சிகரங்கள் மட்டுமுள்ள நிலம்

அன்புள்ள ஜெ

இன்றைய மாத்ருபூமி வார இணைப்பில் வெண்முரசு நிறைவு பற்றியும் மகபாரதத்தைப் பற்றியும் உங்கள் விரிவான பேட்டி இருக்கிறது. இதற்கு முன்பும் ஒரு பேட்டி வந்திருக்கிறது என நினைக்கிறேன். இன்று இந்தியப் பாரம்பரியம் பற்றி இருக்கும் இருவேறு அதீத வெறுப்புநிலைகளைப்பற்றி ஆழமாகப் பேசியிருக்கிறீர்கள்

‘சிகரங்கள் மட்டுமே உள்ள நிலப்பரப்பு’ என்ற தலைப்பு அற்புதமானது. [கொடுமுடிகள் மாத்ரமுள்ள பூமிக]

ரவீந்திரன்

***

அன்புள்ள ரவி,

வெண்முரசுபற்றி இருபதுக்கும் மேற்பட்ட செய்திக்கட்டுரைகள் பேட்டிகள் மலையாளத்தில் வெளிவந்துள்ளன. மாத்ருபூமி இலக்கிய இதழில் முன்னரே விரிவான பேட்டி வந்தது.நாளிதழில் அதன் நிறைவு பற்றிய செய்திக்கட்டுரையும் வந்தது. இது அதன் தொடர்ச்சியாக, ஒரு விவாதமாக, வந்துள்ளது.

இந்தப்பேட்டியில் மகாபாரதத்துக்கும் வெண்முரசுக்குமான உறவு விலக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசியிருக்கிறேன். இன்னும் பலகாலம் தொடர்ந்து வெண்முரசு பற்றி அங்கே செய்திவரும். என்னிடம் மொழியாக்கம் செய்யும்படிச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் ஊதியமும் மிகக்கவற்சியானது. ஆனால் மீண்டும் ஏழாண்டுகளா என்ற திகைப்பு என்னை தயங்கவைக்கிறது

பொதுவாக இலக்கியநிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டுசெல்வது மலையாள இதழ்களின் வழக்கம்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

மலையாளத்தில் மாத்ருபூமி நாளிதழில் வெண்முரசு பற்றி வெளிவந்திருக்கும் விரிவான பேட்டியை பார்த்தேன். தமிழ்ச்சூழலில் வெண்முரசு பற்றி புறக்கணிப்பும் அறியாமையும் ஒருபக்கம். இன்னொருபக்கம் சில்லறைப்புத்திகளின் வெளிப்பாடுகள். இச்சூழலில் மலையாளத்தில் இப்படி ஒரு தொடர்கவனம் இருப்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. எனக்கு உங்களை தெரியும் என்று நண்பர்களிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழில் இந்நாவல்தொடர் பற்றி பொதுவெளியில் அலட்சியம் மட்டும்தான் உள்ளது, கமல் மட்டுமே இதை கவனப்படுத்தியிருக்கிறார் என்று நான் சொன்னபோது ஆச்சரியமடைந்தனர். தமிழகத்தில் கமல் மட்டும்தான் அறிவியக்கத்துடன் தொடர்புடைய ஒரே விஐபி என்று நான் சொன்னேன்.அவர்களுக்கு அதுவும் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

வழக்கம்போல உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகவே சொல்லியிருக்கிறீர்கள். ஒரு பக்கம் இந்துப்பண்பாடு என்பதே ஃபாஸிசம் மட்டும்தான் என்று ஐம்பதாண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ஜே.என்.யூ ஆய்வாளர்கள். மறுபக்கம் அந்த தாக்குதலில் இருந்து இந்துப்பண்பாட்டை காப்பாற்ற வந்து நிற்கும் மத அடிப்படைவாதிகள். இவர்களே பொதுமக்களை அவர்களை நோக்கி தள்ளிவிட்டவர்கள், அந்தச் சிறுமையை இன்றும்கூட தொடர்கிறார்கள். அதை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அதை வாசித்த என்னுடைய இடதுசாரி தோழர்களும் உண்மைதான், இந்த ஆய்வாளர்களின் குறுகிய எண்ணங்களுக்கு இந்திய ஜனநாயகம் பலியாகிவிட்டது ‘சைத்தானுக்கும் கடலுக்கும் நடுவே’ நிலையாக ஆகிவிட்டது என்றார்கள்.

இந்தப் பேட்டியும் சிறப்பாகவே நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் வெண்முரசை மலையாளத்தில் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன்

ஆனந்த்

***

அன்புள்ள ஆனந்த்

ஒரு சூழலில் உருவாகும் ஒவ்வாமைகூட ஓர் எதிர்வினைதான். இந்த ஒவ்வாமையை அடையும்தரப்பு இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே உள்ளது. ஆசாரவாதம் மேட்டிமைவாதம் அடிப்படைவாதம் என. அது இல்லாமலாகிவிடுமா என்ன? மலையாளத்தில் அதற்கு எதிரான நவீனவாசகனின் தரப்பும் வலுவாக உள்ளது, அதுவே வேறுபாடு

ஜெ

வெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்

மாத்ருபூமியில் ஓர் உரையாடல்

மாத்ருபூமி பேட்டி மொழியாக்கம்

மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்

மாத்ருபூமி பேட்டி

பேட்டிகள், உரையாடல்கள்

மின்தமிழ் அட்டை – ஒரு விவாதம்

முந்தைய கட்டுரைஇந்தியவியல் திருவிழா
அடுத்த கட்டுரைஅழகியநம்பியின் ஊர்- புகைப்படங்கள், கடிதங்கள்