பதியெழுதல்

அழகியநம்பியின் நகரில்

அன்புள்ள ஜெ,

ஸ்ரீனிவாசன் தம்பதியினர் திருக்குறுங்குடியில் குடியேறிய செய்தியை முன்பே எழுதியிருந்தீர்கள். நான் அப்போதே நினைத்தேன். அது ஒரு மகத்தான முடிவு என்று. எல்லாராலும் அது முடியாது. மனிதவாழ்க்கையின் எல்லை குறைவு. ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள் என்று தொடர்ந்து எழுதிவருகிறீர்கள்.

ஆனால் என்ன பிரச்சினை என்றால் பெரும்பாலானவர்கள் புதிய வாழ்க்கையை கண்டு பதறுகிறார்கள். அங்கே பொருத்திக்கொள்ள முடியாமல் அலைக்கழிகிறார்கள். ஆகவே பழகிய வாழ்க்கையை பழகிய தடத்தில் வாழவே விரும்புகிறார்கள்.

நீங்கள் இதை பார்த்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் எப்படி மாறாமல் ஒன்றையே செய்கிறோம் என்பதையே பெருமையாகச் சொல்வார்கள்.  ‘காலம்ப்ற எழுந்ததுமே ஒரு காபி. அப்டியே ஒரு சின்ன வாக்கிங். நேரா சரவணபவன்லே இன்னொரு காபி’ என்று சொல்வார்கள். இதில் என்ன பெருமை என்று தெரிவதில்லை.

இயந்திரம்போல மாறாமல் வாழ்வதில் என்ன இன்பம்? ஒன்றையே மாறாமல் செய்வதில் என்ன திரில்? ஆனால் இப்படி ஒழுங்கான வாழ்க்கையே உயர்ந்தது என்றும் சீரான வாழ்க்கை என்றும் நம்மில் பலர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையை சிக்கலில்லாமல் வாழ்ந்து தீர்ப்பதே பெரிய சவால் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அவர்களின் அந்த முயற்சி போற்றத்தக்கது. அவருக்கு என் வாழ்த்துக்கள்

எஸ்.வரதராஜன்

அன்புள்ள வரதராஜன்

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான வாழ்க்கைப்பார்வை உண்டு. அப்பார்வை நீண்டகால வரலாற்றுச்சூழலால் உருவாகி வருவது. வரலாறு மாறும்போது அதுவும் மாறுபடுகிறது. ஆனால் மிகமிக மெல்லவே அது மாறுகிறது. சூழல் மாறியபின்னரும் தலைமுறைகள் மாற சிலகாலம் ஆகும் என நினைக்கிறேன்.

சிலப்பதிகாரம் பூம்புகாரைச் சொல்லும்போது பதியெழுவறியா பழங்குடி கெழீஇய ஊர் என்கிறது. ஊரைவிட்டு செல்வதை அறியாத குடிகளாலான ஊர். ஊரைவிட்டே செல்லாமலிருப்பது ஒரு பெரிய சிறப்பாக ஐந்தாம்நூற்றாண்டு முதலே நம் சமூகமனதில் ஆழப்பதிந்துள்ளது. பதி என்ற சொல்லே பதிதல் என்பதிலிருந்து வந்தது. பதிவு என்றால் வழக்கம். நிலைகொண்டது, மாறாதது பதி.

ஏன்? காரணம் மிக எளிது. அன்று சாமானியர்களுக்கு ஊரைவிட்டு செல்லாமல் வாழ்க்கை இல்லை. போரால், பஞ்சத்தால், குடிப்பூசல்களால் மக்கள் இடம்பெயர்ந்துகொண்டே இருந்திருக்கவேண்டும். பிற்பாடு நோயாலும் இடப்பெயற்சி நிகழ்ந்திருக்கவேண்டும். அரசனுடன் பூசலிட்டும் மக்கள் இடம்பெயர்ந்தனர். புலவர்களும் கைவினைஞர்களும் அலைந்து திரிந்தனர்.

