிரிக்க இசைக்கருவி பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது.
அக்கருவி கிடைக்காததால் அதன் ஓசைகளை தனியாக வாங்கி, வேறொரு வாத்தியத்தில் வாசித்து இதன் ஓசையை பொருத்திவிட்டேன். பின்னர் அக்கருவியை பற்றி படிக்கும்போது அது மயானங்களிலும், போர்க்களங்களிலும் வாசிக்கப்படும் கருவியென்றும், அதை மனித விலா எலும்பை வைத்து வாசிப்பார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். எங்கோ நம் மனதின் ஆழத்தில் இவையெல்லாவற்றுக்கும் தொடர்பிருக்கிறது போல.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்