நாம் வரலாற்றைப் பார்க்கையில் மக்கள் இடம்பெயர்ந்து சென்றுகொண்டே இருக்கும் சித்திரங்களைக் காண்கிறோம். பெரும்பாலான குடிவரலாறுகளில் அவர்கள் விட்டுவந்த இடங்களின் செய்திகள் உள்ளன. அவர்கள் எத்தனைமுறை கூட்டாக இடம்பெயர்ந்தனர் என்று எல்லா சாதியவரலாறுகளிலும் சொல்லப்பட்டுள்ளது.அன்று தனிநபராக இடம்பெயர்வது அரிது, எளிதில் இயல்வது அல்ல.ஆகவே கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்தனர். ஒவ்வொரு இடப்பெயர்வும் துயரக்கதை.

அச்சூழலில் ஒரே ஊரில் நிலைத்து வாழ்வதென்பது ஒரு பெருங்கொடையாக, நல்லூழாக பார்க்கப்பட்டது. அது உயர்விழுமியமாக ஆகியது. பூம்புகாரின் குடிகள் இடம்பெயரவில்லை என்றால் அவர்களுக்கு தெய்வம், மக்கள், அரசு ஆகியவற்றால் உருவாகும் எந்த இடரும் நிகழவில்லை என்று பொருள்.

மெல்லமெல்ல இங்கே பேரரசுகள் உருவாயின.சமூகநிலையில் உறுதிப்பாடுகள் அமைந்தன. நிலைபேறுள்ள சமூகங்கள் பல திரண்டுவந்தன. அவையே ஒரு நிலத்தின்மேல் முற்றுரிமை கொண்டன. அவை அந்நிலத்தை ஆண்டன. அங்கு வருபவர்கள் வந்தேறிகள், வரத்தர்கள் என்றெல்லாம் குறைவாக கணிக்கப்பட்டனர். இழிவும் செய்யப்பட்டனர்.

நம் வரலாற்றில் இப்போதும் குடிப்பெயர்வு நிகழ்ந்தபடியே உள்ளது. 1770களிலும் 1870களிலும் இரு பெரும்பஞ்சங்களின் விளைவான குடிப்பெயர்வு. அதன் பின் சென்னை முதலிய நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வு. விவசாயம் சார்ந்த கிராமப்பொருளியல் அழிந்தபின் இப்போது கிராமங்களிலிருந்து சிறுநகர்களுக்கும் பெருநகர்களுக்கும் குடிபெயர்ந்தபடியே இருக்கிறோம்

ஆகவே குடிபெயராமை இன்றும் ஒரு பெரிய விழுமியமாக கருதப்படுகிறது. குடிபெயராதவர்கள் உயர்ந்தவர்களாக, எந்த இடருக்கும் ஆட்படாதவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ‘நாங்க தலைமுறைதலைமுறையா இதே ஊருதாங்க” என்று சொல்லும்போது வரும் பெருமிதம் அதுதான்.

அன்றாட ஒழுங்கும் அப்படியே. இன்றும்கூட ஓர் ஒழுங்கான அன்றாடத்தை அமைத்துக்கொள்வது ஓர் ஆடம்பரமாகவே உள்ளது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ‘அத்து அலையும்’ வேட்டை வாழ்வு அல்லது திரட்டும் வாழ்வு. நிலைத்தவேலையில் இருப்பவர்கள்கூட பரக்கப்பரக்க பாயவேண்டியிருக்கிறது. சென்ற காலங்களில் அத்தனைபேருக்குமே இந்த அலைச்சல்தான் வாழ்க்கை

எங்களூரில் ஒரு சொலவடை உண்டு. ‘இருந்து வெத்திலை போடுதவனும் எலை போட்டு சோறு திங்குதவனும், எடம் மாறாம படுக்குறவனும் ஏழு ஜென்மப் புண்ணியம் உள்ளவன்’ சாய்ந்தமர்ந்து சாவகாசமாக வெற்றிலைபோட்டுக்கொள்வது ஒர் ஆடம்பரம். கஞ்சியாக அல்லாமல் இலையில் சோறாகப்போட்டு சாப்பிடுவது அதைவிட ஆடம்பரம். ஒரே இடத்தில் வாழ்க்கை முழுக்க படுக்கைபோட்டு படுப்பது உச்சகட்ட ஆடம்பரம்.

இந்தப்பின்னணியில் சீரான ஒழுங்கான ஓர் அன்றாடவாழ்க்கை வாழ்பவர் உயர்குடி, வசதியானவர் என்று கணிக்கப்படுகிறார். நான் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்று ஒருவர் சொல்லும்போது அலையும் வாழ்வை கடந்துவிட்டேன் என்று அறிவித்துக்கொள்கிறார்

அமைந்த வாழ்வில் இன்னொரு பக்கம் உண்டு. அகப்பயணம் மிக்கவர்கள் சீரான ஒழுங்கான புறவாழ்க்கையை கொண்டிருக்கக்கூடும். உதாரணமாக ஒருவர் ஒரு மாபெரும் அறிவார்ந்த நூல்பணியில் பத்தாண்டுகளாக ஈடுபட்டிருந்தாரென்றால் அவர் மிகச்சீரான ஒரு புறவாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பார். புறவாழ்க்கையிலிருந்து எந்த சவாலும், எந்தச் சிக்கலும் தன்னை வந்தடையலாகாது என்று நினைப்பார். அவருடைய அகப்பயணங்களை அறியாதவர் அவர் இயந்திரமாக வாழ்வதாகவே உளப்பதிவுகொள்வார்.

துறவிகள் ஒரு கட்டத்தில் ஒடுங்கும் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். எந்த ஊரிலும் தங்காமல், பல ஆண்டுகள் அலைந்து திரிந்தபின் அவர்கள் ஓர் ஊரில் தங்கி பின்னர் அங்கேயே வாழ்ந்து நிறைவுறுகிறார்கள். அவர்களின் பயணம் அகப்பெருவெளியில் நிகழ்கிறது

உதாரணமாக, மகாபாரதத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்த வித்வான் பிரகாசம் வாழ்நாள் முழுக்க ஒரே ஊரில், ஒரே தெருவில், ஒரேபோன்ற வாழ்க்கையை வாழ்ந்தவர். யோகி ராம்சுரத்குமார் ஒரே திண்ணையில் வாழ்வில் பாதியைச் செலவிட்டவர்

அதைக்கண்டு, அதுவே இலட்சியவாழ்க்கை என நம்பி சாமானியர்களும் கடைப்பிடிக்கிறார்கள். அறிவார்ந்த பயணமோ, ஊழ்கப்பயணமோ இல்லாதவர்கள் அப்படி வாழ்ந்தால் அவர்களின் உலகம் சுருங்கிக்கொண்டே செல்லும். அங்கே அவர்கள் கல்லினுள் தேரைபோல வாழ்வார்கள்

மிக வியப்பான ஒன்றுண்டு. ஒருவன் தன் புறவுலகைச் சுருக்கிக்கொண்டால் அதற்கேற்ப அகவுலகமும் சுருங்கும். அந்த புறவுலகம் கொஞ்சம் பெரிதாகவே அவனுக்கு தெரியும். மேலும் சுருங்குவான். ஒரே ஊரில் வாழலாம், ஒரே தெருவில் வாழலாம், ஒரே வீட்டில் மட்டுமல்ல ஒரே அறையில்கூட தட்டிமுட்டிக்கொள்ளாமல் வாழலாம். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எண்ணிக்கொள்ளலாம். [இப்பார்வைகொண்ட  கிருஷ்ணன்நம்பியின் தங்க ஒரு என்னும் சிறுகதை சுவாரசியமானது]

புறவுலகைச் சுருக்கியவர்களின் உள்ளமும் சுருங்கியிருக்கும். அதற்கேற்ப சிந்தனை, கற்பனை எல்லாமே சுருங்கியிருக்கும். அறவுணர்வு கூட சுருங்கியிருக்கும் என்பதை கண்டிருக்கிறேன். அது ஒரு மானுடக்கீழ்நிலை. ஆனால் இந்தியர்களில் பலர் இன்று அந்த வாழ்க்கையை உகந்து தேடி அதில் அமைந்துகொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஓய்வுபெற்று நிம்மதியாக ஓரிடத்தில்  ‘செட்டில்’ ஆகிவிடவேண்டும் என்பதே அவர்களின் கனவு. அது பழகிப்போன, வசதியான இடம்தான். பழகிய வாழ்க்கையை மாற்றிக்கொள்வது எளிதல்ல.

சிறிய இடங்களில், ஒரேபோன்ற வாழ்க்கையை வாழலாகாதா என்று என்னிடம் கேட்டால்  ‘வாழலாம், நீங்கள் வித்வான் பிரகாசம்போன்ற மாபெரும் அறிவுச்செயல்பாட்டில் இருந்தால். அல்லது நீங்கள் யோகியாக இருந்தால்’ என்று பதில்சொல்வேன்.

இரண்டு நுட்பமான வேறுபாடுகளையும் சொல்லியாகவேண்டும். ஆசாரவாதிகள் ஒரேபோன்ற இயந்திரவாழ்க்கையை வாழ்வார்கள். தாங்கள் யோகியருக்குரிய அகநிலை வாழ்க்கையை வாழ்வதாக கற்பனை செய்துகொள்வார்கள். ஆசாரவாதத்தின் உச்சத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியார் பயணம்செய்துகொண்டே இருந்தார், வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தார் என்பதை மறந்துவிடுவார்கள்

ஆசாரவாதி யோகி அல்ல. அவனுக்கு அகப்பயணமே இல்லை. அவன் புறவாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்பவன். அந்த அடிப்படையில் அகத்தையும் இறுக்கி கட்டிக்கொள்கிறான். அவன் கண்களை கட்டிக்கொண்டு, கால்களை நன்கு பழக்கி, கயிற்றில் நடந்து மறுபக்கம் செல்லும் வித்தைக்காரன் மட்டும்தான். அவன் எய்துவது ஏதுமில்லை, அவன் தீங்கற்ற ஒருவாழ்க்கையை வாழ்கிறான் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்

அதேபோல கலைஞர்கள், எழுத்தாளர்கள் தாங்கள் அகப்பயணத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு சிறுவாழ்க்கையை வாழ்வதுண்டு. வித்வான் பிரகாசம் செய்வது அறிவுப்பணி. அதற்கு புறவுலகமே தேவையில்லை. அது மொழியில், அதில்திரண்ட அறிவில் நிலைகொண்டபணி. யோகிக்கும் புறவுலகே தேவையில்லை

ஆனால் கலையும் இலக்கியமும் புறவுலகை அகத்துக்கு இழுத்து சமைத்து மீண்டும் புறவுலகுக்கு அளிக்கும் பணி. அதற்கு புறவுலகம் இன்றியமையாதது. புறவுலகை குறுகலாக வைத்துக்கொண்ட கலைஞர்கள் காலப்போக்கில் சுருங்கிவிடுவார்கள். திரும்பத்திரும்ப ஒன்றையே எழுதுவார்கள்.ச் சாரமில்லாமல் எழுதுவார்கள். மௌனி போல குறைவாக எழுதினால் தப்பிப்பார்கள்.

ஒருவாழ்க்கையில் பலவாழ்க்கையை வாழ்பவர்களே பெரியவாழ்க்கையை வாழ்கிறார்கள். சென்றகாலகட்டத்தின் பெருங்கலைஞர்கள் பலர் அப்படி வாழ்ந்தவர்கள். கலைஞர்கள் அல்ல என்றாலும் வாழ்க்கையை பயனுறுவதாக, மகிழ்வானதாக ஆக்கிக்கொள்ள அதுவே ஒரு பெரிய வழி. இந்நூற்றாண்டில்தான் சாமானியர்களுக்கும் அது வாய்க்கும் நிலை உள்ளது

ஜெ

திருக்குறுங்குடி புகைப்படங்கள் ஆனந்த் குமார்

[email protected]

புகைப்படங்கள்

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி
முந்தைய கட்டுரைஃபாஸிசம், தாராளவாதம்
அடுத்த கட்டுரைகர்ணனின் கேள்விகள் – இமைக்கணம்